ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்:  தோலில்  தஞ்சமடைந்த சூடு!

எனது வயது 70.  கரோனா வைரஸ் பாதிப்பு வந்துவிடக் கூடாதே என்பதற்காக கபசுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீர், இஞ்சி, சுக்கு, திப்பிலி, மிளகு சேர்த்த கஷாயம் என்று சகட்டுமேனிக்கு குடித்து வந்ததன் காரணமாக
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்:  தோலில்  தஞ்சமடைந்த சூடு!


எனது வயது 70. கரோனா வைரஸ் பாதிப்பு வந்துவிடக் கூடாதே என்பதற்காக கபசுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீர், இஞ்சி, சுக்கு, திப்பிலி, மிளகு சேர்த்த கஷாயம் என்று சகட்டுமேனிக்கு குடித்து வந்ததன் காரணமாக, கடந்த ஒன்பது மாதத்தில் உடம்பு ரொம்ப சூடாகி நெற்றியில் சிறு சிறு கட்டிகள், கண்ணைச் சுற்றி எரிச்சல், தலையில் வேனல் கட்டிகள், தொப்புளைச் சுற்றி எப்போதும் நமைச்சல் என்று பலவித உபாதைகளால் அவதிப்படுகிறேன். இதை எப்படிக் குணப்படுத்துவது?

வாசுதேவ ஆதித்யன்,
விருகம்பாக்கம், சென்னை.

முள்ளில் விழுந்த வேட்டியைப் போல தங்களுடைய நிலைமை ஆகிவிட்டது. ஆரோக்கியம் எனும் வேட்டியைக் கிழியாமல், கஷாயங்களால் ஏற்பட்ட உபாதைகள் எனும் முள்ளிலிருந்து சர்வ ஜாக்கிரதையாக மீட்க வேண்டிய அவசியமிருக்கிறது. வாயிலிருந்து வயிறு வரை பரவிய சூடானது, ரத்தத்தின் வழியாகப் பயணம் செய்து, தோலில் வந்து தஞ்சமடைந்ததால், நீங்கள் குறிப்பிடும் உபாதைகள் தோன்றியிருக்கின்றன. நமைச்சல் என்பது கப தோஷத்தின் சுபாவத்தையும், மற்ற அறிகுறிகள் பித்த தோஷத்தின் இயற்கையான சீற்றத்தையும் காண்பிக்கின்றன. கப - பித்த தோஷங்களின் கலப்பினால் ஏற்பட்டுள்ள புதிய பரிணாமத்தை உங்கள் உடல் ஏற்காததால் வந்த இந்த வினையை மாற்ற, கசப்புச் சுவை கொண்ட மூலிகைகளால் மட்டுமே சாத்தியமாகும்.

பேய்ப்புடல், வேப்பம்பட்டை, கடுகரோஹிணி, மஞ்சள், வட்டத் திருப்பி, சிறுகாஞ்சூரிவேர் போன்ற கசப்பு நிறைந்த மூலிகைகளால் தயாரிக்கப்படும் திக்தகம் எனும் நெய்மருந்து தங்களுக்குப் பயன்படக்கூடும். சுமார் பத்து மில்லி லிட்டர் மருந்தை, காலை, மாலை, மதியம் என மூன்று வேளையாகப் பிரித்து, வெறும் வயிற்றில் சாப்பிட்டு, அதன் மேல் சுமார் அறுபது மில்லி லிட்டர் வெந்நீர் அருந்த, உண்ட நெய் மருந்தானது விரைவில் செரித்துவிடும். 21 நாட்கள் சாப்பிட்ட பிறகு, வயிற்றைச் சுத்தப்படுத்தும் மாணிபத்ரம் எனும் லேகிய மருந்தை 15 கிராம் எடுத்து, அதில் 10 கிராம் திருவிருத் லேகியத்தைக் கலந்து, காலையில் உண்ட உணவு செரித்து, மதியம் பசி எடுக்கும் வேளையில், பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை நக்கிச் சாப்பிட, நீர்ப்பேதியாகி, குடலில் கசடுகளாகத் தங்கியிருந்த, கப - பித்த தோஷங்கள் நீங்கிவிடும்.

மருந்துகளைச் சாப்பிடும் நாட்களில், ரத்தத்தைச் சுத்திகரிக்கும் வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தன சிராத்தூள் கலந்த மண்பானைத் தண்ணீரை அருந்துவதும், உணவில் காரம், புளி, உப்பு தவிர்த்து கசப்பும், துவர்ப்பும் நிறைந்த பாகற்காய், பொன்னாங்கண்ணி கீரை, வாழைப்பூ, சுண்டைக்காய், மணத்தக்காளிக் கீரை போன்றவற்றை நிறையச் சாப்பிடுவதும் நலம் தரும். பகல் தூக்கத்தைத் தவிர்க்க வேண்டும். புலால் உணவு வகைகளை அறவே நீக்க வேண்டும். ரத்தத்திலிருந்து கப - பித்த தேஷங்களை நீர்க்கச் செய்து, குடலுக்குக் கொண்டு வரும் சிறப்பை இவை போன்ற உணவு வகைகள் பெற்றிருக்கின்றன.

வயிறு நன்றாகச் சுத்தமான பிறகு, நன்னாரி வேர்ப்பட்டை, சுக்கு, கடுக்காய் போட்டு காய்ச்சப்படும் சோணிதாமிர்தம் எனும் கஷாய மருந்தை, 15 மி.லி. வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சுமார் இருபத்தியொரு நாட்கள் சாப்பிட, ரத்தத்தில் உள்ள கெடுதிகள் அனைத்தும் நீங்கி, புது ரத்தம் உடலில் பாய்ந்த நல்லதொரு நிலைக்கு நீங்கள் திரும்பிவிடுவீர்கள்.

மேற்பூச்சாக தூர்வாதிகேர தைலம் அல்லது நால்பாமராதி தைலத்தை நமைச்சல் மற்றும் கட்டிகள் ஏற்பட்டுள்ள பகுதிகளில் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தலாம். கற்றாழையைக் கொண்டு தயாரிக்கப்படும் ஆயுர்வேத சோப் அஉகஞயஐ என்ற பெயரில் விற்பனையாகிறது. அதைப் பயன்படுத்தவும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com