ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தைராய்டு பிரச்னை... உணவு, மருந்துகள்! 

என்னுடைய வயது 35. நீண்ட நாள்களாக தைராய்டு பிரச்னை உள்ளது. அதனால் உடல் எடை கூடுவதும், குறைவதுமாக இருக்கிறது.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தைராய்டு பிரச்னை... உணவு, மருந்துகள்! 


என்னுடைய வயது 35. நீண்ட நாள்களாக தைராய்டு பிரச்னை உள்ளது. அதனால் உடல் எடை கூடுவதும், குறைவதுமாக இருக்கிறது. கால்சியம் சத்துக் குறைவினால், முதுகு வலி, குதிகால் வலி, முகவீக்கம், ஊர்வது போன்ற உணர்வு, கைகால் குரக்களி இழுப்பு, மடக்கம், வலி, தூக்கமின்மை, கட்டுப்பாடற்ற சிந்தனை போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு உகந்த ஆயுர்வேத மருந்துகள், வாழ்க்கைமுறைகள் பற்றி கூறவும்.

பா.இரமேஷ், நாகப்பட்டினம்.

முருங்கைக் கீரையில் ஏ ஜீவசத்து (விட்டமின் ஏ) 11 -330 யூனிட் வரை இருக்கிறது. இரும்பும் சுண்ணாம்பு சத்தும் ஏராளம். வாயுத்தொல்லையினால் ஏற்படும் முதுகுவலி, குதிகால் வலி, கைகால் குரக்களி இழுப்பு உள்ளவர்கள் முருங்கை கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிடுவது நல்லது.

நெல்லிக்காயை வெந்நீரில் போட்டு பசுமை மறைந்து சிறிது வெந்ததும் இறக்கி விதை நீக்கி உலர்த்தியதை 1-2 தொடர்ந்து சாப்பிட இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் உடலில் சேர உதவும். சியவனபிராசம், ஆமலக ரசாயனம் முதலியவை நெல்லிக்கனியாலான சிறந்த ஆயுர்வேத ரசாயன மருந்துகள். 5- 10 கிராம் என தினமும் இருவேளை உணவிற்கு ஒரு மணி நேரம் முன்பாக நீங்கள் சாப்பிட்டு வரலாம்.

சமையலில் அடிக்கடி கொத்துமல்லித் தொக்கும், சாதமும், கறிவேப்பிலைத் துவையலும் சாதமும், முருங்கைக்கீரை, அகத்திக் கீரை கூட்டும், முளைக்கீரை மசியல், அரைக்கீரை மசியலும், பசலைக்கீரை - வெந்தயக் கீரைக் குழம்பும், முட்டைக்கோஸ் கூட்டும் சேர்த்து வந்தால், உங்களுக்கு ஏற்பட்டுள்ள சத்துக் குறைபாடானது பெருமளவில் குறையும்.

தைராய்டு சுரப்பியின் இருப்பிடம் கபம் எனும் தோஷத்தின் ஆதிக்கத்தின் பிடியில் இருப்பதால், சுரப்பியின் பெரும்பங்கு செயல்பாடுகள் கபதோஷத்தின் சமநிலையில் மட்டுமே பெற முடியும். அதனால் நெய்ப்பும் குளிர்ச்சியும் கனமும் மந்தமும் நிறைந்த சுவைகளான இனிப்பு - புளிப்பு - உப்புச் சுவைகளை மிக மிதமாகவும் எடுத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் தங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தர்ப்பகம் எனும் கபதோஷத்தின் உயர்வு அல்லது தாழ்வுநிலை காரணமாக மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களால், கட்டுப்பாடற்ற சிந்தனையும், தூக்கமின்மையும் ஏற்படும். அதைச் சீராக வைப்பதற்கு, வாரமிருமுறை தலைக்குச் சந்தனாதி தைலத்தையோ, ஹிமஸாகரண தைலத்தையோ தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தலாம்.

உட்புறக் குழாய் அடைப்புகளை ஏற்படுத்தும் மைதா கலந்த உணவுப் பொருட்களையும் வனஸ்பதியில் தயாரிக்கப்பட்ட, பட்சணப் பொருட்களையும் நீங்கள் அறவே நீக்க வேண்டும்.

புரோட்டீன், வைட்டமின், கால்சியம் போன்ற உணவு பாகுபாடுகளை அதிகமாகப் பழக்கத்தில் மருத்துவம் இன்று கொண்டு வந்துள்ள நிலையில், அறுசுவை உண்டியின் மகத்துவத்தை ஆயுர்வேதம் கூறும் வகையிலான பஞ்சபூதத்தன்மை வாயு பித்த கபங்களின் சமத்துவம் போன்ற உணவுத் தத்துவங்களையும் ஏற்பதில் தவறில்லை. உணவு விஷயத்தில் கால்சியம், புரோட்டீன், வைட்டமின் என்ற தத்துவங்களை ஆராய்வதைக் காட்டிலும் சூடு, குளிர்ச்சி, நெய்ப்பு, வறண்டது, எளிதில் ஜீரணமாகக் கூடியது, எளிதில் ஜீரணமாகாதது முதலிய குணங்களையும் சுவை - வீர்யம் - குணம் இவற்றை மனதிற் கொள்ளுவதே உணவுமுறைகளை வகுக்க நன்கு உதவும்.

கேப்ஸ்யூல் தைரிட், காஞ்சநார குக்குலு, சிலாஜித் போன்ற தரமான ஆயுர்வேத மருந்துகள் தைராய்டு பிரச்னை குறைபாட்டினை குணப்படுத்தக் கூடியவை. பிரவாள பஸ்மம், கண்மத பஸ்மம், சிருங்க பஸ்பம் போன்றவை கால்சியம் குறைபாட்டினைக் குணமாக்கும் தரமான மருந்துகள்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com