நண்பர்கள்

அவன் அவசரம் அவசரமாக மதுரைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தான். இரவு ஒன்பது மணிக்கு ரயில். நேரம் ஏழு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.
நண்பர்கள்


அவன் அவசரம் அவசரமாக மதுரைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தான். இரவு ஒன்பது மணிக்கு ரயில். நேரம் ஏழு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. ஸ்டேஷன் போய்ச் சேர நெருக்கி ஒரு மணிநேரமாகி விடும். வழியில் போக்கு
வரத்து நெரிசலாகி விட்டால் தொலைந்தது.

படு டென்ஷன்தான். ஒரு சமயம் அப்படித்தான் நடை மேடையில் நகர்ந்து, ஊர்ந்து கொண்டிருந்த வண்டியில் தாவிப் பிடித்து ஏறி, தடுமாறி உள்ளே விழுந்ததும் நடை மேடையில் இருந்தவர்களும், வண்டியினுள் இருந்தவர்களும் பதறிப் போய் வாய்க்கு வந்த படி அவனைத் திட்டி தீர்த்தனர்.

சென்னை திருவான்மியூர் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள பன்னாட்டு ஐடி நிறுவனம் ஒன்றிற்கும் அது சார்ந்த நான் அவுட் சோர்சிங் நிறுவனங்களுக்கும் அவன் வருங்கால வைப்பு நிதி கன்சல்ட்டன்டாக இருந்தான். பணி ஓய்வு பெற்ற பின் வந்த வாய்ப்பு அது. ஓய்வு பெற்ற அவனுடைய மூத்த அதிகாரியின் மூலம் கிடைத்தது. முதல் வாரத்தில் நான்கைந்து நாள்கள் மதுரையிலிருந்து சென்னை வந்து சிஸ்டத்தில் மளமளவென வேலையை முடித்துக் கொடுத்து விட்டு கிளம்பி விடுவான். அதன் பின் மதுரைக்கு ஐந்தாறு தொலைபேசி அழைப்புகள் வரும். ஒரு சில விவரங்களைக் கேட்கவும், ஐயங்களை தெளிவுப்படுத்திக் கொள்ளவும் அழைப்பார்கள். அதற்குப் பிறகு அடுத்த மாத விசிட்தான்.

எப்போது சென்னை வந்தாலும் சகோதரியின் வீட்டில்தான் தங்குவான். அது அவனுடைய வீடுதான். சென்னையில் இருந்த போது மனை வாங்கி அலுவலக வீட்டுக் கடனில் கட்டிய வீடு. அப்போதெல்லாம் வீட்டு மனைகளின் விலை வாங்கும்படியாக இருந்தது.

சகோதரி வீட்டை வாடகைக்கு கேட்டதால் அவன் தந்திருந்தான்.

அம்மாதம் மதுரையிலிருந்து வந்து வேலையை முடித்து விட்டு சகோதரியின் வீட்டிலிருந்து கிளம்பிக் கொண்டிருந்தான். திருவான்மியூரிலிருந்து வருவதற்கு வழக்கத்தை விட நேரம் சற்று கூடுதலாகி விட்டது. அதனால்தான் அவசரமாகக் கிளம்பினான். துணிமணிகளையும், நிறுவன பேப்பர்களையும் எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் போது கைபேசியில் ஏதேதோ அழைப்புகள். சகோதரி வீட்டிற்கு வந்துள்ள தூரத்து உறவினர்களின் வாய் ஓயாத பேச்சு... தொலைக்காட்சி பார்க்கும் வாண்டுகளின் லூட்டி... எல்லாமாகச் சேர்ந்து அவனுக்கு எரிச்சலூட்டியது. பொசுக்கென்று வெளியே ஓடி விட மாட்டோமா என்று நினைத்தது மனம்.

அநேகமாக எல்லாவற்றையும் மறக்காமல் எடுத்து வைத்துக் கொண்டு விட்டான். பயணச் சீட்டை மடித்து மேல் சட்டைப் பையில் வைத்துக் கொண்டான். அதோடு ஆதார் கார்டு. செலவிற்கு இருநூறு ரூபாயையும் சேர்த்து.

"" சாப்பிட வர்றியா... மணியாகி விட்டது....''

சகோதரி குரல் கொடுத்தாள்.

""ஆயிற்று .... இதோ வருகிறேன்''

""கிளம்பும் வரை அதை சைலன்ஸ் மோடில் போடு ....''

கைபேசியில் எண்ணைப் பார்த்தான். ஓய்வு பெற்ற அவனுடைய மூத்த அதிகாரி. காலையில் மூன்று கி.மீ. தூரமுள்ள அவரது வீட்டிற்குச் சென்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசிக் கொண்டிருந்து விட்டு வந்தான்.

அவர்தான் அவன் அலுவலகத்தில் சேர்ந்த முதல் நண்பர். அப்போது அவர் சீனியர் கிளார்க்காகத் தான்இருந்தார். அடுத்தடுத்து தேர்வுகள் எழுதி மேலதிகாரியாகி விட்டார்.

அவன் அலுவலக வேலைகள் அனைத்தையும் அவரிடம்தான் கற்றுக் கொண்டான். அலுவலகத்தில் எந்தப் பிரிவானாலும் வேலையில் ஐயம் வந்தால் அவரிடம்தான் கேட்பார்கள். அவர் ஆரம்ப காலத்தில் விடப்பட்ட சுற்றறிக்கைகள், ஆணைகள், சட்ட திட்டங்களில் இயற்றப்பட்ட மாற்றங்கள் போன்ற அனைத்தையும் பொக்கிஷம் போல அடுக்கி, பைண்ட் செய்து வைத்திருப்பார். கேட்டவுடன் நீதிமன்ற வக்கீல் மாதிரி பக்கங்களைப் புரட்டி ஆதாரத்தை எடுத்துக் காட்டி விளக்கமும் தருவார். அவரை அலுவலகத்தின் "கலைக் களஞ்சியம்' என்பார்கள்.

அவனுடைய சுக துக்கங்களில் அவர் பங்கேற்றிருக்கிறார். அவன் குடும்பச் சூழலில் சோர்வுற்றிருந்த போது ஆறுதல் கூறி வழிகாட்டியிருக்கிறார். அவனது திருமணத்தின் போது அவனுக்கும் குடும்பத்தினருக்கும் வேண்டிய ஜவுளி வகைகளை பாரிமுனையில் மொத்த விற்பனைக் கடையொன்றில் கடனாக வாங்கித் தந்து உதவினார். அது போல பல தருணங்களில் பல விஷயங்களில் வலதுகரமாக இருந்திருக்கிறார்.

அவனும் அவனால் இயன்ற அளவிற்கு அவருக்கு உதவியிருக்கிறான்.

"காஸ் தீர்ந்து விட்டதென' திடீரென்று தகவல் தருவார். அவனிடம் உள்ள இரண்டாவது சிலிண்டரை சைக்கிளில் கொண்டு போய் கொடுத்திருக்கிறான். அவர் வீட்டிற்குப் போகும்போதெல்லாம் வளர்ப்பு நாய்க்குட்டிக்கு பேக்கரியில் பன் வாங்கி வரச் சொல்லுவார். சூடாக கையேந்தி பவனில் மிளகாய் பஜ்ஜி,
உருளைக்கிழங்கு போண்டா, புதினா பகோடா என இவற்றில் ஏதாவது ஒன்றை தனக்கு வாங்கி வரச் சொல்லுவார்.

கொஞ்சம் சாப்பாட்டுப் பிரியர் என்றே சொல்லலாம். நல்ல ஓட்டல்கள் எங்கெங்கு உள்ளன, எதில், எந்த அயிட்டம் நன்றாக இருக்கும், ருசியாக இருக்கும் என்பதெல்லாம் அவருக்கு அத்துபடி. எத்தனையோ தடவைகள் அவனையும் அழைத்துக் கொண்டு போய் வாங்கிதந்து அவரும் சாப்பிட்டிருக்கிறார். அப்படிச் செய்வதில் அவர் பெரு மகிழ்ச்சி அடைவார்.

அவர் சாப்பிடுவதில் ஒரு ரசனை இருக்கும். ரசித்து, சிலாகித்துதான் சாப்பிடுவார். சாப்பிட்ட பின் மனைவிக்கு மறக்காமல் பார்சல் வாங்கிக் கொண்டு விடுவார்.

அவரோடு அவன் நெருக்கமாக இருப்பதால் அவனிடம் நண்பர்கள் சில சலுகைகளை அவர்களுக்காக அவரிடம் கேட்கச் சொல்லுவார்கள். அவர் எதையும் என்றும் ஏற்றதில்லை. தனிப்பட்ட முறையில் எவ்வளவு வேண்டுமானாலும் உதவிகள் புரிவார். பதவியை துஷ்பிரயோகம் செய்து எதையுமே செய்ய மாட்டார். வேலை விஷயத்திலும் வெகு கண்டிப்பு. கறார். அதனால் மற்ற அதிகாரிகளைக் காட்டிலும் அவருக்கு அலுவலகத்தில் மதிப்பு
கூடுதல்.

அவருக்கு உடன் பிறந்த சகோதரர்கள் ஐந்து பேர். ஆனால் அவர்களையெல்லாம் விட அவனிடம் அவர் வெகு அன்பாகவும், நெருக்கமாகவும், சிநேகமாகவும் இருப்பதைக் கண்டு அவரது பெற்றோர்களுக்கு அவ்வளவு ஆச்சரியம்.

""கூட பொறந்தவா அஞ்சு பேர் இருந்தாலும் உன்னோட ஆத்மார்த்த தம்பி அவன்தானே ?''

என்று அவரிடமே சொல்லி கண்களைச் சிமிட்டுவார் அவருடைய அப்பா.

அவன் பணி ஓய்வு பெற்ற போது நான்கு கிராம் தங்க நாணயத்தை பிரியத்தோடு வீட்டிற்கு வந்து தந்தார். ஒவ்வொன்றும் அவனுக்கு நினைவில் வரும். கைபேசியைப் பார்த்த போது ஒளி அணைந்திருந்தது. எடுத்து அவரிடம் தொடர்பு கொண்டான்.

"" என்னப்பா.... போன் பண்ணினாலும் எடுத்து பேச மாட்டேன் என்கிறாயே''
""இல்லை சார்.... கிளம்புகிற அவசரம்...

டென்ஷன்''

"" எதுக்கு டென்ஷன் ?''

"" இன்னிக்கு ஒயின்டப் செஞ்சிட்டு திரும்பி வந்ததே லேட்... இப்பத்தான் எல்லாவற்றையும் எடுத்து வைத்தேன்... இதோ சாப்பிட்டு விட்டு கிளம்ப வேண்டும்... மணி வேறு ஆகி விட்டது... அதான்''

"" எதற்கு இந்த அவசரம் ? தங்கிவிட்டு நாளை சாவகாசமாகப் புறப்பட வேண்டியதுதானே ?''

"" அவ அங்கே தனியா இருக்கா... உடம்பும் சரியில்லையாம்... சுகர் வேற...''

"" எல்லாம் எப்போதும் இருப்பதுதானே ? இப்ப என்ன புதுசா ?''

அவன் பதில் எதுவும் சொல்லவில்லை. அவருடைய நக்கல் பேச்சு சற்று எரிச்சலூட்டியது.

"" சரி, நீ ஒண்ணு செய்.... கிளம்பி நேராக என் வீட்டுக்கு வந்து விடு... ஸ்டேஷனுக்கு நானும் உன்னோடு வருகிறேன். பேசிக் கொண்டே போகலாம். நான் உன்னை ரயிலேற்றி விட்டு விட்டு திரும்புகிறேன்''

"" என்ன சார் தெரிந்துதான் பேசுகிறீர்களா ?

இன்னும் ஒரு மணி நேரம் கூட இல்லை. நான் இங்கிருந்து ஸ்டேஷனுக்கு கிழக்குப் பக்கமாகச் செல்ல வேண்டும். உங்கள் வீடோ மேற்குப் பக்கம். மூன்று கி.மீ. மேற்காக வந்து விட்டு பிறகு நாம் அதே வழியில் திரும்ப வேண்டும்.
அது தேவையா சார் ?''

""அதனால் என்ன ?''

அந்த வார்த்தைகளைக் கேட்டதும் அவனுக்கு "சுர்'ரென்று ஏறி விட்டது.

""நீங்க பாட்டுக்கு உட்கார்ந்த இடத்தில "அதனாலென்னா' ன்னு சொல்லிடுவீங்க.. கடைசியில நான் வண்டியை கோட்டை விட்டு விட்டு, கையைப் பிசைந்து கொண்டு நிற்க வேண்டும்''

ஏதோ ஒரு வேகத்தில் வார்த்தைகளைக் கொட்டி விட்டான். அவனே எதிர்பார்க்கவில்லை. நிச்சயம் அவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

"ஏன் அப்படி பேசினோம்? அதுவும் மாறாத அன்பும், நட்பும் பாராட்டும் நண்பரிடமா ? என்ன வந்தது எனக்கு... எல்லாம் இந்த பாழாய்ப் போன டென்ஷன்... டென்ஷன்... டென்ஷனால்தான்....'

அவன் உடைந்து போனான்.

இப்படித்தான் முன்பொரு சமயம் அவன் உணர்ச்சி வயப்பட்டு வாய் தவறி ஏதோ பேசி விட்டான். அவர் பதிலேதும் சொல்லாமல் போய் விட்டார். ஒரு மாதம் போல அவர் அவனிடம் பேசவே இல்லை.

யோசித்துப் பார்த்த போது, " சின்ன விஷயம்தான் ... அதற்கு அப்படி உணர்ச்சி வயப்பட்டிருக்க வேண்டாம்' என்று அவனுக்கே புரிந்தது. அப்போதே அவரிடம் மன்னிப்பு கேட்டிருக்கலாம்... ஏதோ ஈகோ... பிடிவாதம்...

பேசாதிருந்து விட்டான். அவரில்லாமல் வாழ்க்கையில் அவன் அந்த அளவு மேலே வந்திருக்க முடியாது. வறட்டு வைராக்கியம்... அசட்டுத்தனம்... பித்துப் பிடித்தவன் போலிருந்தான். தனியாகவே புலம்பிக் கொண்டிருந்தான். பேசிப் பகிர்ந்து கொள்ள ஆளில்லை... மண்டை வெடித்து விடும் போலாகிவிட்டது.

தொலைபேசியில் "" மன்னிக்க வேண்டும்... மன்னிக்க வேண்டும்... தப்புப் பண்ணிட்டேன்... பெரிய தப்பைப் பண்ணிட்டேன்... மன்னிக்க வேண்டும்'' என்று படபடவென பேசி விட்டு வைத்து விட்டான்.

அரை மணி நேரம் பொறுத்து அவனைத் தொலைபேசியில் அழைத்து ஒரு ஒட்டலுக்கு வரச் சொன்னார்.
" எவ்வளவு பெரிய மனுஷர்... உணர்ச்சி வசப்படாமல் எவ்வளவு அமைதியாக எனக்கு அறிவுரை கூறினார். வறட்டுப் பிடிவாதம் வாழ்க்கையை நாசம் செய்து விடும் என்பதை இயல்பாக மனதில் பதிய வைத்து விட்டாரே ‘
அவனுக்கு மனதிலிருந்த பாரம் இலேசானது மாதிரியிருந்தது.
அதன் பிறகு ... பல வருடங்களுக்குப் பிறகு இப்படியொரு சம்பவம் நடந்ததற்காக அவன் வருந்தினான்.
"அன்று அவர் கூறிய ஆத்மார்த்தமான அறிவுரைகள் என்னவாயிற்று... எப்படி என்னால் இன்றைக்கு இப்படிப் பேச முடிந்தது? அவரை மீண்டும் காயப்படுத்திவிட்டேனே?
கைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.
அவரைத் தொடர்பு கொள்ள முயன்றான். " சுவிட்ச் ஆஃப்' செய்யப்பட்டிருந்தது.
அவன் பதட்டமடைந்தான்.
சாப்பிட உட்கார்ந்தவனுக்கு சாப்பாடு பிடிக்கவில்லை. குமட்டியது. மனம் பாரமாகி "படபடப்பு ‘ அதிகமாகியது. பேருக்குச் சாப்பிட்டுவிட்டு எழுந்து விட்டான்.
ஹாலுக்கு அவன் வந்து கொண்டிருந்த போது,
""என்ன ரெடியா... புறப்படலாமா ?'' என்று கேட்டவாறு அவர் உள்ளே வந்தார்.
"" சார் நீங்களா... வாங்க வாங்க.. சாரி சார்''
"" எதுவும் பேச வேண்டாம்... நாழியாகிறது... கிளம்பு''
"" சார்... நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது''
"" நான் அதைப் பற்றி பேச இங்கு வரவில்லை...
ரயிலுக்கு நேரமாகி விட்டது... கிளம்பு''
நட்புக்காக, அனலாய் வீசிய சொற்களையெல்லாம் மறந்து விட்டு எதிரே வந்து அவர் நிற்பதை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. முன்பு வறட்டுப் பிடிவாதத்தினால்தான் அவரோடு பேசாது இருந்ததற்கும், இப்போது தான் பேசியவற்றையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு பெருந்தன்மையுடன் அவர் நேரில் வந்து நிற்பதற்கும் உள்ள வித்தியாசம் அவனைக் கூனிக்குறுக வைத்தது.
நட்பைக் கட்டிக் காப்பாற்றுபவரின் மீது குப்பையாய் வார்த்தைகளை வீசியதற்காகவெட்கினான்.
அவர் காரில் வந்திருந்தார். அது அவருடையது. பின் இருக்கையில் சற்று இடைவெளி விட்டு அவரோடு அமர்ந்தான்.
"" காலையில் நீ வந்து ஒரு மணி நேரம் பேசி விட்டுதான் சென்றாய். ஆனாலும் அது என்னவோ நீ "பொசுக்'கென்று பேசி விட்டு புறப்பட்டுப் போன மாதிரி தோன்றியது. மறுபடியும் உன்னோடு பேச வேண்டும் போல இருந்தது. கைபேசியில் பேசுவது நேரில் முகம் பார்த்து பேசுவது மாதிரி இருக்காது இல்லையா?
அதனால்தான் வீட்டுக்கு வந்து விடு, ஸ்டேஷனுக்கு பேசிக் கொண்டே போகலாம் என்றேன். நான்தான் நீ புறப்படுகிற ரயிலின் நேரத்தை மனசில் சரியாக வாங்கிக் கொள்ளவில்லை. அதனால்தான் எல்லாமே திசை மாறி போய் விட்டது. சரி விடு... நடந்தது, நடந்து விட்டது''
நான் பேசியவற்றைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தன்னால்தான் அப்படி நடந்தது என்பது போல இயல்பாகப் பேசினார். அது அவரால்தான் முடியும்.
அவனுக்கு தொண்டை வறண்டு நாக்கில் ஈரப்பசையே இல்லை. வார்த்தைகள் நெஞ்சுக் குழியிலேயே நின்றது. மெளனித்திருந்தான்.
"" இதோ பார்... வயதான பிறகு எந்த நேரத்திலும், எதற்காகவும் பதட்டப்படவே கூடாது... தெரிந்ததா ? மனுஷனுக்கு சுகரும், பிளட் பிரஷரும் அதுவாக வருவதென்பது வேறு விஷயம். ஆனால் அடிக்கடி டென்ஷனாகி அவை நம் உடம்பிற்குள் புக நாமே காரணமாகி விடக் கூடாது.
"" சாரி, சார்... நான் அப்படிப் பேசியிருக்கவே கூடாது. எனது நாக்கில் சனி... அதான் அப்படிப் பேச வைத்து விட்டது''
"" திரும்ப திரும்ப அதையே சொல்லிக் கொண்டிருக்காதே... பதட்டத்தை விடு. டென்ஷன்தான் மனுஷனுக்கு சத்ரு... புரிந்து கொள்''
"" நீங்களும் எத்தனையோ முறை எனக்கு அட்வைஸ் செய்திருக்கிறீர்கள்.... வயதாகி விட்டதே தவிர எனக்கு விவஸ்தையே இல்லை''
"" இப்பப் பேசினியே... அதுவே நீ விரக்தியா... டென்ஷனோடுதான் பேசினே... அமைதியா இருக்கப் பழகு... தியானமும், யோகாசனமும், பிராணாயமமும் மூளையின் ஆழ் மன ஓட்டத்தை அமைதிப்படுத்தி, மூளையின் செயல் திறனை மேம்படுத்துகிறது என்று என்னுடைய யோகா மாஸ்டர் அடிக்கடி சொல்லுவார். நீயும் ஓரு முறை யோகா வகுப்பிற்கு வா... நிச்சயம் உன்னிடமும் மாற்றம் வரும்''
"" என்ன இருந்தாலும் உங்களை நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது... மன உளைச்சலோடு இரவு என்னால் பயணிக்க முடியாது. மனது சரியில்லாமல் நான் போக விரும்பவில்லை. உங்கள் வீட்டிற்குத் திரும்பலாம். மனம் விட்டுப் பேச வேண்டும் போல இருக்கிறது. அப்போதுதான் மனசிலிருக்கிற பாரம் குறையும்'' வார்த்தைகள் திக்கித் திக்கி வந்தன.
அவர் டிரைவரிடம் காரை தன் வீட்டிற்கு விடச் சொன்னார். பிறகு அவன் பக்கம் திரும்பினார். அவன் தொடர்ந்தான்:
"" ரிடையர்மென்ட் ஏஜ் என்று எதற்கு வைத்துள்ளார்கள்... உழைத்தது போதும்.. உடலுக்கும், மனதிற்கும் ஓய்வு தந்து அமைதியாக வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்பதற்காகத்தானே ? அதை விட்டு விட்டு கன்சல்ட்டன்சி அது இது வென எல்லாவற்றையும் தலையில் தூக்கி போட்டுக் கொண்டு மதுரைக்கும், சென்னைக்குமாக இப்படிப் பேயாய் அலைவானேன்? அதனால்தானே பல சமயங்களில் டென்ஷனாகி, நிதானமிழந்து, அன்பையும், நட்பையும் உயர்வாகக்கருதும் உங்களை கடித்துக் குதறி நோக அடிக்கிறேன்''
"" இப்ப எதற்கு அதெல்லாம்.... அமைதியாய் வா...''
"" பேசிக் கொண்டிருக்கும் போதே மின்னல் வெட்டியது போல, எனக்கொன்று தோன்றியது சார்... நீங்கள் வாங்கித் தந்த கன்சல்ட்டன்சி வேலையை உங்கள் சம்மதத்துடன் விட்டு விடுகிறேனே... அப்புறம் நான் மதுரையிலிருந்து மாதா மாதம் ஓடி வர வேண்டாம். அவசரம் அவசரமாக திரும்பி ஓடிப் போக வேண்டாம். அப்போது டென்ஷன் இருக்காது.
எரிச்சல் வராது. கோபம் வராது. வேண்டாத வார்த்தைகள் வாயில் வராது... நினைக்கின்ற போது நீங்கள் மதுரை வரலாம். நான் சென்னை வரலாம். அமைதியாக உட்கார்ந்து மணிக்கணக்கில் பேசலாம். யோகா வகுப்பிற்கும் போகலாம். பணி ஓய்வு பெற்ற வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கி கொள்ளலாம் இல்லையா ?''
அவனுடைய பேச்சைக் கேட்ட அவர் அவனை வியப்போடு பார்த்தார்.
"" நீங்கள் என்னுடைய இந்த புரபோசலுக்கு கட்டாயம் சம்மதிக்க வேண்டும்''
அவனது இடது தோள்பட்டையை ஒட்டிய முதுகுப் புறத்தில் அவர் லேசாகத் தட்டினார்.
திரும்பி அவர் முகத்தை நேருக்கு நேர்பார்த்தான்.
அவருடைய அணுக்கமான பார்வை அவனுக்கு இதமாகவும், குளுமையாகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com