ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ஆழ்ந்த மூச்சும் ஆரோக்கியமும்!

என் இளைய சகோதரன் என்னை விட வயிறு ஒட்டி, மார்புக்கூடு வெளியே தெரியும் அளவிற்கு மெலிந்தவன். என்னை விட பலவீனமானவன். ஆனால் என்னை விட மனோதிடம், சிந்தனைத் தெளிவு, உற்சாகம், சகிப்புத்தன்மை,
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ஆழ்ந்த மூச்சும் ஆரோக்கியமும்!

என் இளைய சகோதரன் என்னை விட வயிறு ஒட்டி, மார்புக்கூடு வெளியே தெரியும் அளவிற்கு மெலிந்தவன். என்னை விட பலவீனமானவன். ஆனால் என்னை விட மனோதிடம், சிந்தனைத் தெளிவு, உற்சாகம், சகிப்புத்தன்மை, நோய் எதிர்ப்பு சக்தி எல்லாம் அவனிடம் அதிகம் உள்ளது. இது எப்படி? நானும் அவனைப் போல உற்சாகத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்க விரும்புகிறேன். அதற்கு வழி என்ன?

-ரமணி, ஈரோடு.

நம்மில் பெரும்பாலானோர் விடுவது குறுகிய மூச்சுதான். மூச்சில் ஆழமும் கிடையாது. நீளமும் கிடையாது. தற்போது மாஸ்க் வேறு போட்டுக் கொண்டு அலைய வேண்டிய நிலை. அதனால் மூச்சுவிடும் நேர அளவிலும் விரிவு கிடையாது. மூச்சு இழுக்கும் வேகத்திலும் அழுத்தமில்லை. மார்பு கொள்ளும் அளவில் அதிக அளவில் மூச்சை உள்ளிழுப்பதும், அதை அவ்வளவிலேயே வெளியேற்றுவதற்கும் பொது இடங்களில் செய்வதற்குப் பயமாக இருக்கிறது. இதனால் பலருக்கும் பிராண சக்தியே கிடைக்காமல் போய்விடுகிறது.

பிராண சக்தி என்பது என்ன? சுக துக்கங்களைத் தாங்கி அதனால் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளில் நெகிழ்ச்சியோ கலக்கமோ பெறாதிருக்கும் மனோதிடமும், சிந்தனைத் தெளிவு கொண்டிருப்பதும்- எத்தனை நெருக்கடிகள் இருந்தாலும் தான் செய்ய வேண்டிய பணிகளை முறைப்படி சுறுசுறுப்புடன் செய்ய ஊக்குவிக்கும் உற்சாகத்துடன் இருப்பதும்- குளிர், வெயில், பனி, மழை, காற்று என்ற பருவகால நிலை மாறுதல்களைப் பேதமின்றி தாங்கக்கூடிய சகிப்புத்தன்மையுடன் இருப்பதும் - நோய்களுக்கு எளிதில் வசப்படாமல், நோய் எளிதில் குணமாகக் கூடிய நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருப்பதும்தான் பிராண சக்தி ஒருவருக்கு இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள். நாம் உட்கொள்ளும் உணவின் அளவாலோ, சுகத்திற்காக ஏற்படுத்திக் கொண்டுள்ள சாதனங்களாலோ பிராண சக்தியைச் சம்பாதிக்க முடியாது. அது சுவாசப் பயிற்சி ஒன்றால் மட்டுமே கிடைக்கக்கூடியது.

பிராண சக்தியைச் சேர்ப்பது எப்படி?

இதற்கென தனியே இடம், நேரம், பயிற்சி என எதுவுமே தேவையில்லை. எந்த வேலையைத் தொடங்கினாலும் அதற்கு முன் சற்று மூச்சை வேகமாக வெளியிட்டு ஆழ்ந்த மூச்சாக உள்ளே இழுக்கலாம். கனமான சாமானைத் தூக்கும்போதோ, படிகள் வழியே மேலே ஏறும்போதோ, கடினமான எந்த வேலையையும் செய்யும்போதும் இதை முக்கியமாகச் செய்ய வேண்டும். மாடிப் படியில் ஏறுகிறோம். தோள்பட்டையை நேராக நிமிர்த்தி, முதல் இரண்டு படிகள் ஏறியதும் மூச்சை வெளிவிட்டு, அடுத்த இரண்டு படிகள் ஏறியதும் உள்ளிழுப்போம். இப்படி இரண்டு படிகளில் மூச்சை வெளிவிடுவதும், இரண்டு படிகளில் மூச்சை உள்ளிழுப்பதுமாக மாற்றி மாற்றிச் செய்து கொண்டே ஏறினால், மாடி ஏறிய பிறகு மூச்சுக்காகத் திணற மாட்டோம். ஒரே சீராக ஆனால் சுறுசுறுப்புடன் முழுமூச்சாக உள்ளிழுத்துவிடுவதால், பிராண சக்தி உடலில் நிறையச் சேர்கிறது. உடலில் உற்சாகம் குறைவதில்லை. களைப்பும் ஏற்படுவதில்லை. அடிக்கடி நாம் விடும் குறுகிய கால அளவு மூச்சை மாற்றி, நெடு மூச்சாக விட முயல வேண்டும். இந்த சீரமைப்பால் நாம் விடும் மூச்சின் அளவும் நேரமும் ஆழமும் கூடும்.

இதற்கான பயிற்சியாகத் தினமும் சில நிமிடங்களாவது, மூச்சை உள்ளிழுக்கும்போதும் வெளியே விடும்போதும், வயிற்றை நிதானமாக எக்கிக் கொண்டு அங்கு அதிக அசைவிற்கு இடம் கொடுக்காமல் மார்பு நன்கு விம்மி விரிந்து சுருங்குமாறு 20 - 30 மூச்சுகள் விடப் பழகிக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் உங்கள் சகோதரரைப் போலவே நீங்களும் மனோதிடம், உற்சாகம், நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறலாம். மேலும் நீங்கள் சேர்த்துள்ள பிராண சக்தியின் மூலமாக, தக்க பாதுகாப்பில்லாத நிலையிலும் நோயணுகாமை என்ற பலத்தையும் பெறலாம்.

நுரையீரல் வலுவைக் கூட்டி பிராணசக்தியின் சேமிப்பை அதிகரித்துத் தரும் அகஸ்திய ரசாயன லேகியம், வஸிட்டரசாயன லேகியம், தசமூல ரசாயனம் போன்ற ஆயுர்வேத மருந்துகள் உதவிடக் கூடியவை.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com