தூக்கமின்மை... சிறுநீரகப் பிரச்னைகள்!

தூக்கமின்மை நம் சிறுநீரகத்தின் இயல்பான செயல்பாட்டை பாதிக்கிறதா? சிறுநீரகப் பாதிப்பால் தூக்கத்தின் ஒழுங்குமுறைகள் மாறுபடு கின்றனவா?
தூக்கமின்மை... சிறுநீரகப் பிரச்னைகள்!

தூக்கமின்மை நம் சிறுநீரகத்தின் இயல்பான செயல்பாட்டை பாதிக்கிறதா? சிறுநீரகப் பாதிப்பால் தூக்கத்தின் ஒழுங்குமுறைகள் மாறுபடு கின்றனவா? என்கிற கேள்விகளோடு,  சென்னை அப்பல்லோ டயாலிசிஸ் மருத்துவமனையைச் சேர்ந்த சிறுநீரக நோய் ஆலோசகர் டாக்டர் வெங்கடேஷை அணுகினோம்.

அவர் கூறியதிலிருந்து...

""ஒரு நபரின்   நல்வாழ்வுக்கு ஆழ்ந்த இரவு உறக்கம் மிகவும் முக்கியமானது. அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் நெப்ராலஜி ஜர்னலில் வெளிவந்த ஆராய்ச்சிக் கட்டுரையில்,  நமது சிறுநீரக செயல்பாடு தூக்க சுழற்சியால் கட்டுப்படுத்தப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏழு முதல் எட்டு மணிநேர ஆழ்ந்த தூக்கம் சிறுநீரகங்களை ஒழுங்காக ஒருங்கிணைக்க உதவுகிறது, அதே நேரத்தில் மோசமான   தூக்க முறைகள் நம் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை வெகுவிரைவில் பாதிக்கும். நாள்பட்ட சிறுநீரக நோய், அதிக அளவு வீக்கம், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் மோசமான ஹார்மோன் ஒழுங்குமுறையால் ஏற்படும் பசியின்மை ஆகியவற்றிற்கு தூக்கமின்மை ஒரு முக்கிய காரணம் என்று தெரிய வந்துள்ளது.

சிறுநீரக நோயாளிகளுக்கு  ஏற்படும் ஒழுங்கற்ற தூக்க முறைகளுக்கு  பொதுவான காரணங்களாக சிலவற்றைக் குறிப்பிடலாம்:

ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம்: கால்கள் ஓய்வில் இருக்கும்போது இந்த நோய் அறிகுறி ஏற்படுகிறது. வலி உணர்வு  அல்லது எரிச்சல் உணர்வு ஏற்படும். குறிப்பாக ஒரு நபர் படுக்கையில் படுத்துக்கொண்டிருக்கும்போது அல்லது ஓய்வெடுக்கும்போது இந்த அறிகுறி ஏற்படுகிறது.  நபருக்கு நபர் இந்த அறிகுறிகள் மாறுபடும். இரும்புச்சத்து குறைபாடு, நிறைய காஃபின் உட்கொள்ளல், நீரிழிவு நோய் மற்றும் சில மருந்துகளால் ரெஸ்ட்லெஸ் லெக் நோய்க்குறி (ஆர்.எல்.எஸ்) ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். 

ஸ்லீப் அப்னியா: ஸ்லீப் அப்னியா என்பது ஒரு மருத்துவ நிலை. இது ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது 10 விநாடிகளுக்கு மேல் சுவாசத் தடை ஏற்படும். இத்தகைய சுவாசத் தடை மூச்சுத்திணறல் என குறிப்பிடப்படுகின்றது. இத்தகைய மருத்துவ நிலையில் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பெரும்பாலும் பெரிதும் குறட்டை விடுகிறார்கள். அடுத்த மூச்சுத்திணறல் வரை அவர்களின் குறட்டை தொடர்கிறது. உடல் பரிசோதனை அல்லது தூக்கம் சம்பந்தமான ஆய்வுகள் மூலம் மருத்துவர்கள் ஸ்லீப் அப்னியாவைக் கண்டறிய முடியும். 

போதுமான டயாலிசிஸ் செய்யாமை: டயாலிசிஸ் அமர்வுகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படவில்லை என்றால்,  பலவீனமாகவோ, நோய்வாய்ப்பட்டதாகவோ அல்லது சங்கடமாகவோ ஒருநோயாளியை அது உணர வைக்கும். இது நோயாளியின் தூக்க சுழற்சியைப் பாதிப்பது மட்டுமல்லாமல், அவர்களுக்கு மேலும் சில பிரச்னைகளையும் ஏற்படுத்துகிறது. உடலில் இருந்து போதுமான நச்சுகள் அல்லது கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த டயாலிசேட் அவ்வப்போது சரி பார்க்கப்பட வேண்டும். 

உணர்ச்சிகளில் மாற்றம் : பொதுவாக,  சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு  டயாலிசிஸ் செய்கிறார்கள். வெவ்வேறு நோயாளிகள் சிகிச்சையின் போது கோபம், சோகம், பதற்றம் போன்ற பல்வேறு உணர்ச்சிகளுக்கு ஆளாகிறார்கள். இத்தகைய உணர்வுகள் சிறுநீரக நோயாளிகளிடையே மோசமான தூக்க சுழற்சிக்கும் வழிவகுக்கின்றன. இந்த அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடித்தால், உடனடியாக மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். 

தூக்க முறைகளில் மாற்றம்: பிற நோயாளிகளுடன் ஒப்பிடும்போது,   நாள்பட்ட சிறுநீரக நோயாளிகள் அசாதாரண சோர்வு அல்லது சங்கடத்தால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் தூக்க சுழற்சியில் இடையூறு ஏற்படுகிறது. ஒரு நிலையான தூக்க முறை அவர்களுக்கு இருக்காது. இரவில் விழித்திருக்கவும் கூடும்.  இது சிறுநீரகத்தை மோசமாகப் பாதிக்கிறது. 

தொடர்ச்சியான முறையற்ற தூக்கத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவர் ஆலோசனை பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும் வழக்கமான உடல் பயிற்சிகள், ஆரோக்கியமான உணவு  அவசியம். படுப்பதற்குச்  செல்வதற்கு முன் மொபைல் போனைப் பயன்படுத்தக் கூடாது. அல்லது  குறைந்த அளவிலேயே பயன்படுத்த வேண்டும். அமைதியான தூக்கத்துக்கு அது வழிவகுக்கும். மேலும் உடல்நல சிக்கல்கள் ஏற்படாமல் தவிர்க்கவும் அது உதவும்'' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com