நானும் என் எழுத்தும்!

நான் எந்த நேரத்தில் எழுதப் பேனாவைப் பிடித்தேனோ, இன்றுவரைக்கும் அந்த எழுத்துப் பிழைகள் என்னை விட்டபாடில்லை. வாத்தியார்கள் எனக்குக் கொடுத்த நிமிட்டாம் பழங்கள் எல்லாம் பாழ்.
நானும் என் எழுத்தும்!

நான் எந்த நேரத்தில் எழுதப் பேனாவைப் பிடித்தேனோ, இன்றுவரைக்கும் அந்த எழுத்துப் பிழைகள் என்னை விட்டபாடில்லை. வாத்தியார்கள் எனக்குக் கொடுத்த நிமிட்டாம் பழங்கள் எல்லாம் பாழ்.
ஆனால் ஒரு வகையில் பார்க்கிறபோது அந்த நேரம் நல்ல நேரம் கூடத்தான். கடிதம் எழுதுவதில் நான் எவ்வளவு ஆனந்தம் கொள்கிறேனோ, அதே அளவுக்கு அதை வாசிப்பவர்களும் அடைகிறார்கள்.
ஆரம்ப காலங்களில், எழுத்துப் பிழைகள் மலிந்த இருபது, 30 பக்கங்கள் கொண்ட காயிதங்கள் நான் எழுதுவது வழக்கம். அப்படி எழுத என்னதான் விஷயம் இருந்தது என்று இப்பொழுது நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமும், சிரிப்பும்தான் வருகிறது.
பொழுதுபோகாத நேரமெல்லாம் உட்கார்ந்து நண்பர்களுக்குக் கடிதங்கள் வரிஞ்சி தள்ளிக் கொண்டிருப்பேன். சில எழுதி முடிக்கப் பல நாள்கள் ஆகும். சிலது முடியாமலே கிடந்தும் போகும்.
நடுஜாமத்தில் முழிப்புத்தட்டி பிறகு தூக்கமே வரவில்லையென்றால் வெளியூர்களில் சிக்கிக் கொண்டு பொழுதே போகலையென்றால், ஏதாவது சந்தோஷமோ, துக்கமோ நடந்து முடிந்து மறுநிமிஷத்தில் இப்படி நேரங்களிலெல்லாம் பிறக்கும் என்னுடைய கடிதங்கள்.
நான் கதை எழுத ஆரம்பித்ததெல்லாம் நேற்று தான். இந்த இடத்தில் நான் ஒரு விஷயத்தைச் சொல்லியாகணும். கடிதம் எழுதும் சுகானுபவம், நான் கதை எழுதும் போது எனக்குக் கிடைத்ததில்லை.
கதை எழுத உட்கார்ந்தால், அது ஒரு பிரசவ வேதனை. எழுதும்போது நம்பிக்கை கிடையாது. எழுதி முடித்த பின்னோ திருப்தி ஏற்படவே செய்யாது.
கதை எழுத ஆரம்பித்துச் சில வரிகள் எழுதிவிட்டு, பேனாவைக் கையிற் பிடித்துக் கொண்டே கதையை மேற்கொண்டு மனசுக்குள்ளேயே மனோராஜ்யம் செய்து கொண்டு போவதில்தான் சொகம் கண்டிருக்கிறேன் நான்.
அவைகளை மடக்கிப் பிடித்து எழுத்துக்குக் கொண்டு வருவது என்பது, குழந்தை வண்ணாத்திப் பூச்சிக்குப் பின்னாலேயே திரிந்து அது உட்காரும் இடங்களிலெல்லாம் நின்று, பிடித்துக் கொண்டு வருகிற மாதிரிதான்.
என்னுடைய எழுத்தைப் பற்றி வாசகர்களுக்குச் செய்தி விசேஷமாக என்னிடம் எதுவும் இல்லை. எல்லாம் போனால் என் எழுத்து மீது எனக்கு அப்படி ஒன்றும் அதிக நம்பிக்கை இருப்பதாகச் சொல்ல முடியாது. ஆனாலும் என் எழுத்தைப் பற்றிச் சிலர் உண்மையாகவே பாராட்டிப் பேசுகிறார்கள் என்பதை நான் அறிவேன். அவர்கள் என்னை எழுதச் சொல்லி வேண்டிக் கொள்கிறார்கள்; தூண்டுகிறார்கள்.
எல்லா எழுத்தாளர்களுக்கும் இருப்பதைப் போலவே எனக்கும் என்னுடைய எழுத்து இலக்கியத் தரமாக இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு.
வாசகர்களில் ரசிகர்கள் என் எழுத்தில் ஒரு புது மாதிரியான மண் வாடை வீசுவதாகச் சொல்லுகிறார்கள். அதை நான் அறிந்திருக்கிறேன்.
நான் இப்போது திருநெல்வேலி மாவட்டமாக இருந்தாலும் வசிப்பது ஒரு தனி ரகமான பிரதேசம். இந்த இடம் தாம்பிரவருணி ஆற்றங்கரையையும் அதன் கிளை நதிகளையும் ஒட்டி வசிக்கும் நஞ்சைப் பிரதேசங்களை " தீரவாச'த்து மக்களிடமிருந்து என்னுடைய மக்கள் வசிக்கும் இந்த மானம் பார்த்த கரிசல் பூமி, பூகோளரீதியில் மட்டுமல்ல பாஷை, பழக்க வழக்கங்களில் கூட மாறுபடுகிறது. ஆகவே தான் என்னுடைய பாத்திரங்களும் தனி ரகமாக மாறுபட்டு இருக்கிறார்கள்.
என்னுடைய மக்கள் பேசுகிற பாஷையில், அவர்கள் சிந்திக்கிற மனோ இயலில், அவர்கள் வசிக்கிற சூழ்நிலையில் அமைய வேண்டும் என்னுடைய சிருஷ்டிகள் என்று நினைக்கிறவன் நான். அவர்கள் சுவாசிக்கிற காற்றின் வாடை, அவர்கள் பிறந்து அலைந்து விளையாடி நடந்து திரிகிற என் கரிசல் மண்ணின் வாசமெல்லாம் அப்படியே என் எழுத்துகளில் கொண்டு வந்துவிட வேண்டும் என்பது என்னுடைய தீராத விருப்பம். இந்த மண்ணை நான் அவ்வளவு ஆசையோடு நேசிக்கிறேன்.
எழுத்து என்னுடைய தொழில் அல்ல. என் பொழுபோக்குகளில் இதுவும் ஒன்று. என்னுடைய எழுத்தைப் பற்றி உள்ள சில விசித்திரமான என் எண்ணங்களையும், ஆசைகளையும் இப்பொழுது உங்கள் முன் வைத்து இதை முடிக்கிறேன்.
என்னுடைய எழுத்துகளைச் சத்தமிட்டு வாசிக்கக் கூடாது மனசுக்குள்ளளேயே உதடுகள் அசையாமல் - கண்களால் வாசிக்க வேண்டும்.
( மேடைகளில் பேசப்பட்ட பிரசங்கம் போன்றவைகள் அச்சாகி இருந்தாலே, அவைகளை வாய்விட்டுப் படிக்கலாம்) மௌனத்தில் பிறந்த எழுத்துகளை மௌனமாகவே படித்து அறிந்தாலே அதன் ஜீவனை அறிய முடியும். மௌன வாசிப்புக்கென்றே என் நடை உண்டாக்கப்பட்டது, உரத்து வாசிப்பதற்கு அல்ல.
ஒரு தடவை மட்டிலும் என் கதைகளை வாசிப்பவர்கள் நன்கு அனுபவிக்க முடியாது.
என்னுடைய கதைகளுக்குச் சித்திரங்கள் வரைவது எனக்குப் பிடிக்காது. காரணம் என்னுடைய பாத்திரங்களின் முகஜாடையை நான்தான் அறிவேன். எந்தப் பிரபல சித்திரக்காரனும் என்னுடைய பாத்திரங்களின் முகஜாடையையும், என் பிரதேசத்தின் சூழ்நிலையையும் அறியமாட்டார்கள்.
கையெழுத்துப் பிரதியில் படித்து எனக்கு ஏற்படும் திருப்தி என்னுடைய கதைகள் அச்சேறிய பின் படிக்கும்போது எனக்கு ஏற்படுவதில்லை. அதிலிருந்து ஏதோ ஒன்று அச்சேறியவுடன் போய்விட்டது போலத் தோன்றும்.
அச்சு இலக்கியம் என்றிருப்பது போலவே, கையெழுத்து இலக்கியம் என்றே ஒன்றைத் தமிழில் உண்டாக்க வேண்டும். உதாரணமாகப் பள்ளியறைக் கதைகள் மாதிரி. இவைகளை எக்காரணம் கொண்டும் அச்சு ஏற்றக் கூடாது.
ஏற்றவும் முடியாது என்று இருக்க வேண்டும்.

( "தீபம்' இதழ் தொகுப்பிலிருந்து...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com