ரேடியோ  மியூசியம்!

ஒரு காலத்தில் மக்களின் பிரபலமான பொழுது போக்கு சாதனமாக ரேடியோ விளங்கியது. ரேடியோ இல்லாத வீடுகளே இல்லை என்று கூறுமளவுக்கு உலகம் முழுவதும் பரவியிருந்தது.
ரேடியோ  மியூசியம்!


ஒரு காலத்தில் மக்களின் பிரபலமான பொழுது போக்கு சாதனமாக ரேடியோ விளங்கியது. ரேடியோ இல்லாத வீடுகளே இல்லை என்று கூறுமளவுக்கு உலகம் முழுவதும் பரவியிருந்தது. ரேடியோ வைத்திருப்பதை பெருமையாகக் கருதினர். பின்னர் டிரான்சிஸ்டர்ரேடியோ, பாக்கெட் ரேடியோ என பல வடிவங்கள் எடுத்த ரேடியோ, டெலிவிஷன் வந்தவுடன் மெல்ல மெல்ல மறைந்தது. இருந்தாலும் இன்றும் ரேடியோ நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாவதுடன், அதற்கான ரசிகர்களும் இருக்கிறார்கள்.

பெங்களூருவைச் சேர்ந்த டெலிகாம் ஆலோசகர் மற்றும் ரேடியோ ஆர்வலர் உதய் கல்புர்கி( 56), பசவேஸ்வரா நகரில் உள்ள தன்னுடைய வீட்டின் கீழ்தளத்தில் உலகில் பிரபலமாக இருந்த 150 ரேடியோக்களை சேகரித்து மியூசியமாக வைத்துள்ளார். இவை அனைத்தும் இன்றும் செயல்படக் கூடிய வகையில் ஒரிஜனல் கண்டிஷனுடன் உள்ளன.

ஒன்பது வயது முதலே ரேடியோ தயாரிப்பில் ஆர்வம் காட்டிவந்த உதய் கல்புர்கி, 1980- ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற தேசிய அறிவியல் கண்காட்சியில், தானே தயாரித்த கிரிஸ்டல் ரேடியோவை பார்வைக்கு வைத்து பாராட்டுதல்களைப் பெற்றார். தொடர்ந்து எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் என்ஜினியரிங் படித்து வந்த உதய் கல்புர்கி, பழைய ரேடியோக்களை ஆர்வமுடன் சேகரிக்கத் தொடங்கினார். டெலிவிஷன் அறிமுகமானவுடன் ரேடியோ அரும் பொருளாக மாறத் தொடங்கியது. ரேடியோ
ரிப்பேர் கடைகளுக்கும், பழைய பொருள்கள் வாங்குபவர் கடைகளுக்கும் செல்லத் தொடங்கின. பழுதடைந்தால் யாரும் அதை சரி செய்து பயன்படுத்த விரும்பவில்லை.

உதய் கல்புர்கிக்கு ரேடியோக்களை சேகரிக்கும் ஆசை இன்னும் அதிகரித்தது. பழைய பொருள்கள் விற்பனை கடைகளு க்குச் சென்று செயல்பாட்டில் உள்ள நல்ல ரேடியோக்களை விலைக்கு வாங்கத் தொடங்கினார். சில ரேடியோக்களை சரி செய்து இயங்க வைத்தார். இவரது ரேடியோ சேகரிப்பைப் பற்றி கேள்விப்பட்ட திருவாங்கூர் மன்னர் வம்சத்தைச் சேர்ந்த பத்மநாப வர்மா, தன்னுடைய திருவனந்தபுரம் அரண்மனையில் பயன்படுத்தாமல் இருக்கும் ரேடியோக்களை இவருக்கு அன்பளிப்பாக கொடுக்க விரும்பினார்.

1936-ஆம் ஆண்டு அமெரிக்க தயாரிப்பான பைலட் ஜீ774பி, 1928 - ஆம் ஆண்டு ஹாலந்து நாட்டில் தயாரான பிலிப்ஸ் - 2802 மாடல் போன்ற அரிய ரேடியோக்கள் உள்பட 20 அரிய பொருள் ரேடியோக்களை அனுப்பி வைத்ததுடன் நேரில் வந்து உதய் கல்புர்கியின் மியூசியத்தையும் பார்வையிட்டுச் சென்றார்.

உதய் கல்புர்கியின் ஆர்வம் மேலும் அதிகமாயிற்று. ஜெர்மனி, பிரிட்டன் போன்ற நாடுகளில் பிரபலமாக இருந்த ரேடியோக்களை தேடிப் பிடித்து வாங்கினார். இவரது சேகரிப்பில் 1955 - ஆம் ஆண்டு தயாரிப்பான பிலிப்ஸ் பிஎக்ஸ் 998 என்ற 27 கிலோ எடையில் உள்ள (அன்றைய விலை ரூ.9000) ரேடியோவை ரூ. 12 ஆயிரம் கொடுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது.

1958 - ஆம் ஆண்டு பிரிட்டன் தயாரிப்பான எச்எம்வி 656, கிரேட்ஸ் சூப்பர் மற்றும் முல்லார்ட் எம்ஏ எஸ் 231 மாடல் ரேடியோக்களை புணேவில் வாங்கியுள்ளார். கடந்த ஆண்டு முன்னாள் தென்னிந்திய ரயில்வே பொது மேலாளர் ரிபேரோவும் தன்னிடமிருந்த கிரண்டிக் எக்ஸ்போர்ட் பாய் 204 என்ற டிரான்சிஸ்டர் ரேடியோவை இவருக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளார். புணே அரச பரம்பரையினர் தங்கள் அரண்மனையில் பயன்படுத்தாமல் வைத்திருந்த புத்தம் புதிய 1969-ஆம் ஆண்டு ஹாலந்து தயாரிப்பான பிலிப்ஸ் பி7எக்ஸ் 45ஏ என்ற ரேடியோவை இவருக்குக் கொடுத்துள்ளனர்.

2000 -ஆம் ஆண்டு ஐரோப்பாவில் உள்ள நாட்டோ படையினருக்காக பிரான்சில் தயாரிக்கப்பட்ட சைரன், மொபைல் சார்ஜா மற்றும் பிளாஷ் லைட்டுடன் கூடிய ஈடன் ரெட்கிராஸ் 300 என்ற ரேடியோ இந்த மியூசியத்தில் இருப்பது அபூர்வமான சேகரிப்பாகும். 1950 முதல் 1980 - ஆம் ஆண்டு வரை இந்தியா முழுவதும் பினாகா கீத்மாலா நிகழ்ச்சியை ஒவ்வொரு வீட்டிலும் ரசித்துக் கேட்டதை ஒருவரும் மறந்திருக்க முடியாது. அந்த சமயத்தில் இவருடைய தந்தை 708 ரூபாய் கொடுத்து வாங்கிய டெலிபங்கன் ரேடியோ இன்றும் நல்ல நிலையில் இருப்பதாகக் கூறுகிறார் உதய் கல்புர்கி.

தினமும் ஐந்து மணி நேரமாவது தன்னுடைய ஆய்வுக்கூடத்தையும், மியூசியத்தில் உள்ள ரேடியோக்களை சுத்தப்படுத்துவதையும், சுற்றுப்புறத்தைத் தூய்மைப் படுத்துவதையும் உதய் கல்புர்கி கடமையாக கொண்டுள்ளார். பார்வையாளர்களிடம் ஒவ்வொரு ரேடியோ பற்றி விளக்கமளிப்பதையும் சிரமமாகக் கருதுவதில்லை. சிலர் தங்களிடம் நல்ல நிலையில் இருந்த ரேடியோக்களை தானாக முன்வந்து இவரிடம் ஒப்படைத்துள்ளனர். பொது மக்கள் மட்டுமின்றி பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆய்வுக்காக இங்கு வந்து செல்கிறார்கள். ஒவ்வொரு ரேடியோவுக்கும் பின்னாலும் ஒரு சுவாரசியமான தகவல் இருப்பதைப் பெருமையாக கருதுகிறார் உதய் கல்புர்கி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com