'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 51

தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அப்படிப் பேசுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 51

தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அப்படிப் பேசுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

நவம்பர் 23, 1992 தேசிய ஒங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பலர் பேசினாலும் ஜெயலலிதாவின் உரைதான் அனைத்துப் பத்திரிகைகளிலும் தலைப்புச் செய்தியானது.

ஜெயலலிதா கரசேவை நடத்தப்படுவதை ஆதரித்துப் பேசினார் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அவர் பாபர் மசூதி கட்டடம் தகர்க்கப்பட்டு விடக்கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று சொன்னதும் அதே அளவிலான உண்மை. கரசேவை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அவர் சொன்ன கருத்தை யாரும் எதிர்பார்க்காததால், அது மட்டுமே பெரிதாகப் பேசப்பட்டது.

தனிமைப்படுத்தப்படுவோம் என்று பயந்து பாஜக தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று தனக்கு முன்னால் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச்செயலாளர் இந்திரஜித் குப்தாவின் கருத்தைத் தனது உரையில் ஜெயலலிதா குறிப்பிட்டதுதான் பரபரப்பை ஏற்படுத்திய வரிகள்.

""அயோத்தியில் ராமருக்குக் கோயில் எழுப்ப வேண்டும் என்பது தேசிய அளவிலான உணர்வு. இந்திரஜித் குப்தா கூறியதுபோல, அந்தப் பிரச்னையில் பாஜக வேண்டுமானால் இந்த அவையில் தனிமைப்படக்கூடும். ஆனால், தெருவில் இறங்கிக் கேளுங்கள், பெரும்பான்மை மக்கள் அங்கே கோயில் எழுப்ப வேண்டும் என்று விழைகிறார்கள். அதே நேரத்தில், அயோத்தியில் இருக்கும் பாபர் மசூதிக்கு எந்தவித சேதமும் ஏற்படக் கூடாது. அந்த மசூதிக் கட்டடம் குறித்த முடிவு நீதிமன்றங்களால் எடுக்கப்பட வேண்டும். மசூதிக்கு சேதமில்லாமல் ராமருக்கு அயோத்தியில் கோயில் எழுப்பப்படுமானால், அதை நாம் அனுமதிக்க வேண்டும்'' - இதுதான் முதல்வர் ஜெயலலிதா உரையின் சாராம்சம்.

தேசிய ஒங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடந்த அன்று மாலையில் தில்லியில் உள்ள அத்தனை பிரமுகர்களும் ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ ஏதோ ஒருவிதத்தில் ஜெயலலிதாவின் உரை குறித்துத்தான் விவாதித்துக் கொண்டிருந்தனர். ஜெயலலிதா அப்படி பேசியதில் காங்கிரஸார் அடைந்த அதிர்ச்சியை விட, பாஜகவுக்கு ஏற்பட்ட இன்ப அதிர்ச்சிதான் அதிகம். நரசிம்ம ராவின் சிறுபான்மை அரசுக்கு ஆதரவு அளிக்கும் கட்சியிடமிருந்து, தங்களது கரசேவைக்கு ஆதரவு கிடைக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

அப்போது பாஜகவின் தலைமையகம் அசோகா சாலையில் இயங்கி வந்தது. இப்போது மோடி - அமித் ஷா தலைமையில் அவர்கள் கட்டியிருக்கும் ஹைடெக் கார்ப்பரேட் அலுவலகம் போன்றதல்ல அது.

கட்சித் தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் அறையில் முக்கியமான அனைத்து பாஜக பிரமுகர்களும் கூடியிருந்தனர். வாஜ்பாயையும் அத்வானியையும் தவிர நம்ம ஊர் ஜனா. கிருஷ்ணமூர்த்தியில் தொடங்கி சுந்தர்சிங் பண்டாரி, ஜே.பி. மாத்தூர், சிக்கந்தர் பக்த்,, மதன்லால் குரானா, கே.ஆர். மல்கானி, சுஷ்மா ஸ்வராஜ் என்று தலைவர்களால் நிறைந்திருந்தது டாக்டர் முரளி மனோகர் ஜோஷியின் அறை.

முரளி மனோகர் ஜோஷியை முன்னாள் மத்திய அமைச்சர், பாஜகவின் தலைவராக இருந்தவர் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். அவரது பின்னணி மிகவும் ஆச்சரியப்பட வைக்கும். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் அவர் விரிவுரையாளராக இருந்தபோது, அங்கே மாணவர்களாக இருந்தவர்கள் அர்ஜுன் சிங்கும், வி.பி. சிங்கும். அவர்கள் இருவருமே அவரை "ப்ரொபசர்', "பண்டிட்ஜி' என்று மரியாதையுடன் அழைப்பதை நான் கேட்டிருக்கிறேன்.

அலகாபாத் பல்கலைக்கழகத்தில் மாணவராக அவர் இருந்தபோது, அவரது பேராசிரியராக இருந்தவர் ராஜேந்திர சிங். பின்னாளில் அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில உலகத் தலைவரானார் ("சர்சங்கசாலக்'). அவரது தொடர்புதான் முரளி மனோகர் ஜோஷியை அந்த இயக்கத்திற்கு ஈர்த்தது.

அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் (பிசிக்ஸ்) முனைவர் பட்டம் பெற்றவர் டாக்டர் முரளி மனோகர் ஜோஷி. நிறமாலையியலில் (ஸ்பெக்ட்ரோஸ்கோபி) அவரது முனைவர் பட்ட ஆய்வு என்பது சாதாரணமானதல்ல. ஆங்கிலத்தில் படித்தாலும் தனது முனைவர் பட்ட ஆய்வை ஹிந்தியில் சமர்ப்பித்தார் டாக்டர் முரளி மனோகர் ஜோஷி என்பதுதான் குறிப்பிடத்தக்கது. ஹிந்தியில் ஆய்வை சமர்ப்பித்து இந்தியாவில் முனைவர் பட்டம் பெற்ற முதலாவது நபர் டாக்டர் முரளி மனோகர் ஜோஷிதான்.

1953 முதலே அவர் அரசியலிலும், போராட்டங்களிலும் ஈடுபட்டிருந்தார் என்றாலும், அடக்குமுறைச் சட்டத்தில் கைதான பிறகுதான் அவரது பெயர் பரவலாக வெளியில் தெரியத் தொடங்கியது. 1991-இல் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, வாஜ்பாயிக்கும், அத்வானிக்கும் அடுத்தபடியாக அந்தக் கட்சியின் மூன்றாவது முக்கியமான தலைவராக அவர் உயர்ந்தார்.

ஸ்ரீநகர் "லால் செளக்' மைதானத்தில் தடைகளை மீறி அவர் இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏற்றியபோது, அவருக்குத் துணையாக இருந்தவர் இப்போதைய பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது. "அயோத்தியில் ராமர் கோயில்' என்பதை அடிப்படைத் திட்டமாக மாற்றியவரும் அவர்தான். லால் செளக்கில் தேசியக் கொடியேற்றியதும், பாபர் மசூதி இடிப்பும் டாக்டர் முரளி மனோகர் ஜோஷி பாஜகவின் தலைவராக இருந்தபோதுதான் நடந்தன என்கிற வரலாறு மறக்க முடியாதது.

டாக்டர் ஜோஷியின் அறையில் நடந்த கூட்டம் கலைந்தபோது, டாக்டர் ஜோஷி உள்பட அங்கிருந்த பலருடனும் நான் பேசினேன். அவர்கள் அனைவரும் "கரசேவை' குறித்துப் பிடிவாதமாக இருந்தார்களே தவிர, ஒருவர்கூட அயோத்தி பாபர் மசூதி இடிப்பு குறித்து சிந்தித்ததாகத் தெரியவில்லை.

தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முடிந்த அடுத்த நாள், அந்தப் பிரச்னை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. என்னதான் நடக்கிறது பார்க்கலாம் என்று நானும் மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் சென்று அமர்ந்திருந்தேன். எதிர்பார்த்தது போலவே, விவாதம் சூடு பிடித்தது. சோமநாத் சாட்டர்ஜி, எல்.கே. அத்வானி, சந்திரஜித் யாதவ், இந்திரஜித் குப்தா என்று எதிர்க்கட்சி வரிசைத் தலைவர்கள் பலரும் முந்தைய நாள் தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் தொடர்ச்சியாக அயோத்தி விவகாரத்தை மக்களவை விவாதமாக்கினார்கள்.

நவம்பர் 24-ஆம் தேதி, மக்களவையில் எல்.கே. அத்வானி பேசிய பேச்சு நிச்சயமாக அவைக் குறிப்பில் இருக்கும். அதைவிடத் தெளிவாக அயோத்தி பிரச்னை குறித்த அன்றைய பாஜகவின் நிலைப்பாட்டைத் தெரிவித்துவிட முடியாது. அவர் தெரிவித்த கருத்து இதுதான்:

""எங்களது கட்சி சட்டத்தை மதிக்கிறது. ஆரம்பம் முதலே அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அதேபோல, மசூதியை இடிக்க வேண்டும் என்பதும் எங்களது கோரிக்கை அல்ல. ஹிந்துக்கள், முஸ்லிம்கள் இருவரின் உணர்வுகளையும் மதிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து. பாபர் மசூதி கட்டடத்தையும், உத்தரபிரதேச அரசு கையகப்படுத்தி இருக்கும் 2.77 ஏக்கர் இடத்தில் டிசம்பர் 6-ஆம் தேதி கரசேவை தொடங்குவதையும் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை. இவை இரண்டையும் பிரித்து யோசித்தால், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். இவற்றை இணைத்துத் தீர்வு காண முற்பட்டால், தீர்வு கிடைக்காது.''

அத்வானியின் அறிவிப்பை அவை அப்படியே ஏற்று, பாஜகவை அந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள வைத்திருந்தால், டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால், தேவையில்லாமல் விவாதம் திசை திருப்பப்பட்டு, பாஜகவின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்படாதது மிகப் பெரிய துரதிருஷ்டம்.

நரசிம்ம ராவ் அரசும் சரி, தன்னால் இயன்ற அளவு பாபர் மசூதியைக் காப்பாற்ற எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டது. கல்யாண் சிங் தலைமையிலான பாஜக அரசு உத்தரபிரதேசத்தில் அமைந்தது முதல், மத்திய அரசு பல நிபுணர் குழுவை அயோத்திக்கு அனுப்பி அங்கிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்து வந்தது. உள்துறை அமைச்சர் சங்கர்ராவ் சவாண் உத்தரபிரதேச அரசுடன் தொடர்பில் இருந்தவண்ணம் இருந்தார் என்பதை அப்போது உள்துறைச் செயலராக இருந்த மாதவ் கோட்போலே என்னிடம் தெரிவித்தார்.

உள்துறை அமைச்சகமும், பிரதமர் அலுவலகமும் எந்தவித விபரீதமும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதிலும், அப்படியே ஏற்பட்டால் அதை உடனடியாக எதிர்கொள்ளவும் பல முன்னேற்பாடுகளைச் செய்திருந்தன. குறிப்பாக, அயோத்தியின் அருகிலுள்ள ஃபைசாபாதில் ஹெலிகாப்டர்களுடன் ராணுவம் தயார்நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.

பாபர் மசூதியைச் சுற்றி ஒரு சுற்றுச்சுவர் சற்று இடைவெளிக்கு அப்பால் எழுப்பப்பட்டிருந்தது. சுற்றிலும் கம்பி வேலிகளும் அமைக்கப்பட்டிருந்தன. மத்திய அரசு வேண்டுமென்றே வாளாவிருந்தது என்பது தவறான பரப்புரை. அதேபோல, பாஜக திட்டமிட்டுத்தான் பாபர் மசூதியைத் தகர்த்தது என்கிற கூற்றும் உண்மையில்லை என்பதை, அந்த நேரத்தில் பாஜக தலைவர்கள் அனைவருடனும் தொடர்பில் இருந்த என்னால் உறுதியாகக் கூறமுடியும்.

சென்னைக்குத் திரும்புவதற்கு முன்பு, அயோத்திக்குச் சென்றுவிட்டுத் திரும்பலாம் என்பதுதான் எனது திட்டமாக இருந்தது. பின்னாளில் பிரதமரான இந்தர் குமார் குஜ்ராலை அவரது மகாராணி பாக் வீட்டில் சந்திக்கச் சென்றிருந்தேன். எனது எண்ணத்தை அவரிடம் சொன்னபோது, தலையை அசைத்து "வேண்டாம்' என்று அறிவுறுத்தினார் அவர்.

""இப்போது அயோத்திக்கு நீங்கள் போக வேண்டாம். அங்கே ஒன்றும் நடக்கவில்லை. அதே நேரத்தில், எப்போது என்ன நடக்கும் என்றும் சொல்ல முடியாது. டிசம்பர் 6-ஆம் தேதி கரசேவை நடந்து முடிவதுவரை நீங்கள் அந்தப் பக்கம் செல்லக் கூடாது. சென்னைக்குத் திரும்பிவிடுங்கள்.''

""மீண்டும் துப்பாக்கிச் சூடு நடக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா?''

""இரண்டு தரப்பினரும் தீவிரமாக இருக்கிறார்கள். கரசேவையின்போது பிரச்னையும் கலவரமும் ஏற்படலாம் என்பது ஒருபுறம். பாஜக அரசு அங்கே ஆட்சியில் இருப்பதால், முலாயம்சிங் யாதவ் போல இப்போது பாஜக தொண்டர்களை கல்யாண் சிங் தடுக்கமாட்டார் என்பது முஸ்லிம் அமைப்புகளுக்குத் தெரியும். கரசேவை நடக்காமல் இருப்பதற்கு, டிசம்பர் 6-ஆம் தேதிக்கு முன்பு அவர்கள் அங்கே குண்டு வெடிப்போ, தாக்குதலோ நடத்தமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? அதனால்தான் கூறுகிறேன், நீங்கள் சென்னைக்குத் திரும்புங்கள்''

அன்று நீண்ட நேரம் அயோத்தி பிரச்னை குறித்து ஐ.கே. குஜ்ரால் பேசிக் கொண்டிருந்தார். அவரது ஆலோசனையை ஏற்றுக்கொண்டு நான் சென்னை திரும்புவது என்று முடிவெடுத்தேன்.

சென்னைக்குக் கிளம்புவதற்கு முன்பு பல முக்கியமான ஆளுங்கட்சிப் பிரமுகர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று பலரையும் சந்தித்தேன். எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும், மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தினார்களே தவிர, கல்யாண் சிங் அரசைப் பதவியிலிருந்து அகற்றுவது என்கிற கருத்தை ஏற்பதாக இல்லை.

பாபர் மசூதிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதாக உத்தரபிரதேச முதல்வர் கல்யாண் சிங் உச்சநீதிமன்றத்திற்கு உத்தரவாதம் அளித்திருந்தார்; உத்தர பிரதேச ஆளுநராக இருந்த சத்தியநாராயணன் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர். அவர் மாநில அரசுக்கு எதிராக எந்தவித அறிக்கையும் அளிக்கத் தயாராக இல்லை.

இந்தப் பின்னணியில் கல்யாண் சிங் அரசை, அரசியல் சாசனப் பிரிவு 356-இன் கீழ் பதவியிலிருந்து அகற்றுவது என்பதை மத்திய அரசால் செயல்படுத்த முடியவில்லை. இதுதான் நான் புரிந்துகொண்ட உண்மை நிலை.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்படும்போது நான் சென்னையில் இருந்தேன் என்று முன்பே கூறிவிட்டேன். பிரணாப் முகர்ஜி அன்று பம்பாயில் (மும்பை) இருந்தார். அது சரி, பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் எங்கே இருந்தார்? என்ன செய்து கொண்டிருந்தார்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com