அவசர சிகிச்சைப் பிரிவு

செல்வாவின் கண்கள் செருகிக் கிடந்தன. ஓரங்களில்  கத்தரிக்கப்பட்டு நடுவில் மட்டும் தூக்கிக் கொண்டு நின்றிருந்த அவனது கேசம், ஒழுங்கின்றிக் கிடந்தது.
அவசர சிகிச்சைப் பிரிவு

செல்வாவின் கண்கள் செருகிக் கிடந்தன. ஓரங்களில் கத்தரிக்கப்பட்டு நடுவில் மட்டும் தூக்கிக் கொண்டு நின்றிருந்த அவனது கேசம், ஒழுங்கின்றிக் கிடந்தது. முழங்கால் வரை தனது ஃபேண்டை தூக்கிவிட்டிருந்தான். ஃபேண்ட் இறுக்கமாக இருக்கவேண்டும் என்பதற்காக அதனை சுற்றி சுருக்கி நுனியில் "கிளிப்' ஒன்றைச் செருகி இருந்தான்.

சட்டையில் மேல் பட்டனை அறுத்து தூக்கி எறிந்து விட்டு மீதி பட்டன்களை மட்டும் போட்டிருந்தான். சட்டை காலர் மேல்நோக்கி உயர்ந்து கன்னத்தில் குத்திக் கொண்டு இருந்தது. ஒற்றைக் காதில் பேப்பரில் குத்தி வைக்கிற கொண்டை ஊசி மாதிரி ஒரு கடுக்கன் போட்டிருந்தான். போட்டிருந்த அரைக்கை சட்டையிலும் கைகளை மடக்கி இறுக்கமாக ஜாக்கெட் மாதிரி டிசைன் பண்ணியிருந்தான்.

அவன் மனவெளி எங்கும் ஒரு மோசமான மிருகம் திசை தெரியாமல் ஒடிக்கொண்டிருந்தது.

கோபம் கொதிஉலையைப் போல கொப்பளித்துக் கொண்டிருந்தது. எதிரே வருபவர்களுக்கு பற்கள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன.

சிலருக்கு அந்தப் பற்களிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

யாருடைய முகத்திலும் கருணையையோ அன்பையோ அவன் பார்க்கவில்லை. எல்லாரும் எதிரிகளாகவே களமாடினார்கள். பார்ப்பவர்கள் எல்லாம் இவன் முகத்தைப் பார்த்து எச்சில் உமிழ்ந்து விட்டுப் போவது போல ஒரு நினைப்பு, அவன் மூளைக்குள் திரைப்படம் ஒட்டிக் கொண்டிருந்தது. அந்தத் திரைப்படத்தின் நடுவே வரும் ஆசிரியர் பாத்திரங்களும் முக்கியமாக பாஸ்கர் சாரும் வில்லன்களாகவே வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்கள் கைகளில் கத்தியையும் சைக்கிள் செயின்களையும் வைத்துக் கொண்டு தன்னைச் சுற்றி வருவது போல ஒரு காட்சி மின்னி மறைந்தது.

எதிரில் வருபவர்களை எல்லாம் தன் கையில் இருக்கும் கூரிய வாளால் வெட்டி வீழ்த்திக் கொண்டே வந்தான். பாய்ந்து சென்று குத்தினான். குடல்களைச் சரித்து ரத்த வெள்ளத்தில் தள்ளி விட்டான். எதிரிக் கூட்டங்களையெல்லாம் அழித்த பின் அவன் எதிரில் வந்து நின்றார் அவன் அப்பா. சுற்றி நிற்கும் அடியாட்களை அடித்துத் துரத்திய பின் இறுதியாக எங்கிருந்தோ பாயும் முதன்மை வில்லனைப் போல வந்து குதித்த அப்பாவை ஏளனமாகப் பார்த்தான் செல்வா.

""வா...வா...வா...'' என்பது போல கைகளை நீட்டி அழைத்தான். தன் கையிலிருந்த வாளை எடுத்துக் கொண்டு தன் அப்பாவின் தலையைக் குறி வைத்துப் பாய்ந்தான் செல்வா.
...
மரத்தடியில் அரை மயக்கத்தில் கிடந்தவனை கோகுலும் நவீனும் தட்டி எழுப்பினார்கள்.

கண்களை கசக்கிக் கொண்டு எழுந்து உட்கார முயற்சி செய்த செல்வா நவீன் மீது சாய்ந்து கொண்டான்.

""ஒயிட்னர் கொண்டு வந்திருக்கியாடா நவீன்?''
- தட்டுத் தடுமாறி கேட்டான் செல்வா.
""ஏன்டா செல்வா? இப்படி ஓவரா அடிக்ட் ஆயிட்ட?''
""இல்லடா, ரொம்ப யூஸ் பண்ணலடா. ஏதோ பழைய ஒயிட்னர்னு நினைக்குறேன். அதான் கொஞ்சம் மயங்கிட்டேன்.''
நவீன் தன் ஃபேண்ட் பாக்கெட்டிலிருந்து ஒயிட்னர் பாட்டிலை எடுத்தான்.
அவசரமாக அவன் கையிலிருக்கிற ஒயிட்னர்
பாட்டிலை பிடுங்கி முகர்ந்து கொண்டான் செல்வா.
ஆளுக்கொருமுறை முகர்ந்து கொண்டார்கள்.
பிரவீண் தலைதெறிக்க ஓடி வந்தான்.
""டேய்.. என்னடா பண்றீங்க? அங்க கிளாஸ் ஆரம்பிக்க போகுதுடா. வாங்கடா கிளாசுக்கு போகலாம்.''
அவர்கள் யாரும் பதில் சொல்லாமல் பிரவீணை ஏற இறங்க பார்த்தார்கள்.
""என்னடா... எல்லாரும் போதையில இருக்கற மாதிரி நிக்குறீங்க?'' பிரவீண் அதிர்ச்சியாக கேட்டான்.
""மாதிரியெல்லாம் இல்லடா மச்சி... உண்மையான போதைதான். நீயும் கொஞ்சம் மோந்து பார்க்குறியா?''
பாட்டிலை நீட்டியபடி கேட்டான்செல்வா.
""அடப்பாவிகளா... படிக்கறது பத்தாங்கிளாஸ். ஏன்டா இப்படி பண்றீங்க?''
""டேய் பாருடா... புத்தர் புதுசா பொறந்து வந்துருக்காரு'' கிண்டலாகச் சொன்னான் செல்வா.
""ஆமாம்டா... புத்தர் பொறந்து வந்தாலும் திருந்தவா போறீங்க?''
செல்வா தன் கைகளை அசைத்து பிரவீணைப் போகச் சொல்லி சைகை செய்தான்.
தன் தலையில் அடித்துக் கொண்டே அந்த இடத்தில் இருந்து நகர்ந்து கொண்டான் பிரவீண்.
""டேய்... நவீன்... இன்னக்கி எங்க அப்பாவைக்குத்தி குடலை உருவப் போறேன்டா.
அதுக்குத்தான் இந்தக் கத்தியை வாங்கி வைச்சுருக்கேன்.''
தன் சட்டைப் பையில் இருந்த மடக்குக் கத்தியை எடுத்து விரித்து காண்பித்தான் செல்வா.
""போடா... ஆரம்பிச்சிட்டியா... உனக்கும் உங்க அப்பாவுக்கும் எப்போதும் லடாய் தானா?''
""இல்லடா... எங்க அப்பா ஓவரா போய்க்கிட்டு இருக்காருடா''
""என்னடா... காசு கேட்டு குடுக்கலியா?''
""காச குடுக்கலன்னா பரவாயில்லடா. கையைப் பிடிச்சு தரதரன்னு ஒரு டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய்ட்டாருடா. அந்த
டாக்டர் நம்ம சயின்ஸ் வாத்தியார் மாதிரி அட்வைஸ் பண்றேன்னு என்னை கொலையா கொன்னுட்டாருடா. என்னை இழுத்துட்டுப் போன எங்கப்பன் கைய இன்னக்கி வெட்டணும்டா.''
செல்வா கொக்கரித்தான்.
""என்னடா நடந்துச்சு? விளக்கமாச் சொல்லுடா'' நவீன் கேட்டான்.
செல்வா சொல்ல ஆரம்பித்தான்.
வெள்ளைச் சீருடை அணிந்த தேவதைகளுக்கு நடுவே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த மருத்துவமனை. அழுகுரல்களும் அபயக் குரல்களும் அந்த மருத்துவமனையின் சுவர்களில் முட்டி மோதி எதிரொலித்துக் கொண்டிருந்தன.
""உங்க பையன்கிட்ட எத்தனை நாளா இந்தப் போதைப்பழக்கம் இருக்கு?''
""அவன்கிட்டயே கேளுங்க டாக்டர். எங்ககிட்ட நல்ல பையன் மாதிரிதான் நடந்துக்கிட்டான். எப்ப எங்க இருந்து ஆரம்பிச்சான்னு தெரியல டாக்டர்.''
- சொல்லி முடித்த அப்பாவை திரும்பி முறைத்துப் பார்த்தான் செல்வா.
""கெட்ட நண்பர்கள் சகவாசம் உங்க பையனுக்கு அதிகமா இருக்கு. எழுதியதை
அழிக்கறதுக்கு பயன்படுத்துற ஒயிட்னர். அதை முகர்ந்து பார்த்து அதுல போதை ஏத்திக்கிற ஒரு மோசமான பழக்கம், இப்ப இளைஞர்கிட்ட, மாணவர்கள்கிட்ட பரவிக்கிட்டே வருது. உங்க பையனும் அதுக்கு அடிக்ட் ஆயிருக்கான்.''
மிரட்சியோடு கேட்டுக் கொண்டிருந்தார்கள் செல்வாவின் அப்பாவும் அம்மாவும்.
""ஏதாவது தப்பா எழுதிட்டா அதை அழிக்கறதுக்காக பயன்படுத்துற ஒரு பொருளை பல பேர் இன்னக்கி தங்களோட தலையெழுத்தை அழிக்கறதுக்காக பயன்படுத்துறாங்க.'' ஒருமுறை "உச்' கொட்டிக் கொண்டார் டாக்டர்.
""டிரை குளோரோ ஈத்தேன்னு ஒரு கெமிக்கல் ஒயிட்னர்ல மிக்ஸ் ஆகியிருக்கும். ஒயிட்னரைத் தொடர்ந்து போதைப் பொருளா பயன்படுத்தினா நேரடியா நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும். வார்த்தைகள் குழற ஆரம்பிக்கும். கண் பார்வை பாதிக்கும். உங்க பையனைச் சோதிச்சதுல்ல இந்த சிம்டம்ஸ் எல்லாம் இருக்கு.''
""இப்ப என்ன பண்றது டாக்டர்?''
""இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கு. என்னைச் சொல்ல விடுங்க.''
""சாரி டாக்டர்.''
""இப்படியே விட்டுட்டா மூளை செயல்பாடு குறைஞ்சிடும். கார்டியாக் அரெஸ்ட் வரலாம். கோமா ஸ்டேஜ்க்குக் கூட போயிடுவாங்க. நீங்க கேட்டீங்க இல்லையா என்ன பண்றதுன்னு? இப்ப சொல்றேன் கேட்டுக்குங்க. டீடாக்ஸ், போதை அடிமை மறுவாழ்வு ட்ரீட்மெண்ட் உடனடியா ஆரம்பிக்கணும். கொஞ்சம் கொஞ்சமா மாத்தணும். இப்போதைக்கு நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்க ஒரு இன்ஜெக்ஷன் மட்டும் போடுறேன். அதுக்குப் பிறகு கொஞ்ச நாள் இன் பேஷண்டா இருந்து டிரீட்மெண்ட் எடுத்துக்கட்டும். ஒரு வாரம் கழிச்சு வந்து பாருங்க.''
இன்ஜெக்ஷன் போட்டுக் கொள்ள மாட்டேன் என்று கூப்பாடு போட்டவனை அப்பாதான் அழுத்தி பிடித்துக் கொண்டார்.
""அந்தக் கையை வெட்டி வீசணும்டா'' ஆக்ரோஷமாகக் கத்தினான் செல்வா.
""இன்னக்கி முதல் பீரியட் என்னடா?'' - செல்வா கேட்டான்.
""சயின்ஸ்... ஆனா அந்தப் பீரியட் முடிஞ்சுப் போச்சு''
""அப்ப ரெண்டாவது பீரியட்?''
""நீதி போதனை வகுப்புடா. நம்ம தமிழ் அய்யா சங்கரலிங்கம் வருவாருடா.''
""நம்ம புலவர் அய்யாவா? அழகா கதை சொல்லுவாருடா. தாலாட்டு பாடுற மாதிரியே இருக்கும். அசந்து தூங்கிடலாம். மிஸ் பண்ணவே கூடாது. ஃபேன் காத்துல தூங்கறதுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காதுடா. வாங்கடா போகலாம்.''
செல்வா கூப்பிட்டான். எல்லோரும் எழுந்து வகுப்புக்குப் போனார்கள்.
""மாணவர்களே இன்றைக்கு என்ன தினம் தெரியுமா?'' தன் உரத்த குரலில் உற்சாகமாகக் கேட்டார் சங்கரலிங்கம் அய்யா.
""தந்தையர் தினம் அய்யா.''
மாணவர்கள் உற்சாகமாகக் கத்தினார்கள்.
செல்வாவிற்கு கண்கள் சிவந்தன.
""இன்னக்கி தந்தையர் தினமாமுல்ல. எங்கப்பனுக்குப் பரிசு குடுக்க அருமையான தினம்'' பாட்டிலை எடுத்து யாருக்கும் தெரியாமல் முகர்ந்து கொண்டான் செல்வா.
தலைக்கேறிய கோபத்துடன் போதையும் சேர்ந்து கொண்டு உக்கிரமாக மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கினான் செல்வா.
""கூல் செல்வா. இது கிளாஸ் ரூம். கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு அய்யா சொல்ற கதையைக் கேளு''
""அம்மாவை நேசிக்கும் அளவுக்கு நாம் அப்பாவை நேசிக்கத் தவறி இருக்கிறோம். அம்மாவின் அன்புக்கு ஈடு இணை இல்லை என்பது உண்மைதான். ஆனால் அதே சமயம் அம்மாவை விட அப்பாதான் தியாகத்தில் உயர்ந்தவர் என்பது உங்களுக்குத் தெரியுமாடா பசங்களா?''
நிமிர்ந்து அய்யாவைக் குழப்பத்துடன் பார்த்தான் செல்வா.
அய்யா தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்.
""தனது பிள்ளைகளுக்காக இரவு பகல் பார்க்காமல் வேலை பார்க்குறவர் யாரு? அப்பாதான். தனக்கு உடம்பு சரியில்லைன்னா தன் குடும்பத்துக்காக கஷ்டப்படுறவரு அப்பாதான். பத்து மாசம் வயித்துல சுமக்கலையே தவிர, தன்னால முடிஞ்ச வரை தோள்லயும் முதுகுலயும் சுமக்கிறவரு அப்பா. தன்னால முடியாம போனா கூட மனசுல சுமக்கறவர் அப்பாதான்டா. புரிஞ்சுக்குங்க''
செல்வாவுக்குத் தன் அப்பாவின் முகம் ஒருமுறை வந்து போனது.
""ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ஹீரோ அப்பாதான். அன்பைக் கூட அதட்டலாதான் வெளிப்படுத்துவாரு. அப்பா தான் படுற கஷ்டங்கள மனசுக்குள்ளேயே போட்டு புதைச்சு வைச்சிக்கிறதால அது நமக்குத் தெரியாம போயிடுது. தான் பட்ட கஷ்டத்தை மகனோ மகளோ படக்கூடாதுன்னு தன் வாழ்க்கையையே தியாகம் பண்றவர்தான்டா அப்பா''
""... ...''
""உங்கள மாதிரி குழந்தைகள வளர்த்து ஆளாக்கி உலக வாழ்க்கைக்குத் தயார்
படுத்தி வழி அமைச்சுக் கொடுக்குறவரு அப்பாதான். ஆனால் நம்மில் பலபேர் அப்பாவை மதிக்கறதே இல்ல. என்னுடைய முதல் எதிரியே அப்பாதான்னு கிண்டல்
செய்றோம். திட்டறோம். சிலபேர் போதை வஸ்துகளைச் சாப்பிட்டுட்டு அடிக்கக் கூட முயற்சி செய்றோம். இது பெரிய பாவம் இல்லயா? அப்பா என்ற அந்த ஜீவன் இல்லாமல் நாம ஏது மாணவர்களே?''
சங்கரலிங்கம் அய்யா கலங்கியிருந்தார்.
""அம்மா மாதிரியே அப்பாவையும் மதிக்கணும். தந்தையர் தினத்துக்கு பரிசுப் பொருள்கள் கூட நீங்க தர வேண்டாம். அப்பா உங்கள நேசிக்கிறேன்னு ஒத்த வரி அன்பா சொல்லுங்க. அது போதும்.
அப்படி இல்லன்னா அதை ஒரு வாழ்த்து அட்டையில எழுதிக் குடுங்க. அது போதும். அதுதான் உங்க
அப்பாவுக்கு நீங்க குடுக்குற தந்தையர் தினப் பரிசு.''
-சொல்லி முடித்து விட்டு தன் கண்களைத் துடைத்துக் கொண்டார் சங்கரலிங்கம் அய்யா.
மாணவர்களிடமும் நிசப்தம். சிலர் அழுகுரலும் கேட்டது.
குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்த்தார்
சங்கரலிங்கம்.
கத்தியையும் பாட்டிலையும் சன்னல் வழியாகத் தூக்கி எறிந்து விட்டு அழுது கொண்டிருந்தான் செல்வா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com