'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 37

ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், கர்நாடகத்தின் முன்னாள் முதல்வருமான ராமகிருஷ்ண ஹெக்டேவை அங்கே சந்திப்போம் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 37

ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், கர்நாடகத்தின் முன்னாள் முதல்வருமான ராமகிருஷ்ண ஹெக்டேவை அங்கே சந்திப்போம் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவருடன் ஜீவராஜ் ஆல்வாவும் வந்திருந்தார். நான் பிரதமர் சந்திரசேகருடன் தொடர்பில் இருப்பவன்என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும் என்பதால், என்னைத் தனியாக அழைத்துப் போனார் ஹெக்டே. அங்கிருந்த நாற்காலியில்அமர்ந்தோம்.

""சோ எல்லாம் எடுத்துச் சொல்லியும் அவர் ஏன் பிடிவாதமாக இப்படிப் பதவி விலகி விட்டார்? நீங்கள் யாருமே தடுக்கவில்லையா?''

""சந்திரசேகர்ஜியைத் தடுக்கும் அளவுக்கு நான் இல்லை. எல்லாரும் சொல்லிப் பார்த்தோம். அவர் கேட்கவில்லை. காங்கிரஸ் தனது ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு முன்பு தானே பதவி விலக வேண்டும் என்று அவர் நினைத்தார் என்பது மட்டும் எனக்குத் தெரியும்.''

""சந்திரசேகர்ஜி இன்னும் ஓர் ஆண்டு பிரதமராக இருந்திருந்தால் பல பிரச்னைகளுக்கு முடிவு எட்டியிருக்க முடியும். சோ என்னுடன் இரண்டு மூன்று தடவை பேசினார்.''

""சோ சாருக்கு சந்திரசேகர்ஜி பதவி விலகுவதில் உடன்பாடில்லை. அப்படியே விலகுவதாக இருந்தாலும், காங்கிரûஸ ஆதரித்து ராஜீவ் காந்தி பிரதமராவதற்கு உதவ வேண்டும் என்று வற்புறுத்தினார். பிரதமர் அதையெல்லாம் ஏற்றுக் கொள்வதாக இல்லை.''

""என்னிடமும் சோ அப்படித்தான் சொன்னார். பழைய காங்கிரஸ்காரர்கள் எல்லோரும் மீண்டும் காங்கிரஸில் சேர வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதெல்லாம் நடக்க முடியாத காரியங்கள். சரி, நீ இன்னும் எத்தனை நாள் தில்லியில் இருப்பாய்?''

""நாளைக்கே நான் சென்னை திரும்புகிறேன். தேர்தல் வந்துவிட்டது. இனிமேல் இங்கே என்ன வேலை?''

""குறித்து வைத்துக் கொள். தமிழ்நாட்டில் திமுகவுக்கு அனுதாபம் ஏற்பட்டு அதிக இடங்களில் வெற்றி பெற்றால், மீண்டும் தேசிய முன்னணி ஆட்சி அமையும். அப்படியல்லாமல், ஜெயலலிதா - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிதான் அமையும்.''

""அப்படியானால் பாரதிய ஜனதா கட்சி?''

""பிரதான எதிர்க்கட்சியாக இருக்க முடியுமே தவிர, ஆட்சி அமைக்கும் அளவிலான இடங்களில் வெற்றி பெற முடியாது. தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, எனது கணிப்பு சரியாக இருக்கிறதா என்று சொல்.''

ஹெக்டே, ஜீவராஜ் ஆல்வா இருவரிடமும் விடைபெற்று கொண்டு வெளியே வந்தேன். ஹெக்டேவின் கணிப்பு பொதுவாகத் தவறுவதில்லை. 1991 தேர்தலும் அதை நிரூபித்தது. ஆனால், அதற்குக் காரணம் அவரது கணிப்பல்ல, ராஜீவின் படுகொலை.

இந்த இடத்தில் ஒரு சிறு திருத்தம்: ஜனதா தளம் கட்சி அலுவலகம் அமைந்த ஜந்தர்மந்தர் கட்டடம் பாழடைந்த நிலையில் இல்லை என்கிற தகவலை சிலர் தெரிவிக்கிறார்கள். இப்போதும் அங்கே ஐக்கிய ஜனதா தளத்தின் அலுவலகம்
இயங்கிக் கொண்டிருக்கிறது; அந்தக் கட்டடத்தை சுற்றிலும் பல ஆக்கிரமிப்புகளில் குடியிருப்புகள் இருக்கின்றன என்று தெரிவிக்கிறார்கள்.

நான் சென்னை திரும்பி விட்டேன். தனது அமைச்சரவை கலைக்கப்பட்டதை முன்வைத்துத் திமுக தலைவர் கருணாநிதி தனது பிரசாரத்தைத் தொடங்கி இருந்தார். அதிமுகவும், காங்கிரஸூம் கூட்டணியாகத் தேர்தலை எதிர்கொள்ள முனைப்புடன் களமிறங்கி இருந்தன.

ஹைதராபாதிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த "ஈ நாடு' குழுமத்திலிருந்து "நியூஸ் டைம்' என்கிற ஆங்கில நாளிதழ் வெளிவந்து கொண்டிருந்தது. அதன் தமிழக சிறப்பு நிருபராக இருந்தவர் நண்பர் பி.கே. பாலச்சந்திரன். நாங்கள் இருவரும், தேர்தல் நிலவரம் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் காரில் பயணம் செய்து கொண்டிருந்தோம்.

மே மாதம் 21-ஆம் தேதி. நாங்கள் நாமக்கல்லில் இருந்தோம். அப்போதுதான் அந்தப் பேரதிர்ச்சிச் செய்தி காட்டுத் தீயாகப் பரவியது. ஒட்டுமொத்த இந்தியாவே அதிர்ந்தது. சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார் என்ற செய்தியும், அதைத் தொடர்ந்து எழுந்த கலவரமும் எங்களை நாமக்கல்லிலேயே முடக்கிப்போட்டுவிட்டது.

நாமக்கல்லில் சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு அருகில் வி.வி.ஆர். மண்ணெண்ணெய் ஏஜென்ஸி வைத்திருந்த ராமசாமி செட்டியாரின் குடும்பம் அந்தக் கலவரச் சூழலில் எங்களுக்கு அடைக்கலம் தந்ததை அவர்கள் மறந்திருக்கலாம்.

நாங்கள் வாழ்நாளில் மறக்க முடியாது. நெடுஞ்சாலைகள் அனைத்தும் ஆங்காங்கே மரங்கள் வெட்டிப் போடப்பட்டு தடுக்கப்பட்டிருந்த நிலையில், நானும், பி.கே. பாலச்சந்திரனும் நாமக்கல்லில் மாட்டிக் கொண்டோம். ராமசாமி செட்டியார் குடும்பத்தினர் உணவளித்து ஆதரித்தனர். ஒரு நாள் கழித்துதான், காவல்துறையின் பாதுகாப்புடன் நாங்கள் சென்னை திரும்ப முடிந்தது.

தனிப்பட்ட முறையில் சில தடவைகள் சந்தித்தித்திருக்கிறேன் என்பதால், ராஜீவ் காந்தியின் படுகொலை என்ன நிலைகுலைய வைத்துவிட்டது. களங்கமற்ற அந்த சிரித்த முகமும், வெளிப்படையான பேச்சும் வாழ்நாளில் மறந்துவிடக் கூடியதா என்ன?

சென்னை விமான நிலையத்துக்கு வந்தது, அங்கே ஊடகவியலாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தது, ஸ்ரீபெரும்புதூர் சென்றது, குண்டு வெடித்தது என்று, அன்றைய தினம் சென்னையில் நடந்த எல்லா நிகழ்வுகளையும் எனக்கு நேர்முக வர்ணனை போல தெரிவித்தவர் "கராத்தே' தியாகராஜன். அப்போது ஜி.கே. மூப்பனாரின் வலது கரமாக இருந்த "கராத்தே' தியாகராஜன், ராஜீவ் காந்தியின் கடைசி சில மணிநேரங்கள் அருகில் இருந்தவர்களில் ஒருவர்.

குண்டு வெடிப்புக்குப் பிறகு சிதறிக் கிடந்த உடலை அடையாளம் கண்டதும், உடனே மூப்பனாருக்கும் ஜெயந்தி நடராஜனுக்கும் அதைத் தெரிவித்து உறுதிப்படுத்தியதும் "கராத்தே' தியாகராஜன் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. அதுமட்டுமல்ல, ராஜீவ் காந்தியின் சிதறிக் கிடந்த உடலை எல்லாம் சேகரித்து சென்னை பொது மருத்துவமனைக்கு (இப்போது ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை) பிரேதப் பரிசோதனைக்கு எடுத்துச் சென்றதுவரை, அவர் உடன் இருந்திருக்கிறார்.

தியாகராஜன் தந்த தகவலின் அடிப்படையில் புகைப்படங்களுடன் "நியூஸ்கிரைப்' மூலம் நான் அனுப்பிய செய்திகள், புலன் விசாரணைக்கு பயன்பட்டன என்று பின்னாளில் தெரிந்து கொண்டேன். ராஜீவ் காந்தியின் படுகொலை இந்திய அரசியலையே புரட்டிப் போட்டுவிட்டது.

1991 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் இரண்டு பேருக்குப் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை. முதலாமவர் பி.வி. நரசிம்மராவ். வயோதிகம் காரணமாக மீண்டும் போட்டியிடவோ, தீவிர அரசியலில் ஈடுபடவோ தனக்கு விருப்பமில்லை என்று ராஜீவ் காந்தியிடம் தெரிவித்து விட்டவர் பி.வி. நரசிம்ம ராவ். அவரது வீட்டைக் காலி செய்து பொருள்களை எல்லாம் ஹைதராபாத்துக்கு அனுப்பியும் விட்டார்.

தேர்தல் முடிவுகள் வருவதுவரை, அவரை தில்லியிலேயே இருக்கச் சொன்னார் ராஜீவ் காந்தி. கட்சித் தலைமையகத்தின் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ராஜீவ் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பதால், தலைமையகத்தின் அன்றாட அலுவல்களைக் கண்காணிப்பதும், தேர்தல் செலவுகள் குறித்த பொது நிர்வாகமும் அவரிடம்தான் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

இன்னொருவர் பிரணாப் முகர்ஜி. தேர்தல் பிரசாரக் குழுவின் தலைவராகவும், தலைமை செய்தித் தொடர்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார் அவர். நல்ல நண்பர்கள் என்பதால், பிரணாப்தாவும், நரசிம்ம ராவும் 24. அக்பர் சாலை அலுவலகத்தில்தான் தங்களது பெரும்பாலான நேரத்தைக் கழித்தனர் என்பது, பிறகு ஒருமுறை பிரணாப் முகர்ஜி சொல்லி எனக்குத் தெரியும்.

நரசிம்ம ராவ் தீவிர அரசியலுக்கு முழுக்குப் போட முடிவெடுத்திருந்ததால், தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. ஆனால், பிரணாப் முகர்ஜி தேர்தலில் போட்டியிட விரும்பினார். ராஜீவ் காந்தியிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்திருப்பதாகவும் என்னிடம் கூறியிருந்தார். அவருக்குப் போட்டியிட ஏன் வாய்ப்பளிக்கவில்லை என்பது இப்போது வரை புதிராக இருக்கிறது. எனக்கு மட்டுமல்ல, பிரணாப்தாவுக்கே அது புதிராகத்தான் தொடர்ந்தது.

மக்களவைக்கான மூன்று கட்ட வாக்குப்பதிவில், முதல் கட்டமாக 204 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவுதான் நடந்திருந்தது. ராஜீவ் படுகொலையைத் தொடர்ந்து அடுத்த நாள் நடக்க வேண்டிய வாக்குப்பதிவை நடத்துவதா, தள்ளிப் போடுவதா என்கிற குழப்பம் எழுந்தது. தேர்தலைத் தள்ளிப்போடுவது என்கிற உடனடி முடிவை எடுத்தவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த டி.என். சேஷனும், பிரணாப் முகர்ஜியும்தான்.

காங்கிரஸ் செயற்குழுவில் முழுநேர உறுப்பினராக இல்லாமல் இருந்த பிரணாப் முகர்ஜி தன்னிச்சையாக அந்த முடிவை எடுத்தது குறித்து சில மூத்த தலைவர்கள் மத்தியில் விமர்சனம் எழுந்தது. பிரதமராக இருந்த சந்திரசேகரை ஏன் இது குறித்து கலந்தாலோசிக்கவில்லை என்கிற கேள்வியும் அப்போது எழுப்பப்பட்டது.

சந்திரசேகர்ஜியின் வேண்டுகோளின்படிதான், பிரணாப் முகர்ஜியை டி.என். சேஷன் கலந்தாலோசித்து முடிவெடுத்தார் என்பதுதான் உண்மை.

ராஜீவ் படுகொலையைத் தொடர்ந்து தில்லியில் நடந்த நிகழ்வுகளை ஒருமுறை பிரணாப்தா எங்களிடம் விவரித்தார். எங்களிடம் என்றால் ஆறேழு பத்திரிகையாளர்களிடம். இது நடந்தது, பத்து ஆண்டுகள் கழித்து.

சாவகாசமாக அவரது அறையில் அமர்ந்து அந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்தார் அவர். நடுநடுவே தனது பைப்பில் புகையை இழுத்துக் கொண்டார்.

""அப்போது நான் காங்கிரஸ் செயற்குழுவில் முழுநேர உறுப்பினர் அல்ல. சிறப்பு அழைப்பாளர் மட்டும்தான். கட்சியின் பொருளாளரான சீதாராம் கேசரி செயற்குழுவைக் கூட்டும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். மூத்த தலைவர் என்கிற முறையில், கே. கருணாகரனின் தலைமையில் காங்கிரஸ் செயற்குழுவை அவசர அவசரமாகக் கூட்டினேன்.

அப்போது பொதுச்செயலாளர்களாக இருந்தவர்கள் பல்ராம் ஜாக்கர், ராஜேந்திர குமாரி பாஜ்பாய், குலாம் நபி ஆஸாத், மீரா குமார், ஜனார்த்தன பூஜாரி, ஹெச்.கே.எல். பகத் ஆகியோர்தான். அவர்களில் ஒருவர்தான் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். தலைமை வகிக்க வேண்டும். கட்சியின் பொருளாளரும், மூத்த தலைவருமான சீதாராம் கேசரியின் கட்டளை என்றவுடன் அனைவரும் எதுவும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. அதற்கான நேரமும் அதுவல்ல.

அப்போது என்னைத் தனியாக அழைத்து, பல்ராம் ஜாக்கர் ஒரு கேள்வியை எழுப்பினார். ஏதாவது எதிர்பாராத நிகழ்வு ஏற்பட்டு கட்சித் தலைமைப் பொறுப்பு காலியானால், மூத்த பொதுச் செயலாளர் தலைவராக வேண்டும் என்று ஒரு விதி இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார். அப்போதைய காங்கிரஸ் செயற்குழுவில் பல்ராம் ஜாக்கர்தான் மூத்த பொதுச்செயலாளர்.

பல்ராம் ஜாக்கரின் கோரிக்கை விதிமுறைப்படி சரியானது. அந்த நேரத்தில் அவரால் தனக்கு ஆதரவாக மற்றவர்களைத் திரட்ட முடியவில்லை. அவரது சார்பில் நான் பேச வேண்டும் என்று அவர் விரும்பினார். அதற்கு நான் தயாராக இல்லை. காங்கிரஸ் செயற்குழு முடிவெடுக்கட்டும் என்பதுதான் எனது எண்ணமாக இருந்தது.

நான் இரண்டு பேர்களைத் தொடர்பு கொண்டு கேட்டேன். ஒருவர் ஜி.கே. மூப்பனார், மற்றவர் பி.வி. நரசிம்ம ராவ். அவர்கள் இருவருமே செயற்குழு முடிவெடுக்கட்டும் என்று சொல்லிவிட்டார்கள்.

ராஜீவ் படுகொலைக்கு மறுநாள், அக்பர் சாலை காங்கிரஸ் தலைமையகத்தில் செயற்குழு கூடியது. ஆளுக்கொரு பெயரை முன்மொழிந்தனர். ஒவ்வொருவருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவராகிவிட வேண்டும் என்கிற ஆசை இருந்தது.

அப்போது நான் முன்மொழிந்த பெயர் யாருடையது தெரியுமா?''

பிரணாப்தா கேட்டுவிட்டு சாவகாசமாகத் தனது பைப்பை பற்ற வைப்பதில்
மும்முரமானார். நாங்கள் ஆர்வத்தின் உச்சத்தில் இருந்தோம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com