பேல்பூரி

பணத்தால் நாயை வாங்கி விட முடியும்.  ஆனால், அன்பால் தான் அதன் வாலை ஆட்ட வைக்க முடியும்!
பேல்பூரி

கண்டது

(வானவன்மகாதேவி கடற்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த படகு ஒன்றில் 
எழுதப்பட்டிருந்த வாசகம்)

மீன் கூட தூண்டிலுக்குத் தப்பும்,
வாய் மூடிக்கொண்டிருந்தால். 

எஸ். சுதாகரன்,
வானவன்மகாதேவி.

(சென்னை மாங்காட்டில் உள்ள ஆடையகம் ஒன்றின் பெயர்)

ஜல்லிக்கட்டு ஃபேஷன்ஸ் 

த லட்சுமி காந்த்,
சென்னை -61.



(காட்டாங்குளத்தூரில்  ஒரு லாரியின் பின்புறத்தில்)


பணத்தால் நாயை வாங்கி விட முடியும்.  
ஆனால், அன்பால் தான் அதன் வாலை ஆட்ட வைக்க முடியும்! 

வி.சி. கிருஷ்ணரத்னம்,
காட்டாங்குளத்தூர்.

கேட்டது

(தருமபுரி பென்னாகரம்  பகுதியில் பெரியவரும் இளைஞரும்)

""தம்பி...வண்டி "ரிசர்வ்'ல  ஓடுதுன்னு  லிப்ட் கேட்டப்பவே  சொல்லி இருக்கலாமே... இப்படி நடு வழியில் நிறுத்திப்புட்டியே''
""அப்பவே  அப்படிச் சொல்லி இருந்தால், கூட்டிட்டுப் போக சங்கடப்பட்டு சொல்றேன்னு நினைச்சு,  எங்க ஆத்தா, அப்பன் எல்லோரையும் மனசுக்குள்ளதிட்டிருப்பீங்க... அதனால சொல்லலை'' 

அ.சாரதா,
பெரும்பாலை.

( கோவை மார்க்கெட் பகுதியில் உள்ள மளிகைக்கடை ஒன்றில் கடை வாலிபரும் அவரது தாத்தாவும்)

""ஏன்டா போன் பண்ணினால் போன் எடுக்க மாட்டேங்குறே... உன்னை உன் அப்பன்கிட்ட நல்லா சிக்க வைக்கணும்டா''

""பெருசு... "வியாபார நேரத்தில்  சொந்தக்கார நாய்   போன்  பண்ணினாலும் , போன் எடுக்கக்கூடாது'ன்னு சொல்லி , உங்க மகன்தான்  கண்டிஷன்  போட்டிருக்கார்'' 

இலக்கியா மகேஷ்,
கோவை.

(சிதம்பரம் கோயிலில் கணவன் -மனைவி)

"" கோயில்ல எங்கே நிக்கறீங்க?''
"" யானை கிட்டே நிக்கறேன் பாரு...''
"" அட ராகவா ... குழந்தையாட்டம் யானைய பாத்துகிட்டு நிக்கறேளா?''
"" எதைச் செஞ்சாலும் குத்தமா? உனக்கு லேண்ட் மார்க்குக்காக நிக்கிறேன்டி''

ஆர்.சுந்தரராஜன்,
சிதம்பரம்-1.

யோசிக்கிறாங்கப்பா!

வாழ்க்கை குத்துச்சண்டை போன்றது.
விழுந்தபோது தோல்வி அறிவிக்கப்படுவதில்லை. 
எழாத போதுதான் தோல்வி அறிவிக்கப்படுகிறது! 

கே.அஞ்சம்மாள்,
திருவாடானை.

மைக்ரோ கதை


பன்முகத் திறமையிருந்தும் நண்பர்கள் மத்தியில் மதிப்பின்றி திரிந்த ஒருவன், தன்னம்பிக்கைப் பயிற்சியாளர் ஒருவரிடம் சென்று, ""ஐயா... திறமைகள் பல இருந்தும், என்னை எவரும் மதிப்பதே இல்லை''  என கவலையுடன் சொன்னான்.
சிரித்துக் கொண்ட  தன்னம்பிக்கைப் பயிற்சியாளர், ஒரு மிகப் பழைய ரேடியோவைத் தேடி அவனிடம் கொடுத்தார். 

""இதை யார் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள் எனத் தெரிந்து வா'' எனச் சொல்லிஅனுப்பினார்.

மறுநாள் தன்னம்பிக்கைப்  பயிற்சியாளரிடம்  வந்த அவன், ""ஐயா... பழுது பார்க்கும் கடையில் இதை வாங்க மறுத்து விரட்டினார்கள். பிறகு பழைய பொருட்கள் வாங்கும் கடைக்கு எடுத்துச் சென்றேன். அங்கு எடைக்கு எடை பணம் தருவதாகச் சொன்னார்கள். கடைசியாக அருங்காட்சியகம் ஒன்றுக்குச் சென்றேன். அங்குதான்ஆயிரம் ரூபாய் தருவதாகச் சொன்னார்கள்'' என்றான்.

""இதுதான் வாழ்வில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். நீ சேரும்  இடத்தைப் பொறுத்தே உன் மதிப்பு உயரும். உன் திறமையை மதிக்கும் மனிதர்
களைத் தேடித் தேடி அவர்களோடு நட்புக் கொள். உன் நிலை உயரும்''  என்றார் அந்த  தன்னம்பிக்கைப்  பயிற்சியாளர்.

பூபதி பெரியசாமி,
புதுச்சேரி -9


எஸ.எம்.எஸ்.

கடந்து போனதைப் பற்றி கவலைப்படாதீர்கள்;
நீங்கள் கவலைப் படக்கூடாது என்பதற்காகவே
அது கடந்து போயிருக்கும்!

  பி.கோபி,  
கிருஷ்ணகிரி-1

அப்படீங்களா!

முழுமையான பார்வைக்குறைபாடு பற்றி எல்லாருக்கும் தெரியும்.

நிறங்களைப் பிரித்தறியும் திறனில்லாத பார்வைக்குறைபாடு உள்ளவர்களும் இருக்கிறார்கள்.  குறிப்பாக, பச்சை, சிவப்பு வண்ணங்கள் அவர்களால் பார்க்க முடியாது. கண்களின் விழித்திரை சரியாக வேலை செய்யாததால்தான்  இந்தக் குறைபாடு ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். 

நமது விழித்திரையில் மூன்றுவிதமான கூம்பு வடிவ  செல்கள் உள்ளன. இவை நீலம், பச்சை மற்றும் சிவப்பு ஒளிகளை உணரும் திறன் படைத்தவை. 

இவை மூன்றும் இணைந்து முறையாக வேலை செய்யும்போதுதான் நம்மால் ஒவ்வொரு வண்ணத்தையும் தனித்தனியாகப் பிரித்தறிய முடியும். ஏதோ உடல்ரீதியான காரணத்தால் இவை இணைந்து செயல்படாவிட்டால்,  வண்ணங்களைப் பிரித்து அறிய இயலாது. 

இந்தக் குறைபாட்டை முழுமையாகச் சரி செய்ய இயலாது. எனினும் ஓரளவுக்கு வண்ணங்களைப் பிரித்து அறிய உதவக் கூடிய  வண்ணம் பூசப்பட்ட  கண் கண்ணாடிகள் சில ஆண்டுகளுக்கு   முன்பு  பயன்பாட்டுக்கு வந்தன. 

இப்போது  பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதற்காக கான்டாக்ட் லென்சுகளை உருவாக்கியிருக்கிறார்கள்.   செலவு அதிக
மில்லாத இயற்கை சாயங்களை கான்டாக்ட் லென்சுகளில் பூசி அவற்றை இந்தக் குறைபாடு உள்ளவர்களுக்குத் தந்திருக்கிறார்கள். 

என்.ஜே.,
சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com