மனோ - ரஞ்சிதம்

வழக்கம்போல் க்ரில் கம்பிகளுக்குப் பின்னாலுள்ள திட்டில்  பூ வைக்கப்பட்டிருந்தது.
மனோ - ரஞ்சிதம்


வழக்கம்போல் க்ரில் கம்பிகளுக்குப் பின்னாலுள்ள திட்டில் பூ வைக்கப்பட்டிருந்தது. எப்போது கேட்டைத் திறந்து அந்தப் பெண் உள்ளே வந்தது, எப்போது வைத்தது? தெரியாது. துளி சத்தம் எழாது. பூனை வந்து போவதைக் கூடக் கண்டுகொண்டு விடலாம். ஆனால் ரஞ்சிதம் வருவதும் போவதும் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். இத்தனைக்கும் தெருவில் பூவு... பூவு... பூவே... என்று கத்தும் சத்தமும் கேட்கவில்லை. கேட்கவேயில்லை. ஒருவேளை எங்கள் வீடு அருகே வரும்போது குரல் கொடுக்காதோ... என்னவோ? தெருக்கோடியில் நுழையும் சத்தம் சன்னமாகக் கேட்குமே ? அதுவும் இன்று இல்லை
""நாள் பூராவும் அலைஞ்சா, நூறு நூத்தம்பது கிடைக்குமா? அட ... இருநூறுன்னே வச்சிக்குவோம். இந்த வேகாத வெயில்ல அந்தச் சின்னப் பொண்ணுக்கு எதுக்கு இதுல இவ்வளவு
இன்ட்ரஸ்ட்டு?'' -நான் கேட்டேன் தேவகியிடம்
""இந்த ஆராய்ச்சியெல்லாம் உங்களுக்கெதுக்கு? அதுக்குப் பிரியமானதப் பண்ணுது. புருஷங்காரன் எதாச்சும் சொல்லியிருக்கலாம். வீட்டு வேலைக்கெல்லாம் போக வேணாம்னு''
""நாலஞ்சு வீட்டுல வேலை பார்த்தா... மாசம் பத்தாயிரம் வரைக்கும் கெடைக்கும். காலைல ரெண்டு மூணு வீடு, சாயங்காலம் ரெண்டு வீடுன்னு. இது அதவிட அலைச்சலாச்சே... காலைல ஏறு வெய்யில்... சாயங்காலம் இறங்கு வெய்யில்... ரெண்டுமே ஆளைச் சுட்டுப் பொசுக்கிக் கிறங்கடிச்சிடுமே ? தெருத் தெருவா நடந்து கால் நொந்திடுமே''
""அவுங்கவுங்க வசதிக்கு ஏத்தாப்ல ஏதோ செய்துக்கிறாங்க... நமக்கென்ன வந்தது?'' தேவகி பொருட்படுத்தாமல் சொன்னது போலிருந்தது ரஞ்சிதத்தின் புருஷன்காரன் மெயின்ரோட்டில் ஒரு தையல்கடை வைத்திருக்கிறான். சின்ன இடம் வாசலை அடைத்து மிஷினை நிறுத்தியிருப்பான். உள்ளே யாரும் போக முடியாது. இடமுமில்லை. தைக்க வேண்டிய துணிகள், தைத்த துணிகள், கட்டிங் பிட்டுகள் பைகள், நூல்கண்டுகள் என்று சிதறலாயும் கலைந்தும் கிடக்கும். துணி தைக்கக் கொடுப்பவர்கள் பிளாட்பாரத்தில் நின்றேதான் கொடுத்தாக வேண்டும் பெரும்பாலும் அளவெடுப்பதும் ரோட்டில் நின்றுதான். கிழிசல்கள்தான் அவனிடம் வரும். பார்த்திருக்கிறேன். நானே ஒன்றிரண்டு தைத்துமிருக்கிறேன். இப்போது பரவாயில்லை. அவ்வப்போது சட்டைகள், பேண்ட்கள் கூடத் தைக்கிறான். அட பெண்களுக்கானதும் தைக்கிறானய்யா !
""அது தெரியாதா உங்களுக்கு விஷயம்? ரஞ்சிதத்துக் கிட்டதான் பொம்பளைங்க கொண்டு போய்க் கொடுப்பாங்க. எல்லாம் அண்டை வீட்டுக்காரங்கதான். வீட்டுலயே வச்சு அளவெடுத்து ஒரு நோட்டுல பெயர், அளவெல்லாம் எழுதிக் குறிச்சு அதுதான் புருஷன்காரன்ட்டக் கொண்டு போய்க் கொடுக்குதாம். கடைப்
பக்கம் லேடீஸ் யாரும் எட்டிப் பார்க்க மாட்டாங்க. அதுக்கான தேவையும் இல்ல''
""பரவாயில்லையே... ரஞ்சிதத்துக்கு இதெல்லாமும் தெரியுமா?'' - வியப்போடு கேட்டேன் நான்
""தெரியுமாவா ? நானே என்னோட நாலஞ்சு ப்ளவுஸ் பிட் கொடுத்து வாங்கியிருக்கேன்னா?
அந்தப் பொண்ணு எவ்வளவு பொறுப்பான லேடி தெரியுமா? அதுனாலதான் அவ புருஷன்காரனுக்கு இந்த வாழ்வு'' -பெருமிதமாய்ச் சிரித்துக் கொண்டது போலிருந்தது.
தேவகி சொல்லும் விஷயங்கள் என்னை ஆச்சரியப்படுத்தின. இவளெப்படி இத்தனையைத் தெரிந்து வைத்திருக்கிறாள்? அந்தப் பெண்ணோடு இவள் பேசியே நான் கண்டதில்லையே ? அக்கறை அக்கறையோடுதான் சேருமோ?
பள்ளிக் கல்வி முடித்த கையோடு மேற்கொண்டு படிக்க வசதியில்லாமல் உள்ளூரிலேயே குறைந்த சம்பளத்திற்கு ஒரு துவக்கப் பள்ளியில் டீச்சர் வேலைக்குப் போனவள் தேவகி. மூன்று சகோதரிகள், மூன்று சகோதரர்கள் அடங்கிய குடும்பத்தில் படிப்பு முடித்த அடுத்த மாதத்திலிருந்து சம்பாதிக்க ஆரம்பித்த பெருந்தகை. அதிலேயேதான் மேற்கொண்டு தபால் மூலம் பட்டப்படிப்பு முடித்ததும் பிறகு வங்கி வேலைக்குப் போனதும்.
ஒரு வங்கியில் வேலை பார்த்த அவள், மாநில அரசுப் பணியில் இருக்கும் என்னைத் திருமணம் செய்ய சம்மதிப்பாளா என்று நான் தயங்கிய கணத்தில், ""அரசாங்க வேலைன்னு ஒண்ணு இருக்குதானே... நாளைக்கு பென்ஷன்னு ஒண்ணு வரும்தானே? அது போதும் எனக்கு'' என்று பெண் பார்க்கப் போன இடத்தில் என்னிடமே "பளிச்'சென்று தெரிவித்தாள். பார்வைக்கு சுமாரான அழகுதான் என்றாலும், அந்த அக அழகு எனக்கு ரொம்பவும் பிடித்துப் போனது. நானென்ன பெரிய மன்மதனா ? என்று ஓ கே சொல்லி விட்டேன். அவள் போட்டது ஒரேயொரு கண்டிஷன், திருமணத்திற்குப் பிறகு திருச்சியில்தான் குடித்தனம்.
""எங்கயிருந்தா என்ன? நீங்க செளக்கியமா, சந்தோஷமா இருந்தாச் சரி'' என்றார் அப்பா. அம்மாவும் ஒப்புக் கொண்டாள். அவர்களைப் பார்த்துக் கொள்ளத்தான் அண்ணா இருக்கிறானே ! இருந்தாலும் மீனாட்சி பட்டணத்தை விட்டுப் போக எனக்கு மனசேயில்லை.
எனது முதல் போஸ்டிங்கே திருச்சிதான். நகரம்
எனக்கு ஏற்கெனவே பழக்கப்பட்டிருந்தது. இப்போது திரும்பவும் திருச்சிக்கு மாறுதல் வாங்கிக் கொண்டேன். என் அதிர்ஷ்டம் இல்லை, தேவகியின் அதிர்ஷ்டம். உடனே கிடைத்து விட்டது. தில்லை நகரில் ஒரு வீடு பார்த்து அங்கு குடியேறினோம். பத்மா ஓட்டல் காபியும், மெயின் கார்ட் கேட் நெல்லை லாட்ஜின் டிபனும், வத்தல் குழம்பும், கன்டோன்மென்ட் கிருஷ்ணா கபேயின் கல்யாணச் சாப்பாடும்... சுற்றிலும் உள்ள கோயில்களும், மலைக்கோட்டையும் என்னைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டிருந்தன. அங்கு முதலில் வேலை பார்த்த காலத்திலேயே இடமென்று ஒன்று வாங்கிப் போட்டிருந்தேன். அது எத்தனை நல்லதாகிவிட்டது இப்போது? அடுத்தாற்போல் லோன் வாங்கி வீடு கட்டுதல்தான் அதை மனதில் வைத்துதான் தேவகி சொல்லியிருப்பாளோ என்று பிறகுதான் தோன்றியது எனக்கு. சுப்பிரமணியபுரத்தில் தேவகிக்கு வங்கி. எனக்கு அரசு மருத்துவமனை அருகில். ""உங்களுக்குப் பக்கமா வீடு பார்த்துக்கிட்டீங்க... ஏன் சுப்ரமணியபுரத்துல வீடு பார்த்திட்டு, அங்கேயிருந்து நீங்க இங்க வந்து போகக் கூடாதா? இப்போ நான்தான் அலையணும் தூரமா! எல்லாக் கஷ்டமும் பொம்பளைங்களுக்குத்தான்...'' அடிக்கடி குறை பட்டுக் கொள்வாள் ""பொன்மலைப்பட்டி வண்டி... த்ரூ பஸ்... அடிக்கடி இருக்கு. நேரா போய் உங்க பாங்க் வாசல்லயே இறங்கிக்கலாம். பக்கத்துலதான் ஸ்டாப்'' - நான் சொன்னேன். ஆனாலும் தில்லை நகர் சுற்றிப் போகும் பஸ் குறைவு என்பதால் உறையூர் சுற்றிப் போகும் பஸ்ஸில் ஏற்றிவிட தினமும் ஸ்டாப்பிற்கு அவளைக் கொண்டு விட வேண்டியிருந்தது. அவளை இறக்கிவிட்டுவிட்டு, நான் என் அலுவலகத்திற்குப் போவேன். அதுபோல் சாயங்காலம் அவளை ஸ்டாப்பிலிருந்து வீட்டிற்குக் கூட்டி வரும் வேலையும் என்னுடையதுதான்.

""சார் இப்பக் கிளம்பிடுவாரே... இருப்புக் கொள்ளாதே... அவுக வீட்டுக்காரம்மா வந்திரும்ல. நீங்க கிளம்புங்க சார்'' -கண்காணிப்பாளர் கிண்டலாகச் சொல்வார். ஆபீஸ் அஞ்சே முக்காலுக்கு முடிந்ததும் மூட்டையைக் கட்டுவது அவருக்கு அறவே பிடிக்காது. ஆறரை, ஏழு என்று இருந்து எல்லோரும் வேலை பார்க்க வேண்டும். அப்போதுதான் முகம் மலரும். நான் ஆறுக்கெல்லாம் கிளம்புவேன். இந்த உம்மணாம்மூஞ்சி எதாச்சும் சொல்வாரே என்று- ""வீட்ல விட்டிட்டு திரும்பவும் வருவேன் சார்'' என்று சொல்லிவிட்டுத்தான் போவேன் அதிகமாய் என்னிடம் வைத்துக் கொள்ளமாட்டார். காரணம், நான் ஸ்டெனோ. அதிகாரிக்கு நெருக்கமானவன், அவர் பர்ஸ்சனல் விஷயங்களைக் கவனிப்பவன். இவர் காசு வாங்கும் விஷயம், அவர் காதுக்குப் போய்விடக் கூடாதே ! அது ஊரறிஞ்ச விஷயம்ங்கிறதை இன்னும் அவர் அறியாமலிருப்பதுதான் விநோதம். ஒருவேளை அவருக்கும் ஆபீசருக்கும் ஏதேனும் டீலிங் இருக்குமோ, என்னவோ யார் கண்டது? நான் இந்தக் கச்சடா எதையும் கண்டு கொள்வதில்லை. "நான் உண்டு என் வேலையுண்டு'. ஆனால் ஆபீசில் என்னெல்லாம் நடக்கிறது என்பது எனக்கும் தெரியும். அதிலிருந்து விலகியிருப்பது என்பதே இன்றைய தேதியில் மிகத் திறமை வாய்ந்த விஷயம்.
ஒரு நாள் கேட்டேன்: ""ஆம்மா... தெனம் இப்டி பூப்போல பூ வச்சிட்டுப் போகுதே அதுக்குக் காசு கொடுத்திடுவேல்ல ?'' - பல நாளாய் மனதில் இருந்த சந்தேகம் இது.

""அது வாங்கிக்காதுங்க... நானும் எத்தனையோ தடவை சொல்லிட்டேன். புதுத் தையல் மிஷின் வாங்கப் பணம் கொடுத்தோம்ல... அந்த நன்றியாம்... ஏம்மா நீங்க எம்புட்டு செய்திருக்கீக... இது வெறும் கொசுறு'' ங்குது

""அது உங்கிட்ட சொல்லிச்சா. இல்ல நீயா அப்டி நினைச்சுக்கிறியா? தெனமும் கொஞ்சப் பூவ காசில்லாம ஓசியாக் கொடுக்கிறது சரியா ? நீ கட்டன்ரைட்டா சொல்லிடு. காசு வாங்கிண்டாத்தான்... இல்லன்னா பூ வைக்காதேன்னு''

""பூவை எப்டிங்க வேணாம்னு சொல்றது? அபசகுனமாத் தெரியாதா? குருட்டாம் போக்ல சொல்லப் போக அது கோவிச்சுக்கிடுச்சின்னா... என்னைக்காவது மனசு மாறி வீட்டு வேலைக்கு வர்றதும் நின்னு போகுமே... இந்த ஏரியாவுல வேறே யாரும் சரியில்ல. இது ஒண்ணுதான் சமத்தா வந்து போயிட்டிருக்கு. அதையே திரும்பவும் எப்டியாச்சும் வேலைக்கு வர வச்சிடணும்னு நானே தாஜா பண்ணிக்கிட்டிருக்கேன். என்னைக்காச்சும் மனசு மாறாதான்னு. எதையாச்சும் சொல்லி அதைக் கெடுத்திடுவீங்க போல்ருக்கே... எதுத்த வீட்டுல வேலை பார்த்த அம்மா, பத்தாயிரம் வாங்கிட்டு கம்பி நீட்டிடுச்சாம். இன்னொரு வீட்ல ஏதோ சங்கிலியோ, மோதிரமோ காணலைங்கிறாங்க. கேள்விப்படுற எதுவும் சரியாவே இல்லை... நம்ப ரஞ்சிதம் தங்கமாக்கும்''

""அப்டி நன்றியுணர்ச்சி இருக்குன்னா, பேசாம நம்ம வீட்டுக்கு மட்டும் வந்து செய்து கொடுக்கலாம்ல... நாமென்ன ஓசிலயா வரச்சொல்றோம்... சம்பளத்தக் கொடுத்திடுவோம்தானே ?''

""அதுதான் நீங்க புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்க. வீட்டு வேலை செய்யப் பிடிக்கலைங்க அதுக்கு !

எந்த வீட்டுல என்ன பிரச்னையோ ? யார் கண்டது? சின்னப் பொண்ணு பாருங்க... பயப்படுது. இங்க மட்டும் வந்தா? எங்க வீட்டுக்கெல்லாம் வர மாட்டியான்னு வீடு வீடா கேட்க ஆரம்பிச்சிடுவாங்கன்னு பயப்படுது. தன் போக்குல விட்டு, அதோட பயத்தப் போக்குறதும், அதுவா மனசு மாறி நம்ம வீட்டுக்கு வரப் பண்றதும்தான் என்னோட திட்டம். அதுனாலதான் சுமுகமான உறவை மெயின்டெய்ன் பண்றேன். திரும்பவும் வந்ததோ... அப்புறம் அது நம்ம வீட்டுப் பொண்ணுதான் விடவே மாட்டேன்''

ரஞ்சிதத்தின் மீதான தேவகியின் பிரியம் எனக்குப் புரிந்தது. தானே இயக்கும் மான்யூவல் மெஷின் போதும் என்று சொன்ன ரஞ்சிதத்தின் கணவன் மனோகரனுக்கு, அது வேண்டாம் என்று "அல்யூர் எலெக்ட்ரிக் ஸ்வீயிங்' மெஷின்பற்றி எடுத்துச் சொல்லி அதை எப்படி ஆபரேட் பண்ணுவது என்று கற்றுக் கொள்ள வைத்து, அதற்குத் தயார் படுத்தினவளே தேவகிதான். வங்கி லோன் வழங்கி பிரபலமாகி வந்த ஓர் ஆடை தயாரிப்பு நிறுவனத்திற்கு அவனை அறிமுகப்படுத்தி, தவறாது மனைவி ரஞ்சிதத்துடன் போய் வந்தான் மனோகரன்.
""எல்லாம் பொம்பளைங்களா இருக்கு. அவுங்க நடுவுல போய் நின்னுக்கிட்டு நான் பழகுறதுக்கு கூச்சமா இருக்கு புள்ள... நீயும் கொஞ்சம் என்னோட வா'' என்று அவன் கிளம்பிய நாளிலிருந்துதான் வீட்டு வேலைகளை விட வேண்டியதாயிற்று ரஞ்சிதம். வேலையைச் சுருக்க அவன் கற்றுக் கொண்டதும், கடையில் அமர்ந்து "மள மளவென்று தையல் வேலைகளை ஆரம்பித்து விட்டதும், வீட்டிலிருந்த மேனிக்கே பெண்களுக்கான துணிகளை அளவெடுத்து வாங்கி ரஞ்சிதம் தன் வகைக்கு ஒத்துழைப்பாய் இயங்கியதும்-ஒருவருக்கு உதவி செய்தாலும் அது இப்படியிருக்கணும் என்று தேவகிக்குப் பெருமிதமாயிருந்தது ""எல்லாம் சரிதான்...

ஆனால் இந்தப் பூ விற்கும் வேலையில் அப்படி என்னதான் கிடைத்து விடப் போகிறது?'' என்பதை அறிய முற்பட்டபோதுதான் அது ரஞ்சிதம் வீட்டுப் பாரம்பர்யப் பணி என்பதை அறிய முடிந்தது. அது அப்பா சென்ட்ரல் மார்க்கெட்டில் மொத்தக் கொள்முதல் செய்து மல்லிகை, முல்லை, சாமந்தி என்று உதிரிப்பூ விற்கும் மொத்த வியாபாரி என்று சொந்தத் தொழிலாய்க் கொண்ட பல வருட வியாபாரம் என்பதும் தெரிய வந்தது அப்படி ஒரு தகவல் காதுக்கு வரும் என்று நினைக்கவேயில்லை. அதுவும் முதன் முதலில் தனக்குத்தான் சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டபோது அத்தோடு விஷயத்தை அமுக்கி முடித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

""என்னா ஜெகதீசன் உங்ககிட்டதான் முதல்ல சொல்றேன் இந்த காம்ப்ளெக்சுல உள்ள நாலு ஆபீசுக்கும் கூட்டிப் பெருக்கித் தண்ணியெடுத்து வைக்கிறதுக்கு ஒரு லேடி வேணும்... நீங்க பார்த்து கூட்டி வர்றீகளா ? ஆபீசுக்கு ரெண்டாயிரம் தந்திடுவாங்க. ஏற்பாடு பண்ணுங்க... பார்ப்போம்'' கண்காணிப்பாளரிடம் கூடச் சொல்லவில்லை. அவருக்கு ஏன் அப்படித் தோன்றியது? ஏதேனும் அதிருப்தி இருக்குமோ? ஆனால் எனக்கோ சட்டென்று மனதில் வந்தது ரஞ்சிதம்தான். ஆஹா... என்ன மாதிரியான ஒரு சந்தர்ப்பம் ? ஒரு வேளை அது முறுக்கிக் கொண்டு வேண்டாம் என்று சொல்லிவிட்டால்? இப்படியும் சந்தேகம் வரத்தான் செய்தது. நாலு ஆபீஸ். மொத்தம் எட்டாயிரம் ரூபாய்... காலையில் எட்டு மணிக்குச் சென்று ஒவ்வொரு ஆபீûஸயும் பெருக்கிச் சுத்தம் பண்ணி, குடிக்கத் தண்ணீர் எடுத்து வைத்தால் போதும். ரெண்டு மணிநேரத்தில் முடிந்து போகும் வேலை.

வளாகம் வாட்ச்மேன் ஏழுமலை, தகப்பனார் போல அன்பானவர். பயமில்லாமல் போகலாம், வரலாம். சுலபமான வேலை. லட்டு மாதிரி மாசம் முடிந்தால் கையில் காசு... வலிக்கவா செய்யும் ?

இதற்கு ஒரே வழி தேவகிதான். சொன்னேன். முடிந்தது காரியம்.

""ஐயா என் மக கணக்கா, அச்சு அசலா ஒரு பொண்ணு வந்திச்சிங்க பளிச்சின்னு கூட்டிப் பெருக்கி சுத்தம் பண்ணி தண்ணி பிடிச்சி வச்சிட்டுப் போயிடுச்சிங்க... வெடிப்பா வேலை செய்யுதுங்கய்யா... சூட்டிகையான பொண்ணு''

""என்னா ரஞ்சிதம்... இன்னைக்கு முப்பதுதானே? நாளக் கழிச்சி ஒண்ணாம் தேதிலர்ந்துதானே வரச் சொன்னாங்க?'' என்றேன்

""இருக்கட்டுங்கய்யா... ரெண்டு நா முன்னப் பார்த்தா கொறஞ்சா போறேன்? எனக்கு ஒண்ணாம் தேதிலர்ந்தே சம்பளம் கொடுங்க போதும்''

வேலை வேறு ஆளுக்குப் போய் விடக் கூடாதே என்கிற முன் ஜாக்கிரதையோ? ""பாஸ்கிட்ட ரொம்ப நெருங்கிட்டீங்க போல்ருக்கு... எங்கிட்டக் கூடச் சொல்லல ?'' கண்காணிப்பாளரின் மனக்குறையை ஒரு புன்னகையோடு தவிர்த்தேன் நான்.

அன்றைய ஞாயிற்றுக்கிழமை மணி எட்டாகிப் போனதைக் கண்டு, "அடச் சே ! இவ்வளவு நேரம் தூங்கிட்டேனா ?' சலித்தவாறேபதறிப் போய் எழுந்த நான், கொல்லைப்புறம்
சுற்றிலும் பற்றுப் பாத்திரங்கள் புடை சூழ அமர்ந்திருக்கும் ரஞ்சிதத்தைக் கண்டு துணுக்குற்றேன்.
""அதுவாத்தாங்க வந்திச்சு... அங்க மட்டுமாச்சும் போயிட்டு வான்னாரு... இனி தெனம் வர்றேன்க்கா... பாத்திரங்களப் போட்டு வைங்கங்குது'' என்றாள் தேவகி முகத்தில் ஏக சந்தோஷம் !
ஆறப்போடும் ஒரு விஷயம் சமயங்களில், அதன் போக்கில், சுலபமாய்த் தீர்ந்து விடுகிறது... அலைவரிசை ஒன்று கூடும்போது ! அவ்வளவுதான். நினைத்துக் கொண்டேன் ராசியான, துடியான பொண்ணு அந்த மனோகரனுக்கேத்த மனோ-ரஞ்சிதம் ஜாடிக்கேத்த மூடி.
வழக்கம்போல் மாலையில் க்ரில் தடுப்புக்கு உள் திட்டில் பூப்பந்து ! எப்போ வச்சுது ? கண்ணுக்கே புலப்படாத மோகினியாட்டம் , தொடர்கிறது.
""பார்றா ! இத இன்னும் விட்டபாடில்லயா ?'' - பூவை எடுத்துத் தலையில் செருகிக் கொண்டே துள்ளலாய்ச் செல்லும் தேவகியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே கூறினேன். வீடே மல்லிகையால் மணந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com