திரைக்கதிர்

2015-ஆம் ஆண்டு  "பாகுபலி" வெளியானது. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, நாசர், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்தை எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கியிருந்தார்.
திரைக்கதிர்

2015-ஆம் ஆண்டு "பாகுபலி" வெளியானது. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, நாசர், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்தை எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கியிருந்தார். கிட்டத்தட்ட 180 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.

மாபெரும் வெற்றியைப் பெற்ற இப்படம் 600 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்தது. அதிக வசூல் செய்த டப்பிங் திரைப்படம் என்கிற சாதனையையும் படைத்தது. தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் உள்ளிட்ட பல விருதுகளை வென்றது.

பாகுபலி' வெளியாகி 6 ஆண்டுகள் நிறைவானதையொட்டி படத்தில் நடித்த பிரபாஸ், அனுஷ்கா, ராணா உள்ளிட்டோர் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

"இந்திய சினிமாவின் பாதையையே மாற்றிய ஒரு திரைவரிசையில் பங்கெடுத்தது பெருமை. "பாகுபலி'க்கு என்றுமே என் இதயத்தில் விசேஷமான இடம் இருக்கும்' என்று தமன்னா பகிர்ந்துள்ளார்.

---------------------------------------------------------------

"என்ஜாய் எஞ்சாமி', "குட்டி பட்டாசு' என தமிழில் தற்போது ஆல்பம் பாடல்களுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் "கொஞ்சம் பேசு' என்ற ஆல்பம் உருவாகி உள்ளது. ராஜு முருகன் தயாரித்திருக்கிறார். இந்த பாடலை விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் மற்றும் ஜிவி பிரகாஷ் ஆகியோர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டனர், இந்த பாடல் சோனி மியூசிக்கில் வெளியானது.

இதில் ராஜு முருகனின் உதவி இயக்குநர் சஞ்சய் நடிக்க அவருடன் சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். கொஞ்சம் பேசு எனத் தொடங்கும் இந்த பாடலை யுகபாரதி எழுதி ஏ.ஆர்.ரகுமானிடத்தில் இசை கற்ற நரேன் இசையமைத்துள்ளார், இந்த பாடலை இயக்குநர் ராஜு முருகனின் குக்கூ ரெக்கார்ட்ஸ் குழுவினர் இயக்கியுள்ளனர்.

இந்த பாடல் பற்றி சஞ்சய் கூறியதாவது: ""ஜிப்சி படத்துக்காக நாடு முழுக்க இருக்கும் தனியிசைப் பாடகர்களைச் சந்தித்தபோது எங்களுக்கு இந்த யோசனை தோன்றியது. நரேனைப் பார்த்ததும் பாடலாக உருவாக்கத் திட்டமிட்டோம். காதலர்கள், தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் சிறுசிறு விரிசல்களைப் பிரிவாக மாறாமல் அன்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக இந்த பாடல் அமைந்துள்ளது'' என்றார்.

---------------------------------------------------------------


2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் "ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்'. ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சூரஜ் வெஞ்சரமூடு, சோபின் ஸாஹிர் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்தனர். ரசிகர்களிடம், விமர்சகர்களிடமும் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற இந்தத் படம் வசூல்ரீதியாகவும் வெற்றி பெற்றது.

தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. "ஏலியன் அலியன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. முந்தைய பாகத்தைப் போலவே இதுவும் நகைச்சுவைப் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு சிறிய மலையின் மீது எந்திர ஏலியன் ஒன்று உட்கார்ந்திருப்பதைப் போல இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் "ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்' படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் தயாரிப்பில் உள்ளன. தமிழில் இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் தயாரிக்கிறார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் "வலிமை'. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தின் பூஜை 2019-ஆம் ஆண்டு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. கரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு தடைபட்டதால் படக்குழுவினர் எந்தவொரு தகவலையும் வெளியிடாமல் இருந்தனர். திடீரென்று "வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் ஆகியவற்றை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்துள்ளது படக்குழு.

மேலும், அஜித்துடன் யாரெல்லாம் நடித்துள்ளார்கள்; படப்பிடிப்பின் நிலவரம் உள்ளிட்ட அனைத்து தகவலையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, "வலிமை' படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது; இந்த ஆண்டு இறுதியில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

ஹியூமா குரோஷி, கார்த்திகேயா, பானி, சுமித்ரா, அச்சியுந்த் குமார், ராஜ் அய்யப்பா, யோகி பாபு, புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

---------------------------------------------------------------

"கற்றது தமிழ்' படம் மூலமாக ராம் இயக்கத்தில் அறிமுகமானவர் அஞ்சலி. பின்னர் "அங்காடித் தெரு' படம் அவரை தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெறச் செய்தது. "எங்கேயும் எப்போதும்', "இறைவி" உள்ளிட்ட படங்களில் அவர் நடிப்புக்குப் பெயர் கிடைத்தது. தற்போது சில தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை அஞ்சலி கடைசியாக தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான "வக்கீல் சாப்' படத்தில் நடித்திருந்தார். தமிழில் "பாவக் கதைகள்' அந்தாலஜி படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்திருந்தார். தற்போது அஞ்சலி திருமணம் செய்துகொள்ள இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன.

அஞ்சலி திருமணம் குறித்து அடிக்கடி வதந்திகள் பரவுவதுண்டு. அதே போல் தான் தற்போது வெளியாகியுள்ள திருமண செய்தியும் வதந்தி தான் என்று அஞ்சலி தெரிவித்துள்ளார். ""தற்போது நான் எனது திரை வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறேன். திருமணம் குறித்து நான் தற்போது யோசிக்கவில்லை. வரவிருக்கும் நாட்களில் நல்ல கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்'' என்றுதெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com