பேல்பூரி

நீ தோல்வியடையும் போது உனக்கு ஆயிரம் அறிவுரை தரும் சமூகம். நீ வெற்றி அடைந்த பிறகுதான்உன் கடினஉழைப்பை பற்றிப் பேசும். 
பேல்பூரி

கண்டது


(ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி காந்தி சாலையில் உள்ள  இட்லிக்கடையின் பெயர்)

இமயத்தரசி இட்லி இல்லம்  

த லட்சுமி காந்த்,
சென்னை - 61.

(திருநெல்வேலி   லாலா சத்திரம் முக்கு லாரிசெட் கடையில் பார்த்தது)

பூ  மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது.

சண்முக சுப்பிரமணியன்,  
திருநெல்வேலி-6.

(சென்னை செங்குன்றம் சாலையில் நின்றிருந்த ஒரு லாரியின் பின்புறத்தில்)

நல்லது போனால் தெரியும்.
கெட்டது வந்தால் தெரியும்.

ஏ.எஸ்.ராஜா,
சென்னை-21.

கேட்டது


(பெரியகுளம்  சூப் கடை ஒன்றில்)


""மிளகு, தக்காளி சூப்ன்னு போர்டு வெச்சிருக்கிறே... குடிச்சுப் பார்த்தா சூப்பில் மிளகு தக்காளிக் கீரை வாசனையே இல்லையே... மிளகுத் தூளும் தக்காளித் தோலும்தான் வருது''
""சரிங்க சார்... மிளகு தக்காளிக்கீரை சூப்னு 
எங்கேயாவது போர்டு வெச்சிருக்கேனா... பாருங்க. மிளகு தக்காளி சூப்னுதான் பேர் வச்சிருக்கேன்.'' 

சி.செல்லமுத்து,
மேல்மங்கலம்.

(திருச்சி   மார்க்கெட்டில் இருவர்)

""தம்பி... கீரைக்கட்டு என்ன விலை?''
""10 ரூபாய் சார்''
""பார்த்து விலை சொல்லுப்பா... பாதிக்கட்டு தான் இருக்கும் போலிருக்கே?''
""அரைக்கீரை கட்டு சார்! அப்படித்தான் இருக்கும்!''

பா.சிவானந்தம்,
திருச்சி -16.

யோசிக்கிறாங்கப்பா!

நீ தோல்வியடையும் போது 
உனக்கு ஆயிரம் அறிவுரை தரும் சமூகம். 
நீ வெற்றி அடைந்த பிறகுதான்
உன் கடினஉழைப்பை பற்றிப் வெற்றி . 

மீ.யூசுப் ஜாகிர்,
வந்தவாசி.

மைக்ரோ கதை

ஒரு ஊர்ல...

ஒரு வெங்காயம், ஒரு தக்காளி, ஓர் உருளைக்கிழங்கு, இந்த மூணு பேரும் ரொம்ப திக் ஃப்ரெண்ட்ஸா இருந்தாங்க.  ஒரு நாள் அந்த மூணு பேரும், கடலுக்கு குளிக்கப் போனாங்க.

அப்போ, சொல்லச் சொல்ல கேக்காம அந்த உருளைக்கிழங்கு, கடலுக்குள்ளே ரொம்ப தூரம் உருண்டு போனதால மூழ்கி இறந்து போச்சு.  அதைக் கண்ட தக்காளியும், வெங்காயமும் பீச்சுல புரண்டு புரண்டு அழுதாங்க. 

சோகம் தாங்காம இருவரும் வீட்டுக்குக் கிளம்பினாங்க.  போற வழியில, வேகமா வந்த ஒரு தண்ணி லாரியில தக்காளி நசுங்கி செத்துப் போச்சு.  அதைப் பார்த்து வெக்ஸ் ஆன வெங்காயம், கதறிக் கதறி அழுதது.

தனியாகிப் போன வெங்காயம், அழுதுகிட்டே கடவுள் கிட்ட போயி, ""உருளைக்கிழங்கு செத்தப்போ, நானும் தக்காளியும் அழுதோம்.  இப்ப தக்காளி செத்தப்போ, நான் மட்டும் அழுதேன். ஆனா நாளைக்கு நான் செத்தேன்னா, எனக்குன்னு அழ யாரு இருக்கா?'' ன்னு கேட்டு, "ஓ' ன்னு அழுதுச்சு.

அந்த வெங்காயம் அழுவதைப் பார்த்து தாங்கி கொள்ள முடியாத கடவுள், ""சரி, இனிமே நீ சாவும்போது யாரெல்லாம் பக்கத்துல இருக்காங்களோ, அவங்க எல்லாரும் அழுவாங்க'' ன்னு சொல்லி அதுக்கு வரம் கொடுத்து அதை சமாதானப்படுத்தினார்.

(ஸோ..., இனிமே யாராச்சும், "வெங்காயம் நறுக்கும்போது, ஏன் கண்ணுல தண்ணி வருது' ன்னு கேட்டா, "திருதிரு'ன்னு முழிக்காம, சோகமான இந்த திக் ஃப்ரெண்ட்ஸ் கதையைச் சொல்லுங்க)

எம் ஏ நிவேதா,
அரவக்குறிச்சிப்பட்டி.

எஸ்.எம்.எஸ்.


நீண்ட இடைவெளிக்குப் பின்பு 
ஒருவரிடம் இருந்து போனில் அழைப்பு வந்தால், 
 நம்மிடம் இருந்து ஏதோ ஒன்று 
அவர் எதிர்பார்க்கிறார் என்று அர்த்தம்.

சீ. காந்திமதி நாதன்,
கோவில்பட்டி.


அப்படீங்களா!


சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக பல முயற்சிகள்  உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படுகின்றன. 

ஒரு பொருளை வெப்பப்படுத்துவதற்காக இதுவரை நாம் பயன்படுத்தி வந்த நிலக்கரியின் அளவு குறைந்துவரும் நிலையில் நிலக்கரி போன்ற ஒரு பொருளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயலில் இறங்கினார்கள் ஆஸ்திரேலியாவின்  நியூகேஸ்டில் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள். 

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்ற ஆராய்ச்சியின் விளைவாக புவியில் ஒரு புதிய பொருள் தோன்றியிருக்கிறது.  மிஸிபிளிட்டி கேப்ஸ் அல்லாய் (எம்ஜிஏ) என்று அழைக்கப்படும் செங்கல் வடிவிலான பொருளே அது. 

மின்சாரத்தைப் பாதுகாத்து வைத்திருக்கும் பேட்டரியைப் போல, அலுமினியம், கிராபைட் ஆகியவற்றின் கலவையான இந்தப் புதிய பொருளை வெப்பப்படுத்தினால், அது அந்த வெப்பத்தை தன்னுள்ளே பாதுகாத்து வைத்துக் கொள்கிறது.

30 செ.மீ. நீளம், 20 செ.மீ. அகலம்,  16 செ.மீ. உயரம் உள்ள இந்த செங்கல் வடிவப் பொருள் 6 கிலோ எடை உள்ளது. ஒரு மணி நேரத்தில் 1 கிலோவாட் வெப்பத்தைச் சேமித்து வைத்துக் கொள்ளும் திறன் படைத்தது. தேவைப்படும்போது இதைச் சிறிதளவு வெப்பப்படுத்தினால் போதும், தனக்குள் பாதுகாத்து வைத்துள்ள அதிக  அளவு வெப்பத்தை வெளிப்படுத்துகிறது. 

நிலக்கரி எரியும்போது வெளியேறும் புகை போன்று இதில் எதுவும் இல்லை. இதனைக் கண்டுபிடித்த குழுவின் தலைவரான எரிச் கிசி, பெரிய அளவில் இந்தச் செங்கல்லை உற்பத்தி செய்ய ஸ்விட்சர்லாந்தில் உள்ள "இ2பவர்ஏஜி' என்ற நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளார்.

என்.ஜே.,
சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com