'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 46

அன்றைய திருப்பத்தூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த ஜெயமோகனின் வீடு டெலிகிராஃப் லேனில் இருந்தது.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 46

அன்றைய திருப்பத்தூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த ஜெயமோகனின் வீடு டெலிகிராஃப் லேனில் இருந்தது. அவர் தில்லியில் இருக்கவில்லை. தொகுதிக்குப் போயிருப்பதாகச் சொன்னார் அங்கிருந்த உதவியாளர். ஜெயமோகனின் வீட்டில் ம. நடராஜனின் வருகைக்காகக் காத்திருந்தேன் நான்.

"எம்.என்.' என்று பரவலாக அறியப்படும் ம. நடராஜனின் தில்லி தொடர்புகள் வியப்பை ஏற்படுத்தும். பூட்டா சிங்கும், தினேஷ் சிங்கும் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள். ஆந்திர மாநிலம் திருப்பதி மக்களவை உறுப்பினராக இருந்த டாக்டர் சிந்தாமோகன் இணை பிரியாத நண்பர். அப்போது அவர் உரம், ரசாயனத் துறை அமைச்சராக இருந்தார். ம. நடராஜனின் பிரதமருடனான தொடர்புக்கு அவர்தான் பாலமாக இருந்தார்.

நடராஜன் தில்லிக்கு வந்திருக்கிறார் என்றால் அவரைச் சுற்றி தில்லி பத்திரிகையாளர்கள் பலர் சூழ்ந்து கொள்வதை நான் வியந்து பார்த்திருக்கிறேன். தமிழ்ப் பத்திரிகைகளின் தில்லி நிருபர்கள் மட்டுமல்ல, பல
ஆங்கில நாளிதழ்களின் முக்கியமான நிருபர்கள் அவருக்கு நெருக்கமானவர்களாக இருந்தனர்.

நடராஜனிடமிருந்து அவர்கள் தமிழ்நாட்டு அரசியல் செய்திகளைத் தெரிந்துகொள்வது போலவே, அவர்களிடமிருந்து தில்லி அரசியலில் நடைபெறும் எல்லா நகர்வுகளையும் நடராஜன் கிரகித்துக் கொண்டு விடுவார். அவரது அந்த சாமர்த்தியத்தால்தான், ஒருபுறம் நரசிம்ம ராவ் அரசை ஆதரித்துக் கொண்டும், இன்னொருபுறம் மத்திய அரசை விமர்சித்துக் கொண்டும் ஜெயலலிதா அரசால் தொடர முடிந்தது என்பது எனதுகருத்து.

பிடிஐ செய்தி நிறுவனத்தின் தலைமை நிருபர் சந்திரசேகர், ம. நடராஜனின் நெருங்கியநண்பர். அதேபோலத்தான் யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் தலைமை நிருபர் சந்திரசேகரும். அவர்களையும், இப்போது என்.டி.டி.வி. நிருபராக இருக்கும் அருணாச்சலம் வைத்தியநாதனையும், நடராஜன் மூலமாகத்தான் நான் சந்தித்தேன் என்று நினைவு. அவரைப் பார்க்க அவர்கள் வந்திருந்தபோது அறிமுகமானோம்.

"தில்லி சமாச்சார்' என்கிற நண்பகல் நாளிதழ் ஒன்று அப்போது பிரபலமாக இருந்தது. காலை, மாலை நாளிதழ்கள் போல அந்த தினசரி, மதிய உணவு இடைவேளை நேரத்தில் வெளியாகும். அந்தப் பத்திரிகையின் புகைப்படக்காரர் எனக்கு நண்பர். நடராஜன் குறித்த தகவல் வந்தால் தெரிவிக்கும்படி அவரிடம் கூறியிருந்தேன். விமான நிலையத்திலிருந்து. நடராஜன் நேராக வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டிற்குச் சென்றிருப்பதாக அவர் தகவல் தந்தார்.

இலக்கம் 21, ஜன்பத்திலுள்ள வீட்டை நான் அடைந்தபோது, வாழப்பாடியாரும், எம்.என்-னும் உணவருந்திக் கொண்டிருந்தனர். என்னை அவர்கள் எதிர்பாத்தார்களா, இல்லை எதிர்பார்க்கவில்லையா என்றெல்லாம் யோசிப்பதற்கு எனக்கு நேரமில்லை. அப்படியொரு பசி. அவர்களுடன் நானும் டைனிங் டேபிளில் இணைந்து கொண்டேன். இரவு உணவை முடித்துக் கொண்டு, வரவேற்பறையில் வந்து அமர்ந்தோம்.

""நீங்கள்தான் இவரை போன் செய்து வரச் சொன்னீர்களா?'' - வாழப்பாடியார் சிரித்துக் கொண்டே கேட்டார்.

""அவர் என்னை அழைக்கவும் இல்லை. வரச் சொல்லவும் இல்லை. ஆனால், ஆர்.கே. தவான் என்னைத் தொடர்பு கொள்ள அவரிடம் சொன்னார் என்பது மட்டும் எனக்குத் தெரியும்'' - இது ம. நடராஜன் நான் திடுக்கிட்டேன். எப்படி இந்தத் தகவல் எல்லாம் சென்னையில் இருந்த ம. நடராஜனுக்கு 12 மணி நேரத்துக்குள் தெரிந்தது என்கிற வியப்புதான் காரணம்.

""உங்களுக்கு எப்படி அது தெரியும்?''

""அது மட்டுமல்ல, நீங்கள் பிரணாப் முகர்ஜியைப் பார்த்தது, அவரும் வி.என். காட்கிலும் பிரதமரை சந்தித்துப் பேசியது எல்லாமே தெரியும். வாழப்பாடியார் அறிக்கை கொடுத்து விட்டார். அந்த அம்மா கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அது ஒருபுறம் இருக்கட்டும். ஆர்.கே. தவான் என்ன சொன்னார். பிரணாப் முகர்ஜி என்ன சொன்னார் என்பதையெல்லாம் விவரமாகச் சொல்லுங்கள், வாழப்பாடியார் தெரிந்து கொள்ளட்டும்.''

வழக்கத்துக்கு விரோதமாக வாழப்பாடி ராமமூர்த்தி மெளனமாக இருந்தார். நடராஜன்தான் பேசினார். ஆர்.கே. தவானின் எச்சரிக்கையை நான் சொன்னேன். பிரணாப் முகர்ஜியுடனான சந்திப்பில் நடந்ததைச் சொல்லவில்லை. ஏன் சொல்லவில்லை என்று இப்போது யோசித்துப் பார்க்கிறேன். தெரியவில்லை.

நாங்கள் பேசிக் கலைந்தபோது இரவு மணி 1.30. அசோகா சாலையில் உள்ள யூத் ஹாஸ்டலை அடைந்து நான் படுத்தபோது மணி 2.30. கான் மார்க்கெட் அருகிலுள்ள அம்பாசிடர் ஹோட்டலில் தங்கப் போவதாகச் சொல்லி இருந்தார். நடராஜன். காலையில் சுமார் 10 மணிக்கு ஹோட்டலைத் தொடர்பு கொண்டபோது, அவர் வெளியே போயிருப்பதாகச் சொன்னார்கள். நான் தொடர்பு கொண்டாலோ, நேரில் வந்தாலோ 1 மணிக்கு மதிய உணவுக்கு வந்துவிடும்படி தகவல் தந்திருப்பதாகச் சொன்னார்கள்.

வழக்கம்போல நான் எனது அலுவலகத்தில் இருந்தபோது, ம. நடராஜனிடமிருந்து அழைப்பு வந்தது. காலையில் கோல்ஃப் லிங்க்ஸில் ஆர்.கே. தவானை சந்தித்ததாகவும், பிரணாப் முகர்ஜியையும் சந்திக்க விரும்புவதாகவும் சொன்னார். நேரம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு அம்பாசிடர் ஹோட்டலுக்கு வந்து விடும்படியும் சொன்னார்.

நடராஜன் சொன்னபோது மறுக்கவில்லையே தவிர, நான் தர்மசங்கடத்தில் மாட்டிக் கொண்டேன். நடராஜனுக்காக நேரம் கேட்டு நான் அணுகுவது பிரணாப் முகர்ஜிக்குப் பிடிக்குமா என்பதில் எனக்கு சந்தேகம் இருந்தது. நான் யாருடைய சார்பாகவும் இருக்கமாட்டேன் என்கிற நம்பிக்கைதான், அவருக்கு என்மேல் இருந்த தனி அக்கறைக்குக் காரணம்.

நல்ல வேளையாகப் பிரணாப்தா வெஸ்டர்ன் கோர்ட்டில் இருந்தார். வெளியே அவரது கார் நின்று கொண்டிருந்தது. வீட்டிலிருந்து சன்சத் மார்க் திட்டக் கமிஷன் அலுவலகத்துக்குப் போகும் வழியில் ஏதோ குறிப்பை எடுப்பதற்காக அங்கே வந்திருக்கக் கூடும் என்று நினைக்கிறேன்.

உள்ளே போகாமல் வெளியே நின்று கொண்டிருந்தேன். அறையிலிருந்து வெளியே வந்து, அவர் கிளம்பும்போது நான் கண்ணில் பட்டேன். ஆச்சரியத்துடன் பார்த்தார். அருகில் சென்றேன்.

""நேற்றுதான் பேசிக் கொண்டிருந்தோம். இரவிலேயே நடராஜன் வந்துவிட்டார் போலிருக்கிறது. அவரைப் பார்த்தாயா?''

அரசியல் தலைவர்களுக்கு மின்னல் வேகத்தில் எப்படி தகவல்கள் கிடைக்கின்றன என்கிற மர்மத்தின் முடிச்சு, இதுநாள் வரை எனக்கு அவிழ்ந்த பாடில்லை.

வாழப்பாடி ராமமூர்த்தி வீட்டில் சந்தித்ததையும், அங்கே நடந்தவற்றையும் சொன்னேன். தயக்கத்துடன் நடராஜன் அவரை சந்திக்க விரும்புவதாகச் சொன்னபோது பிரணாப்தாவின் முகம் மாறியது.

""வேண்டாம். நான் இப்போது அவரைச் சந்திக்க விரும்பவில்லை. நான் சந்திக்க விரும்பவில்லை என்பதை அவரிடம் தெளிவாகச் சொல்லிவிடு. ஜெயலலிதாவை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள்.

நடராஜனின் வழிகாட்டுதலில் அவர் இல்லை. ஜெயலலிதாவுக்கும் - காங்கிரஸ் தலைமைக்குமான பிரச்னையில் நான் தலையிட விரும்பவில்லை.''

இதுபோன்ற பிரச்னைகளில் மிகவும் தெளிவாக அவர் முடிவெடுப்பதைப் பார்த்து நான் அதிசயித்திருக்கிறேன். "வேண்டாம்', "முடியாது', "கூடாது' என்று அவர் எடுக்கும் முடிவுகள் எப்போதுமே சரியாக இருக்கும். அதேபோல, ஏதாவது ஒன்று "வேண்டும்' என்று அவர் முடிவெடுத்தாலும், அதை அடைவதிலும் அவர் பிடிவாதமாகவே இருப்பதைப் பார்த்திருக்கிறேன். முகதாட்சண்யத்துக்காக சமரசம் செய்து கொள்ளாத அவரது இயல்புதான், பிரணாப் முகர்ஜியின் தனித்துவம்.

நான் அம்பாசிடர் ஹோட்டலுக்குப் போனபோது, நடராஜன் ஏற்கெனவே அவரது அறைக்கு வந்திருந்தார். பிரணாப்தா சந்திக்க விரும்பவில்லை என்று சொன்னதாகச் சொன்னபோது, அதற்காக நடராஜன் வருத்தப்படுவதாகக் காட்டிக் கொள்ளவில்லை. அவருக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது என்பதை நான் புரிந்து
கொண்டேன்.

அன்று மாலையே சென்னை திரும்பிவிட்டார் நடராஜன். வந்த வேகத்தில் பிரச்னையின் கடுமையை அவர் குறைத்திருந்தார் என்பது என்னவோ நிஜம். காங்கிரஸ் தலைமையின் தரப்பில், ஜெயலலிதாவின் அறிக்கையை யாரும் சட்டை செய்யாமல் இருந்து விட்டதால், அப்போதைக்குப் புயல் ஓய்ந்தது.

ஆனால், ஆர்.கே. தவான் சொன்னதுபோல் நடந்தது. நரசிம்ம ராவின் மெளனத்துக்குப் பின்னால் அவரது அரசியல் சாணக்கியத்தனம் மறைந்திருக்கிறது என்பதை ஜெயலலிதா பிரச்னையில் நான் தெரிந்து கொண்டேன். பின்னாளில் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகள் தொடரப்பட்டதன் ஆரம்பம் "ராஜீவின் ரத்தத்தால் அதிமுக ஆட்சிக்கு வரவில்லை' என்கிற அவரதுஅறிக்கை.

சுப்பிரமணியம் சுவாமி, சென்னா ரெட்டி என்று நரசிம்ம ராவ் எய்த அஸ்திரங்கள்தான் ஜெயலலிதாவின் 1996 வீழ்ச்சிக்கே காரணம். ஆனால், அவர் அதைக் கடைசி வரை புரிந்து கொண்டாரா என்பது சந்தேகம்தான்.

அடுத்த சில மாதங்கள் நான் சென்னைக்கும் தில்லிக்குமாகப் பயணித்துக் கொண்டிருந்தேன். தில்லிக்குச் செல்லும் போதெல்லாம் நான் பிரணாப் முகர்ஜியை சந்தித்தேன் என்றும் சொல்ல முடியாது. திட்டக் கமிஷன் துணைத் தலைவரான பிறகு அவரை ஒன்றிரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சந்தித்தாலே அதிகம்.

எதிர்க்கட்சி வரிசையில் இருந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர், பின்னாளில் பிரதமரான இந்தர்குமார் குஜ்ரால் ஆகியோரை சந்தித்த அளவுக்கு அப்போது நான் பிரணாப் முகர்ஜியை சந்திக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். அப்படியே சந்தித்தாலும் அதிக நேரம் அவருடன் செலழிக்கவும் வாய்ப்புக் கிட்டவில்லை.

திட்டக் கமிஷன் துணைத் தலைவர் என்கிற முறையில், தமிழ்நாட்டுக்காக நிதி ஒதுக்கீடு குறித்து விவாதிப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா அவரை சந்திக்க வந்தபோது, நான் தில்லியில்தான் இருந்தேன். அதற்கு இரண்டு நாள்கள் கழித்து நான் பிரணாப் முகர்ஜியை சந்தித்தேன். ஒருவித குறும்புச் சிரிப்புடன், "ஜெயலலிதாஜி வந்திருந்தார்' என்று அவர் சொன்னபோது, "என்ன சொன்னீர்கள்?' என்று கேட்க நினைத்தேன். ஆனால், தைரியம் வரவில்லை.

திட்டக் கமிஷனில் பிரணாப் முகர்ஜியை சந்திக்க வந்த முதல்வர்களில் ஒடிஸா முதல்வராக இருந்த பிஜு பட்நாயக்கும் ஒருவர். ஆண்டுதோறும் தங்களது மாநிலத்துக்கான ஒதுக்கீடு குறித்து சர்ச்சை செய்ய எல்லா முதல்வர்களும் வருவதுபோல அவரும் வந்திருந்தார். அவரை சந்திக்க ஒடிஸா பவனுக்குச் சென்றிருந்தேன்.

பிரணாப் முகர்ஜியின் செயல்பாட்டை அவர் புகழ்ந்து தள்ளினார். அதை டேப்ரெக்கார்டரில் பதிவு செய்யாமல் போனதை நினைத்து இப்போது வருந்துகிறேன். எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும், காங்கிரஸ் கட்சியின் பரம எதிரியான பிஜு பட்நாயக் பாராட்டுகிறார் என்றால் அதன் சிறப்பு தனியானது தானே...

""பிரணாப்தா வித்தியாசமாக செயல்படுகிறார். முந்தைய நிதியமைச்சர் மது தண்டவதே, முந்தைய திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மோகன் தாரியா ஆகியோரைக் கலந்தாலோசித்து, அவர்களது கருத்துகளையும் பரிசீலிக்கிறார். மக்கள்தொகை, தனிநபர் வருமானம், செயல்பாடு என்று தனித்தனியாக ஒவ்வொரு மாநிலம் குறித்தும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்கிறார். சண்டை போட வேண்டும் என்றுதான் நான் போனேன். கை குலுக்கிப் பாராட்டிவிட்டு மகிழ்ச்சியுடன் திரும்பி இருக்கிறேன்'' - இது ஒடிஸா முதல்வராக இருந்த பிஜு பட்நாயக் திட்டக் கமிஷனின் துணைத் தலைவரான பிரணாப் முகர்ஜியை சந்தித்த பிறகு என்னிடம் சொன்னது.

பிஜு பட்நாயக் மட்டுமல்ல, மது தண்டவதேயும், மோகன் தாரியாவும்கூடப் பிரணாப் முகர்ஜியின் அணுகுமுறையை என்னிடம் பாராட்டினார்கள். நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்து திட்டக் கமிஷனைக் கலைப்பதுவரை, அப்போது பிரணாப் முகர்ஜி உருவாக்கிய நிதி ஒதுக்கீடு முறைதான் அடுத்த கால் நூற்றாண்டுகாலம் பின்பற்றப்பட்டு வந்தது.

திட்டக் கமிஷனின் துணைத் தலைவராகப் பிரணாப் முகர்ஜி 1991 ஜூன் மாதம் முதல், நரசிம்ம ராவ் ஆட்சி முடிவுக்கு வந்த 1996 மே மாதம் வரை இருந்தபோது, திட்டக் கமிஷனின் சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றியவர் யார் என்பது தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இப்போது அவர் முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவர்...

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com