பேல்பூரி

எங்களிடம் வந்தால் போதும், நம்ம தாத்தா-பாட்டி போல் ஆரோக்கியமாக வாழலாம். 
பேல்பூரி


கண்டது


(சிதம்பரத்தில் உள்ள ஒரு நாட்டு மருந்துக் கடையில் எழுதப்பட்டுள்ள வாசகம்)

எங்களிடம் வந்தால் போதும், 
நம்ம தாத்தா-பாட்டி போல் ஆரோக்கியமாக வாழலாம். 

பொ.பாலாஜிகணேஷ்,
கோவிலாம்பூண்டி. 

(அம்பாசமுத்திரம் புத்தகக் கடை ஒன்றில்  கண்ட  வாசகம்)

உன் "இலக்கை' விட்டு விடாதே!
அதில் தான் "லக்'  இருக்கிறது!

ஆ. மாடக்கண்ணு,
ப்பான்குளம்.

(நாகை-சீர்காழி சாலையில் ஓர் ஊரின் பெயர்) 

கருவி 

எம்.எஸ்.ராஜவேல், மஞ்சக்கொல்லை-611106

கேட்டது


(வானவன்மாதேவி வேப்பமரத்தடி கடைத்தெருவில் இருவர்)

 ""ஏண்டா மாப்ள... காய்கறி வாங்க கடைத்தெரு பக்கம் வந்துருக்கே? ஆனா இப்படி  மாஸ்க்  போடாம வந்திருக்கியே?''

""ரெண்டு  மாஸ்க் போடச் சொல்லியிருக்காங்க...  என்கிட்ட ஒரேயொரு மாஸ்க்கு தான் மாப்ள இருக்கு... அதான் போடல!'' 

-எஸ்.சுதாகரன்,
வானவன்மாதேவி.

(செங்கல்பட்டு அழகேசன் நகர் பேப்பர் கடை எதிரில் இருவர் பேசிக் கொண்டது)

""எங்கடா உன் நண்பரைக்  காணோம்?''
""15  நாள் டூர் போய் இருக்கிறார்''
"" எந்த ஊர்?'' 
""ஏதோ குவாரண்டைனாம்''

க.அருச்சுனன்,
செங்கல்பட்டு.

யோசிக்கிறாங்கப்பா!


நமக்கு "பாஸிட்டிவ்' என்று தெரிந்தால் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள்
"நெகட்டிவ்' ஆகிவிடுகிறார்கள்.

- ராம்ஆதிநாராயணன்,  
தஞ்சாவூர் - 1


மைக்ரோ கதை

ரயில் பயணத்தை விரும்பாதவர்கள் இருக்க முடியாது.  இரவில் ரயிலில் படுத்துக்கொண்டே பயணிப்பது சுகமானது. ஆனால் ராமநாதனுக்கு, அந்த சுகமான பயணம் கிடைப்பதே இல்லை. 60 வயதை நெருங்கும் ராமநாதனுக்கு எப்போது ரிசர்வேஷன் செய்தாலும் "அப்பர் பெர்த்'தே ஒதுக்கப்பட்டு இருக்கிறது. 

இருந்தாலும், அவ்வப்போது லோயர்பெர்த்தில் யாராவது இளசுகள் இருந்தால்... நைச்சியமாகப்பேசி,  தான் ஒரு "சுகர் பேஷண்ட்' என்று கூறி அவர்களை அப்பர்பெர்த்துக்கு போக வைத்து, இவர் "லோயர் பெர்த்'தில் ஜன்னல் காற்று குளுமையில் சுகமாக தூங்கிக் கொண்டு பயணிப்பார்.

ஆனால், இந்த முறை அதிசயமாக அவருக்கு "லோயர் பெர்த்' டிக்கட்டே கிடைத்திருந்தது. மகிழ்ச்சியுடன் ஏறி தனது பெர்த்தில் பையைத் தலைக்கு வைத்து, போர்வையை விரித்துப் போட்டு... ரயில் புறப்படட்டும் தலையைச் சாய்க்கலாம் என்று உட்கார்ந்தார். அப்போது தான் அந்தப் பெண் தன் கைக்குழந்தையுடன் ஏறி,  சீட் நம்பரை பார்த்துக் கொண்டு வந்தாள். அவள் சீட் இவருக்கு நேர் மேலே உள்ள "அப்பர் பெர்த்' என்பதைப் பார்த்து அதிர்ந்த அவள், கீழே "லோயர் பெர்த்'தில் ஹாயாக அமர்ந்திருந்த ராமநாதனிடம்... ""சார்... கைக்குழந்தை வச்சிருக்கேன் சார்... என்னால மேல ஏற முடியாது சார்...  நீங்க இந்த சீட்டை எனக்குக் கொடுத்தால் ரொம்ப புண்ணியமா போகும்... நீங்க அந்த சீட்டுல படுத்துக்குங்க சார்... என்றாள் பாவமாக.

அப்புறமென்ன... "நமக்கும் "லோயர் பெர்த்'துக்கும் ராசியே இல்லை' என்று மனதுக்குள் முனகியவாறு "அப்பர்பெர்த்'துக்கு "தாவ' தயாராகிக் கொண்டிருந்தார் ராமநாதன். 

 - க.விஜயபாஸ்கர்,
திருச்சி. 

எஸ்.எம்.எஸ்.


ஆறுதல் என்ற பெயரில்...
இரகசியங்களைத் தெரிந்து கொள்பவர்களே அதிகம்.

- கே. முத்துச்சாமி, 
ராமநாதபுரம். 

அப்படீங்களா!

எந்த மருந்து கண்டுபிடித்தாலும்  அவற்றை முதலில் மனிதர்களுக்குச் செலுத்தி சோதனை செய்யமாட்டார்கள்.  சிம்பன்ஸி குரங்குகளுக்கு அந்த மருந்தை ஏற்றிச் சோதனை செய்து பார்த்த பிறகே, மனிதர்களின் உடலில் அந்த மருந்தை ஏற்றுவார்கள். 

 குறிப்பாக கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை சோதனை செய்து பார்ப்பதற்கு   குரங்குகள் உதவியாக இருக்கின்றன. 

""ஏனென்றால், அவற்றின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பாற்றல் அமைப்பு, கிட்டத்தட்ட மனிதர்களின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பாற்றல் அமைப்பைப் போலவே இருக்கிறது. எனவே கரோனா வைரஸ் தடுப்பு மருந்தை சிம்பன்ஸி குரங்களுக்குச் செலுத்தி சோதனை செய்து  பார்ப்பது மிகவும் பயனுடையதாக இருக்கிறது'' என்கிறார் ஜோயென்னி ஃபிளின் என்கிற  பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தடுப்பு மருந்து ஆராய்ச்சியாளர். 

உலகம் முழுவதும் கரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தைத் தயாரிப்பதில் கடும்போட்டி  இப்போது நிலவுகிறது.  எனவே தடுப்புமருந்தைச் சோதனை செய்து பார்க்க உதவும் குரங்களுக்கு இப்போது பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது. 

மருத்துவ ஆராய்ச்சிகளுக்காக   60 சதவீத குரங்குகளை - கிட்டத்தட்ட 35 ஆயிரம் குரங்குகளை இதற்கு முன் சீனா  அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வந்தது.  கரோனா தொற்று ஏற்பட்ட பிறகு,   குரங்குகளை அனுப்புவதை சீனா நிறுத்திவிட்டது. 

எனவே மருத்துவ ஆராய்ச்சிகளுக்காக மிருகங்களைப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, மாற்றுமுறைகளைத் தேட வேண்டிய  கட்டாயத்துக்கு ஆராய்ச்சியாளர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். 

என்.ஜே.,
சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com