வாககு

வீடு "ஜேஜே' என்றிருந்தது. சொல்லாமல் கொள்ளாமல் காயத்ரி ஊரிலிருந்து வந்து விட்டாள். ஒண்டியாய் இல்லை. அவள், மாப்பிள்ளை, சம்பந்தி அப்புறம் காயத்ரியின் மச்சினி அனு என்று ஒரு சின்னப் படையே வந்து விட்டது.
வாககு

வீடு "ஜேஜே' என்றிருந்தது. சொல்லாமல் கொள்ளாமல் காயத்ரி ஊரிலிருந்து வந்து விட்டாள். ஒண்டியாய் இல்லை. அவள், மாப்பிள்ளை, சம்பந்தி அப்புறம் காயத்ரியின் மச்சினி அனு என்று ஒரு சின்னப் படையே வந்து விட்டது. சொல்லாமல் கொள்ளாமல் வருபவர்கள் தம்முடன் கூடவே கலக்கத்தையும் அழைத்துக் கொண்டு வந்து விடுகிறார்கள். திருச்சியிலிருந்து மத்தியானம் சாப்பாட்டுக்கு மேல் இரண்டு மணிக்குப் பெரிய காரில் கிளம்பியவர்கள் நாலரை மணிக்கு வந்து விட்டார்கள். காயத்ரியின் அப்பா இன்னும் அவரது ஆபிசிலிருந்து வீடு திரும்பவில்லை. அவருக்கு வெள்ளிக்கிழமைதான் பாக்டரியில் வாராந்திர விடுமுறை. காயத்ரியின் தம்பி சேஷாவுக்கு, பத்து வயசாகிறது, அக்காவைப் பார்த்து விட்டு கிரிக்கெட் ஆட என்று அடுத்த தெருவுக்கு ஓடிப் போய் விட்டான்.

வந்தவர்களை ஹாலில் உட்கார வைத்து விட்டுக் காப்பி கொண்டு வர சமையலறைக்குள் புகுந்த பர்வதத்துடன் ஒட்டிக் கொண்டே காயத்ரியும் வந்தாள்.

""என்னடி திடீர்னு சொல்லாம கொள்ளாம?'' என்று சற்றுக் கலவரத்துடன் கேட்டாள்பர்வதம்.

""உன்னைப் பாக்கணும்னு தோணித்து. அதனாலே கிளம்பி வந்துட்டேன் பர்வதம்'' என்று அம்மாவைக் கட்டிக் கொண்டு சிரித்தாள். சிறு வயதிலேயே அம்மாவைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது அவளுக்குப் பழக்கமாகி விட்டது. பர்வதத்துக்கு ஜம்புநாதன் என்கிற அம்புவுடன் கல்யாணமாகிப் புக்ககம் வந்த போது அவளைப் பெரிய சம்சாரம் எதிர் கொண்டது. அம்புவின் பெற்றோர் தவிர, அவனுடைய நான்கு தம்பிகள், நான்கு தங்கைகள், விதவையாகி அந்த வீட்டில் தங்க வந்து விட்ட அம்புவின் அத்தை என்று வீடு நிறைய மனிதர்கள். அம்புவின் கடைசித் தம்பி, கடைசித் தங்கை தவிர மற்ற எல்லோரும் பர்வதத்தைப் பெயர் சொல்லியே அழைத்தார்கள். அதனால் பர்வதத்தின் முதல் குழந்தையான காயத்ரியும் அதைக் கேட்டுக் கேட்டு அம்மாவைப் பெயர் சொல்லிக் கூப்பிட ஆரம்பித்து விட்டது.

""விளையாடாதே'' என்றாள் பர்வதம்.

""அனுவுக்கு ராமேஸ்வரத்திலே ஏதோ வேண்டுதலாம். ரொம்ப நாளா தப்பிப் போயிண்டே இருக்கு. போகலாமான்னு கேட்டா. இவரும் ரெண்டு நாள் லீவு எடுத்துண்டு அதை முடிச்சிடலாமேன்னார். நாம கேட்டா ஆபீசிலேர்ந்து அரை மணி முன்னாலே வரதுக்கு அப்படி ஒரு ஆகாத்தியம் பண்ணுவார். தங்கச்சின்னா விட்டுக் கொடுக்க மனசு வரதா?'' என்றாள்.

""ராமேஸ்வரம் போறது உனக்கு இது நாலாவது தடவை இல்லியோ?'' என்றாள் பர்வதம்.

""எப்படிம்மா இதையெல்லாம் நீ ஞாபகம் வச்சிண்டிருக்கே? எனக்கே அப்பப்போ ரெண்டு தடவையா மூணு தடவையான்னு சந்தேகம் வரும். கொஞ்சம் விட்டா எந்தெந்த வருஷம், மாசம் நாள் கிழமை நான் போனேன்னு கூட சொல்லிடுவே போலிருக்கே!'' என்றாள் காயத்ரி.

""யார் யார் எங்கெங்கே போறா வரான்னு நீ பாத்துண்டு இருந்தாப் போறும்ன்னு வச்சிட்டானே அந்தக் கடவுள்! இல்லாட்டி முப்பது வருஷமா மதுரைலே இருந்துண்டு ஒரு ராமேஸ்வரம் இல்லே கன்யாகுமரின்னு போயிருக்கேனா?'' என்றாள் பர்வதம்.

""சீ, இந்த அப்பா ரொம்ப மோசம்'' என்றாள் காயத்ரி. ""உன்னை மீனாட்சி அம்மனைப் பாக்கக் கூட்டிண்டு போறதுக்கே என்னமோ காசிக்குக் கிளம்பற மாதிரின்னா யோசிப்பார்? இது வரைக்கும் ஒரு நாலஞ்சு தடவையாவது மீனாட்சியைப் போய்ப் பாத்திருக்கியா?''

""ஆமா, உங்கப்பா கூட்டிண்டு போனாராக்கும்! என்னவோ பின்னாளாத்துப் பாகவதர் மாமி என்னைத் தரதரன்னு இழுத்துண்டு ஒரு தடவை அம்மன் கோயிலுக்குப் போய் மீனாட்சி கல்யாணம் காமிச்சாளோ, நான் பார்த்தேனோ! இன்னொரு வாட்டி அழகர் ஆத்திலே இறங்கறதைப் பார்க்கவும் அவளேதான் கூட்டிண்டு போனா'' என்றாள் பர்வதம்.

""இதெல்லாம் நீயா வரவழைச்சிண்டதுதானே! அவர் எது சொன்னாலும் தலையைத் தலையை ஆட்டிண்டு இருந்தேன்னா இப்பிடித்தான் ஆகும்'' என்றாள் காயத்ரி சற்றுக் கோபத்துடன்.

""ஆமா. இனிமேதான் நான் நாகப் பாம்பு மாதிரி தலையைத் தூக்கிண்டு நிக்கணுமாக்கும்! கடலைத் தாண்ட ஆசை இருக்கு; கால்வாயத் தாண்டக் கால் இல்லேன்னானாம். என்னிக்கி வைத்தியநாதய்யர் ஆத்துக்குள்ளே காலெடுத்து வச்சேனோ, அன்னிலேந்து சமையல்கட்டே எனக்குக் கோயில் குளம் எல்லாம்னு ஆயிடுத்து. போயேன்.''

""ஓ... தாத்தாவும் அப்பா மாதிரிதானா?'' என்றாள் காயத்ரி.

""ஐயோ பாவம், சொர்க்கத்துக்குப் போய்ச் சேர்ந்துட்ட அந்தப் பிராமணனை ஏன் வம்புக்கு இழுக்கறே? ரொம்ப சாது. நல்ல மனுஷன்'' என்று கண்கள் பளபளக்கப் பர்வதம் சொன்னாள்.

அவளைப் பார்க்கப் பார்க்க வியப்பும் பரிதாபமும் சேர்ந்து வந்தன காயத்ரிக்கு.
""சரி, இது வரை போனது போகட்டும்மா. காத்தாலே நீயும் எங்களோடே கிளம்பி வரே'' என்றாள் காயத்ரி.

""என்ன உளர்றே? நானா? ராமேஸ்வரத்துக்கா? சும்மா கிட''

""ஆமா. நீ சும்மா கிட. அப்பாவை நான் பாத்துக்கறேன்'' என்றாள் பெண்.

அம்பு அன்று ஆபிசிலிருந்து சீக்கிரம் கிளம்பி வந்து விட்டார். உள்ளே வரும் போதே, ""குட்டி என்ன சொல்றது?'' என்று கேட்டுக் கொண்டே வந்தார். அவருக்குக் காயத்ரி என்றால் உயிர். காயத்ரிக்கு இருபத்தியோரு வயதாகிறது. ஆனால் அவருக்கு என்னமோ அவள் குட்டிதான். விருந்தினர்கள் எல்லாரும் ஹாலில் உட்கார்ந்திருந்தார்கள். அம்பு எல்லோரிடமும் úக்ஷம லாபங்களை விசாரித்தார். பர்வதம் அவருக்குக் காப்பி கொண்டு வந்த போது எல்லாருக்கும் சேர்த்து இன்னொரு ரவுண்டு காப்பி கொண்டு வந்தாள்.

""உன்னை உன் கல்யாணத்தப்போ பாத்தது. அப்புறம்தான் புக்ககம்னு ஐதராபாத்துக்குப் போயிட்டியே. அங்கேயும் இந்த ஊர் மாதிரி வெய்யில் ஜாஸ்தியாமே?'' என்று அனுவிடம் கேட்டார்.
""ஆமா. மதுரை எவ்வளவோ தேவலை போங்கோ. நான் அங்கே போன புதுசுலே பக்கத்தாத்துலே ஒரு தாத்தா இருந்தார். ரொம்ப வருஷமா அங்கேயே இருக்கிறவர். ஒரு நாஅவர் சொன்னார், ஐதராபாத்துனு பேர் வைக்கிறதுக்கு முன்னாலே அந்த ஊர் பேர் தோட்ட நகரமாம். ஐதராபாத்னு பேர் வச்சதுக்கு அப்புறம் தோட்டமுமில்லே குளிர்ச்சியும் இல்லேன்னார். வெய்யில் இப்பிடி போட்டுக் கொல்லறதேன்னு கேட்டேன்.
இந்த ஊர்லே ஏப்ரல்லேந்து ஆகஸ்ட் வரைக்கும் வெய்யில் பொசுக்கித் தள்ளிடும்; டெரிபிள் சம்மர்ன்னார். மறுபடியும் எப்போ அது திரும்ப ஆரம்பிக்கும்னு கேட்டேன். செப்டம்பர்லேன்னார்!'' என்றாள் அனு.
எல்லாரும் சிரித்தார்கள்.
அப்போது சேஷா வெளியிலிருந்து வீட்டுக்குள் ஓடி வந்தான்
அம்பு அவனைப் பார்த்து, ""என்னடா, அக்கா அத்திம்பேர்லாம் ஊர்லேந்து வந்திருக்கா. நீ எங்கடா சுத்திட்டு வரே?'' என்றார்.
""நான்தானே கார்லேந்து அக்காவோட பெட்டியெல்லாம் எடுத்துண்டு வந்து உள்ளே வச்சேன்!'' என்றான் சேஷா.
""ஐயோ பாவம்! குழந்தைதான் எல்லாத்தையும் தூக்கிண்டு வந்தது'' என்று காயத்ரி அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள்.
""இன்னிக்கி அக்கா வந்துட்டான்னு படிப்பு மட்டந்தானே!'' என்று அம்பு அவனைக் கேலி செய்தார்.
""ஹோம் ஒர்க்லாம் நேத்திக்கே முடிச்சிட்டேம்ப்பா'' என்று சிரித்தான் சேஷா.
""எப்படியிருந்தாலும் இன்னும் நாலஞ்சு நாள் புஸ்தகத்தை கையிலே எடுக்க மாட்டே'' என்றார் அம்பு.
""நாலஞ்சு நாளா? அப்பா, நாங்க நாளைக்கு ராமேஸ்வரம் போறோம். வேண்டுதல் இருக்கு அனுவுக்கு. அதையும் சாமி தரிசனத்தையும் முடிச்சிண்டு நாள்னிக்கிக் கார்த்தாலே கிளம்பினா செவ்வாக் கிழமை மத்தியானம் இங்கே வந்துடுவோம். புதன் கார்த்தாலே ஊருக்குக் கிளம்ப வேண்டியதுதான்'' என்றாள் காயத்ரி.
""எதுக்கு இப்படி அரக்கப் பறக்க ஒடி வரணும்? வந்ததுக்கு ஒரு வாரமாவது இருந்துட்டுப் போ'' என்றார் அம்பு.
""ரெண்டு நாள்தான் அவருக்கு லீவு கிடைச்சிருக்கு'' என்றாள் காயத்ரி.
""அது சரி. உன்கிட்டே வேணும்னா நான் கேக்கலாம். சர்க்கார் கிட்டே கேக்க முடியுமா?'' என்றார்.
மாப்பிள்ளை முகத்தில் புன்னகை தோன்றியது.
""அப்பா, நாங்க நாளைக்கிக் கிளம்பறப்போ பர்வதத்தையும் ராமேஸ்வரத்துக்குக் கூட்டிண்டு போறோம்.''
""அவளை எதுக்கு நீ இழுத்துண்டு அலையணும்? உனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கா? தலை சுத்தறதும்பா , வாயிலெடுக்க வரதும்பா, எதுவும் வெளியிலே சாப்பிட மாட்டேம்பா. நீ சாமியைப் பாக்க விடாம அடிச்சிடுவா. இவளைக் கட்டிண்டு அழறதுக்கே உனக்கு நேரம் பத்தாது. உடம்பிலே தெம்பே கிடையாது. எங்கையானும் விழுந்து வச்சு உயிர் போயிடும்'' என்று ஏதோ எமன் அவள் பின்னாலேயே சுற்றிக் கொண்டு வருவது போலப் பேசினார் அம்பு.
""நீ எப்பவும் இப்பிடிச் சொல்லியே அவளைச் சமையல் உள்ளுக்குள்ளே அடைச்சு வச்சிருக்கே. நீ மட்டும் எல்லா இடத்துக்கும் போறே, வர்றே. நீ சொல்ற மாதிரி அவ வியாதிக்காரின்னா எப்பவும் பெட்லேன்னா கிடக்கணும்? இல்லே ஆஸ்பத்திரிக்குப் போயிண்டு வந்துண்டு இருக்கணும். எப்பப் பத்து பேர் விருந்துன்னு இங்கே வந்தாலும் கண் பாக்கக் கை செஞ்சு முடிச்சிடும் அவளுக்கு. அவ நன்னா ஹெல்தியாதான் இருக்கா. நாங்க பஸ்லேயோ ட்ரெய்ன்லேயோ இடிச்சிண்டு கசங்கிண்டு போகப் போறதில்லே. கார்லேதான் போறோம். நாங்க அஞ்சு பேர் அவ கூட இருப்போம். மத்ததையெல்லாம் ராமநாத ஸ்வாமி பாத்துப்பார். அப்புறம் என்ன கவலை உனக்கு? பர்வதம் , நீ ரெண்டு புடவை, ரெண்டு ரவிக்கை எடுத்து எங்கிட்டே கொடு. மத்த சாமான்லாம் நாங்க எடுத்துண்டு வந்திருக்கோம். அந்தப் பெட்டியிலே திணிச்சுக்கறோம்'' என்றாள் காயத்ரி.
""அதுக்கில்லேடி. நாளைக்குக் கொழந்தை ஸ்கூலுக்குப் போகணும். அவனைக் காலங்காத்தாலே எழுப்பி, குளிப்பாட்டி விட்டு, சமையல் பண்ணி டிபனையும் லஞ்சையும் பண்ணிக் கொடுத்து ஸ்கூலுக்கு அவதானே அனுப்பணும்? ஸ்கூல்லேந்து வந்ததும் அவனைக் கவனிச்சுக்கணும்''
பெண் இடைமறித்து, "" வேணும்னா நாங்க நாளைக்கு ராத்திரியே எவ்வளவு நாழியானாலும் திரும்ப வந்துடறோம். நாளைக்கு ஒரு நாள் மட்டும் நீ பாத்துக்கோ. வேணும்னா ஒரு நாள் லீவு போட்டுடேன். இல்லாட்டா பின்னாத்து பாகவதர் மாமி இருக்கா. அவ பொண்ணோட சேந்து இவனும் படிச்சு சாப்பிட்டு விளையாடி எல்லாம் பண்ணட்டும். நாளைக்கி ஒரு நாள்தானே? நாங்க காலம்பற அஞ்சு மணிக்குக் கிளம்பிடறோம். குட் நைட்'' என்று எழுந்து விட்டாள்.
அவள் அம்புவுக்கு ரொம்ப செல்லம். அதனால் அவர் அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை. காயத்ரி சேஷாவின் தலையைத் தடவிக் கொடுத்து விட்டு, ""குட் பாய். நாளைக்கி நீயே எல்லாம் பாத்துப்பே, இல்லையாடா ராஜா?'' என்று சொல்லி விட்டுப் படுக்கப் போனாள். மற்றவர்களும் எழுந்தார்கள்.
சேஷா அம்மாவின் அருகேதான்படுத்துக் கொள்வான். அவன் படுக்கையில் விழுந்து ஐந்து நிமிஷமிருக்கும்.
""அம்மா... அம்மா'' என்று அவளை அசைத்தான்.
""என்னடா? ஒண்ணுக்குப் போகணுமா?''
""இல்லே. நீ நாளைக்கி ஊருக்குப் போக வேண்டாம்.''
"""நீ என் சமத்துக் கண்ணோல்லியோ? நாளைக்கி ஒரு நாள்தானே? அது கூட ராத்திரி லேட்டானாலும் ஆத்துக்கு வந்துடுவோம்னு அக்கா சொன்னாளே! அம்மா சீக்கிரம் வந்துடுவேன். உம்மாச்சி பாத்துட்டு வரலேன்னா அவருக்குக் கோபம் வந்துடும். நான் ஊருக்குப் போயிட்டு வந்துடட்டா?'' என்று பர்வதம் அவனிடம் பெர்மிஷன் கேட்டாள்.
""இல்லே, நீ போகக் கூடாது''
""என்ன உனக்கு உதை வாங்கணும் போல இருக்கா? மரியாதையா நீ நாளைக்கு எழுந்து எல்லாம் நீயே பண்ணிண்டு ஸ்கூலுக்குப் போயிட்டு வரணும். நான் ராமேஸ்வரத்திலேந்து குழந்தைக்கு முத்து, சங்கு, அல்வா மிக்சர் எல்லாம் வாங்கிண்டு வருவேனே'' என்றாள்.
""இல்லே. நீ போகக் கூடாது'' அதே கீறல் விழுந்த கிராமபோன் தட்டு.
""உனக்கென்னடா அதிலே கஷ்டம்?'' என்று பர்வதம் கேட்டாள்.
""இல்லே. எனக்கு ஜுரம்'' என்று இருமிக் காண்பித்தான்.
அவன் கழுத்தில் கை வைத்துப் பார்த்து விட்டு, ""பானை ஜலம் மாதிரி ஜில்லுனு இருக்கு. பொய் சொல்லாதேடா நாயே!'' என்றாள் பர்வதம்.
சேஷா அழத் தொடங்கினான்.
அந்தச் சத்தம் கேட்டுப் படுக்கப் போன பெண்ணும் மற்றவர்களும் எழுந்து வந்து என்ன விஷயம் என்று கேட்டு மானத்தை வாங்கி விடக் கூடாது என்று பர்வதம் அவனிடம், ""சரி, சரி, நான் போகலை'' என்றாள். அவன் அடுத்த இரண்டு நிமிஷங்களில் தூங்கி விட்டான். அம்மாவின் வார்த்தை ஏதோ ஒளஷதமாக அவனுக்குள் இறங்கி விட்டது போல அல்லவா நொடியில் நித்திரா தேவியின் அணைப்பில் மயங்கி விட்டான்! ஆனால் பர்வதத்துக்குத் தூக்கம் வரவில்லை.
காலையில் நான்கு மணிக்கு எழுந்து எல்லோரும் குளிக்க வெந்நீர் போட்டு விட்டு அடுப்பை மூட்டிப் பர்வதம் பாலைக் காய்ச்சினாள். ஃபில்டரில் காப்பிப் பொடியைப் போட்டு வெந்நீரை ஊற்றினாள்.
காயத்ரி குளித்து விட்டு வந்து பர்வதத்திடம், ""அவர் குளிக்கிறார். ரெண்டு நிமிஷத்தில் வந்துடுவார். அப்ப நீ போய்க் குளிச்சிட்டு வந்துடு'' என்று காப்பியை வாங்கிக் குடித்தாள்.
பர்வதம் அவளிடம் "நான் வரலே" என்றாள்.
அவள் திடுக்கிட்டு, ""ஏம்மா? அப்பா உன்னை ஏதாவது சொன்னாரா? நான் போய்க் கேக்கறேன்'' என்று கிளம்பினாள்.
""சீச்சீ . அவர் பாவம். ஒண்ணும் சொல்லலே. சின்னவனுக்குத்தான் உடம்பு கதகதன்னு இருக்கு. தனியா விட்டுட்டுப் போக வேண்டாமேன்னு'' என்றாள்
பர்வதம்.
காயத்ரி அம்மாவைப் பார்த்தாள். பிறகு வெளியே சென்றவள் உடனே திரும்பி விட்டாள்.
""ஜொரமும் இல்லே. மண்ணாங்கட்டியும் இல்லே. தூக்கத்திலே சிரிச்சிண்டு ஜம்முனு படுத்திண்டு இருக்கான்'' என்றாள்.
""இல்லே. நான் வரலே. நீ சின்னவனுக்கு ஜுரம் அதனாலே அம்மா வரலே'ன்னு மத்தவா கிட்டே சொல்லிடு'' என்றாள் பர்வதம்.
பெண் அம்மாவை உற்றுப் பார்த்தாள். பர்வதம் அவள் கண்களைச் சந்திக்கவில்லை. இரண்டு டபராக்களில் காப்பியை ஊற்றி, ""மாப்பிள்ளைக்கும் சம்பந்திக்கும் கொடு'' என்றாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com