திரைக்கதிர்
By ஜி.அசோக் | Published On : 05th December 2021 06:00 AM | Last Updated : 05th December 2021 06:00 AM | அ+அ அ- |

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் "பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்றுவருகிறது.
இப்படத்தில் செல்வராகவன், யோகி பாபு, பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், லிலிபுட்ஃபரூக்கி, ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், அன்குர் அஜித் விகால் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அனிருத், எடிட்டராகநிர்மல், கலை இயக்குநராக கிரண் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு முதலில் ஜார்ஜியாவில் தொடங்கப்பட்டது. அதன் பிறகு சென்னை திரும்பிய படக்குழு அங்கு படத்தின் பிரதான காட்சிகளுக்காக வணிக வளாகம் போன்ற அரங்குகள் அமைத்துப் படப்பிடிப்பு நடத்தி வருகிறது.
இந்நிலையில் "பீஸ்ட்' படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 100 நாட்கள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி படக்குழு மற்றும் இசைக்கருவிகள் சூழ விஜய் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது.
--------------------------------------------------------
உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு வெளியாகியுள்ள "ஜெய்பீம்' படத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒரு சேர வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இப்படத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பார்த்து பாராட்டியுள்ளார். முன்னதாக படத்தை தொலைக்காட்சியில் பார்த்த நல்லக்கண்ணு, திரையில் காண விருப்பம் தெரிவித்திருந்தார். அதற்கேற்ப படத்தை திரையிடஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, படத்தைத்திரையில் கண்டு ரசித்தார். படத்தைப் பார்த்துவிட்டுநல்லக்கண்ணு, நடிகர் சூர்யாவையும், படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேலுவையும் வெகுவாகப் பாராட்டினார். நடிகர் சூர்யாவின் கன்னத்தில் செல்லமாக வருடிக் கொடுத்து, தனது பாராட்டை நல்லக்கண்ணு பதிவு செய்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சியினரும் படத்திற்கு பாராட்டும்,படக்குழுவினருக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.
--------------------------------------------------------
கோவாவில் நடந்து முடிந்த 52- ஆவது சர்வதேச திரைப்பட விழாவில், சிறப்பு விருந்தினர் பிரிவில் உரையாடுவதற்காக சமந்தா அழைக்கப்பட்டார். தென்னிந்திய நடிகைகளில் அவருக்கு கிடைத்த பெரிய கௌரவம் இது. அந்த விழாவில் பங்கேற்ற சமந்தாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் சமந்தா அளித்துள்ள பேட்டியில்... ""பாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருக்கிறது. நல்ல கதைகள் வந்தால் ஏற்றுக் கொள்வேன்.
நான் எப்போதும் சொல்வது போல், எனக்கு அதிக மனநிறைவு கொடுக்கும் படங்களில் மட்டுமே நடிப்பேன். பணம் சம்பாதிப்பது மட்டுமே என் நோக்கம் இல்லை. வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கவே தவம் இருக்கிறேன். திரையில் நான் ஏற்று நடிக்கும் கேரக்டர்களைப் பார்த்து என் குடும்பத்தார் பெருமைப்பட வேண்டும்'' என்று கூறியுள்ளார். இந்நிலையில் சமந்தாவுக்கு பாலிவுட் சினிமா வாய்ப்பு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
--------------------------------------------------------
நடிகர் சூர்யா திரையுலக வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய படங்களில், இயக்குநர் பாலா இயக்கத்தில் அவர் நடித்த "நந்தா', "பிதாமகன்' ஆகிய படங்களுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. இந்த இரு படங்களுக்குப் பின், கடந்த 2005 -ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான "மாயாவி' படத்தை பாலா தயாரித்திருந்தார். ஆனால் கடந்த 20 வருடங்களாக சூர்யா மற்றும் பாலா கூட்டணி இணையவே இல்லை.
இந்நிலையில் தற்போது இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. இந்த தகவலை உறுதி செய்துள்ள சூர்யா, ""என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர். ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர். 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான். அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்... அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்'' என்று தெரிவித்துள்ளார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் தேர்வாகியுள்ளார்.
--------------------------------------------------------
நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கி வரும் படம் "வீரமே வாகை சூடும்'. அதிகார பலம் கொண்டவர்களுக்கு எதிராக எளியவன் ஒருவன் போர்க்கொடி தூக்கும் கதைதான் இப்படத்தின் கரு. இப்படத்தின் அனைத்து கட்ட பணிகளும் நிறைவடைந்தநிலையில் தற்போது ரிலீஸூக்குத் தயாராகி வருகிறது.
வரும் 2022-ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. விஷாலின் மாறுபட்ட நடிப்பில் அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்ஷன் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும், சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஷால், டிம்பிள் ஹயாதி, யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, ஆர்என்ஆர் மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, வெங்கடேஷ், மஹா காந்தி, மரியம் ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.