பேல்பூரி

நீண்ட யோசனை சிறிய பயணத்துக்குக் கூட வழி செய்யாது.ஆனால் சிறிய செயல், பெரிய பயணத்துக்கு பாதை அமைக்கும்.
பேல்பூரி

கண்டது


(கும்பகோணம் மொட்டை கோபுரம் ஸ்டாப்பிங் அருகே உள்ள ஓர் ஆலயத்தின் பெயர்)

படிதாண்டா பரமேஸ்வரி ஆலயம்

-இரா.ரமேஷ்பாபு,
விருத்தாசலம் - 1.

(மதுரை தபால் தந்தி நகர் அருகில்ஒரு காய்கறிக் கடையின் பெயர்)

Mr. Fresh vegetables shop
 

க.நடராஜன்,
மதுரை.

(மதுரை எஸ்.எஸ். காலனியில் உள்ள ஒருபெண்கள் தையல் கடையின் பெயர்)

தேசபந்தம் மகளிர் தையல்கடை

பாளை. பசும்பொன்,
மதுரை - 16.

கேட்டது


(சென்னை கே.கே.நகரில்பிளாட்பார தள்ளுவண்டிகடைக்காரரும், வாடிக்கையாளரும்)

""இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?''
""டொமேட்டோ பிரியாணி, லெமன் பிரியாணி சார்''
""ஏம்ப்பா வழக்கமாச் செய்யுற தக்காளிச் சாதத்துக்கும், எலுமிச்சை சாதத்துக்கும் பெயர் மாத்திட்டா ஸ்பெஷல் அயிட்டமா? நீ பிழைச்சுக்குவப்பா''

அ.யாழினி பர்வதம்,
சென்னை-78.

(தஞ்சாவூரில் தடுப்பூசி போடும் இடத்தில்)

""ஏங்க... ஊசி போட்டா தலைவலி வருமா?''
""போடலேன்னாலும் எனக்கு வருமே?''
"" அதெப்படி?''
""வர்றவங்கல்லாம் இப்படி கேள்வி கேட்டா?
வந்தோமா குத்திக்கிட்டோமான்னு போங்க சார்!''

பா.து. பிரகாஷ்,
தஞ்சாவூர்- 1

(தஞ்சாவூர் புது பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே கல்லூரி மாணவர்கள் இருவர்)


""ஆவதும் ஃபோனாலே அழிவதும் ஃபோனாலே'ன்னு ஆயிடுச்சுப்பா''
""எப்படி மாமு?''
""ஃபோனுக்கு ரீசார்ஜ் பண்ணியே லவ்வை
டெவலப் பண்ணினேன். அதிகமா போன்ல பேசியே ரெண்டு பேருக்குள்ள இப்ப பிரச்னை வந்துடுச்சு''

-வி. ரேவதி,
தஞ்சை.


யோசிக்கிறாங்கப்பா!


நீண்ட யோசனை சிறிய பயணத்துக்குக் கூட வழி செய்யாது.
ஆனால் சிறிய செயல், பெரிய பயணத்துக்கு பாதை அமைக்கும்.

சங்கீத சரவணன்,
மயிலாடுதுறை.


மைக்ரோ கதை

ஒருவர் தையல்காரரிடம் சட்டை தைக்க துணியை எடுத்துக் கொண்டு போனார். துணியை அளந்து பார்த்த தையல்காரர், "துணி போதாது' என்று துணியைத் திருப்பிக் கொடுத்து விட்டார். வேறு ஒரு தையல்காரரிடம் அதே துணியை எடுத்துக் கொண்டு போனார்.

தையல்காரர் துணியை அளந்து பார்த்தார். அளவு எடுத்துக் கொண்டார். 5 நாள்கழித்து வரச் சொன்னார்.

ஐந்து நாள் கழித்து சட்டையை வாங்க தையல்கடைக்குப் போனார். சட்டை ரெடி. போட்டுப் பாத்தார்.

சரியாக இருந்தது.

அப்போது தையல்காரரின் 3 வயது மகன் அங்கு வந்தான். அவனும் இவர் கொடுத்த அதே துணியில் சட்டை போட்டிருந்தான்.

சட்டையை வாங்கிக் கொண்டு எதுவும் பேசாமல், பழைய தையல்கடைக்கு வந்து தையல்காரரைப் பார்த்து, ""நீ துணி பத்தாதுன்னு சொன்னே. ஆனா அந்த டைலரு எனக்கும் சட்டைத் தைச்சு கொடுத்துட்டு, அதே துணியிலே அவர் 2 வயசுப் பையனுக்கும் சின்னதா ஒரு சட்டை தைச்சிட்டார்'' என்றார் கோபமாக.

""எல்லாம் சரிங்க சார்... என் பையனுக்கு 9 வயசு ஆகுதே'' என்றார் தையல்காரர் சிரித்துக் கொண்டே.

ஆர்.சுந்தரராஜன்,
சிதம்பரம்- 1.

எஸ்.எம்.எஸ்.


ஏமாற்றியவர்களுக்குத் தெரியாது
ஒருவரின் நம்பிக்கையைக்
கொலை செய்துதான்
ஏமாற்றினோம் என்று.

மீ.யூசுப் ஜாகிர்,
வந்தவாசி.

அப்படீங்களா!

ஒரு பொருள் வெப்பமடையும்போது அதிலிருந்து வெளிப்படும் கதிர் அலைகளை அடிப்படையாக வைத்து படம் பிடிக்கும் திறனுடையது, தெர்மல் கேமரா. இந்த கேமராவின் மூலம் படம் பிடித்தால் ஒரு பொருள் எந்த அளவுக்கு வெப்பமாக இருக்கிறது என்பது தெரிந்துவிடும்.

ந்த கேமரா தீயணைப்பு பணி செய்பவர்களுக்கு மிகவும் பயன்படக் கூடியது. பற்றி எரியும் நெருப்பு அவர்களுடைய கண்களுக்குத் தெரியும். "நீறுபூத்த நெருப்பு', அதாவது சாம்பலுக்குள் மறைந்திருக்கும் நெருப்பு அவர்களுடைய கண்களுக்குத் தெரியாது. தீ பிடித்த இடத்தில் தீயால் வெப்பமடைந்த சுவர், இரும்புக் கதவு போன்றவற்றில் உள்ள வெப்பத்தையும் அவர்களால் பார்க்க முடியாது.

அப்படிப்பட்ட சூடானபொருள்களைக் கண்டுபிடிக்க, இந்த தெர்மல் கேமரா பயன்படுகிறது.

கரோனா தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு காய்ச்சல் ஏற்படும் என்பதால், உடலின் வெப்பநிலையை அளக்க இந்த தெர்மல் கேமராவைப் பயன்படுத்த முடியுமா? என்று சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

நாம் பயன்படுத்தும் தெர்மா மீட்டர் கூட, உடலின் எல்லாப் பகுதிகளிலும் உள்ள வெப்பநிலையை அளந்துவிடுவதில்லை. நாக்குக்கு அடியில், கம்புக்கூட்டில் உள்ள வெப்பநிலையை வைத்துதான் உடலின் வெப்பநிலையை நாம் தெரிந்து கொள்கிறோம். எனவே இந்த தெர்மல் கேமரா மனித உடலின் வெப்ப நிலையைத் துல்லியமாக அளக்கப் பயன்படாது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

நெற்றியின் அருகே உள்ள வெப்பநிலையை அளக்க வேண்டுமானால் இந்தக் கருவிபயன்படக் கூடும் என்கிறார்கள்.

என்.ஜே.,
சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com