முகப்பு வார இதழ்கள் தினமணி கதிர்
100 தடவை மொட்டை!
By எஸ். சந்திரமெளலி | Published On : 19th December 2021 06:00 AM | Last Updated : 19th December 2021 06:00 AM | அ+அ அ- |

கடந்த நாற்பது வருடங்களில், சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமான மேடை நாடகங்களிலும், 80 திரைப்படங்களிலும், ஏராளமான டெலிவிஷன் தொடர்களிலும் நடித்திருக்கிறார் ஸ்ரீனிவாசன்.
ஆனால், "மேனேஜர் சீனா' என்றுதான் மக்கள் அவரை அறிவார்கள். அண்மையில் அவரது எண்பதாவது பிறந்த நாளை மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி சபா அரங்கில் விமரிசையாக நடத்தினார் அவரது மகன் பரத்வாஜ். இயக்குநர் எஸ்பி. முத்துராமன், டெல்லி கணேஷ், காத்தாடி ராமமூர்த்தி, குமாரி சச்சு, அபஸ்வரம் ராம்ஜி, முக்தா ரவி போன்ற பிரபலங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேனேஜர் சீனாவின் 80-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம் என்பதால், எண்பது சினிமா, மேடை, சின்னத்திரை பிரபலங்கள் அவரை வாழ்த்தும் வீடியோ திரையிடப்பட்டது. மேனேஜர் சீனாவிடம் ஜாலியாய் பேசினோம்.
அது என்ன சார் மேனேஜர் சீனா? நீங்கள் எங்கேயாவது மேனேஜராக வேலை பார்த்தீர்களா?
பின்னி மில்லில் சூப்பர்வைசர் வேலையிலிருந்து 1994-ஆம் ஆண்டே விருப்ப ஓய்வு பெற்றுவிட்ட போதிலும் இன்னமும் என்னை "மேனேஜர் சீனா" என்றே அபிமானத்துடன் அனைவரும் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதற்கு ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் சொல்லட்டுமா? 1975-இல் வி. கோபாலகிருஷ்ணனின் கோபி தியேட்டர்ஸ் நாடகக் குழுவின் "ராஜயோகம்' என்ற நாடகத்தில் நான் நடித்தேன். அந்தக் குழுவில் அப்போது இரண்டு ஸ்ரீனிவாசன்கள். நாடகத்தில் ஒருவருக்கு மேனேஜர் ரோல். இன்னொருவருக்கு ஜோசியர் ரோல். குழப்பத்தைத் தவிர்க்க ஒருவரை மேனேஜர் சீனா என்றும் இன்னொருவரை ஜோசியர் சீனா என்றும் புதிய நாமகரணம் செய்தார்கள். அதன் பின் எனக்கு மேனேஜர் சீனா என்ற பெயரே நிலைத்துவிட்டது.
பொறுப்பான உத்யோகம், நாடக நடிப்பு என்று இரட்டை சவாரியில் சந்தித்த சிரமங்கள் எவை?
நான் பெரம்பூர் பின்னி மில்லில் வேலை பார்த்துக் கொண்டே நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது மில்லில் மூன்று ஷிஃப்ட். முதல் ஷிஃப்ட் பிற்பகலில் முடிந்துவிடும். மாலையில் நாடகத்தில் நடிக்கப் போய்விடுவேன். இரவு ஷிஃப்ட் என்றால், நாடகம் முடிந்தவுடன் நேராக மில்லுக்குப் போய்விடுவேன். மதிய ஷிஃப்ட் என்றால் வேறு வழி இல்லாமல், அரை நாள் லீவு போடும்படி ஆகும். ஆனாலும், நாடகத்தின் மேல் இருந்த ஆர்வம் காரணமாக லீவு போடத் தயங்கமாட்டேன். ஆனால் பின்னி மில்லை மூடுவதற்கு சில வருடங்கள் முன்பாக 1994-இல் வாலன்டரி ரிடையர்மெண்ட் வாங்கிக் கொண்டு முழு நேர நடிகனாகிவிட்டேன்.
மறக்க முடியாத மேடை அனுபவம்?
எஸ்.வி.சேகரின் "நாடகப்பிரியா' குழுவில் நடித்துக் கொண்டிருந்தபோது, "எல்லாமே தமாஷ்தான்" நாடகத்தில், பந்தயத்தில் தோற்றுவிட்டால் மொட்டை அடித்துக் கொள்வதாக சபதம் போடுவேன். பந்தயத்தில் தோற்றுவிட்டு, அடுத்த காட்சியில் மொட்டைத் தலையுடன் மேடையில் தோன்ற வேண்டும். அதற்காக, நாடகம் இருக்கும் நாட்களில் எல்லாம் தவறாமல் நான் மொட்டை போட்டுக் கொள்வேன். ஆரம்பக் காட்சிகளில் தலைக்கு விக் வைத்துக் கொண்டு நடித்துவிட்டு, மொட்டைத்தலைக் காட்சியின்போது விக்கை கழற்றிவிட்டு, மொட்டைத் தலையாக மேடையில் தோன்றியதும் ரசிகர்கள் கைதட்டி ஆர்ப்பரிப்பார்கள். அந்த நாடகம் நூறு தடவை நடந்திருக்கும், அந்த நூறு நாளும் நான் மொட்டை போட்டுக் கொண்டேன் என்றால் நீங்கள் நம்ப மாட்டீர்கள்.
நினைவில் நிற்கும் சினிமா அனுபவம்?
ஒரு முறை பின்னி மில்லில் வேலை நிறுத்தம். வேலைக்குப் போகவில்லை. எதேச்சையாக என் நண்பரான நடிகர் மேஜர் சுந்தரராஜனை சந்தித்தேன். பேச்சு வாக்கில், அவரிடம் மில் ஸ்டிரைக் பற்றி சொன்னேன். அவர் அப்போது "கல்தூண்' படத்தை டைரக்ட் செய்து கொண்டிருந்தார். கோவைக்கு அந்தப் படத்தின் ஷூட்டிங்கிற்குப் போகும்போது என்னையும் கூட அழைத்துக் கொண்டு போய், படத்தில் எனக்கும் ஒரு ரோல் கொடுத்துவிட்டார். ஆக, நாடக நடிகனான என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் மேஜர்தான். முதல் படமே சிவாஜி படம் என்பதில் எனக்கு அலாதி பெருமை; சந்தோஷம். சிவாஜியின் நடிப்பை நேரடியாக அருகில் இருந்து பார்க்கிற அரிய பாக்கியம் எனக்கு அப்போது கிடைத்தது. சுமார் ஒன்றரை பக்க வசனத்தை, உதவி இயக்குநர் ஓரிரு தடவைகள் படித்துக் காட்ட, நாற்காலியில் அமர்ந்துகொண்டு, கண்களை மூடியபடியே கேட்டுவிட்டு, டைரக்டர் ஸ்டார்ட் சொல்லி, கேமரா ஓட ஆரம்பித்தவுடன்,
அத்தனை வசனங்களையும் அபாரமாகப் பேசி, நடித்த சிவாஜியைப் பார்த்து மிகவும் வியந்துபோனேன்".