அப்பாவின் அறை

ஒரு வருடம் ஆகப்போகிறது. நான் அப்பாவின் அறையைப் பார்த்தபடி இருந்தேன்.
அப்பாவின் அறை

ஒரு வருடம் ஆகப்போகிறது. நான் அப்பாவின் அறையைப் பார்த்தபடி இருந்தேன். அப்பா அந்த அறையில்தான் படுத்த படுக்கையாக இருந்தார். கிட்டத்தட்ட ஏழெட்டு மாதங்களாய். அசையாமல். அவருக்கு 96-ஆவது வயது. 95- ஆவது வயது வரை அவர் நடமாடிக் கொண்டிருந்தார்.

ஒருநாள் காலையில் பூங்காவில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தேன். அப்போது மல்லிகா போன் செய்தாள்.
""என்ன?'' என்று கேட்டேன்.
""அப்பா பாத்ரூமில் குளிக்கப் போனா... அப்படியே உட்கார்ந்துட்டார். எழுந்திருக்க முடியலை. யாராவது தூக்கணும்''
பதட்டத்துடன் ஓடிவந்தேன். அப்போதே அப்பாவிற்குத் தள்ளாமை. கஷ்டப்பட்டுப் படுக்கையில் படுக்க வைத்தேன்.
கொஞ்ச நாட்களில் பழையபடி நடமாட ஆரம்பித்தார். காலையில் சீக்கிரம் எழுந்து விடுவார். நெற்றி முழுவதும் விபூதி இட்டுக் கொள்வார். பால்கனியில் போய் நிற்பார். தெருவில் போவோர் வருவோரை வேடிக்கை பார்ப்பது அவர் வழக்கம். பால்கனியிலிருந்து கத்தி எல்லாரையும் கூப்பிடுவார். எல்லாருக்கும் வாழ்த்துச் சொல்வார்.
எதிர் வீட்டிலிருக்கும் மாரியைக் கூப்பிட்டு, ""உங்க வீட்ல காப்பி குடிக்க வரட்டுமா?' என்பார்.
""வாங்க தாத்தா'' என்பான் மாரி. இவரால் மாடிப்படிக்கட்டு வழியாக இறங்க முடியாது. ஆனால் சும்மா அப்படிச் சொல்வார்.
தினமும் அப்பாவும் நானும் இருப்போம். மல்லிகா அலுவலகம் போய்விடுவாள். அப்பா 55 வயதிலேயே ரிட்டையர்டு ஆகிவிட்டார். அரசாங்க உத்தியோகம். அவருடைய அலுவலகத்தில் பணிபுரிந்த ஆண்டை விட அவர் ஓய்வூதியம் வாங்குகிற ஆண்டுகள் அதிகம்.
கடைசிச் சம்பளம் வாங்கும் ஆண்டில் ஆயிரம் ரூபாய் கூட கிடையாது. ஆனால்
ஓய்வூதியம் வாங்கும்போது ஓய்வூதியத் தொகை மாதம் 30000 ரூபாய். ஒரு பைசா செலவு செய்யமாட்டார். நானும் மல்லிகாவும் செலவு செய்ய விடமாட்டோம். படிப்புச் செலவிற்கு யாருக்காவது உதவி செய்வார்.
அப்பாவுடைய வீடுதான் இது. இதை இன்னும் கொஞ்சம் மாற்றிக் கட்டியிருந்தேன். நான் ஒரே பையன். என் அம்மா இல்லை. அப்பா மறுபடியும் திருமணம் செய்துகொள்ளவில்லை. பாட்டிதான் எல்லாம்.
பாட்டி 2000- இலேயே இறந்து விட்டாள். நானும், மல்லிகாவும், அப்பாவும்தான்.
அப்பாவிடம் சொல்வேன்.
""நான் ஜூனியர் நீங்க சீனியர்''
""எதுல?''
""ரிட்டையர்டு ஆனதுல'' சிரித்துக்கொள்வார்.
மல்லிகா காலையில் அவசரம் அவசரமாகச் சமையல் செய்து விட்டு அலுவலகம் ஓடுவாள். அவளுக்கு இன்னும் சில மாதங்கள்தான் ரிட்டையராவதற்கு. அப்பா குளிப்பதற்கு முன்னால் ஒரு சின்னத் தட்டுல சாதம் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுவார்.
"குளித்த பின் முழுமையாகச் சாப்பிடக் கூடாதா?' என்று கடுமையாகச் சொல்வேன். பின் வருத்தப்படுவேன், சொன்னதற்காக.
அப்பாவின் முக்கியமான குணம், கோபமே வராது. எது சொன்னாலும் கேட்டுக் கொள்வார்.
"என்னத்தைக் கொண்டு போகப்போறோம். அதுமாதிரி அப்பாவுக்கு செஞ்சா என்ன. அவ்வளவு பெரிய மனிதரைக் கோபித்துக் கொள்ளக் கூடாது' என்று தோன்றும். அப்பாவிடம் மன்னிப்புக் கேட்பேன்.
அப்பாவின் ஆசைகள் மிகக் குறைவு. விதம் விதமாகச் சாப்பிட வேண்டுமென்று நினைத்துக் கொள்வார். கல்யாணத்துக்கு யாராவது கூப்பிட்டால், முன்னாடி போய் நிற்பார். நேரே சமையல் செய்யும் இடத்திற்குப் போய் விடுவார். எனக்கு அவமானமாக இருக்கும்.
""அப்பா... அப்பா...'' என்று கூப்பிடுவேன்.
மல்லிகா சொல்வாள்: ""அப்பா சமையல் கூடத்துக்குப் போயிட்டார்''
""ஏன்தான் அப்பா இப்படி செய்றாரோ...
எனக்கு அவமானமா இருக்கு''
கல்யாணத்தில் இருப்பவர்களெல்லோரும் அப்பாவை தப்பாக எதுவும் சொல்ல மாட்டார்கள்.
அப்பா படுத்துக் கொள்ளும் அறை முழுவதும் புத்தகமாக இருக்கும். அப்பா ஒன்றும் சொல்ல முடியாமல் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பார்.
""என்னப்பா?''
""ஒண்ணுமில்லை''
""இல்லை. சொல்லுங்கள்''
""என் இடம்தான் பேரு... எல்லா இடத்தையும் நீயே எடுத்துண்டுட்டே... புத்தகங்களா அடுக்கி வைச்சிருக்கே... நான் கேக்கிறேனேன்னு கோபித்துக்கொள்ளாதே... நீ எப்பத்தான் இத்தனைப் புத்தகங்களையும் படிக்கப் போறே?''
ஒரு விநாடி என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம திகைத்துப் போயிட்டேன். என் கெட்ட பழக்கம். பிளாட்பாரங்களில் இருக்கிற பழைய புத்தகங்களை பார்த்துப் பார்த்து வாங்குவது. விலை குறைச்சலா இருக்கும். சிலசமயம் அபூர்வமான புத்தகங்கள் கிடைக்கும். ஒரு முறை திருவல்லிக்கேணி பிளாட்பாரத்தில் தேடும்போது, ஏ.கே.செட்டியார் கொண்டு வந்த "குமரி மலர்' கிடைத்தது. "சங்கரராம்' என்ற எழுத்தாளர் எழுதிய "காரியதரிசி' என்ற நாவல் கிடைத்தது. கலைமகள் வெளியிட்டது. 1964- இல் வெளிவந்தது. இதெல்லாம் அபூர்வமான புத்தகங்கள். சரஸ்வதி கடாட்சம் இருந்தால்தான் கிடைக்கும். கொடுத்து வைத்திருக்க வேண்டும் படிக்க. அப்பாவுக்கு இதெல்லாம் எங்கே தெரியப் போகிறது? இந்த விஷயத்தில் அப்பாவும் மல்லிகாவும் ஒன்றுதான்.
""அப்பா, இந்த ஜன்மத்தில முடியாட்டி அடுத்த ஜன்மத்தில அவ்வளவு புத்தகங்களையும் படித்து முடிப்பேன்'' என்றேன்.
அதைக் கேட்டு அப்பா சிரித்தார். அப்பா ஒரு கட்டிலில் படுத்துக் கொள்வார். மெலிதான படுக்கை விரிப்பில் ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டு தூங்குவார். தலையில் தலைகாணி. அவரால் தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது. தூங்கிய சில நிமிடங்களில் குறட்டை விட ஆரம்பித்து விடுவார்.
அப்பாவைத் தூங்கும்போது உற்றுப் பார்ப்பேன். அவர் குறட்டை சத்தமா முதலில் ஒலிக்கும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் குறட்டை சத்தமே கேட்காது. வாயைப் அப்படியே பிளந்து கொண்டிருப்பார். பார்த்துக் கொண்டிருக்கும் எனக்குத் திகைப்பாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com