உலகிலேயே சிறந்த புத்தகம்!

தற்போது நடந்து முடிந்த சென்னை புத்தகக் காட்சியில் உலகிலேயே சிறந்த புத்தகம் ஒன்று கையில் கிடைத்தது.
உலகிலேயே சிறந்த புத்தகம்!

தற்போது நடந்து முடிந்த சென்னை புத்தகக் காட்சியில் உலகிலேயே சிறந்த புத்தகம் ஒன்று கையில் கிடைத்தது.

பிளாஸ்டிக்கால் லேமினேட் செய்யப்பட்டு, 156 பக்கங்களில் வழு வழு அட்டையில் மிக நேர்த்தியாக அப் புத்தகம் தயாரிக்கப்பட்டிருந்தது. கவிஞரும் கலை இலக்கிய விமர்சகருமான இந்திரன் அப்புத்தகத்தை தயாரித்து இருக்கிறார். உலகிலேயே சிறந்த புத்தகம் என்பதால் அதன் அட்டைகளும் ரசிக்கும்படியும் கருத்தை கவரும்படியும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கவிஞர் இந்திரன் தனது வாசகனுக்கு கைப்பட ஒரு கடிதத்தையும் உள்ளே வைத்திருக்கிறார். அவரது புத்தகத்தின் உள்ளடக்கத்தைச் செய்பவன் அவரது வாசகன் என்பதால் கடிதத்தை அவர் தனது வாசகனுக்காக ஆத்மார்த்தமாக எழுதியிருக்கிறார். புத்தகம் கிடைக்கப் பெற்ற எவரும் அந்த கடிதத்தை நிச்சயம் வாசிக்கக் கூடும். வாசகன் படிக்கத் தொடங்கும்... அக் கடிதத்தின் சிறு பாராவிலிருந்து தொடங்குகிறது உலகின் சிறந்த புத்தகத்திற்கான அத்தியாயம்.

புத்தகத்தை படிக்கத் தொடங்கும் எவருக்கும் இரண்டு பக்கங்களுக்குப் பிறகு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த அதிர்வு ஒரு மெல்லிய புன்னகையை உங்களுக்குப் பரிசாகத் தரலாம். இப்படியும் நடக்குமா? என்ற பிரமிப்பு உங்களுக்குள் எழலாம். அந்த இரண்டு பக்கங்களுக்கு பிறகு புத்தகம் முழுவதும் வெற்றுத் தாள்கள்தான் நிரம்பியிருக்கின்றன.

எதுவும் எழுதப்படாத வெற்றுப் பக்கங்கள்தாம் புத்தகம் முழுவதும் இருக்கின்றன.

"உலகிலேயே சிறந்த புத்தகம் எது?' இதுவரை எழுதப்படாத ஒரு புத்தகம்தான் அது. அதனால்தான் இந்தப் புத்தகம் இத்தகைய வடிவத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படி வெற்று தாள்களுடன் வெளிவந்திருக்கும் இந்தப் புத்தகம் தமிழில் படைக்கப்படும் முதல் கருத்துருவாக்க சித்திரமாகும். உண்மையில் இதை ஓர் ஆழமான பரிசோதனை என்று சொல்லலாம். "கருத்துரு கலை' என்பது ஒரு சிந்தனை அல்லது கருத்தை ஒரு கலைப் படைப்பாகி விடுகிறது என்று பேசுகிறது. கருத்துக்கு முதல் முக்கியத்துவம் கொடுத்து கலைப்படைப்பாக செய்யும் ஒரு தற்கால நவீன கலை வடிவம்தான் இது. வியாபாரரீதியாக விற்கப்படுவதற்கு உகந்ததாக இல்லாவிட்டாலும் வலிமையான ஒரு சமூக, அரசியல், தத்துவார்த்த சிந்தனையை முன்வைத்து படைக்கப்படுகிறது.

ஒரு கலைப்படைப்பு என்பது ஒரு கலைஞனால் மட்டுமின்றி, அதன் பார்வையாளனாலும் படைக்கப்படுகிறது என்று "கருத்துரு கலை' வாதிடுகிறது.
படைப்பு எதையும் அச்சிடாமல், தலைப்பு, முன்னுரை மட்டுமே எழுதப்பட்டு 140 வெற்றுப் பக்கங்களையே ஓர் இலக்கிய படைப்பாக முன் வைக்கிறது இந்தப் புத்தகம்.

""பதினைந்து ஆண்டுகளாக இத்தகைய புத்தகம் ஒன்று, ஒரு கருத்துருவமான கலைப்படைப்பாக என் மனதில் இருந்து வருகிறது. "எல்லா மொழிகளும் இறுதியில் மெளனத்தையே பேசுகின்றன' என்ற அமெரிக்கக் கவி கார்ல் சாண்ட்பர்க் கவிதை வரிகள் சொன்ன கருத்துக்கு உருவம் கொடுக்க நான் முயன்று இருக்கிறேன். ஜென் புத்த மதமும் இத்தகைய சிந்தனையை வலியுறுத்துகிறது.

தமிழில் ஒருவரை அடக்கமான அறிஞர் என்று சொல்வதற்கு "அவர் ஒரு நிறைகுடம்' என்று சொல்வதுண்டு. ஆனால் ஜென் மரபில் அத்தகையவரை "காலி குடம்' என்றுதான் சொல்வார்கள். நிறைகுடத்தில் இன்னும் தண்ணீர் பிடிக்க முடியாது. ஆனால் காலி குடத்தில் தண்ணீர் நிரப்பலாம். எனவே காலி குடம் தான் மிகவும் பயன் உள்ளது. இந்த ஜென் தத்துவத்தில்தான் இந்தப் புத்தகம் படைக்கப்பட்டிருக்கிறது. ஒரு புத்தகம் வாசிப்புடன் நின்று விடாமல் அதன் அடுத்த கட்டமாக இன்னொரு இலக்கியச் செயல்பாட்டில் வாசகனைத் தூண்டுவது இதன் சிறப்பு அம்சம்'' என்கிறார் புத்தகத்தைத் தயாரித்த இந்திரன்.

அதோடு மட்டுமல்ல, இந்த புத்தகத்தின் வெற்றுப் பக்கங்களில் உங்களது படைப்புகளை எழுதுங்கள் என்று போட்டியும் அறிவித்திருக்கிறார்கள். அது ஒரு கவிதைத் தொகுதியாகவோ, சிறுகதைத் தொகுப்பாகவோ அல்லது ஒரு நாவலாகவோ இருக்கலாம். முதல் பரிசு ஐந்தாயிரம் ரூபாய், இரண்டாவது பரிசு மூன்றாயிரம் ரூபாய், மூன்றாவது பரிசு இரண்டாயிரம் ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் "வாசக மையம்' வெளியீடாக வெளியிடப்படும்.

பிறகென்ன... உலகிலேயே சிறந்த புத்தகத்தை எழுதப் போவது நீங்கள்தான் !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com