விவசாயத்தை மறக்காத மாணவர்கள்!

தென்காசி மாவட்டம் குருவிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியரும், மாணவர்களும் விவசாயப் பணிகளில் புதிய மாற்றங்களை கற்றுக் கொண்டு விவசாயிகளுக்கு நேரடியாக கற்பித்து வருகின்றனர்.
விவசாயத்தை மறக்காத மாணவர்கள்!

தென்காசி மாவட்டம் குருவிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியரும், மாணவர்களும் விவசாயப் பணிகளில் புதிய மாற்றங்களை கற்றுக் கொண்டு விவசாயிகளுக்கு நேரடியாக கற்பித்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக இப்பணியைத் தொடர்ந்துமேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், விவசாயத்தை மேம்படுத்த முயன்று வரும் குருவிகுளம் அரசுமேல்நிலைப்பள்ளி ஆசிரியரும், நாட்டுநலப் பணித் திட்ட அலுவலருமான ரெ. சுப்பா ராஜுவைச் சந்தித்துப் பேசினோம்:

""நகரமயமாக்கல் காரணமாக விளைநிலங்கள் வீட்டு மனைகளாகும் அவலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிரதானச் சாலை அருகேயுள்ள கிராம விவசாய நிலங்கள் எல்லாம் மனைகளாக மாறிவிட்டன. இது என் மனதில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களைப் பயன்படுத்தி எத்தனையோ சேவைகளை பல்வேறு பள்ளிகள் செய்து வருகின்றன. நாம் ஏன் நமது நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களைக் கொண்டு விவசாயம் சார்ந்த பணிகளைச் செய்யக்கூடாது என எனக்குள் சிந்தனை தோன்றியது. அதை தொடர்ந்துதான் விவசாயம் குறித்த களப்பணியை மேற்கொள்ளத் தொடங்கினேன். கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பணியில் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பொது முடக்கம் காரணமாக மாணவர்களால் இப்பணியை மேற்கொள்ள இயலவில்லை.

விவசாயப் பணிகள் குறித்து மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த முயன்று வருகிறோம். இதற்காக நெல் ஆராய்ச்சி மையம், வேளாண் விரிவாக்க மையங்கள், மண் ஆய்வுக் கூடங்கள், தென்னை நாற்றுப்பண்ணை உள்ளிட்ட இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்கிறோம். அங்குள்ள வேளாண்மை அதிகாரிகளிடம் விவசாயம் குறித்த விவரங்களை மாணவர்கள் தெரிந்து கொள்கிறார்கள். அரசு வழங்கும் மானியங்கள் குறித்த விவரங்களையும் மாணவர்கள் அவர்களிடம் தெரிந்து கொண்டனர். இவ்வாறு தாங்கள் தெரிந்துகொண்டதை அடிப்படையாகக் கொண்டு, எங்கள் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், மக்களிடையே விவசாயம் குறித்த விழிப்புணர்வை உண்டாக்குகிறார்கள்.

வெறும் பாடங்களை மட்டும் கேட்டு விட்டு கிளம்பாமல் சுந்தரபாண்டியபுரம், மேக்கரை, அம்பாசமுத்திரம் மற்றும், செய்துங்கநல்லூர் போன்ற பகுதிகளில் விவசாய நிலத்தில் நேரடியாகக் களம் இறங்கி, வேளாண் அதிகாரிகள் தெரிவித்த புதிய முறைகளில் நாற்று நடும்பணியில் மாணவர்கள் ஈடுபட்டார்கள். அதோடு, அந்த புதிய முறைகள் குறித்து மாணவர்கள் விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர். மாணவர்கள் நேரடியாக களம் இறங்கி விவசாயப் பணியில் ஈடுபட்டதால் அதைப் பார்த்த அங்குள்ள விவசாயிகள் புதிய முறையில் விவசாயம் செய்ய ஒப்புக் கொண்டனர். இது மாணவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இதன் விளைவாக, மாணவர்கள் செங்கோட்டையில் உள்ள அரசு தென்னை நாற்றுப்பண்ணையில் தொழில்நுட்பங்களை அறிந்து விவசாயிகளிடம் நேரடியாக சென்று விளக்கமளித்து வருகின்றனர்.

மேலும் ஒவ்வோர் ஆண்டும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகளிடம் வேளாண்மை சார்ந்த புள்ளி விவரங்களை மாணவர்கள் சேகரித்து வருகின்றனர். விவசாயிகள் செய்துள்ள பயிர், பயன்படுத்தும் இயற்கை, செயற்கை உரங்கள் மற்றும் மகசூல், கடந்த ஆண்டு மகசூல், நோய் தாக்குதல் விபரங்கள் ஆகியவற்றை பேட்டியின் மூலம் பதிவு செய்கின்றனர். பின்னர் அந்த ஆவணத்தை வேளாண் அதிகாரிகளிடம் சமர்ப்பித்து வருகின்றனர். இதன் மூலம் சரியான நேரத்தில் நோய் தாக்குதலில் இருந்து விவசாயத்தை காப்பாற்ற முடிகிறது.

வேளாண்மை சார்ந்த விரிவான விவரங்களை அறிந்து கொள்வதற்காக தொலைக்காட்சிகளில் வேளாண்மை சார்ந்த நிகழ்ச்சிகளைப் பார்த்து அதை பதிவு செய்தும் வருகின்றனர். இதை தாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் விவசாயிகளிடம் காண்பித்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

கடந்த பல ஆண்டுகளாக எங்கள் பள்ளி மாணவர்கள், விவசாயிகளிடம் திருந்திய நெல் சாகுபடி முறைகளை வலியுறுத்தி வருகின்றனர். நெல் சாகுபடியில் வரிசை நடவு, கோனோவீடர் மூலம் களை எடுத்தல், நீர் மறைய நீர்க்கட்டு மற்றும் பயிர் இடைவெளி போன்ற தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் எடுத்துக் கூறி வருவதுடன் மானாவாரி நிலங்களில் விதைப்பு காலங்களில் விதை நேர்த்தி பற்றியும் எடுத்துக் கூறி வருகின்றனர்'' என்றார் சுப்பாராஜு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com