பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்! - 18

சென்னை திரும்பியதும் உடனடியாகக் கிளம்பி அண்ணா அறிவாலயம் சென்றேன். முதல்வராகப் பதவி ஏற்றிருந்த கருணாநிதியைப் பேட்டி எடுப்பதுதான் எனது முதல் முனைப்பாக இருந்தது.
பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்! - 18


சென்னை திரும்பியதும் உடனடியாகக் கிளம்பி அண்ணா அறிவாலயம் சென்றேன். முதல்வராகப் பதவி ஏற்றிருந்த கருணாநிதியைப் பேட்டி எடுப்பதுதான் எனது முதல் முனைப்பாக இருந்தது. இந்த இடத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தை அதன் தலைவராக அரை நூற்றாண்டு காலம் வழி நடத்திய மு. கருணாநிதி குறித்து நான் ஒரு கருத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

பத்திரிகையாளன் என்கிற ஒற்றைச் சொல் அவரது வீட்டிலோ, அலுவலகத்திலோ அவரைச் சந்திக்கப் போதுமானது. தனது வாழ்க்கையை ஒரு
பத்திரிகையாளராகத் தொடங்கிய காரணத்தாலோ என்னவோ, பத்திரிகையாளர்களை எப்படி மதிக்க வேண்டும் என்று அவரிடம் அரசியல் தலைவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்!

தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன்பு நான் திமுக தலைவர் கருணாநிதியைப் பேட்டி எடுத்திருந்தேன். அந்தப் பேட்டியில் காங்கிரஸ் கட்சியையும், பிரதமர் ராஜீவ் காந்தியையும் மிகவும் கடுமையாகத் தாக்கி அவர் கருத்து தெரிவித்திருந்தார். ராஜீவ் காந்தி தொடர்ந்து தமிழகத்துக்கு வருவதால் மக்கள் அவர் மீது வெறுப்படைந்திருக்கிறார்கள் என்பதுடன் அவர் நிறுத்திக் கொள்ளவில்லை.

ராஜீவ் காந்தி இந்தியாவைப் பிடித்திருக்கும் மிக மோசமான பூதம் என்றும், அவரது ஆட்சி இந்திய ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய களங்கம் என்றும் தெரிவித்திருந்தார். நடைபெற இருக்கும் தேர்தலில் திமுகவின் முதல் எதிரி ஜெயலலிதாவோ, அதிமுகவோ அல்ல என்றும், காங்கிரஸ்தான் முதல் எதிரி என்றும் அவர் என்னிடம் அப்போது திட்டவட்டமாகத் தெரிவித்தது நினைவுக்கு வந்தது.

அறிவாலயத்தில் தலைவர்கள் யாரும் இல்லை. ஆட்சி அமைந்துவிட்டதால் தலைவர்களும் தொண்டர்களும் கோட்டைக்குச் சென்றுவிட்டனர். என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் வெளியே வந்தபோது, முரசொலி மாறன் காரில் வந்து இறங்கியது எனது அதிர்ஷ்டம்.

நான் முதல்வர் கருணாநிதியை சந்திக்க வேண்டும் என்று சொன்னவுடன், மாலையில் கோபாலபுரம் வீட்டிற்குச் செல்லும்படி கேட்டுக் கொண்டார். மாறன் சொல்லிவிட்டால் அது கருணாநிதியே சொல்லிவிட்டாற்போல என்பது உலகறிந்த ரகசியம்.

மாலை வரை நேரத்தை வீணாக்காமல் உபயோகமாகப் பொழுதைக் கழித்தாக வேண்டும். ஜெமினி சந்திப்பில் இருந்த "உட்லேண்ட்ஸ் ட்ரைவ் இன்' அப்போது மிகவும் பிரபலம். அங்கே போய் பிசிபேலாபாத், தயிர்சாதம் சாப்பிட்டுக் கொண்டே, அன்றைய தினசரிகளை எல்லாம் வரிவிடாமல் படித்து முடித்தேன்.

தேர்தல் வெற்றி திமுகவுக்கு மிகப் பெரிய உற்சாகத்தை அளித்திருந்தது என்றால், அதிமுகவின் இரண்டு அணியினர் மத்தியிலும் "ஒன்றுபட்டால்தான் உண்டு வாழ்வு' என்கிற புரிதலை ஏற்படுத்தி இருந்தது. அதிமுக பிளவுபடாமல் இருந்திருந்தால் திமுக இந்த அளவிலான வெற்றியைப் பெற்றிருக்காது என்பது மட்டுமல்ல, ஒருவேளை மும்முனைப்போட்டி அதிமுகவுக்கு சாதகமாக மாறியிருக்கவும் கூடும் என்பதை அவர்கள் உணரத் தொடங்கிவிட்டனர்.

ஆழ்வார்பேட்டை பீமண்ண கார்டனில் உள்ள ம. நடராஜன் வீட்டுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். யாரும் எடுக்கவில்லை. முதல்வர் கருணாநிதியை சந்திக்க மாலை வரை நேரம் இருக்கிறது. ராஜா அண்ணாமலைபுரம் ஆறாவது பிரதான சாலையில் உள்ள செ. மாதவனை சந்திப்பது என்று தீர்மானித்தேன். வெளியே வந்து ஆட்டோ பிடித்து நான் அவருடைய வீட்டை அடைந்தேன்.

அப்போதுதான் அவரும் காரில் வந்து இறங்கிக் கொண்டிருந்தார். ராமாபுரம் தோட்ட இல்லத்தில் எம்ஜிஆரின் மனைவி வி.என். ஜானகியை சந்தித்துவிட்டு வந்திருக்கிறார் என்பது அவர் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.

""அதிமுக அணிகள் இணைவது எந்த அளவில் இருக்கிறது?''

""உறுதியாகிவிட்டது. ஜானகி அம்மா தெளிவாகவே இருக்கிறார். "தம்பி, தலைவர் தொடங்கிய கட்சி அழிந்துவிடக் கூடாது. மக்கள் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருப்பதைத் தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்திவிட்டன. இனியும் நாம் கெளரவம் பார்க்கக் கூடாது. கட்சி இணைய வேண்டும். இரட்டை இலை சின்னம் நம்ம கையை விட்டுப் போய்விடக் கூடாது!' என்று என்னிடம் தெளிவாகவே தெரிவித்து விட்டார்.''

""நடராஜனைப் பார்த்தீர்களா? அவர்கள் என்ன சொல்கிறார்கள்?''

""நடராஜனை மட்டுமல்ல, ஜெயலலிதாவையும் சந்தித்துப் பேசிவிட்டேன். இப்போதைக்கு நீங்கள் எதையும் வெளியே சொல்லி விடாதீர்கள். பத்திரிகையில் வந்து விடக் கூடாது. பல தடைகள் ஏற்படும்.''

தேர்தல் குறித்தும், அதிமுக குறித்தும், இணைப்பு குறித்தும் செ. மாதவன் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். இப்போது பழைய நினைவுகளை மீள்பார்வை பார்க்கும்போது செ. மாதவன் மீது எனக்கு வருத்தமும் ஆதங்கமும் மேலிடுகிறது.

1962-இல் சட்டப்பேரவையில் திமுக உறுப்பினராக நுழைந்த செ. மாதவன், தமிழக அரசியலில் நிகழ்ந்த பல முக்கியமான நிகழ்வுகளுக்கும், மாற்றங்களுக்கும் சாட்சியாக மட்டுமல்லாமல், அவற்றில் முக்கியப் பங்கும் வகித்தவர். சி.என். அண்ணாதுரை தலைமையில் 1967-இல் தமிழகத்தில் முதன் முதலில் திமுக ஆட்சி அமைத்தபோது, அந்த அமைச்சரவையில் சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்றவர் செ. மாதவன்.

1967-இல் திமுக ஆட்சி அமைத்தது; 1969-இல் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கருணாநிதி முதல்வரானது; 1972-இல் திமுகவிலிருந்து எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டது; உடல்நிலை சரியில்லாத நிலையில் எம்ஜிஆர் தனது உயிலை எழுதியது; எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அதிமுக பிளவு; 1989 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் நடந்த ஜெயலலிதா - ஜானகி அணிகளின் இணைப்பு - என்று அனைத்து நிகழ்வுகளிலும் செ. மாதவனின் பங்களிப்பு இருந்திருக்கிறது. நான் எத்தனையோ தடவை அவரிடம் வற்புறுத்தியும் கூட, அவர் அவற்றைக் குறித்து எந்தவிதப் பதிவும் செய்யாமல் 2018-இல் மறைந்தது, வரலாற்றுக்கு மிகப் பெரிய இழப்பு.

""நான் எல்லா உண்மைகளையும் எழுத முற்பட்டால், அதைக் கலைஞர் (கருணாநிதி) விரும்பமாட்டார். நான் திமுகவில் இருக்கிறேன். அதனால் எதையுமே எழுதிவிட முடியாது'' என்று அதற்கு விளக்கம் தந்தார். அவரால் எழுத முடியாது என்பதால்தானோ என்னவோ, நான் அவரை சந்திக்கும் போதெல்லாம் மணிக்கணக்கில் என்னிடம் பழைய சம்பவங்கள் குறித்த அனைத்து செய்திகளையும், திரைமறைவு நிகழ்வுகளையும் தெரிவித்தார் என்று நினைக்கிறேன்.

அதிமுக அணிகள் இணைவது உறுதி என்பது தெரிந்துவிட்டது. செ. மாதவனிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டிருந்தேன். வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து ம. நடராஜன் இறங்கினார்.

""நான் ஐயாவிடம் சற்று பேசிவிட்டு வந்து விடுகிறேன். கிளம்பி விடாதீர்கள்'' என்றபடி செ. மாதவனுடன் ஓர் அறைக்குள் சென்றுவிட்டார் நடராஜன். சுமார் பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு வெளியே வந்தார். நானும் அவருடைய காரிலேயே கிளம்பினேன். அவரது ஆழ்வார்பேட்டை வீட்டுக்கு வந்தோம். அவரது வீட்டிற்குப் போனதும், என்னிடம் உரிமையுடன் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

""மாதவன் ஐயா உங்களிடம் எல்லாவற்றையும் தெரிவித்ததாகக் கூறினார். உடனடியாக தில்லிக்குப் போய், காதும் காதும் வைத்தாற்போல இரட்டை இலை சின்னத்தைப் பெற்றாக வேண்டும். வழக்குரைஞர் "கே.எஸ்.' (கே. சுப்பிரமணியம் - பின்னாளில் தமிழக அரசின் தலைமை வழக்குரைஞராக இருந்தவர்) எல்லா ஏற்பாடுகளையும் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் செய்திருக்கிறார்.''

""அதற்கு நான் எப்படி உதவ முடியும் என்று நினைக்கிறீர்கள்?''

""எங்கள் கட்சியிலேயே, குறிப்பாக ஜானகி அணியில் சிலர் இதற்கு முட்டுக்கட்டை போடக்கூடும். கருணாநிதி எப்படியும் மோப்பம் பிடித்து, இரட்டை இலை சின்னம் கிடைத்துவிடாமல் செய்ய ஏதாவது சட்டச் சிக்கலை ஏற்படுத்தக் கூடும். நான் உள்துறை அமைச்சர் பூட்டா சிங்குடன் தொடர்பில் இருக்கிறேன். அவர் எல்லா உதவிகளையும் செய்வார். ஆனாலும், பிரதமர் இந்த விஷயத்தில் நேரிடையாக அக்கறை காட்டினால் மட்டும்தான், இரட்டை இலை சின்னம் மீண்டும் ஒதுக்கப்படும். அதற்கு நீங்கள் ஆர்.கே. தவானிடம் பேசி ஏற்பாடு செய்ய வேண்டும்.''

எனக்கு தர்ம சங்கடம். ஆர்.கே. தவானிடம் பேசி இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும்படி நான் போய்ச் சொல்வதா, அது எடுபடுமா என்று எனக்குள்ளேயே சந்தேகம். எனது சந்தேகத்தை நடராஜன் புரிந்து கொண்டுவிட்டார்.

""உங்களைப் பற்றி நீங்கள் ஏன் குறைத்து மதிப்பிட்டுக் கொள்கிறீர்கள்? நீங்கள் தனிப்பட்ட ஆதாயத்துக்காக எதுவும் செய்து கொள்ளமாட்டீர்கள் என்பது எங்கள் எல்லோருக்குமே தெரியும். அதனால், நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நம்புகிறோம். ஆர்.கே. தவானும் நம்புகிறார்...''
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பொய் வாக்குறுதி அளிக்க நான் தயாராக இல்லை.

""நாளை காலையில் தில்லியில் இருப்பேன். நீங்களும் வந்து விடுங்கள். அமைச்சர் பூட்டா சிங் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஹோட்டல் கனிஷ்காவில் நான் தங்குகிறேன். அங்கே சந்திப்போம்'' என்றார் ம. நடராஜன்.

அதற்கும் தலையசைத்தேனே தவிர, வேறு எதுவும் சொல்லவில்லை.

ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள தயாரிப்பாளர் ஜீவியின் அலுவலகத்துக்கு வந்தேன். மனம் விட்டுப் பேசக் கூடிய எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவராக இருந்தார், ஜி. வெங்கடேஸ்வரன் என்கிற ஜீவி. அவர் தயாரிப்பாளராகப் பிரபலமாவதற்கு முன்பிருந்தே அவருடன் எனக்குத் தொடர்பு உண்டு.

அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருந்தது, எனக்கு வசதியாகப் போயிற்று. அவரது அலுவலகத்திலிருந்து தில்லிக்கு ட்ரங்க் கால் போட்டுவிட்டு, ஜீவியும் நானும் கொஞ்சம் அரசியலும், நிறைய சினிமாவும் பேசிக் கொண்டிருந்தோம். தில்லிக்கான இணைப்பு கிடைத்தது. எதிர்முனையில் ஆர்.கே. தவான். நான், அதிமுக அணிகள் இணைவது பற்றியும், அடுத்த நாள் காலையில் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் இரு தரப்பும் கையொப்பமிட்ட மனுக்கள் தரப்படுவது பற்றியும் அவரிடம் தெரிவித்தேன்.

""தேர்தல் ஆணையத்தில் "இரட்டை இலை' சின்னம் பிரச்னை நாளை காலையில் வருவது எனக்குத் தெரியும். நீ முதலில் முதலமைச்சர் கருணாநிதி என்ன நினைக்கிறார் என்பதைத் தெரிந்து கொள். அதற்குப் பிறகு அடுத்த முடிவை வகுப்போம்.''

""இன்னும் சற்று நேரத்தில் முதல்வரின் கோபாலபுரம் வீட்டில் அவரை சந்தித்துப் பேட்டி எடுக்க இருக்கிறேன்.''

""முதல்வர் கருணாநிதி நம்முடன் இணைந்து செயல்படுவது குறித்து என்ன நினைக்கிறார், தேசிய முன்னணியைக் கைவிட்டுவிட்டு நம்முடன் சேருவதற்கான வாய்ப்பு தெரிகிறதா என்பதைத் தெரிந்துகொண்டு நாளைக் காலையில் நீ தில்லிக்கு வந்துவிடு.''

இணைப்பைத் துண்டித்து விட்டார் ஆர்.கே. தவான். நடராஜனும் தில்லிக்கு வரச் சொல்கிறார். தவான்ஜியும் தில்லிக்கு வரச் சொல்கிறார். தில்லி என்ன ஆட்டோ பிடித்துப் போகும் தூரத்திலா இருக்கிறது, நினைத்தால் போய்ச் சேர?

மாலை ஐந்து மணியாகி இருந்தது. கோபாலபுரத்துக்கு விரைந்தாக வேண்டும். இல்லையென்றால், முதல்வர் கருணாநிதியை சந்திக்க முடியாது. குழப்பத்துடன் நான் எழுந்திருந்தேன்.

"" உங்களுடன் இன்னும் சில விஷயங்கள் பேச வேண்டும். கோபாலபுரத்துக்கு எனது காரில் போய், பேட்டி முடிந்ததும் திரும்பி வாருங்கள். நான் காத்திருக்கிறேன், கிளம்புங்கள்'' என்றார் ஜீவி.

கோபாலபுரம் வீட்டில் ஒரே கூட்டம். முதல்வர் கருணாநிதியின் உதவியாளர்களில் ஒருவரான செயல்மணி என்னை அடையாளம் கண்டு உள்ளே அழைத்துக் கொண்டார். உள்ளே வரவேற்பறையில், இன்றைய திமுகவின் பல மூத்த தலைவர்கள், அப்போதுதான் முதன்முறையாக அமைச்சர்களாகி, முதல்வர் இறங்கி வந்தால் எழுந்து நிற்கத் தயாராக உட்கார்ந்திருந்தனர்.

முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேட்டி எடுக்க நான் மாடிப்படிகளில் ஏறியபோது, தமிழக அரசியலின் மிக முக்கியமான திருப்பத்துக்கு நான் காரணமாகப் போகிறேன் என்பதை உணரவில்லை.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com