தனியே  ஒரு பைக் பயணம்!

மேற்கு வங்காளம் கராக்பூரைச் சேர்ந்த இந்திராணி தஹல் ( 27) தன் பட்டப்படிப்பை முடித்தவுடன் 2016- ஆம் ஆண்டு கடல்சார் கப்பல் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்தார்.
தனியே  ஒரு பைக் பயணம்!

மேற்கு வங்காளம் கராக்பூரைச் சேர்ந்த இந்திராணி தஹல் ( 27) தன் பட்டப்படிப்பை முடித்தவுடன் 2016- ஆம் ஆண்டு கடல்சார் கப்பல் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்தார். கப்பல் நிறுவனம் என்பதால் உலகின் பல நாடுகளைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றவர், கடந்த ஆண்டு பொது முடக்கத்தின்போது வேலையின்றி வீட்டிலேயே முடங்க வேண்டியதாயிற்று. எத்தனை நாள் முடங்கிக் கிடப்பது? பொது முடக்கம் தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன், வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதியில்லை என்பதால், இந்தியாவிலேயே முக்கிய நகரங்களுக்குச் சென்று வருவதென தீர்மானித்தார். ரயில் பயணத்தைத் தவிர்த்து விமானம் மூலம் சென்று வர இணையதளம் மூலம் டிக்கெட் பதிவு செய்ய நினைத்தார்.

இவரது திட்டத்தை அறிந்த ராணுவவீரரான இவரது தந்தையும், குடும்பத் தலைவியுமான அம்மாவும், இவரது சகோதரனும் ஒரு யோசனை கூறினர். ""எதற்கு விமானப் பயணம் மூலம் பணத்தைச் செலவழித்து ஊர் சுற்றிப் பார்க்கப் போகிறாய்? நீ சிறுவயது முதலே நன்றாக பைக் ஒட்ட பயிற்சி பெற்றிருக்கிறாயே பேசாமல் நீ விருப்பப்படும் இடங்களுக்கு பைக்கிலேயே சென்று பார்த்து விட்டுவா'' என்று கூறியதோடு பைக்கை எப்படி முறையாகப் பராமரிப்பது? நீண்ட தூரம் ஒட்டும்போது வழியில் பிரச்னை ஏற்பட்டால் எப்படிச் சமாளிப்பது? போன்றவற்றுக்கான பயிற்சியையும் அளித்தனர்.

அவர்களுடைய யோசனையும், கொடுத்த ஊக்கமும் இந்திராணிக்குப் பிடித்திருந்தது. ஏற்கெனவே பார்த்த நகரங்களைத் தவிர்த்து மற்ற நகரங்களைப் பார்க்க பைக் பயணம்தான் சிறந்ததென கருதியதோடு, வாழ்க்கையில் ஒருமுறை இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றிப் பார்க்கலாமே என்ற துணிவோடு தனியாகப் பயணம் செய்வதென முடிவெடுத்தார். தனக்குப் பிடித்தமான "ராயல் என்பீல்ட் 500 சிசி' பைக்கைத் தேர்ந்தெடுத்தார். 2020 -ஆம் ஆண்டு நவம்பர் 24 - ஆம் தேதி கூகுள் மேப் துணையோடு காரக்பூரிலிருந்து தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். 11 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள ஊர்களைப் பார்த்தபடி பெங்களூரு வந்த இந்திராணியைச் சந்தித்தோம்.

உங்களுடைய தனிமை பைக் பயணத்தின் நோக்கம் என்ன? பெண்களை வன்கொடுமை செய்வதும், பாதுகாப்பின்மையும் இல்லாத போது ஒரு பெண் தன்னந் தனியாக பைக்கில் இந்தியா முழுவதும் சுற்றுவது ஆபத்தானதல்லவா? எந்த தைரியத்தில் இப்படிக் கிளம்பினீர்கள்?

""இந்த பைக் பயணம் மூலம் சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. வீட்டில் அடைந்து கிடப்பதற்குப் பதில் நம் இந்தியாவில் உள்ள புராதன இடங்களையும் மக்களையும் சந்திக்கலாமே என்ற ஆர்வம்தான் காரணம். கூடவே என் குடும்பத்தினர் கொடுத்த தைரியம். இது வரை என்னுடைய பயணத்தில் அசம்பாவிதமான சம்பவங்கள் எதையும் நான் சந்திக்கவில்லை. ஒருமுறை ஜார்கண்ட் மாநிலத்தில் மட்டும் நக்சல்கள் நிறைந்த காட்டுப்பகுதிக்குள் எதிர்பாராதவிதமாக நுழைந்து விட்டேன். டிசம்பர் மாத குளிர் நடுக்கியது. நல்ல வேளையாக வழியில் என்னைச் சந்தித்த ராணுவ அதிகாரியொருவர், ""இது மிகவும் ஆபத்தான பகுதி. இப்படியே போனால் நீங்கள் உயிருடன் தொடர்ந்து செல்வது சந்தேகம்தான். வந்த வழியே திரும்பி வேறு பாதையில் செல்லுங்கள்'' என்று எச்சரித்து அனுப்பினார்.

மீண்டும் திரும்பி கூகுள் மேப் மூலம் மாற்றுப் பாதையைத் தேடி கண்டுபிடித்து பயணத்தைத் தொடர்ந்தேன்'' என்று கூறிய இந்திராணி, அவருடைய சொந்த ஊரான கலிம்பாங்கிலிருந்து, இந்தியா முழுவதும் பைக் மூலம் சுற்றி பார்க்கப் புறப்பட்ட முதல் பெண் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.

தனியாகப் புறப்பட்டது சரி, வழியில் தங்குவது, சாப்பாடு போன்ற பிரச்னைகளை எப்படிச் சமாளித்தீர்கள்?

என்னுடைய இந்த பைக் பயணத்தை இரண்டு லட்சம் ரூபாய்க்குள் முடிக்க வேண்டுமென்ற திட்டத்துடன்தான் புறப்பட்டேன். சில இடங்களில் எனக்கு ஏற்கெனவே அறிமுகமான குடும்ப நண்பர்கள் இருந்ததால் தங்குவதற்கோ சாப்பாட்டிற்கோ பிரச்னை ஏற்படவில்லை. வழியில் மோசமான பாதைகள் தாம் இடையூறாக இருந்தன.

ராமேஸ்வரத்தில் மட்டும் நான் தனியாகத் தங்க எந்த ஓட்டலும் ரூம் அளிக்க முன்வரவில்லை. நான் என்னுடைய அத்தாட்சி சான்றுகள், ஆதார், பைக் ஓட்டுநர் உரிமம் அனைத்தையும் ஆதாரமாகக் காட்டியும் ரூம் தர மறுத்துவிட்டார்கள்.

கடைசியில் ஓர் ஓட்டலில் ரூம் கிடைத்தது. மற்றபடி எவ்விதப் பிரச்னையும் ஏற்படவில்லை. வரும் ஜூன் மாதத்திற்குள் என்னுடைய திட்டப்படி பயணத்தை முடிக்க வேண்டும். ஆனால் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்திருப்பதால் பயணத்தை விரைவாக முடித்துக் கொண்டு ஊர் திரும்பவுள்ளேன்.

இந்திராணி தஹல் தனது பயணத்தை வெற்றிகரமாக முடிக்க வாழ்த்து தெரிவித்தோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com