'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 20

ஹெச்.என். பகுகுணாவின் கோபத்துக்குக்  காரணம் இருந்தது. அவரது ஆத்திரத்தில் நியாயமும் இருந்தது. வேறு யாரிடமும் சொல்ல முடியாத அவரது ஆதங்கத்தை எல்லாம் என்னிடம் கொட்டித் தீர்த்தார். 
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 20

ஹெச்.என். பகுகுணாவின் கோபத்துக்குக் காரணம் இருந்தது. அவரது ஆத்திரத்தில் நியாயமும் இருந்தது. வேறு யாரிடமும் சொல்ல முடியாத அவரது ஆதங்கத்தை எல்லாம் என்னிடம் கொட்டித் தீர்த்தார்.

விடுதலைப் போராட்ட காலத்தில் "வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின் மூலம் அரசியலுக்கு வந்து, உத்தரபிரதேச காங்கிரஸில் தனக்கென்று மரியாதை தேடிக் கொண்டவர் பகுகுணா. அந்த மாநிலத்தின் ஒன்பதாவது முதல்வராக இரண்டே இரண்டு ஆண்டுகள் மட்டும் பதவி வகித்தவர் என்றாலும், இன்று வரையில் தலைசிறந்த நிர்வாகியாகப் போற்றப்படுபவர். மொரார்ஜி தேசாய், சரண் சிங் அமைச்சரவைகளில் முக்கியப் பொறுப்பு வகித்தவர். ஜெகஜீவன்ராமுடன் காங்கிரஸில் இருந்து வெளியேறி, ஜனதா கட்சியில் சங்கமித்தவர்.

""கடந்த மூன்று ஆண்டுகளாக, ராஜீவ் காந்திக்கும், காங்கிரஸூக்கும் எதிராக, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாங்கள், மக்கள் மத்தியில் அபிப்பிராயத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். இந்த ஆட்சியின் ஊழல்களை அம்பலப்படுத்தி வந்திருக்கிறோம். போபர்ஸ் ஊழல் நடக்கும்போது நிதியமைச்சராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் ராஜீவ் காந்தியுடன் கூடவே இருந்துவிட்டு, இப்போது திடீரென்று வெளியேறி எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு வி.பி. சிங் தலைமை தாங்குவது போல வேடிக்கை எதுவுமே இருக்க முடியாது'' - ஹேமவதி நந்தன் பகுகுணாவின் குற்றச்சாட்டில் நியாயம் இருக்கத்தான் செய்தது.

பகுகுணா மட்டுமல்ல, முக்கியமான ஜனதா தள தலைவர்களும், இடதுசாரிக் கட்சிகள், பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களும் கூட, போபர்ஸ் ஊழலைக் காரணம் காட்டி ராஜீவ் காந்திக்கு எதிராக வி.பி. சிங் ஓர் அரசியல் சக்தியாக உருவாகி வருவதை விரும்பவில்லை. தெலுங்கு தேசம், திமுக, அஸ்ஸாம் கண பரிஷத், அகாலி தளம் உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் வி.பி. சிங்கை ஆதரித்தன. காங்கிரûஸ ஆட்சியிலிருந்து அகற்றினால் போதும் என்பதால் இடதுசாரிகளும், பாஜகவும் வி.பி. சிங்கின் தலைமையை வேறுவழியில்லாமல் ஏற்றுக் கொண்டன என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழகத்தைப் பொருத்தவரை, மார்ச் மாதம் சட்டப்பேரவையின் பட்ஜெட் தாக்கல் செய்தபோது நடந்த சம்பவம், ஜெயலலிதாவின் தலைமைக்கு வலு சேர்த்தது. அவர் எழுதியதாகக் கூறப்படும் ராஜிநாமா கடிதம், ம. நடராஜனின் வீட்டிலிருந்து காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு, அவைத் தலைவர் தமிழ்க்குடிமகனின் கைக்கு வந்தது பெரும் பரபரப்பை ஏற்கெனவே ஏற்படுத்தி இருந்தது.

மருங்காபுரி, மதுரை கிழக்கு இடைத்தேர்தல் வெற்றிகளும், சட்டப்பேரவையில் ஜெயலலிதா தாக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளும், அதிமுகவை வலிமையான எதிர்க்கட்சியாக்கி விட்டன. போதாக்குறைக்கு காங்கிரஸூடனான கூட்டணியும் உறுதிப்பட்டபோது, காற்று அதிமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக வீசத் தொடங்கியது.

பிரணாப்தா சொன்னதுபோல, எனது செய்தி நிறுவனத்தை அகில இந்திய அளவில் நிலைநிறுத்த 1989 நவம்பர் மக்களவைத் தேர்தல் மிகவும் உதவியது. குறிப்பாக, தென்னிந்திய மாநிலங்களின் தேர்தல் நிலவரங்கள் குறித்த "நியூஸ் கிரைப்' கட்டுரைகளும், தலைவர்களின் பேட்டிகளும் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. தேர்தலுக்கு முன்பு தில்லி காங்கிரஸ் அலுவலகத்தில் பிரணாப் முகர்ஜியைக் சந்தித்தபோது, நான் அவரிடம் அதைத் தெரிவித்தேன்.

தேசிய முன்னணியைப் பற்றிய பேச்சு வந்தது. அறிமுக விழாவிற்குப் பிறகு பகுகுணாவை சந்தித்ததைப் பற்றியும், அவர் தெரிவித்த கருத்துகள் குறித்தும் நான் பிரணாப்தாவிடம் சொன்னபோது அவர் சிரித்தார்.

""ஒரு முக்கியமான காலகட்டத்தில் நான் காங்கிரஸிலிருந்தும், ராஜீவ் காந்தியிடமிருந்தும் ஒதுங்கி இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது. நிலைமை கைமீறிப் போய்விட்டது என்றுதான் தோன்றுகிறது. தென்னிந்தியாதான் காங்கிரஸூக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை. நான் சொன்னதுபோல, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ராஜீவ்ஜி செய்த சுற்றுப்பயணங்களின் பலனை இந்தத் தேர்தலில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி அடையக்கூடும்'' என்றார் அவர்.

தேர்தல் முடிவுகள் வந்தபோது, அவர் சொன்னதுபோலவே, நாகப்பட்டினம் தவிர தமிழகத்தில் உள்ள ஏனைய 38 மக்களவைத் தொகுதிகளையும் காங்கிரஸ் - அதிமுக கூட்டணி கைப்பற்றியது. கேரளாவில் 20-இல் 17 இடங்களையும், ஆந்திரத்தில் 42-இல் 39 இடங்களையும், கர்நாடகத்தில் 28-இல் 27 இடங்களையும், புதுவை மக்களவைத் தொகுதியையும் காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. ஆனால், வட மாநிலங்களில் காங்கிரஸூக்கு எதிரான அலை காணப்பட்டதால், மக்களவையில் பெரும்பான்மை கிட்டவில்லை.

1984-இல் மக்களவையில் 404 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் கட்சி, இந்த முறை 197 இடங்களை மட்டுமே பெற்றது. மக்களவையில் அதிக இடங்களை வென்ற கட்சியாக காங்கிரஸ் இருந்தாலும் கூட, பெரும்பான்மை பலத்துக்கான 272 இடங்களைக் காங்கிரஸூம் கூட்டணிக் கட்சிகளும் எட்டவில்லை. அந்தத் தோல்வியை ராஜீவ் காந்தி பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டதுதான் பாராட்டுக்குரியது.

1996-இல், பாஜக தலைமையிலான கூட்டணி 187 இடங்களைப் பெற்றிருந்தும், வாஜ்பாயி தலைமையில் ஆட்சி அமைத்து, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், 13 நாள்களில் பதவி விலகியது. 1989-இல் அதுபோல ஆட்சி அமைக்க ராஜீவ் காந்தி ஏன் விழையவில்லை என்கிற கேள்விக்கு எனக்கு இன்று வரை பதில் தெரியவில்லை.
வி.பி. சிங் தலைமையில் தேசிய முன்னணி ஆட்சி அமைத்தது, திமுகவுக்கு மிகப் பெரிய ஆறுதலாக அமைந்தது. காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தால், 1980 மக்களவைத் தேர்தல் தோல்வியைக் காரணம் காட்டி, திமுகவின் வற்புறுத்தலின்பேரில், பெரும்பான்மை பலம் பெற்றிருந்த எம்ஜிஆரின் ஆட்சியைக் கலைத்ததுபோல, இப்போது ஜெயலலிதாவின் வற்புறுத்தலால் திமுக ஆட்சி கலைக்கப்பட்டிருக்கும்.

எதிர்பார்த்தது போலவே, தேசிய முன்னணி அரசில் ஆரம்பம் முதலே குழப்பம் தொடங்கிவிட்டது. தன்னை உதவிப் பிரதமர் என்று பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்று தேவிலால் அடம் பிடித்ததில் தொடங்கி, ஒருபுறம் இடதுசாரிக் கட்சிகள், இன்னொருபுறம் பாஜக, போதாக்குறைக்கு மாநிலக் கட்சிகளின் அழுத்தங்கள் என்று தள்ளாடும் கட்டடமாகவே தேசிய முன்னணி அரசின் ஆட்சி தொடர்ந்தது.

மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு பிரணாப் முகர்ஜியின் முக்கியத்துவம் காங்கிரஸில் அதிகரித்தது. அதேபோலத்தான், ஆர்.கே. தவானும் பழையபடியே நேரு குடும்பத்தின் நம்பிக்கைக்கு உரியவராக வலம் வரத் தொடங்கினார். ராஜீவ் காந்தியின் நம்பிக்கைக்குரிய ஆலோசகர்களாக பிரணாப் முகர்ஜி, பி.வி. நரசிம்ம ராவ், ஜி.கே. மூப்பனார் ஆகிய மூவரும் உயர்ந்தனர்.

எதிர்க்கட்சியான பிறகு, காங்கிரஸ் மிகுந்த சுறுசுறுப்புடன் இயங்கத் தொடங்கியது. வி.பி. சிங் தலைமையில் தேசிய முன்னணி ஆட்சி நடந்தது என்றாலும், அமைப்பு ரீதியாகத் தங்களை வலுப்படுத்திக் கொள்ள காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் மூன்றுமே முனைப்புடன் செயல்பட்டன. குறிப்பாக, அக்பர் ரோட்டிலிருந்த காங்கிரஸ் தலைமையகமும், அசோகா சாலையில் இருந்த பாஜக அலுவலகமும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தன.

அக்பர் ரோடு அலுவலகத்திற்குச் சென்றிருந்தபோது, பிரணாப் முகர்ஜி தனது அறைக்கு வரும்படி என்னை அழைத்தார்; சென்றேன். அங்கே அவருடன், சி.பி தாக்கூர், உமா கஜபதி ராஜூ, வசந்த சாத்தே ஆகியோர் அறையில் இருந்தனர். வசந்த் சாத்தே எனக்கு ஏற்கெனவே நன்றாக அறிமுகமானவர். ஏனைய இருவரையும் பார்த்திருக்கிறேனே தவிர, பழக்கமில்லை.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒரு செய்தி மடல் வெளிக்கொணர வேண்டும் என்று ராஜீவ் காந்தி விரும்பியதால், அது குறித்து ஆலோசனை நடத்த அந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. கட்சிக்கு சம்பந்தமே இல்லாத நான் ஏன் அழைக்கப்பட்டேன் என்று முதலில் எனக்குப் புரியவில்லை. பிரணாப்தாவே அதை விளக்கினார்.

""படித்தவர்கள், அறிவுஜீவிகள் மத்தியில் கட்சியின் செயல்பாடுகளை எடுத்துச் சொல்வதுதான் இந்த செய்தி மடலின் நோக்கம். முக்கியமான காங்கிரஸ் தலைவர்களின் பேட்டிகளை உனது செய்தி நிறுவனம் இந்த செய்தி மடலுக்காக எடுத்துத் தர வேண்டும்'' என்பதுதான் அவர் எனக்கிட்ட வேண்டுகோள். மேலும், அந்த செய்தி மடலின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பிலும், அவர் சார்பில் அவ்வப்போது உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டார். அதற்காக எனது செய்தி நிறுவனத்திற்கு மாதக் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டது.

"ஜீரோ அவர்' (கேள்வி நேரம்) என்கிற பெயரை முன்மொழிந்தவர் பிரணாப் முகர்ஜிதான். அந்த செய்தி மடலுக்காக ஜவஹர் பவனில் அவருக்குத் தனி அலுவலகம் ஒதுக்கப்பட்டது. தினந்தோறும் அலுவலகம் வருவது, கட்டுரைகளைப் படித்துத் தேர்ந்தெடுத்துப் பிழை திருத்தி வடிவமைப்புக்கு அனுப்புவது என்று ஒரு பத்திரிகை ஆசிரியராகச் செயல்படத் தொடங்கினார் பிரணாப்தா.
அவர் செயல்படுவதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அரசியல்வாதியான பிரணாப் முகர்ஜிக்குள் ஒரு திறமையான பத்திரிகை ஆசிரியர் இருப்பதை அப்போது நான் நேரில் பார்த்தேன். கட்டுரைகளையும், பேட்டிகளையும் அவரிடம் கொடுத்தால் அடுத்த சில நிமிடங்களில் அவற்றை வெட்டிச் சுருக்கி செப்பனிட்டு, அடுத்த மெய்ப்புக்கு (ப்ரூஃபுக்கு) அவர் அனுப்பும் அசுர வேகம் அசாத்தியமானது.

"தேசத்தின் நிலை குறித்த விசாரணை' என்கிற விளக்கத்துடன் வெளிவந்த "ஜீரோ அவர்' செய்தி மடல், ஏறக்குறைய ஒரு பத்திரிகையேதான். அதில் பிரணாப் முகர்ஜி எழுதிய அரசியல், பொருளாதாரக் கட்டுரைகள், எப்படி கட்டுரை எழுதப்பட வேண்டும் என்பதற்கு எனக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தன.
பிரணாப் முகர்ஜிக்கு ஹிந்தியில் எழுதப் படிக்கத் தெரியாது. எழுத்துக்கூட்டிப் படிப்பாரே அல்லாமல், அவருக்கு ஹிந்தி படிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் ஏற்படவே இல்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு "நீங்கள் ஏன் பிரதமராக முடியவில்லை?' என்று ஒருவர் கேட்டபோது, "எனக்கு ஹிந்தி சரளமாகத் தெரியாது என்பது காரணமாக இருக்கலாம்' என்று பிரணாப்தா கூறியதற்கு பல அர்த்தங்கள் இருக்கின்றன.

"ஜீரோ அவர்' செய்தி மடல் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் வெளிவந்தது. அவரது கட்டுரைகளை ஹிந்தியில் மொழி பெயர்த்திருந்ததால், அந்த மொழிபெயர்ப்பு சரிதானா என்று அடிக்கடி கேட்டுத் தெரிந்து கொள்வார். அப்படி ஒருமுறை என்னிடமும் கேட்டார்.

""பிரணாப்தா, நானும் உங்களைப் போலத்தான். எழுத்துக் கூட்டிப் படிக்க முடியுமே தவிர, சரளமாக ஹிந்தியில் பேசவும் எழுதவும் வராது!''

""நான் செய்த தவறை நீயும் செய்து விடாதே. ஹிந்தியில் எழுதத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, சரளமாக உரையாடக் கற்றுக் கொள். ஹிந்தி விஷயத்தில் நீ என்னைப் பின்பற்றாதே, பி.வி.யை (நரசிம்ம ராவ்) பின்பற்று!''

பிரணாப்தா சொல்லி நான் கேட்காத, பின்பற்றாத பல விஷயங்களில் ஹிந்தி பற்றிய அவரது அறிவுறுத்தலும் ஒன்று.

தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில், பிரணாப்தாவுடன் தொடர்பில் இருந்ததுபோலவே, ஜனதா கட்சித் தலைவர்கள் சந்திரசேகர், ராமகிருஷ்ண ஹெக்டே ஆகியோரிடமும் நான் நெருங்கிய தொடர்பில் இருந்தேன். வெவ்வேறு கட்சியாக இருந்தாலும் பிரணாப் முகர்ஜிக்கும், சந்திரசேகருக்கும் இடையில் நல்ல நட்பும், புரிதலும் இருந்தது.

அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியது. பிரதமர் வி.பி. சிங்கின் மண்டல் கமிஷன் அறிவிப்பைத் தொடர்ந்து நடக்கும் கலவரங்கள் ஒருபுறம்; பாஜக தலைவர் அத்வானியின் ரதயாத்திரை இன்னொருபுறம். இதற்கிடையில் அக்டோபர் 31-ஆம் தேதி அயோத்தியில் கோயில் கட்டும் பணியைத் தொடங்கப் போவதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அறிவித்திருந்தது.

அயோத்தியில் ஏதோ நடக்கப் போகிறது என்று எனது உள்மனது உறுத்தியது. உடனடியாக அயோத்தி சென்றுவிட வேண்டும் என்கிற பரபரப்பு என்னைத் தொற்றிக் கொண்டது. கேமிராவையும் எடுத்துக் கொண்டு அயோத்திக்குச் செல்வதற்குத் தயாராகி விட்டேன். மனைவி உட்பட யாரிடமும் சொல்லவுமில்லை, ஆலோசனை கேட்கவுமில்லை.

உத்தரபிரதேசத்தில் அக்டோபர் மாதம் கடும் குளிராக இருக்கும். அதற்கும் தயாராகத்தான் கிளம்பி இருந்தேன். சென்னையிலிருந்து கங்கா காவேரி விரைவு ரயிலில் வாரணாசி நோக்கிப் பயணமானேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com