'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 67

சைஃபுதீன் செளத்ரி சொன்னதன் காரணம் எனக்கு உடனடியாக விளங்கவில்லை. அவரே விளக்கியபோதுதான், "அடடா, நிஜம்தானே' என்று நான் உணர்ந்தேன்.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 67

சைஃபுதீன் செளத்ரி சொன்னதன் காரணம் எனக்கு உடனடியாக விளங்கவில்லை. அவரே விளக்கியபோதுதான், "அடடா, நிஜம்தானே' என்று நான் உணர்ந்தேன்.

பிரணாப் முகர்ஜியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் 1987 ஆகஸ்டில் முடிந்துவிட்டது. அவருக்கும் ராஜீவ் காந்திக்கும் இடையே சரியான புரிதல் இல்லாமல் போனதால், அவருக்கு மீண்டும் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. 1988 திரிபுரா தேர்தல் பிரச்சாரத்தின்போது, ராஜீவ் காந்தி, பிரணாப் முகர்ஜி சந்திப்பு நடந்தது. அந்த சந்திப்பைத் தொடர்ந்து, ராஜீவ் காந்தியும் சரி, பிரணாப் முகர்ஜியும் சரி இடைப்பட்ட மூன்றாண்டு இடைவெளியை மறந்து செயல்படத் தொடங்கினார்கள் என்பதை, பல நிகழ்வுகள் உறுதிப்படுத்தின.

ஆனால், பிரணாப் முகர்ஜியை மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்க வழிகோலவில்லை. 1989 மக்களவைத் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. மீண்டும் முனைப்புடன் இயங்கத் தொடங்கி இருந்தாலும், 1991 தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, ராஜீவ் காந்தி அவரைத் தனியாக அழைத்து, அவரிடம் தேர்தல் பிரச்சாரப் பொறுப்பை அளித்தார்.

மிகவும் நெருக்கமான சில பத்திரிகையாளர்களுடன் ஒருநாள் தனியாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அவர் தேர்தலில் நிற்பது குறித்து நாங்கள் கேட்டது நினைவுக்கு வருகிறது.

""பிரணாப்தா, நீங்கள் தேர்தலில் நிற்பதாக இல்லையா? மாநிலங்களவையிலும் இல்லாமல், மக்களவையிலும் இல்லாமல் இருந்தால், ஆட்சி அமைந்தாலும் நீங்கள் புறக்கணிக்கப்படுவீர்களே?''

பிரணாப் முகர்ஜியை அந்தக் கேள்வி சற்று சிந்திக்க வைத்தது.

""நான் 1969 முதல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்திருக்கிறேன். இந்த முறை மக்களவைக்குப் போட்டியிட வேண்டும் என்று விரும்பினேன். ராஜீவ்ஜியிடமும் அதைப் பற்றிச் சொன்னேன்.''

""அவர் என்ன சொன்னார்?''

""நீங்களும் தேர்தலில் போட்டியிட்டால், பிரச்சாரம், விளம்பரம், பத்திரிகைகளுக்குப் பேட்டி அளிப்பது போன்றவற்றிற்கு யாருமே இருக்க மாட்டார்கள். நரசிம்ம ராவும் அரசியலிலிருந்து ஓய்வு பெற விரும்புகிறார். அதனால் நீங்கள் தில்லியிலேயே இருந்து கவனித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்.''

""வேறு ஏதாவது சொன்னாரா?''

""மாநிலங்களவை உறுப்பினர்கள் இருவர் மக்களவைக்குப் போட்டியிடுகிறார்கள். அவர்கள் வெற்றி பெற்றால் அந்த இடங்கள் காலியாகும். நீங்கள் அந்த மாநிலங்களிலிருந்து நாடாளுமன்றத்துக்கு வரலாம் என்று தெரிவித்தார்.''

பிரணாப் முகர்ஜி எங்களை சமாதானப்படுத்தினாரே தவிர, அவர் அந்த பதிலால் திருப்தி அடைந்தார் என்று எனக்குத் தோன்றவில்லை. வேறு மாநிலங்களிலிருந்து, ஒருவர் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதில் அவருக்கு எப்போதுமே உடன்பாடு இருந்ததில்லை. அப்படியே வேறு மாநிலங்களிலிருந்து தான் போட்டியிட வேண்டும் என்றால், மக்களவைக்குப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அவர் பலதடவை கூறியிருக்கிறார்.

வேறு மாநிலங்களிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்களுக்கான மரியாதையே தனி என்று பிரணாப் முகர்ஜி என்னிடம் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதற்கு அவர் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டது வி.கே. கிருஷ்ண மேனனையும், இந்திரா காந்தியையும்.

கேரள மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்த வி.கே. கிருஷ்ண மேனன், மும்பை மேற்குத் தொகுதியில் இருந்து இரண்டு முறையும், மேற்கு வங்க மித்னாபூர் தொகுதியில் இருந்து ஒரு முறையும் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஜவாஹர்லால் நேரு அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், பிரிட்டனில் இந்தியத் தூதராகவும், ஐநா சபையில் இந்தியாவின் பிரதிநிதியாகவும் இருந்தவர் கிருஷ்ண மேனன்.

அதேபோல, பிரதமராக இருந்த இந்திரா காந்தி கர்நாடக மாநிலம் சிக்மகளூர், ஆந்திர மாநிலம் மேதக் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். இந்தப் பட்டியலில் மேலும் மூன்று பிரதமர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் குறிப்பிடவேண்டும்.

முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் மாநிலம் விட்டு மாநிலம் சென்று மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். தனது சொந்த மாநிலமான ஆந்திரத்தில் ஹனமகொண்டா (1977, 1980), நந்தியால் (1991) தொகுதிகளில் வெற்றி பெற்ற பி.வி. நரசிம்ம ராவ், 1984, 1989 தேர்தல்களில் மகாராஷ்டிர மாநிலம் ராம்டெக்கிலும், 1996-இல் ஒடிஸா மாநிலம் பேர்ஹாம்பூரிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், உத்தர பிரதேசம், தில்லி என்று பல பிற மாநிலத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றிருக்கிறார். பல்ராம்பூர், லக்னெள, குவாலியர், புது தில்லி என்று அவரால் போட்டியிட முடிந்ததற்கு, அவரது தேசிய அளவிலான ஆளுமைதான் காரணம்.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடியால் தனக்கு தொடர்பே இல்லாத உத்தர பிரதேச மாநிலம் வாராணசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை வெற்றி பெற முடிந்திருக்கிறது. அதற்கும் தேசிய அளவிலான ஆளுமைதான் காரணம்.

கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்த ஜார்ஜ் மேத்யூ பெர்னாண்டஸ், கிறிஸ்தவ பாதிரியாராக பயிற்சி பெற பெங்களூருக்குச் சென்றார். பாதிரியாராக விரும்பியவர், மும்பை சென்று தொழிற்சங்கவாதியாகவும், அரசியலில் நுழைந்து இந்தியாவின் முக்கிய சோஷலிஸ்ட் தலைவர்களில் ஒருவராகவும் மாறியது சுவாரஸ்யமான திருப்பம்.

தொழிற்சங்கவாதியாக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் 1967 பொதுத் தேர்தலில் மும்பை தெற்கு தொகுதியில் சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு, காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ்.கே. பாட்டீலைத் தோற்கடித்தபோது, ஒட்டுமொத்த இந்தியாவும் வியப்பில் சமைந்தது. 1977, 1980, 1989, 1991, 2004 மக்களவைத் தேர்தல்களில் பிகார் மாநிலம் முசாபர்பூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பிகார் மாநிலம் நாளந்தா தொகுதியில் இருந்தும் மூன்று முறை (1996, 1998, 1999) தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறார்.

சோஷலிஸ்ட் கட்சி, ஜனதா கட்சி, ஜனதா தளம், சமந்தா கட்சி, ஐக்கிய ஜனதா தளம் என்று பல கட்சிகளின் சார்பில் அவர் போட்டியிட்டிருக்கிறார். வெற்றி பெறவும் செய்திருக்கிறார். கட்சியின் செல்வாக்கு மட்டுமே அவரது வெற்றிக்குக் காரணமல்ல. அவரது தனிப்பட்ட ஆளுமையும் காரணம். சொந்த மாநிலமான கர்நாடகத்தில் அவரால் வெற்றி பெற முடியவில்லை என்பது மிகப் பெரிய சோகம்.

மத்திய தொழில்துறை அமைச்சர், ரயில்வே அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் என்று பல முக்கிய பொறுப்புக்களை வகித்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், தேசிய அளவில் பெற்றிருந்த அங்கீகாரத்தின் அடையாளம்தான் அவரால் மகாராஷ்டிரம், பிகார் மாநிலங்களிலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற முடிந்தது.

மாநிலம் விட்டு மாநிலம் போய் போட்டியிட்டது மட்டுமல்லாமல், அந்தத் தொகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையையும் பெற்றவர் முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய பிரதேசத்தின் முதல்வராக இருந்தவருமான கமல்நாத். அவரது சாதனை அசாத்தியமானது.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த கமல்நாத், டேராடூனில் படிக்கும்போது அவருக்கு சஞ்சய் காந்தியின் அறிமுகம் கிடைத்தது. 1980-இல் சஞ்சய் காந்தியின் பரிந்துரை காரணமாக மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 1980 முதல் 1996 வரை, 7, 8, 9, 10 மக்களவைகளிலும், 1998, 1999, 2004, 2009, 2014 மக்களவைத் தேர்தல்களிலும் சிந்த்வாரா தொகுதியிலிருந்து தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018-இல் மத்தியபிரதேச முதல்வரானதால் தனது மக்களவைப் பதவியை ராஜிநாமா செய்தார்.

இந்த வரிசையில் ஜனதா தளத் தலைவர் சரத் யாதவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சரத் யாதவின் அரசியல் வாழ்க்கை ஜெயப்பிரகாஷ் நாராயணனின் இயக்கத்தில் தொடங்கியது. 1974 மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் இடைத்தேர்தலில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சரத் யாதவ், 1977-இல் ஜனதா கட்சி வேட்பாளராக வெற்றி பெற்றார். 1981-இல் ராஜீவ் காந்தியை எதிர்த்து அமேதி இடைத் தேர்தலில் தோல்வியடைந்த சரத் யாதவ், சரண் சிங்கின் ஆதரவுடன் 1984-இல் உத்தரபிரதேசம் பதோன் தொகுயிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1991 முதல் பிகார் மாநிலம் மாதேப்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். நான்கு தடவை தோற்றும் இருக்கிறார்.

1993 ஜனவரி 17-ஆம் தேதி வர்த்தகத் துறை அமைச்சராகப் பதவி ஏற்றிருந்த பிரணாப் முகர்ஜி நாடாளுமன்ற உறுப்பினராக இல்லை. ஆறு மாதங்களுக்குள் இரு அவைகளில் ஏதாவது ஓர் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது என்பதற்கான வாய்ப்பே கிடையாது. அதனால் ஜூலை 17-ஆம் தேதிக்குள் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது அவசியம். மேற்கு வங்கத்திலிருந்து ஜூலை மாதத்தில் ஆறு மாநிலங்களவைக்கான இடங்கள் நிரப்பப்பட இருந்தன. அதற்கான தேர்தல் நடந்தால், பிரணாப் முகர்ஜி உறுப்பினராகிவிட முடியும்.

நான் கிரேட்டர் கைலாஷிலுல்ள பிரணாப் முகர்ஜியின் வீட்டிற்குச் சென்றபோது, அங்கே அமைதி நிலவியது. எல்லோருமே கவலையுடன் காட்சி அளித்தனர். சற்று முன்னர்தான், ஜூன் மாதம் மத்திய விளையாட்டுத் துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த மம்தா பானர்ஜி, மேற்கு வங்க காங்கிரஸ் கமிட்டிச் செயலாளராக இருந்த சோமன் மித்ரா, எம்பியாக இருந்த அஜித்குமார் பாஞ்சா ஆகியோர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துவிட்டுச் சென்றிருந்தனர்.

மேற்கு வங்க சட்டப்பேரவையில், காங்கிரஸ் கட்சிக்கு 41 உறுப்பினர்கள்தான் இருந்தனர். மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட 42 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. போதாக்குறைக்கு, மேற்கு வங்க காங்கிரஸ் கமிட்டி சோமன் மித்ரா, பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி, கானிகான் செளத்ரி, மம்தா பானர்ஜி என்று நான்கு கோஷ்டிகளாகப் பிரிந்து கிடந்தது. அனைத்து கோஷ்டிகளையும் இணைத்தாலும் கூட, மேலும் ஒரு வாக்கு கிடைத்தால்தான் வெற்றி பெற முடியும் என்பது நிலைமை.

வழக்கம்போல, தனது கைகளைத் தலைக்கு மேலே தூக்கிப் பிடித்தபடி அமர்ந்திருந்த பிரணாப் முகர்ஜி தீவிரமான ஆலோசனையில் இருப்பது தெரிந்தது. எல்லா கோஷ்டிகளும் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாக வாக்களித்திருக்கிறார்கள் என்று அவரது உதவியாளர் எனது காதில் கிசுகிசுத்தார்.

பிரணாப் முகர்ஜியிடம் மிகவும் ரகசியமாகத் தெரிவிக்கும்படி என்னிடம் சைஃபுதீன் செளத்ரி சொல்லியிருந்த தகவலை அவரிடம் தெரிவிப்பதற்காக நான் வரவேற்பறைக்குள் எட்டிப் பார்த்தேன். தொலைபேசி ஒலித்துக் கொண்டிருந்தது. உதவியாளர் ஓடிப்போய் எடுத்தார். அடுத்த நொடி, அமைச்சரிடம் ஓடிச்சென்று அவர் சொன்னசெய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மேற்கு வங்கத்தில் நடக்க இருந்த மாநிலங்களவைத் தேர்தலை தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் தள்ளி வைத்துவிட்டார் என்பதுதான் அந்தச் செய்தி. ஜூலை 16-ஆம் தேதிக்குள் தேர்தல் நடக்காது என்பது உறுதியாகிவிட்டது. அதனால் பிரணாப் முகர்ஜி அமைச்சராக தொடர முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது.

செய்வதறியாத திகைப்பில் நாங்கள் எல்லோரும் அவரவர் இருந்த இடத்தில் அப்படியே சிலையாக நின்று விட்டோம். பிரணாப் முகர்ஜி அமைதியாகத் தனது பைப்பை எடுத்து, புகையிலையை நிரப்பிப் பற்ற வைத்துப் புகைக்கத் தொடங்கினார்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com