அந்திமத் தேடல்

ஊரே கோலாகலமாக இருந்தது. தெரு முழுவதும் விதம்விதமாகப் பாட்டு. வெடிச் சப்தம். பாத்திமா பெத்தாவுக்கு இனம் புரியாத மகிழ்ச்சி. 
அந்திமத் தேடல்


ஊரே கோலாகலமாக இருந்தது. தெரு முழுவதும் விதம்விதமாகப் பாட்டு. வெடிச் சப்தம். பாத்திமா பெத்தாவுக்கு இனம் புரியாத மகிழ்ச்சி. 

துருத்திக் கொண்டிருக்கும் எலும்புகளை மூடிய கறுப்புத் தோலை மறைக்க அணிவிக்கப்பட்டிருந்த, மேல் சட்டை தொள தொளவென்றும், கீழாடை கிழிசலை சந்திக்கத் தயார் என்ற நிலையோடும் பாயில் கிடத்தி வைக்கப்பட்ட தேகம்தான் பாத்திமா பெத்தா.  

அழுக்குச் சேர்ந்த தலையணையில், நரைத்த தலைமுடிகள் நைலான் கயிறுகளைப் போல மின்னின. 

ஓலைக் குடிசையில் ஒரு மூலையில் படுத்துக் கிடக்கும் பாத்திமா பெத்தாவுக்கு காது அவ்வளவாக கேட்காது. கண்பார்வையும் மங்கிவிட்டது. 

""வேணாங்க எனக்கு சொன்னதே போதும், பெத்தா என்ன வரவா  போறாங்க?''  பாத்திமா பெத்தாவின் பேத்தி ஆயிஷா, அவரை வாசலிலேயே தடுத்தாள். 

சம்பிரதாயத்துக்காக தோளில் துண்டை தொங்கவிட்டவராக கும்பலோடு வந்தவர், ""இல்லம்மா... அம்மாவப் பார்க்காமப் போனா எப்படி? அவங்கள அழைச்சிட்டு போறதுக்கு ஏற்பாடு பண்றேம்மா...''  ரொம்பவும் குழைவாகப் பேசினார். 

ஆயிஷாவின் அனுமதிக்கெல்லாம் காத்திராமல் செருப்பைக் கழட்டியவர், கூட்டத்தை தெருவிலேயே அமர்த்தி விட்டு,  தலையைக் குனிந்து உள்ளே பார்வையைச் செலுத்தி, மெதுவாக வீட்டுக்குள் வந்தார். 

""அம்மா.... எப்படிம்மா இருக்கீங்க...''  அவர் கரிசனையுடன் விசாரிக்க, ""யாருய்யா நீ?''  படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்த கிழவி கிணற்றுக் குரலில் கேட்டார்.  

""நான்தாம்மா தலையாரி காத்தமுத்தோட மூத்த பையன் இசக்கி''  குடும்ப உறவுகளை நீட்டி முழக்கினாலும், பெத்தாவுக்கு "தலையாரி' என்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவும் காதில் விழுந்த மாதிரி தெரியவில்லை. 
கண்களைச் சுருக்கி, வந்தவரை அடையாளம் கண்டு தோற்றார் கிழவி. 

கால்களை நீட்டி ஒன்றன்மேல் ஒன்றாகப் போட்டு, அண்ணாந்து பார்த்து, பாயில் கையை தட்டி சைகையாலேயே, நின்றிருந்தவரை அமரச் சொன்னார் பாட்டி.  

சுறுசுறுப்புக் குறையாத கிழவியின் கைகளை ஆச்சரியத்தோடு பிடித்தார் இசக்கி. ஆனால் அமரவில்லை. குத்துக்காலிட்டப்படி உட்கார்ந்து, ""சரி பெத்தா... போயிட்டு வாரேன். நம்ம புள்ளீங்கோ உங்களைப் பத்திரமா அழைச்சிட்டு வந்து, வீடு வரைக்கும் விட்டுருவாங்க... மறந்திடாம வந்திடுங்க...''  என சொல்லிவிட்டு விடைபெற்றார். 

"வருடா வருடம் நடக்கும் திருவிழாவா? ஊர்ப் பஞ்சாயத்து தலைவர் வீட்டுக் கல்யாணமா? எதுக்காக என்னைக் கூப்பிடுறாங்க?' 

தொண்டைக் குழியில் மூச்சுத் திணறும் அந்திமக் காலத்தில் கூட ஆழ்ந்து சிந்தித்தாள் பாத்திமா பெத்தா. 

அடுத்த நாளும் இதே மாதிரியே கும்பல், ஆயிஷாவின் மறுப்பு, பெத்தாவுக்கு விசேஷ அழைப்பு. ஆனால் இன்று வந்தவர் தமிழ் வாத்தியார் ராமசாமி! 

பாத்திமா பெத்தாவுக்கு ஓரளவு புரிந்துவிட்டது. வாத்தியார் பொண்ணுக்கும், தலையாரி பையனுக்கும் கல்யாணம் போல... அதான் வந்து கூப்பிடுறாங்க... 

மணக் கோலத்தில் இருந்த அவளுக்கு ஆயிரம் கனவுகள். அலங்காரத்தையும், ஆபரணங்களையும் மீறி அவளின் வனப்பை அவள் முகத்தை மட்டும் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

எதிர்காலம் பற்றிய கனாக்களுடன் குதூகலமாக இருக்கும் அவளைப் பார்க்கும் யாருக்கும், தன்னை அறியாமலேயே மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும். அந்த அளவுக்கு உவகையும், புன்னகையுமாக காட்சி தந்தாள். அவள் உடல் இங்கே, உணர்வுகள் எங்கெங்கோ... 

விரும்பியவனையே மணந்து கொள்வது என்பது எல்லாப் பெண்களுக்கும் வாய்க்கும் பாக்கியமா என்ன? அதிலும் அஜ்மலின் வசீகரப் பார்வையும், சொக்க வைக்கும் பேச்சும் எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்காது? அத்தை மகனை ஆசை ஆசையாய் காதலிப்பது கன்னித்தன்மையின் கூடப் பிறந்த சுபாவமோ? அஜ்மல்... அஜ்மல்... அவள் இதயம் படபடத்தது.

"இந்நேரம் பள்ளிவாசலில் நிக்காஹ் சம்பிரதாயங்கள் நடந்து முடிந்திருக்கும். திருமணப் பதிவேட்டில் என்னிடம் கையெழுத்து வாங்கிவிட்டுப் போய் நேரம் ஆயிடுச்சே... ஏன் என் அருகில் இன்னும் வரவில்லை? நண்பர்களின் வாழ்த்து மழையால் அஜ்மல் தாமதிக்கிறானா? என்னைப் போன்று அவனுக்கும் ஆசைகள் இருக்கத்தானே செய்யும்... வளைய வளைய வந்து காதல் பேசினானே...' 

அஜ்மல்... அஜ்மல்... மனதில் அவன் பெயரை உச்சரித்து, உச்சரித்து, புன்னகை அவள் இதழோரம் தவழ்ந்தது. 

""ஏய்... பாத்திமா... என்ன நாங்க பாட்டுக்கு பேசிட்டிருக்கோம்... எதையும் கண்டுக்காம இருக்க... அஜ்மல் ஞாபகத்துல இருக்கியா... அதான் இன்னயோட அவன அடக்கி ஆளப் போறீயே... பாவம் அஜ்மல்''  என்று பாத்திமாவைச் சுற்றியிருந்த உறவுக்கார பெண்களில் ஒருத்தி சொல்ல... எல்லா மங்கைகளும் "கொல்'லெனச் சிரித்தனர். பாத்திமாவின் வெட்கமோ வெட்கப்பட்டது. 

 முற்போக்கு சிந்தனை கொண்ட அஜ்மல், சல்லி காசு வரதட்சணை வாங்காமல், ரொம்ப எளிமையாக பாத்திமாவை கைப்பிடிக்க முடிவு செய்திருந்தான். குடும்ப கெளரவம், ஊரில் நாலு பேரு நாலுவிதமாப் பேசுவாங்க... இப்படியான வழக்கமான சாக்குப் போக்குகளையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல், தன் விருப்பப்படி, தான் விரும்பியவளை மணம் முடிக்க தயாரானான். ஆனால் இதில் பாத்திமாவுக்கு உடன்பாடில்லை. இப்படி திருமணம் நடப்பதில் பாத்திமாவுக்கு சற்று வருத்தம்தான்.  

ஆற்று மணல் வீட்டு வாசலில் பரப்பி, கல்யாண வீடு என தெருவிலேயே தனித்துத் தெரிவதை அவள் சிறு வயதிலிருந்தே பார்த்து வளர்ந்திருக்கிறாள். வீட்டு வாசலில் ஓலைகளால் தற்காலிக பந்தல் வேயப்படும். வெள்ளை வெளேரென்ற வேட்டி துணியை, கருவேல மரங்களின் முட்களால் குத்தி இணைத்து அந்த ஓலைப் பந்தலை மறைத்து, கல்யாண வீடு தயார் என அந்த வீதிக்கே அடையாளம் காட்டுவதை பாத்திமா ரசிப்பாள். 

தெருவில் பாவிய ஆற்று மணலில், பந்தல் கம்புகளைச் சுற்றி சுற்றி தோழிகளுடன் விளையாடுவது கல்யாண வீடுகளில் சிறு பிள்ளைகளுக்கு குதூகலம். 

தீப்பந்தம் ஏந்தி, மாப்பிள்ளையை வீதி வீதியாக அழைத்துப் போய் உறவினர் வீடுகளின் வாசலில் நின்று, சடங்குக்காகக் கொஞ்சமேனும் பால் அருந்தி ஊர்வலமாக வருவது வழக்கம்.  

வசதி படைத்த வீடுகளில் மாப்பிள்ளையைக் குதிரையில் வைத்து  வீதிவலம் வருவதை, பெரிய மனுஷியான பின் பாத்திமா, வீட்டின் திட்டிவாசல் வழியாகப் பார்த்திருக்கிறாள். 

இதெல்லாம் அவள் திருமணத்தில் இல்லை. ஆடம்பரமான விருந்து உபசாரம் இல்லை, மாலை மரியாதை இல்லை. வீதிஉலா இல்லை. 

அழகான வெள்ளை குர்தா ஒன்றில் இளமை கொப்பளிக்க எளிமையாக இருந்தான் மணமகன் அஜ்மல். யாரும் இதை திருமணம் என்று சொல்ல மாட்டார்கள். இந்த மாதிரி ஏற்பாடென்றால் திருமணம் செய்யாமல் இருப்பதே மேல் என்று இளைஞர்கள் நினைக்க கூடும். ஆனால் ஊரில் யாரும் அப்படிச் சிந்திக்கவில்லை. 

"அஜ்மலுக்கு கல்யாணமா... அது இப்படித்தான் இருக்கும். அதைத் தானே அவன் பிரசாரம் செய்தான். அவன் சொன்னபடியே செய்தும் காட்டுகிறான்' என்றே ஊரில் அனைவரும் பேசிக்கொண்டனர். 

வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிவாசலில் மாலை நேர "அஸர்' தொழுகைக்குப் பின் நிக்காஹ். ஊர் பெரியவர்கள், மெளலவி, உறவினர்கள், நண்பர்கள் என பள்ளிவாசல் வளாகம் நிரம்பி வழிந்தது. பள்ளிவாசலுக்குப் பின்னாலுள்ள தெருவில் பெண்வீட்டிலேயே உறவினர்கள் சூழ மணப்பெண் பாத்திமா 
அமர்ந்திருந்தாள். 

பள்ளி வாசலில் பெரியவர்களின் வாழ்த்துரைக்குப் பின், பிரார்த்தனையுடன் எளிமையாகவும், விரைவாகவும் திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு வந்து வாழ்த்திய உறவினர்கள், ஜமாத்தினர்களுக்கு அஜ்மலின் நண்பர்கள், நன்றி நல்கினர். 

"எங்களின் அழைப்பை ஏற்று திருமணத்திற்கு
வருகை தந்து மணமக்களை வாழ்த்தியமைக்கு
நன்றி... நன்றி... நன்றி... 

தெரிவித்து மகிழ்வோர் தமிழ் வளர்ச்சி மன்ற நிர்வாகிகள்...'

- இப்படி அவர்களின் நன்றி அறிவிப்பு இருந்தது. 

திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் அஜ்மலோடு சென்று மணமகள் இல்லத்தில் கொண்டு போய் விட்டனர். வாசலில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் நண்பர்கள் குழாமுடன் அமர்ந்து, புதுமாப்பிள்ளை அஜ்மல் அரட்டை அடித்துக் கொண்டிருந்தான் தன்னைக் காண ஒருத்தி ஆசை ஆசையாய் தவித்துக் கொண்டிருப்பது தெரியாமல்! உறவினர்கள் ஒவ்வொருவராக களைய, பாத்திமாவுக்கு கோபம் கோபமாய் வந்தது. 

"திருமணம் முடிந்த கையோடு மணப்பெண்ணை - மனைவியைப் பார்க்க வராத மனுஷன் என்ன ஆம்பளை?  அப்படி என்ன நட்பு வேண்டிக் கிடக்கு?' இப்படிச் சிந்தித்தாலும் ஆசையும், காதலும் அவளது கோபத்தைக் கட்டுப்படுத்தின. 

சூரியன் மறையும் வேளையில் தொழும் தொழுகை, இரவுத் தொழுகை என எல்லாம் முடித்துவிட்டு, இரவுச் சாப்பாட்டு நேரத்துக்குத் தான் அஜ்மல் வீட்டுக்கு வந்தான். 

மருமகனின் போக்கு மாமா-மாமிக்கு தெரியுமென்பதால், யாரும் எதுவும் சொல்லவில்லை. மணமக்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினர். அவனைக் கண்டதும் அவளின் கோபம் மெல்ல மறைந்தது. விரும்பியவனுடன் இனி வாழ்நாள் முழுவதும் ஒன்றாக வாழப்போகிறோம் என்ற நினைப்பே அவளை சாந்த சொரூபியாக்கியது. 

முதலிரவு. லாந்தர் விளக்குகள் அணைக்கப்பட்டன. அம்புலியின் சிரிப்பு ஒளிக் கிரணங்களாய் சாளரம் வழியே பாய்ந்து, உயிர் ஜனிக்கும் அறையை நிரப்பியது. 

பாத்திமா கேட்டே விட்டாள். ""ஏங்க... திருமணமான முதல் நாளே இப்படி இருந்தா எப்டீங்க... எவ்வளவு ஆசையாய் நான் காத்திருந்தேன்... நீங்க வருவீங்கன்னு சொந்தக்காரங்க எல்லாம் எவ்வளவு நேரம் தாமதிச்சாங்க தெரியுமா... ரெண்டு பேரையும் மணக்கோலத்தில் ஒன்னா நிக்க வைச்சுப் பாக்க எவ்வளவு ஆசைப்பட்டாங்க... அவங்கள விடுங்க... எனக்கு எவ்வளவு ஆசையா இருந்துச்சு தெரியுமா?''  

ஏக்கமும், கோபமும் கலந்த பாத்திமாவின் வார்த்தைகள் முதலிரவு அமைதியைக் குலைத்தது. 

பாத்திமாவின் சிவந்த கன்னங்களைப் பார்த்து அதிசயித்த அஜ்மலுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. 

பாத்திமாவின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட அஜ்மல், பாத்திமாவின் விரல்களை மென்மையாக நீவி விட்டு, பேச்சில் மயக்க முயன்றான். 

""பாத்தி... நான் தமிழ் வளர்ச்சி மன்றத்துல நிர்வாகியா இருக்கேனா, நிறைய நண்பர்கள்... அதனாலதான் சீக்கிரம் வரமுடியலை... இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களையெல்லாம் நீ என்கிட்ட இருந்து எதிர்பார்க்க மாட்டேன்னு நான் நம்புறேன்...''  

இருவரும் நீண்ட நேரம் அமைதியாக இருந்தனர். பாத்திமாவின் கோபம் அஜ்மலை பேசவிடாமல் தடுத்தது. 

""உங்களோட வேலைகள்ல நான் உங்களுக்கு எப்படி உதவணும்...''  அமைதியை முடிவுக்குக் கொண்டு வந்தாள் பாத்திமா. 

இந்த வார்த்தைகளைக் கேட்ட அஜ்மல் கொஞ்சம் தைரியத்துடன், தன்னுடனான வாழ்க்கை குறித்தும், எதிர்காலம் குறித்தும் அவளிடம் விரிவாகப் பேசினான். 

""தேச விடுதலைக்காக நாம நிறைய தியாகங்கள் செஞ்சிருக்கோம். சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஆரம்பிச்சு நாலஞ்சு வருஷந்தான் ஆச்சு... தமிழ் பேசி வாழும் நாம், இந்த பிரதேச வளர்ச்சிக்காக எவ்ளோ செஞ்சிருக்கோம்...''  

 தான் சொல்லக் கூடிய கருத்துகள் பாத்திமாவுக்கு புரிகிறதா என்று பார்த்தான். மல்லிகைப்பூ வாசத்துடன் தமிழ் வாசமும் அந்த அறை முழுவதும் கமழ்ந்தது. 

 மணக்கோலத்தில் தன்னைப் பார்க்க வேண்டும், இருவரும் ஒன்றாக அந்த கணத்தை ரசித்து துய்க்க வேண்டும் என்ற பாத்திமாவின் ஏக்கம் அஜ்மலை உலுக்கியது.  

இனிமையாக நகர்ந்த இல்லற வாழ்க்கையின், பல்வேறு சந்தர்ப்பங்களில் தனிமையில் இருக்கும் போது அஜ்மல் இதைப் பற்றிச் சிந்தித்தான். 
திருப்பிக் கொடுக்கும்படியான ஒன்றை இழந்திருந்தால், என்னவளுக்காக என்ன பாடுபட்டேனும் திருப்பி கொடுத்துவிட முடியும். கொடுத்து விடுவேன்... ஆனால் அவள் விரும்பிய அந்தக் கணத்தை என்னால் திரும்பிக் கொடுக்க முடியுமா? இதற்காக இன்னொரு முறை திருமணம் செய்து கொள்ளவா முடியும்? 

பாத்திமாவே மறந்துவிட்ட அந்த தருணத்தை, இழந்த அந்த நிமிடங்களை, அனுபவிக்காமல் கழித்த அந்தக் கணத்தை நினைத்து நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டான் அஜ்மல். 

இதற்காக பல தடவை பாத்திமாவிடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறான். இப்படி மன்னிப்பு கேட்கும்போதெல்லாம், ஏன் இதை கணவனிடம் சொன்னோம் என்று ரொம்பவே வருத்தப்பட்டாள் பாத்திமா. 

நண்பர்களிடமும், உறவினர்களிடமும் இதைப் பகிர்ந்து கொண்ட அஜ்மல், முற்போக்கு சிந்தனை, எளிமை  என்றெல்லாம் திருமணம் முடிந்த அந்த சில நிமிடங்களை,  மனைவியுடன் கழிக்கும் சுகானுபவத்தை அனுபவிக்காமல் விட்டுவிட வேண்டாம் என்று சொல்வது வாடிக்கையாகி விட்டது. 

அஜ்மல் இப்படி புலம்பினான் என்றால், அந்த இழப்பை, திரும்ப மீட்டிப் பார்க்கவே முடியாத அந்த தருணத்தை தவற விட்டதை நினைத்தும், அதற்காக அஜ்மல் வருந்துவதை நினைத்தும் உள்ளுக்குள்ளேயே புழுங்கினாள் பாத்திமா.  

அஜ்மல் தன்னை முழுவதுமாக தந்து இயங்கி வந்த அமைப்பு, அதனுடைய கொள்கைகளுடன் ஒத்துப் போகும் அரசியல் கட்சி ஒன்றுடன் அந்த சமயத்தில் தேர்தல் கூட்டணி வைத்தது. தேசத்தின் முதல் பொதுத் தேர்தலில் அஜ்மல் தீவிரமாகப் பிரசாரம் செய்தான். 

அஜ்மல்-பாத்திமாவின் வாழ்க்கை ஒப்பந்தம் இனிமையாகக் கழிந்ததற்கு சாட்சியாக அவள் விரைவிலேயே தாய்மைப் பேற்றை அடைந்தாள். கர்ப்பமடைந்த பாத்திமாவை உள்ளங்கையில் வைத்து தாங்கினான் அஜ்மல். 

பாத்திமாவுக்கு இடுப்பு வலியெடுத்தது. அருகில் அஜ்மல் இல்லை. தேர்தல் பிரசாரத்துக்காகச் சென்றிருந்தான். மருத்துவச்சிகளின் கடுமையான போராட்டத்துக்குப் பின் இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. ஆண் குழந்தை ஒன்றும், பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது. மூன்றாவதாக பாத்திமாவும் மறுபிறப்பெடுத்தாள். ஆண் குழந்தை பிறந்த கொஞ்ச நேரத்திலேயே இறந்தது.  

இதை எப்படி பாத்திமாவிடம் சொல்வது? உறவினர்கள் பரிதவித்தனர். ஆனால் அந்தச் செய்தியை பாத்திமாவிடம் சொல்லாமல் இருக்க முடியுமா? எல்லோரும் ஒப்பாரி வைத்தனர். வீடே அல்லோலகல்லோலப்பட்டது. வேறு வழியில்லை. மறைக்க முடியாது. சொல்லித் தான் ஆக வேண்டும். 

""பாத்தி... பாத்தி... அஜ்மல்...''  

""அவருக்கு சொல்லிட்டீங்களா...''  கண்களை திறக்காமல் முனகினாள். பாத்திமாவைச் சுற்றியிருந்தவர்கள் விசும்பலுடன் எதுவும் பேசாமல் இருந்தார்கள். 

""இல்ல பாத்தி... அவரு தேர்தல் பிரசாரத்துல தீக்குளிச்சு இற...''  

""ஓ...'' 

ஒப்பாரிச்சத்தம் அங்கு நிலவிய அமைதியைக் குலைத்தது. ""என் புருஷனுக்கு என்னாச்சு''  வீடு குலுங்கும்படி அலறிய பாத்திமா மூர்ச்சையானாள். 

கண்விழித்த பாத்திமா பெத்தா, தன் இல்லற வாழ்க்கையின் பசுமையான நாட்களை நினைத்து பெருமூச்சு விட்டாள். 

அதிகாலையில் கண்ட கனவைப் போல அஜ்மலுடன் வாழ்ந்த வாழ்வை உணர்ந்தாள். அவனோடு இருந்த காலம் கொஞ்சம் தான் என்றாலும், அந்த நினைவுகளோடே இறுதி வரை வாழ்ந்துவிட்டாள். 

கைக் குழந்தையோடு பட்ட பாடு... அவளை வளர்த்து ஆளாக்க போராடிய போராட்டம்... யாரோ தீக்குளிக்க, அதைத் தடுக்கப் போய் அஜ்மல் உயிரை விட்டது... நினைக்க நினைக்க பாத்திமாவுக்கு நெஞ்சுக்குழி அடைத்தது. 

ஆனாலும் இப்போதும் அந்த மனக்குறை அவளிடம் இருக்கத்தான் செய்தது. மணக் கோலத்தில் அவர் என்னருகில் இல்லாமல் போனாரே... அதற்காக அவர் எப்போதும் வருந்தினாரே... அப்பப்பா... அந்த தருணத்தில் அஜ்மல் என் அருகில் இருந்து இனிமையாக கழித்திருந்தால் கூட அது அன்றோடு மறந்து 
போயிருக்குமே... 

ஆனால் தவிக்கவிட்டு, அதை இன்று வரை மீட்டிப் பார்க்க வைத்து கடந்த காலத்தை அசைபோட்டுக் கொண்டே இருக்கச் செய்தது தான் வாழ்க்கையின் சூட்சுமமா?... ரசித்தாள் கிழவி பாத்திமா பெத்தா. 

திருமணம் முடிந்த அடுத்த விநாடிகளில் மணமக்கள் இருவரும் ஒன்றாக இருப்பதை, அதன் பிறகு அவள் வேறு எங்கும் காணவில்லை. மகள், பேத்தி திருமணங்களில் கூட வேலைப்பளு காரணமாக மணமக்களை கவனிக்க இயலவில்லை. உறவினர்கள் இல்ல திருமண வைபவங்களிலும் அதற்கான வாய்ப்பு கிட்டவில்லை. ஆனால் இப்போது பாத்திமாவுக்கு அந்த ஆவல் அதிகரித்தது. 

புதுமணத் தம்பதிகளின் புன்சிரிப்பையும், குதூகலத்தையும், மகிழ்ச்சியையும் பார்க்க வேண்டும். அந்த இடத்தில் இளமையான அஜ்மல்-பாத்திமா தம்பதிகளைப் பொருத்திப் பார்க்க வேண்டும்... அஜ்மல்...அஜ்மல்... ஏங்கினாள் கிழவி பாத்திமா. 

ஆவல் அதிகமாக அதிகமாக வாழ்க்கை அர்த்தமுள்ளதாகியது. 

அஜ்மலின் ஆசையான நல்ல தமிழில் எழுதுவதற்கு இந்த சமூகம் தேர்ந்துவிட்டதை எண்ணினாள்... 80 வயதில் என் சின்ன ஆசையும், அஜ்மலின் பெரிய ஆசையும் நிறைவேறும் தருணம் வந்துவிட்டதாகவும் உணர்ந்தாள். 

தமிழ் வாத்தியார் ராமசாமி பொண்ணுக்கும், தலையாரி காத்தமுத்தோட மூத்த பையன் இசக்கிக்கும் நடக்கும் கலியாணத்தில் முன்வரிசையில் உட்கார வேண்டும்.  எங்கேயும் செல்லாமல் மணமக்களின் மகிழ்ச்சியில் திளைக்கும் கணங்களை கண்குளிர காண வேண்டும்... அஜ்மல்...அஜ்மல்... தான் இளமைக்கு திரும்பிவிட்ட உற்சாகத்தில் பரவசமடைந்தால் கிழவி பாத்திமா பெத்தா. 

அந்த நாளும் வந்தது. ஊர்ப் பள்ளிக் கூடத்துக்கு பெத்தாவை அழைத்துப் போகிறார்கள். 

"வாத்தியார் பொண்ணு கல்யாணமில்ல... அதான் பள்ளிக் கூடத்துல விருந்து வைக்கிறாங்க போல...' மனதுக்குள் நினைத்த பாத்திமா பெத்தாவின் சிந்தனை தெளிவாக இருந்தது. 

வகுப்பறைக்குள் தூக்கிச் செல்லும் போது ஒருவன் பெத்தாவின் காதில் ஓதினான். 

""பாட்டியம்மா!... சொன்ன மாதிரி நாங்க தான் உன்னை தூக்கியாந்தோம். அதனால எங்க தலைவரு நிக்கிற சின்னத்தைப் பார்த்து ஓட்டைக் குத்திப்புடு... மறந்திடாதே பெத்தா...'' 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com