அன்புப் பசை

தூங்கி எழுந்து படுக்கை அறையை விட்டு ஹாலில் வந்து அமர்ந்தார் சுந்தரம். ""கமலா காப்பி கொண்டு வர்றியா?'' கேட்டார். ஒரு வாரப் பத்திரிகையில் மூழ்கியிருந்த அவருடைய மனைவி தலை நிமிர்ந்து பார்த்தாள்.
அன்புப் பசை


தூங்கி எழுந்து படுக்கை அறையை விட்டு ஹாலில் வந்து அமர்ந்தார் சுந்தரம். ""கமலா காப்பி கொண்டு வர்றியா?'' கேட்டார். ஒரு வாரப் பத்திரிகையில் மூழ்கியிருந்த அவருடைய மனைவி தலை நிமிர்ந்து பார்த்தாள்.

""எழுந்துட்டீங்களா. நான் எழுந்து அரை மணி நேரம் ஆச்சு. நீங்க தூங்கி எழுந்தப்புறம் காப்பி சாப்பிடலாம்னு காத்திருந்தேன். இதோ வர்றேன்'' சொல்லி விட்டு சமையற் கட்டை நோக்கிச் சென்றாள் கமலா. அன்றைய செய்தித்தாளை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார் சுந்தரம்.

புது டிகாக்ஷன் போட்டு, அன்றைய பால் பாக்கெட்டை எடுத்து சூடான ஆவி பறக்கும் காப்பி கலந்து இரண்டு காப்பி கோப்பைகளுடன் கமலா வருவதை காப்பியின் மணத்தை வைத்தே கண்டு கொண்டவர் செய்தித்தாளை அழகாக மடித்து வைத்து விட்டு காத்திருந்தார். கமலா கொடுத்த ஒரு கோப்பையை வாங்கிக் கொண்டவர், சூடான காப்பியை சுவைக்க ஆரம்பிக்க, எதிர் நாற்காலியில் அமர்ந்து கொண்டாள் கமலா, ஒரு காப்பிக் கோப்பையுடன்.

""காப்பி பிரமாதமா இருக்கு கமலா'' சொன்னவரைப் பார்த்தாள்.

""ஆமாம். இதே காப்பிப் பொடி வாங்குங்க. பொடி மாறும் போது டேஸ்ட் மாறிப் போறது...''

இருவரும் காப்பியை முழு வேகத்தில் குடித்து முடித்தனர்.

""ஒரு விஷயம் சொல்லணும்'' சொன்னாள் கமலா.

என்ன என்பது போல் பார்த்தார் சுந்தரம்.

""சொல்லேன்'' -சொன்னார்.

""ராஜேஷ் ஃபோன் பண்ணினான்.. அரை மணி நேரம் முன்னாடி'' - சொன்னாள்.

""மத்தியானம் அம்மா தூங்குவாங்கிற ஒரு அக்கறை கூடவா இல்லை அவனுக்கு. யோசிக்க வேணாம். என்னவாம்?''-சற்றே கோபமாகக் கேட்டார் சுந்தரம்.

""அதனால என்னங்க? நம்ம பிள்ளைதானே? அப்பா, அம்மா கிட்ட உரிமை எடுத்துண்டா என்ன? ஏதோ பண்ணிட்டான். நான் தான் தூங்கி எழுந்துட்டேனே...''- சொன்னவளைப் பார்த்தார் சுந்தரம்.

""ஆமாம் இங்கே நடக்கறதை எல்லாம் மும்பையிலிருந்து வீடியோ பார்த்துண்டு இருக்கானா என்ன? நீ கரெக்டா தூங்கி எழுந்ததும் அவன் ஃபோன் பண்ணறதுக்கு. சரி என்ன விஷயம் சொல்லு'' ""அது வந்து அப்பா தூங்கிண்டு இருக்கார். அவர் எழுந்ததும் அவர் கிட்டயே ஃபோன் பண்ணி சொல்லிடுன்னு சொல்லிட்டேன்...'' - சொன்னாள்.

""அப்ப அவன் என் கிட்டயே ஃபோன் பண்ணி சொல்லட்டும்கிறியா. ஏதோ முக்கியமான விஷயம்... அப்ப அப்படித்தானே...''

""அது வந்து வந்து...'' கமலா சொல்ல ஆரம்பிப்பதற்குள் தொலைபேசி ஒலிக்க, ""ராஜேஷ்தான் இருக்கும். பாருங்க'' என்று சொன்னாள். தொலைபேசியை எடுத்தார் சுந்தரம்.

""ஹலோ சுந்தரம் ஹியர்''

""அப்பா ராஜேஷ் பேசறேன். ஃபோன் பண்ணினேன். நீ தூங்கிண்டு இருக்கறதா அம்மா சொன்னா. அதுதான் நீ தூங்கி எழுந்ததும் ஃபோன் பண்ணறேன். ஒரு விஷயம் சொல்லணும்பா...''

""பீடிகை வேண்டாம். என்ன விஷயம் சொல்லு''

""அப்பா அது வந்து...ஹர்ஷிணி ஃபாரின் போக வேண்டிய சூழ்நிலை''

""ஃபாரின் போகணுமா. ஏன்?'' லேசான அதிர்ச்சியுடன் கேட்டார் சுந்தரம். ""என்ன விஷயம்னு விளக்கமா சொல்லுடா'' - கேட்டார்.

ராஜேஷ் காரணத்தை சொல்ல, பத்து நிமிடங்கள் கழித்து தொலைபேசியை வைத்தவர் முகத்தில் யோசனை ஆரம்பித்து சில நிமிடங்கள் ஆகியிருந்தது தெரிய ஆரம்பித்தது.

""என்ன சொன்னான்?'' - கேட்ட மனைவியை அதே யோசனை முகத்துடன் பார்த்தார்.

""உன் கிட்ட சொன்ன விஷயம்தானே கமலா. அதேதான் சொன்னான்''

சொல்லி விட்டு அமைதியானார்.

""என்ன பண்ணலாம்க இப்ப?''-கேட்டாள் கமலா.

""என்ன பண்ணனுமா? இதெல்லாம் தேவையா கமலா? இங்க்லாண்ட் போனா கேரியர் டெவலப்மெண்ட் இருக்குமாம். இப்பவும் நல்ல பொஷிஷன்லதானே இருக்கா'' என்று சொன்னவர் யோசனை முத்திரையில் இருப்பதைப் பார்த்தவள் எழுந்திருந்தாள்.
""குழந்தைங்க ஸ்கூல்லயேருந்து வர நேரம். டிஃபன் ரெடி பண்ணணும். நல்லா யோசிங்க. அப்புறம் பேசலாம்'' சொல்லி விட்டு சமையற்கட்டை நோக்கி நடந்தாள் கமலா.
சுந்தரம் கமலா தம்பதியரின் இரண்டாவது பையன் ராஜேஷ். பெரிய பையன் ரமேஷுடன் இவர்கள் சென்னையில் இருக்க, ராஜேஷ் மும்பையில் இருக்கின்றான். அவனும் இங்கேதான் பணி செய்து கொண்டிருந்தான். அவன் மனைவி ஹர்ஷிணியின் அண்ணன் மும்பையில் இருக்க, ஹர்ஷிணிக்கும் அங்கே வேலை கிடைக்க, ராஜேஷும் அவன் வேலையை மும்பைக்கு மாற்றிக் கொண்டு அங்கு குடி புகுந்தான். அவனுக்கு ஒரு குழந்தை. வர்ஷித். ஐந்து வயது ஆகின்றது. ஹர்ஷிணியின் அண்ணனுக்கு திடீரென்று அமெரிக்காவில் வேலை கிடைக்க அவன் அங்கு சென்று விட்டான். அவனுக்குப் பிறந்த குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஹர்ஷிணியின் அம்மா அமெரிக்கா செல்ல ஏற்பாடு செய்து கொண்டிருந்தாள். அதே வேளையில் லண்டனைத் தலைமையகமாகக் கொண்ட கம்பெனியில் பணி புரிந்து கொண்டிருந்த ஹர்ஷிணி, ஒரு வருஷம் லண்டன் அலுவலகத்தில் ட்ரெனியிங் எடுத்துக் கொண்டால் அவளின் எதிர்காலம் நன்றாக இருக்கும். நல்ல எக்ஸ்போஷர் கிடைக்கும் என்று நினைத்தாள். ராஜேஷின் இந்த ஃபோன் கால், குழந்தை வர்ஷித்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக...
""அப்பா ஒரு வருஷம்தாம்பா. நீங்க இங்கே வந்து வர்ஷித்தைப் பார்த்துக்குங்கப்பா ப்ளீஸ்'' சொன்னான்.
""ஏன்டா... இங்கேயும் சின்ன பசங்கதானேடா. இங்கேயும் ரெண்டு பேரும் வேலைக்குப் போறாளே... உனக்குத் தெரியாதா?'' என்று கேட்டார்.
""அப்ப நீயோ அம்மாவோ யாராவது ஒருத்தர் இங்கே வந்து வர்ஷித்தைப் பார்த்துண்டா, அங்கே ஒருத்தர் பரத்தையும் சுனிதாவையும் பார்த்துக்கலாமேப்பா...''
""ஏன்டா, நீ இங்கே ட்ரான்ஸ்ஃபர் வாங்கிண்டு வந்துடேன்டா. முதல்ல ஹர்ஷிணி லண்டன்...'' ஆரம்பித்த அப்பாவை உடனே இடைமறித்தான் ராஜேஷ்.
""அப்பா...அவ ரொம்ப ஆசைப்படறாப்பா. நான் அவளைத் தடுக்க விரும்பலை. அது அவ கேரியர் சம்பந்தப் பட்ட விஷயம்'' பட்டென்று சொன்னான்.
""நீ இங்கே வர்றதைப் பற்றி கேட்டேனே?'' - கேட்டார்.
""நான் என்னுடைய சொந்த விருப்பத்துல சென்னையில இருந்து மும்பைக்கு ட்ரான்ஸ்ஃபர்
வாங்கிண்டு வந்திருக்கேன்பா. அதனால இன்னும் ரெண்டு வருஷத்துக்கு இங்கேயேதான் இருக்கணும். சென்னைக்கு மறுபடியும் ட்ரான்ஸ்ஃபர் அது இதுன்னு நான் கேட்கவே முடியாது. எங்க ஆஃபீஸ் ரூல்ஸ் அப்படி. அதனால என்னால ஒண்ணும் பண்ண முடியாது - சொன்னான் ராஜேஷ்.
""அப்ப வர்ஷித்தை இங்கே ஸ்கூல்ல வந்து சேர்த்து விட்டுடு. பரத் சுனிதாவோட நாங்க வர்ஷித்தையும் பார்த்துக்கறோம்'' என்றார் சுந்தரம்.
""ஹர்ஷினியும் ஃபாரின் போயிடுவா. வர்ஷித்தும் இங்கே இல்லேன்னா நான் மட்டும் தனியா இங்கே எப்படி இருக்கறதுப்பா. முடியவே
முடியாது''
""ஏன்டா பெத்த தாயால தன்னோட குழந்தையை விட்டு ஒரு வருஷம் லண்டன்ல இருக்க முடியும் போது அப்பாவால இருக்க முடியாதாடா?'' -கேட்டார் சுந்தரம். விடவில்லை.
""ஹர்ஷிணி ஒரு வருஷம் வர்ஷித்தை விட்டுட்டு இருக்கணுமேன்னு எவ்வளவு இடிஞ்சு போயிருக்கான்னு எனக்குத்தாம்பா தெரியும்'' - சொன்னான்.
""அவ சொந்த விருப்பத்துலதானடா இந்த ட்ரெயினிங்குக்காக லண்டன் போறா. குழந்தையை விட்டுப் போக மனம் இல்லேன்னா இந்த ட்ரெயினிங் வேண்டாம்னு சொல்லிட வேண்டியதுதானே? அவளுக்கு குழந்தையை விட அவ கேரியர்தான் முக்கியமா தெரியறதுனாலதான லண்டன் போறா. வேற என்ன?'' சுந்தரத்தின் குரலில் லேசான கோபம் தெரிந்தது.
""நான் சொன்னா நம்பலேன்னா நான் என்னப்பா பண்ண முடியும். கேரியர் டெவலப்மெண்டும் வருங்காலத்துல வர்ஷித்துக்காகத்தானேப்பா? இல்லையா...''
""வெறும் பண மூட்டைதான் குழந்தைகளோட எதிர்காலத்துக்குத் தேவைங்கறே. ஆர்க்யூமெண்டுங்கறது பெரும்பாலும் வேஸ்டுதான். இப்ப நாங்க என்ன பண்ணனும்கறே?'' கேட்டார்.
""அதுதான் சொன்னேனேப்பா. உங்க ரெண்டு பேர்ல ஒருத்தர் சென்னையில இருந்து பரத்தையும் சுனிதாவையும் பார்த்துக்குங்க. இன்னொருத்தர் இங்கே வந்து வர்ஷித்தைப் பார்த்துக்குங்க...'' சொன்னவன் குரலில் எதிர்பார்ப்பு
நிறைந்திருந்தது.
""யோசிக்கறோம் சார்'' சொல்லி விட்டு
ஃபோனை வைத்தார் சுந்தரம்.
""என்ன சொன்னான்?'' கேட்ட கமலாவை சற்றே எரிச்சலுடன் பார்த்தார் சுந்தரம்.
"" ஏன்டி என்ன கிண்டல் பண்ணறியா. எல்லாத்தையும்தான் உன் கிட்டே சொல்லிட்டானே. அப்புறம் என்ன என்ன சொன்னான்னு கேட்கறியே ?''
""இப்ப என்ன பண்ணலாம்?'' - கேட்டவளைப் பார்த்தார்.
""கொஞ்சம் பசிக்கற மாதிரி இருக்கு. பகோடா சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு. சூடா வெங்காய பகோடா பண்ணறியா. சாப்பிட்டுட்டு இன்னும் ஒரு காப்பி சாப்பிடலாம். நல்லா இருக்கும்'' சொல்லியபடியே செய்தித்தாளை எடுத்தார்.
""ஏன் இப்ப நீங்க கிண்டல் பண்றேளா? ராஜேஷ் சொன்னதுக்கு நாம என்ன பண்ணலாம்னு கேட்டா... பகோடா காப்பின்னு சொல்லிண்டு இருக்கேளே‘'
""ஏன் உனக்கு பகோடா பிடிக்காதா?'' சுந்தரம் கேட்க, சற்றே கோபமான முகத்துடன் அவரைப் பார்த்தாள் கமலா.
""சீரியஸான விஷயத்தைப் பற்றி பேசுங்க இப்ப'' சொன்னாள்.
""உனக்கு அப்ப மும்பை போகணும். இப்ப அதுதானே‘'
""அஞ்சு வயசுக் குழந்தையை யார் பார்த்துப்பா பின்னே... ராஜேஷ் தினமும் ஆஃபீúஸ கதின்னு கிடப்பான். அவன் வேலை அப்படி. வர்ஷித் பாவம் இல்லையா?
""யார் இல்லைன்னு சொன்னா. எனக்கு என்னமோ அக்கறையே இல்லைங்கற மாதிரி பேசறே...''
""நான் அப்படி சொன்னேனா? நம்ம பேரன் ஆச்சே. அதுதான் இப்ப நம்மள்ள யாராவது ஒருத்தர் ஒரு வருஷம் மும்பையில இருக்கணும். வேற வழி இல்லைன்னுதான் நான் நினைக்கறேன். ஹர்ஷிணி உடனே லண்டன் கிளம்பணுமாமே. அதனாலதான் ராஜேஷ் நம்மளை உடனே ஹெல்ப் கேட்கறான். ஹர்ஷிணியோட அம்மா அமெரிக்காவுக்குப் போகணுமாமே. அவா பேரனைப் பார்த்துக்க'' - சொன்னபடியே கணவர் முகத்தைப் பார்த்தாள்.
""சரி கமலா... சும்மா விளையாட்டுக்குச் சொன்னது இப்ப நிஜமாவே பகோடா சாப்பிடணும்னு தோண ஆரம்பிச்சுடுத்து. எனக்காக கொஞ்சம் சூடா பகோடா பண்ணிக் கொண்டு வாயேன். ரெண்டெ ரெண்டு...'' கெஞ்சினார்.
""ரொம்ப அழகா இருக்குங்க. ஒய்ஃப் கிட்ட பகோடா பண்ணிக் கொடுன்னு கேட்கறத்துக்கு இப்படிக் கெஞ்சணுமா? ஏன் நீங்க கேட்டு நான் பண்ணித் தந்ததே இல்லையா?'' கேட்டபடியே எழுந்தாள்.
""அதுக்கு இல்ல. இப்பத்தான் பரத், சுனிதாவுக்காக டிஃபன் பண்ணினே. உடனே எனக்காக பகோடா பண்ணனும்னு நான் கேட்கறது எனக்கே சங்கடமே இருக்கு. உனக்கு என்ன முப்பது வயசா?''
""ஒண்ணும் ப்ரச்சினை இல்லை. சூடா பகோடா பண்ணிக் கொண்டு வரேன். அதுக்குள்ள ராஜேஷுக்கு ஒரு நல்ல பதில் சொல்லணும். நல்லா யோசிச்சு வையுங்க. இதோ உடனே வரேன்'' சொல்லியபடியே சமையற் கட்டை நோக்கி ஓடினாள் கமலா, அந்த அறுபத்தெட்டு வயதிலும்.
""சூப்பரா பண்ணி இருக்கே கமலா. எப்பொழுதும் விட இன்னிக்கு பகோடா ரொம்பவே நல்லா இருக்கு. சாப்பிட்டுட்டே இருக்கலாம் போல இருக்கு'' பக்கோடாக்களை வாயில் அடுக்கிய
படியே சொன்னார் சுந்தரம்.
""பகோடாவைப் புகழ்ந்தபடியே ராஜேஷுக்கு ஒரு நல்ல பதிலும் சொன்னேள்னா... நானும் பகோடாவை சூடா சாப்பிடுவேன்'' சொன்ன மனைவியைப் பார்த்தார் சுந்தரம். அவளின் தாய்ப்பாசம் அவரை ஒரு நொடி நெகிழ்வித்தது.
""நீ உடனே மும்பை போய் பாவ்பாஜி சாப்பிடணும்னு பார்க்கறே... ராஜேஷ் போன் பண்ணி கேட்கறான்... சரி... வர்ஷிணி ஃபோன் பண்ண வேண்டாமா? நம்மளோட உதவியை எதிர் பார்க்கறா. ஒரு ரிக்வஸ்ட் பண்ண மாட்டாளா? அவ்வளவு பெரிய ஆளா அவ... ஒரு அலட்சியம் தெரியல உனக்கு?'' கோபமாகச் சொன்னார்.
""ஆஃபிஸ் வேலையில ரொம்ப பிஸியா இருப்பாளா இருக்கும்... அதைப் போய் பெரிசா...'' கமலா பேசிக் கொண்டே இருக்க, காலிங் பெல் ஓசை ஒலிக்க, பரத்தும் சுனிதாவும் பள்ளியில் இருந்து வீடு வந்து சேர்ந்தனர்.
ஓடி வந்து பேரனும் பேத்தியும் கமலாவை வந்து கட்டிக் கொள்ள, கமலா அவர்களுக்கு முத்த மழை பொழிந்து விட்டு அவர்களுக்கு உணவு வழங்க எழுந்தாள். சுந்தரமும் அவர் பங்குக்கு பேரன் பேத்தியைக் கொஞ்சலானார்.
இரவு எட்டு மணிக்கு தொலைபேசி ஒலிக்க, ஹர்ஷிணி. ""மாமா கிட்ட பேசணும்'' அவள் சொல்ல, சுந்தரம் ""ஹலோ சொல்லும்மா ஹர்ஷிணி. எப்படி இருக்கே?'' ஆரம்பித்தார்.
""நல்லா இருக்கேன் மாமா... நீங்க எப்படி
இருக்கேள்?''
""சரி சொல்லும்மா. என்ன விஷயம். இப்பத்தானே ஆஃபீஸில் இருந்து வந்திருப்பே இல்லையா. வேலை இருக்குமே. ஃபோன் பண்ணறியே. ஏதாவது முக்கியமான காரணமா?'' ஒன்றுமே தெரியாதவர் போல் கேட்டார் சுந்தரம்.
""வந்து முக்கியமான காரணம் மாமா... வந்து அவர் உங்களுக்கு ஃபோன் பண்ணி சொன்னதா சொன்னார் மாமா. சொன்னார்தானே?''
""ஏம்மா, உன் மாமியார் ஏதாவது போன் பண்ணி எனக்குப் போன் பண்ணச் சொன்னாளா?'' வம்பு பண்ணினார் சுந்தரம்.
""அத்தையா... வந்து வந்து பண்ணலை... பண்ணலை...'' ஹர்ஷிணியின் குரலில் இழுவை தெரிந்தது.
""ம்... கமலா ஃபோன் பண்ணி உன்னை எனக்கு ஃபோன் பண்ணச் சொல்லி இருக்கா. எனக்குத் தெரியும். நான் மத்தியானம் சொன்னேன். சரி அதை விடு. இப்ப என்ன விஷயம் சொல்லு'' - சொன்னார் சுந்தரம்.
""நான் ஒரு வருஷம் லண்டன்...'' ஆரம்பித்து
முழு விவரத்தையும் சொல்லி முடித்தாள் ஹர்ஷிணி.
""உங்கள்ல ஒருத்தர் இங்கே வந்து வர்ஷித்தைப் பார்த்துக்கணும்னு கேட்டுக்கறேன் மாமா. அம்மா அமெரிக்கா கிளம்ப வேண்டிய சூழ்நிலை. அங்கே என் அண்ணா குழந்தையைப் பார்த்துக்கணும்...ஹெல்ப் பண்ணுங்க மாமா. வேற வழி இல்லை...'' அமைதியாக ஆனால் மிகுந்த எதிர் பார்ப்போடு கேட்டாள் ஹர்ஷிணி.
கமலா இவர் தொலைபேசியில் பேசுவதைக் கூர்ந்து கேட்டுக் கொண்டே சீரியல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
""ராஜேஷ் எல்லாம் சொன்னான். நீயும் சொல்றே. எனக்கு நிலைமை நல்லா புரியறது. எல்லாரும் என்னவோ கோர்ட்ல ஒரு கேஸ்ல நீதிபதியோட தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கற மாதிரி இருக்கேள். என்னை ஒரு ஜட்ஜ் ஸ்தானத்துக்கு உயர்த்திட்டேள்... இப்ப நான் தீர்ப்பு சொல்லணும். இல்ல...''
""நல்ல முடிவா சொல்லுங்க மாமா' சொன்னாள் ஹர்ஷிணி.
""சரிம்மா. நல்லா கேட்டுக்கோ. சுத்தி வளைக்காம சொல்றேன். சாயங்காலத்துல இருந்து இந்த விஷயத்தைப் பற்றித்தான் யோசிச்சுண்டு இருந்தேன். என்னைக் கேட்டா நீ வர்ஷித்தை விட்டுட்டு ஒரு வருஷம் ஃபாரின் ட்ரெயினிங் போக வேண்டாம்னுதான் சொல்வேன். நீங்க ரெண்டு பேரும் நல்ல வேலையிலதான் இருக்கேள். நல்ல வசதியா இருக்கறவா, குழந்தையைத் தவிக்க விட வேண்டாம். ஆனா அதுக்காக உன்னைப் போகக் கூடாதுன்னு சொல்ல எனக்கு உரிமை இல்லை. அது உன்னோட, உங்க ரெண்டு பேரோட விருப்பம், முடிவு, உரிமை.
""ராஜேஷும் இன்னும் ரெண்டு வருஷத்துக்கு ட்ராஸ்ஃபர்னு கேட்க முடியாதுன்னு சொல்லிட்டான். அவன் சர்வீஸ் ரூல்ஸ் அப்படியாம். வர்ஷித்தை இங்கே வந்து சேர்த்துடுன்னு சொன்னாலும், அவன் நீயும் இல்லாம, குழந்தையும் இல்லாம இருக்க முடியாதுன்னு சொல்லிட்டான். உன் அம்மாவும் அமெரிக்கா போய்தான் ஆகணும். அதனால நானோ கமலாவோ மும்பை வந்து வர்ஷித்தைப் பார்த்துக்கணும்னு கேட்கறே''.
''நீயோ, ராஜேஷோ எங்களை உரிமையோட கேட்கறதை தப்புன்னு சொல்ல மாட்டேன். உங்களுக்கு உரிமை இருக்கு. ஆனா இதுல என் முடிவு என்னன்னு கேட்டா...''
""எங்களுக்குக் கல்யாணம் ஆன அன்னியிலேயிருந்து, எங்க ரெண்டு குடும்பங்களும் ஒரே ஊர், பக்கத்துப் பக்கத்துலங்கறதுனால பிரசவத்துக்கு கமலா பிறந்த வீட்டுக்குப் போன போது கூட கிட்டத்தட்ட தினமும் நான் அவளைப் பார்க்காம இருந்ததில்லை. அவ குடும்பத்துல ஒரு ஃபங்ஷன் அது இதுன்னு வந்த போதும் நானும் அவ கூடயேதான் இருந்தேன். நாங்க பிரிஞ்சு இருந்த நாட்களை ஈஸியா விரல் விட்டு எண்ணிடலாம். அதுக்குப் பத்து விரல்கள் ரொம்பவே அதிகம்னு நினைக்கறேன். நாற்பது வருடங்களும் ஒண்ணாவே வாழ்ந்திருக்கோம். வாழ்ந்துண்டு இருக்கோம். அதனால நான் சொல்ல வர்றது என்னன்னா... கமலா உடனே கிளம்பி மும்பைக்கு வர ரெடியா இருக்கா. எனக்கும் மும்பை வர ப்ராப்ளம் இல்லை. ஆனா இங்கே ஒருத்தர் இருக்கணும். ஏன்னா இங்கேயும் ரெண்டு பேரும் வேலைக்குப் போறவா.''
""கமலா மும்பை வர ரெடியா இருக்காங்கறதுனால என்னை விட்டுப் பிரிய தயாரா இருக்கான்னு அர்த்தம் இல்லை. அவ என்னை விட்டுப் பிரிஞ்சு இருந்ததே இல்லை. எனக்கும் அவளைப் பிரிஞ்சு இருக்க முடியாது. நான் தயாரா இல்லை. விதி எங்களை எப்ப பிரிக்க முடிவு பண்ணறதோ அப்ப அது தானா நடக்கட்டும். அது வரைக்கும் சாரிம்மா... நீங்க வேற ஏதாவது ஏற்பாடு பண்ணிக்கோங்க. இதை கனத்த மனசோடதான் சொல்றேன். ஆனா வேற வழியே இல்லை. என்னால கமலாவை பிரிஞ்சு இருக்க முடியாது.''
இன்னொரு விஷயம். நான் கமலாவுக்கு ஆர்டர் போடறதா நினைக்கலை. அவளை கெஞ்சி, வேண்டிக் கேட்டுக்கறேன். என்னை விட்டு மும்பை போயிடாதேன்னு. ஏன்னா என்னால அவளை விட்டுப் பிரிஞ்சு ஒரு வருஷம் இருக்கறதுங்கறதை எல்லாம் கற்பனையே கூட பண்ணி பார்க்க முடியலை. என்னை மன்னிச்சுடும்மா...'' - பேசிக் கொண்டே இருந்தவர் கண்கள் கலங்கி, அதற்கு மேல் பேச முடியாது போக, அவர் கைகளை ஆதரவாகப் பிடித்துக் கொண்ட கமலாவின் கண்களும் கலங்க ஆரம்பித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com