பேல்பூரி

ஒரு வீடே போதும்;மறுவீடு வேண்டாம்.
பேல்பூரி

கண்டது


(குன்னூரில் ஓர் ஆட்டோவில் கண்ட வாசகம்)

ஒரு வீடே போதும்;
மறுவீடு வேண்டாம்.

ஏ.ராஜமாணிக்கம்,
குன்னூர்-2.

(திருச்சி தென்னூரிலுள்ள ஒரு பள்ளி சுவரில் எழுதப்பட்டிருந்த வாசகம்)

சிந்திக்கும் ஆற்றலை உபயோகிக்காமல்
வாழ்வதும், இலக்கின்றி அம்பு எய்வதும் ஒன்றே.

எஸ்.சுதாகரன்,
வானவன்மகாதேவி.

(தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள ஓர் ஊரின் பெயர்)

நரிப்பள்ளி

- ந.பிறைசூடன்,
தருமபுரி.

(தஞ்சாவூர் மேலவீதியில் திருமணமாகாதவாலிபர்கள் தங்கியிருக்கும் ஒரு மேன்சனில்)

பிரமசாரிகள் வசிப்பிடம்

வா.மாதவன்,
தஞ்சாவூர்.

கேட்டது


(நாகர்கோவில் இருளப்பபுரம் காமராஜர்சாலையில் இரு நண்பர்கள்)

""ஏன்டா... கரோனாவால் பாதிக்கப்பட்ட நண்பன் எப்படி இருக்கானோன்னு சொல்லி, நீ ஒரு போன் கூட, பண்ணலீயே''
""நீ, நல்லாதானே இருந்தே?''
""எப்படிடா சொல்றே?''
""வாட்ஸப்பில் போடுற "ஸ்டேட்டஸ்' எல்லாத்தையும், மறு செகண்டே பார்த்தியே... அதை வெச்சுத்தான்''


மகேஷ் அப்பாசுவாமி,
பனங்கொட்டான் விளை.

(திருநெல்வேலியில் ஒருமருத்துவமனையில் இரண்டுமுதியவர்கள்)

""நாமளே ரொம்ப பயத்தோடு டாக்டரைப் பார்க்க வந்திருக்கோம்... இங்க என்னடான்னா?''
""ஏன்? என்னாச்சு?''
"" டாக்டரு நமக்கு மேல பயந்துக்கிட்டு நிலாவுக்குப் போற மாதிரி டிரஸ் மாட்டிக்கிட்டு பத்தடி தூரத்தில் இருந்து என்ன செய்யுதுன்னு கேட்கிறார்...
எல்லாம் காலக் கொடுமைடா சாமி''

மோகனசுந்தரம்,
திருநெல்வேலி.

யோசிக்கிறாங்கப்பா!


எதையெல்லாம் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தோமோ...
அதையெல்லாம் வேண்டாமென்று ஒருநாள் நம்மை சொல்ல வைத்துவிடுகிறது வாழ்க்கை!

- மு.சுகாரா,
திருவாடானை.

மைக்ரோ கதை

டோர் குளோஸரின் விசையை எதிர்த்துக் கதவைத் திறந்துகொண்டு இண்டர்வியூ நடக்கும் ரூமின் உள்ளே தலையை நீட்டினான் ரமேஷ்.
""பிளீஸ் கம் இன். சிட் டவுன்'' என்றார் ஒருவர்.
உட்கார்ந்தான்.
அது ஒரு பெரிய ஹால். வலப்பக்கக் கோடியில் பெரிய திரை. சீலிங்கிலிருந்து டிஜிட்டல் புரஜக்டர் தொங்கியது. கீழே உயர்ந்த வகை கார்ப்பெட். இடப் பக்கச்
சுவரின் ஓரம் கசக்கிப் போட்ட காகிதம் ஒன்று உறுத்தலாக இருந்தது.
ஒரு நீள்வட்ட மேசையின் எதிர்ப் புறத்தில் நான்கு பேர் உட்கார்ந்திருந்தார்கள்.
வலக் கோடியில் இருப்பவர் ஆரம்பித்தார்.
"எப்படி இருக்கு இந்த அட்மாஸ்பியர்?' என்றார்.
"இது ஒரு நல்ல கான்ஃபரன்ஸ் ஹால். மனசுக்கு இதமான அட்மாஸ்பியர்' என்றான் ரமேஷ்.
"இவ்வளவு நல்ல அட்மாஸ்பியர்ல அந்த கசக்கிப் போட்ட காகிதம் உறுத்தலா இல்லையா? அதை ஏன் சொல்லலை?'
"கவனிச்சேன் சார் அதை. அந்தக் காகிதம் அதோ உட்கார்ந்திருக்காரே அவரோட ஸ்க்ரிப்ளிங் பேடோட முதல் பக்கம். கிழிக்கிறப்போ கொஞ்சம் கோணலா கிழிச்சிருக்காரு. பேடிலே முக்கோணமா கொஞ்சம் பாக்கி இருக்கு அந்தப் பக்கத்தில். இதைப் பற்றிச் சொன்னா அவர் மனசு புண்படும்ன்னுதான் சொல்லலை'
நாலு பேரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
""எங்க நாலு பேரில் ஒருத்தர் உங்க பாஸ். அவர் யாருன்னு மட்டும் சொல்லுங்க பார்ப்போம்?''
"நீங்க மூணு பேரும் இடது கோடியில் இருக்கிறவர் கிட்டே ரொம்ப பவ்யமா நடந்துக்கிறீங்க. அவர்தான் பாஸ்.''
""உங்க அப்ஸர்வேஷன் பவர் பிரமாதம். வெளியிலே வெய்ட் பண்ணுங்க.''
"சார், புது விதமான இண்டர்வியூ சார். நான் எதுக்கு இங்கே வந்தேன்னு கூட நீங்க யாரும் கேட்கலை''
""நீங்க இண்டர்வியூவுக்குத்தானே வந்தீங்கசுந்தரேசன்?''
""நான் ரமேஷ் சார். சுந்தரேசன் வெளியில வெய்ட் பண்றார் . நான் கேன்டீன்ல புதுசா வேலைக்குச் சேர்ந்திருக்கேன். கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு எத்தனை செட் டீ ஸ்நாக்ஸ் அனுப்பணும்ன்னு பார்த்துகிட்டு வரச் சொன்னாரு சூப்பர்வைசர். எட்டிப் பார்த்தேன், உள்ளே கூப்பிட்டு கேள்வி எல்லாம் கேட்டீங்க. ஜாலியா
இருந்திச்சு சார்''

சி.பி.செந்தில் குமார்,
சென்னிமலை.


எஸ்.எம்.எஸ்.


சிலர் கீழே விழுவதற்குக் காரணம்
பலரின் பேச்சை நம்பி...
மேலே ஏறியதுதான்.

நெ.இராமன்,
சென்னை-74.


அப்படீங்களா!

அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் எல்லாவற்றிலும் வீட்டின் முன் கதவு எப்போதும் மூடியே இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். வீட்டில் உள்ளவர்களை அழைக்க வேண்டும் என்றால் அழைப்பு மணிக்கான ஸ்விட்சை அழுத்த வேண்டும். உள்ளே இருப்பவர் கதவில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடி வழியாக உள்ளிருந்து பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் மெல்ல... கதவைத் திறந்து வந்திருப்பவர் யார் என்று தெரிந்து கொள்ளவேண்டும்.
இப்படிப்பட்ட முயற்சிகள் எதுவும் செய்யாமல், வீட்டினுள் இருந்து கொண்டே கதவருகே நிற்பவரைப் பார்க்க முடியும். அதற்கு உதவுகிறது விடியோ டோர்பெல். இதை வைஃபை டோர்பெல்ஸ், ஸ்மார்ட் டோர்பெல்ஸ் என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள்.
இந்த டோர் பெல்லில் ஒரு கேமரா இருக்கும். ஸ்பீக்கர், மைக்ரோபோன் இருக்கும். அசையக் கூடிய சென்சார் இருக்கும். இந்த டோர்பெல்லை இண்டர்நெட்டுடன் தொடர்புபடுத்த முடியும்.
இவ்வளவும் இருப்பதால், கதவருகே வரும் யாராக இருந்தாலும், டோர்பெல்லில் உள்ள சென்சாரின் துணையுடன், கேமரா அவரைப் படம் பிடித்து
விடும். அந்த விடியோவை உங்களுடைய கையில் உள்ள செல்லிடப்பேசியிலோ, மடிக்கணினியிலோ, கணினியிலோ இணையதள இணைப்பின் மூலமாக உடனடியாகப் பார்க்க முடியும். தேவைப்பட்டால் அவருடன் தொடர்பு கொள்ளலாம். இல்லாவிட்டால் "கண்டுக்காமல்' இருந்து விடலாம்.
நீங்கள் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்ற சமயங்களில் யாராவது வந்தால், இந்த விடியோ டோர்பெல் அந்த காட்சிகளைப் படம் பிடித்து சேமித்து வைத்துக் கொள்ளும். அதை நீங்கள் பிறகு பார்த்துக் கொள்ளலாம். தொலைதூரத்தில் இருந்தும் இந்த டோர்பெல்லை நீங்கள் இயக்க முடியும்.

என்.ஜே.,
சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com