பேல்பூரி 

சின்ன வீடு 
பேல்பூரி 

கண்டது

(கோவையில் லோடு லாரி ஒன்றில் ஸ்டெப்னி டயர் மாட்டியிருந்த இடத்துக்கு  மேல் காணப்பட்ட வாசகம்)

சின்ன வீடு 

-வி. ரேவதி, தஞ்சை.

(தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள ஓர் ஊரின்பெயர்)

நக்கல்பட்டி 

- ந.பிறைசூடன், தருமபுரி.

(சாயல்குடியில் டீக்கடை ஒன்றின் முன்பு நின்ற இருசக்கர வாகனத்தில் கண்ட வாசகம்)


நாம எப்படி இருக்கணும்னு
நாமதான் முடிவு செய்யணும்...
அடுத்தவங்க இல்ல.

- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

கேட்டது

(தஞ்சை - புதுஆத்துப் பாலம் அருகே இருவர்)

""என்னப்பா... திடீர் மொட்டை? எதாவது திடீர் வேண்டுதலா?''

"" அட... உனக்கு விஷயமே தெரியாதா? கரோனா ரெண்டாவது அலையினாலே மறுபடியும் சலூன் கடைகளை மூடச் சொல்லிட்டாங்க. முடி வளர்ந்து சாமியாரா திரியறதைவிட, மொட்டை போட்டு ஆண்டியா திரியலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன், தப்பா?''

பா.து.பிரகாஷ்,  
தஞ்சாவூர்-1.

(கோவை - சுந்தராபுரம் அருகே ஒரு வீட்டில்)


""அதான் ஒர்க் ஃப்ரம் ஹோம்னு சொல்லிடாங்கள்ல, மசமசன்னு உட்காந்திருக்காம வேலையைப் போய்ப் பாருங்க''
""அவங்க ஆபிஸ்  வேலையத்தான் பார்க்கச் சொன்னாங்க, கிச்சன் வேலை இல்ல''
""கரோனா காலத்துல உங்க வாய் ரொம்ப அதிகமாயிடுச்சு'' 

பா.சக்திவேல்,
கோயம்புத்தூர்.

யோசிக்கிறாங்கப்பா!

 எங்கே விழுந்தோம் என்பதைவிட,
 எங்கே  கவனத்தைச் சிதற விட்டோம்
 என்பதைக் கவனித்துப் பாருங்கள்...
 வாழ்க்கை தெளிந்துவிடும். 

 - மு.சுகாரா, 
ராமநாதபுரம். 

மைக்ரோ கதை

ஒரு சமயம், கடவுளிடம் பேசிக்கொண்டிருந்த மனிதன், கேட்டான்:

""சாமி, ஒரு கோடி வருஷங்கறது உங்களுக்கு எவ்வளவு நேரம்?''

இறைவனும் சிரித்துக் கொண்டே ""ஒரு கோடி வருஷங்கறது ஒரு நிமிஷம்'' என்றார்.

அதைக் கேட்டு சந்தோஷமடைந்த மனிதன் ""அப்படின்னா, ஒரு கோடி ரூபாய்ங்கறது, சாமி?'' அவரும், ""ஒரு ரூபாய் போல'' என்றார்.

உடனே, கடவுளை மடக்க எண்ணியவனாய், ""அப்ப, எனக்கு ஒரு ரூபாய் கொடுங்களேன்'' என்றான் மிகவும் அடக்கமாய்...

இறைவனும், மென்மையாக சிரித்துக் கொண்டே ""நீ ஒரு நிமிஷம் பொறு'' என்றார்.

எம்.ஏ. நிவேதா, 
அரவக்குறிச்சிப்பட்டி.

எஸ்.எம்.எஸ்.


 குடை  மழையை நிறுத்தாது.
ஆனால் நம்மை நனையாமல் தடுக்கும்.
தைரியம் பிரச்னைகளைத் தீர்க்காது.  
ஆனால் அதை எதிர்த்துப் போராட உதவும்.

மா.பழனி, 
தருமபுரி.

அப்படீங்களா!

"த்ரிலிங்'கான பயண அனுபவத்தைத் தர வந்திருக்கிறது, இந்த  எலக்ட்ரிக் யுனிசைக்கிள்.  ஒரே ஒரு சக்கரமுள்ள மின்சார வாகனம் இது.  இந்த வாகனத்தைச் செலுத்துவதற்கே முதலில்  பயிற்சி பெற வேண்டும்.  மேடு பள்ளமில்லாத வழுவழு சாலையில் செல்வதற்கே முதலில்  இந்த  வாகனத்தைப் பேலன்ஸ்  செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும்.  அப்புறம் மேடான பகுதி, மேடு பள்ளம் உள்ள சாலைகள்,  படிக்கட்டுகள் என எல்லாவற்றிலும் கையில் எந்தப் பிடிமானமும் இல்லாமல் இந்த வாகனத்தைச் செலுத்த முறையான பயிற்சி மிக மிக அவசியம்.

இந்த வாகனத்தில் செல்லும் போது வலது, இடது புறம் திரும்ப,  உடலின் எடையை  வலது, இடது கால்களுக்கு மாற்ற வேண்டும்.  அல்லது திரும்பும் திசைக்கேற்ப இடுப்பை வளைக்க வேண்டும். ஒல்லிக்குச்சி நபர்கள் ஓட்டுவதற்கும், குண்டான நபர்கள் ஓட்டுவதற்கும் வித்தியாசமான உடலுக்கு ஏற்ற  பயிற்சி தேவை. 

இந்த ஒரு சக்கர மின்சார வாகனம் பல மாடல்களில் தயாரிக்கப்படுகிறது. "இன் மோஷன் யஐஐ' என்ற பெயருடைய இந்த வாகனம் மணிக்கு 56 கி.மீ. வேகத்தில் செல்கிறது.  தினமும் இந்த வாகனத்தை மின்னேற்றம் செய்ய வேண்டும்.  

இந்த வாகனத்தைப் பயன்படுத்தக் கூடிய  நபர்களின் உடல் எடை உள்பட பலவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பல மாடல்களில் இந்த ஒரு சக்கர மின்சார வாகனம் தயாரிக்கப்படுகிறது.  மணிக்கு 120 கி.மீ. வேகம் செல்லக் கூடிய ஒரு சக்கர மின்சார வாகனங்களும் உள்ளன. 

மிகவும் பயிற்சி எடுத்துக் கொண்டு  இந்த வாகனத்தை ஓட்ட வேண்டும் என்பதால், பிரிட்டனில்  பொது இடங்களில், நெடுஞ்சாலைகளில்  இந்த வாகனத்தை ஓட்ட அந்நாட்டு அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை. 


என்.ஜே., 
சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com