ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பல்துலக்க கசப்பு... காரம்... துவர்ப்பு!

நான் இரவில் தூங்கும்போது வாய் வழியாக நீர் வடிகிறது. எப்படிக் குணப்படுத்துவது?
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பல்துலக்க கசப்பு... காரம்... துவர்ப்பு!

நான் இரவில் தூங்கும்போது வாய் வழியாக நீர் வடிகிறது. எப்படிக் குணப்படுத்துவது?

ராகவ், புதுச்சேரி.

பற்கள் ஒன்றோடொன்று நெருக்கமாக இருந்தால், வாயில் உற்பத்தியாகும் உமிழ்நீர் இரவு தூக்கத்தில் வழிந்து வெளியே ஓடாது. தாடையையும், வாயின் உட்புறப்பகுதிகளையும் சார்ந்த நரம்புகள் இரவு தூக்கத்தில் தளர்வுற நேர்ந்தாலும் உமிழ்நீர் வெளியே வழிந்தோடும். சுவையை உணர்த்தும் "போதகம்' எனும் கபதோஷம், தன் நிலையிலிருந்து உயர்ந்தால், வாயின் வெளிப்புறமாக வழிதலோ, உணவுக்குழாயின் உட்புற வழியாகவோ வயிற்றுச் சுவர் பகுதியில் சேர்வதையோ செய்யக் கூடும்.

பற்களைச் சுத்தப்படுத்த இன்று கிடைக்கும் பற்பசைகளும் பற்பொடிகளும் இனிப்பாகவே உள்ளன. இவை பல்துலக்கப் பயன்பட்ட பின் சரியாகக் கொப்பளித்து அகற்றப்படாவிடில்,  அதுவே போதக கபத்தின் அளவைக் கூட்டலாம். அதற்கு மாற்றாக பற்களைத் துலக்கப் பயன்படுத்தும் பசையோ பொடியோ கசப்பும் காரமும் துவர்ப்பும் மிக்கதாக இருந்தால், உமிழ்நீரின் உற்பத்தியை வெகுவாகக் குறைப்பதுடன், உமிழ்நீரைச் சுத்தம் செய்து அதன் பல பணிகளின் சில முக்கிய வேலைகளான - விஷமாக்கப் பெற்ற மலங்கள் உமிழ்நீர் மூலம் எளிதாக வெளியேறச் செய்யும். சிறுநீரக நோய்களில் யூரியா, அக்ன்யாசய (பாங்க்ரீயாஸ்) நோய்களில் சர்க்கரை, காரீய விஷத்தில் கந்தகமும் சுண்ணாம்பும் உமிழ்நீரின் மூலம் வெளியேறுவதைச் சோதனைகள் மூலம் அறியலாம். பித்தநோய்களில் பித்தத்தின் அம்சம் உமிழ்நீரின் மூலம் வெளியாகி வாய் கசப்பதைக் காணலாம்.

துவர்ப்பு புண்ணை ஆற்றும். கசப்பு அயர்வைப் போக்கும். அதிக அளவில் உமிழ்நீர் சுரப்பதையும், அழற்சியையும் போக்கும். புளித்து நாறும் வாய்க்கு, அந்தப் புளிப்பின் அடிப்படையே மாறும் வகையில் கசப்பும் துவர்ப்பும் தூய்மை தரக் கூடியவை. வறட்சி தரும் சுவையானதால், பிசுபிசுப்பாய் ஒட்டிக் கொள்ளக் கூடிய உணவுப் பகுதிகளின் பிசுபிசுப்பு  குறைவதால் இடுக்குகளில் இருந்து  விடுபட்டு எளிதில் வெளியாகும்.

வாய் மொரமொர என்றிருக்கும். புது உணவை விருப்பத்துடன் ஏற்கும்.

நீங்கள் இரவில் இனிப்புச் சுவையுடைய இட்லி, தோசை போன்ற மாவுப் பொருட்கள் சாப்பிடு வதைத் தவிர்த்து, நன்கு கடைந்து வெண்ணெய் நீக்கிய மோரை, புழுங்கலரிசி சாதத்துடன் பிசைந்து, கசப்பு, துவர்ப்புச் சுவையுடைய பாகற்காய் பொரியல் அல்லது வாழைப் பூ பொரியல் என்ற வகையில் உணவுத் திட்டத்தை ஏற்படுத்திச் சாப்பிடவும்.  இரவு படுக்கும் முன் தசனகாந்தி சூர்ணம் எனும் பற்பொடியால், குத்திட்டு அமர்ந்து, நடுவிரலால் தேய்த்து, பற்களின் மீது மேலும் கீழுமாகத் தேய்த்து, வாய் கொப்பளித்த பின் உறங்கச் செல்லவும். நல்ல மாற்றங்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் உணரலாம். வாய் வழியாக உமிழ்நீர் வழிதலும் குறையும். 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com