பேல்பூரி 

ஒரு தாலி...இரு மாலை...மூன்று முடிச்சு. 
பேல்பூரி 

கண்டது


(திருவாடானையில் ஒரு திருமண பேனரில் இருந்த வாசகம் )

ஒரு தாலி...
இரு மாலை...
மூன்று முடிச்சு. 

- கா.முத்துச்சாமி,
திருவாடானை.

(நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகில் ஊர் ஒன்றின் பெயர்)

நாய்கடிபுதூர்

 வெ.கார்த்திக்,
புத்தூர்.

(மதுரையில் ஒரு ஷேர் ஆட்டோவில்)


தெளிய வைக்க முடியாத போதை...
தற்பெருமை.

ந. பிரபுராஜா,
மதுரை -2.


கேட்டது


(சென்னை கடற்கரை -தாம்பரம் பேருந்தில் சண்டை போடும் இரு பெண்களும், நடத்துநரும்)

பெண்கள்:
""எனக்கு தெரியும், நீ வாயை மூடு''
""என்னை வாயை மூடச் சொல்ல நீ யாரடி? முதல்ல நீ வாயை மூடு''
 நடத்துநர்:
""அதான் ஆண்டவன் ரெண்டு வருஷமா எல்லார் வாயையும் (தன் மாஸ்க்கை சுட்டிக்காட்டி) மூடி வெச்சிருக்கானே''

டீ.என்.பாலகிருஷ்ணன்,
சென்னை- 91.

(கன்னியாகுமரி செல்லும் டவுன் பஸ்சில் இளைஞரும் நடத்துநரும்)


""அண்ணே... பஸ் ரயில்வே ஸ்டேஷன் உள்ளே போகுமா?''
""எந்த பஸ்சும் ரயில்வே 
ஸ்டேஷன் உள்ளே போகாது''
""என்னண்ணே ரோடு வேலை எதாவதுநடக்குதா?''
""ரோடு வேலை ஒண்ணும் நடக்கலை. என்னிக்காவது ரயில்வே ஸ்டேஷன் "உள்ளே' பஸ் போயிருக்குதா?'' 

மகேஷ் அப்பாசுவாமி,
பனங்கொட்டான் விளை.

யோசிக்கிறாங்கப்பா!


நேரில் பேசித்தீர்க்க வேண்டிய விஷயங்களை 
கைபேசியில் பேசி தீர்க்க நினைத்தால், 
பேலன்ஸ் தீரும்; பிரச்னை தீராது!

ப. பச்சமுத்து,
கிருஷ்ணகிரி-1.

மைக்ரோ கதை


கோயிலின் முன்புறமிருந்த சாலையில் ஒரு பழக்கடை. விலை உயர்ந்த காரை ஓட்டிக் கொண்டு வந்த ஒருவர் காரை நிறுத்திவிட்டு பழக்கடைக்கு வந்தார். கைவிரல்களில் வைர மோதிரங்கள். கழுத்தில் பெரிய தங்கச் சங்கிலி. வசதியானவர் என்று நினைத்தார் பழக்கடைக் காரர் கருப்பையா.

வந்தவர் பழங்களின் விலையைக் கேட்டார்.வாழைப் பழக்குலை ஒன்றின் விலையைக் கேட்டார்.50 பழங்களுக்கும் மேல் இருந்த வாழைக்குலையின் விலையை ரூ.300 என்றார் கருப்பையா. 

வந்தவர், ""150 ரூபாய்க்குத் தர்றீங்களா?'' என்று கேட்டார்.

""இல்லைங்க... கட்டுப்படியாகாது'' என்று மறுத்தார் கருப்பையா. 

""கொடுக்கலாம். கொடுங்க. உங்களுக்கும் வேணாம். எனக்கும் வேணாம். ரூ.155 தர்றேன்'' என்றார் வந்தவர். அதேபோல பேரம் பேசி இன்னும் ஒரு வாழைக்குலையையும் வாங்கிக் கொண்டார்.

"சரியான கஞ்சப் பிசினாறியா இருப்பார் போலிருக்கே' என்று மனதுக்குள் நினைத்த கருப்பையா,போனால் போகிறதென்று அந்த விலைக்குத் தள்ளிவிட்டார்.

வாழைப்பழக் குலையிலிருந்து பத்து பத்து பழங்களாக வெட்டித் தரச் சொன்னார். 

"குறைஞ்ச வெலைக்கு வாங்கினதுமில்லாம,இந்த கஞ்சனுக்கு இந்த வேலை வேற செய்யணுமா?' என்று வேண்டா வெறுப்புடன் வெட்டித் தந்தார் கருப்பையா. 

தன் கையில் இருந்த பெரிய பையில் பழங்களை வாங்கிக் கொண்ட அந்த நபர்,கோயில் முன்புறம் உட்கார்ந்திருந்த பிச்சைக்காரர்களுக்கு ஆளுக்கு நான்கு பழங்களாகக்கொடுத்துவிட்டு காரில் ஏறிச் சென்றார். திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் கருப்பையா.

கு.அருணாசலம்,
தென்காசி.

எஸ்.எம்.எஸ்.

நிம்மதிக்கான இரண்டு வழிகள்:
1. விட்டுக் கொடுங்கள்
2. விட்டு விடுங்கள்

அண்ணா அன்பழகன்,
அந்தணப்பேட்டை.

அப்படீங்களா!

3 டி பிரிண்டிங் தொழில்நுட்பம் எல்லாத்துறைகளிலும் புகுந்துவிட்டது. அதிலும் கட்டுமானத்துறையில் நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேலைகளைச் செய்யத் தொடங்கிவிட்டார்கள். 

கட்டுமானத்துக்குத் தேவையான பொருள்களைத் தேவையான அளவுக்கு மட்டும் துல்லியமாக இந்தத் தொழில்நுட்பத்தின் மூலமாக உருவாக்கலாம். உதாரணமாக,கட்டடம் கட்டும்போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் எந்த அளவில் செங்கல் தேவையோ, அந்த அளவில் இந்தத் தொழில்நுட்பம் மூலம் ஒவ்வொரு செங்கல்லையும் தயாரிக்கலாம். இதனால் செங்கல் உடைக்கப்பட்டு வீணாவது தடுக்கப்படுகிறது.இவ்வாறு கட்டுமானப் பொருள்கள் அனைத்தையும் வீணாக்காமல் தயாரிக்கலாம். 

 கடந்த 2018 - ஆம் ஆண்டு பிரான்சில் உள்ள நான்டேஸ் நகரத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் முதன்முறையாக 95 மீட்டர் சதுர அடி பரப்பளவில் நான்கு படுக்கையறைகள் கொண்ட ஒரு வீட்டைக் கட்டியுள்ளனர். 54 மணி நேரத்தில் வீடு கட்டும் பணி முடிவடைந்துவிட்டது.

தேவையான ஜன்னல்கள், கதவுகள் பொருத்தும் பணிக்குத்தான் அதிக நாள்கள் ஆகிவிட்டன. அதே ஆண்டில் நெதர்லாந்தில் இந்தத் தொழில்நுட்பம் மூலம் பாலம் ஒன்றைக் கட்டி முடித்தார்கள். 

அமெரிக்காவைச் சேர்ந்த வெபெர் என்ற நிறுவனம் நெதர்லாந்தில் உள்ள ஐந்தோவென் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து 3 டி பிரிண்டிங் தொழில்நுட்ப கட்டடங்களுக்குத் தேவையான மூலப் பொருள்களைத் தயாரிக்கிறார்கள்.அவர்கள் தயாரித்தளித்திருக்கும் கலவைச் சாந்து பல்வேறு வடிவங்களில் கட்டுமானப் பொருள்களை உருவாக்க பயன்படுகிறது. 

என்.ஜே.,
சென்னை-58. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com