கேமராவில்  காஷ்மீர்!

சித்தாரா சாரங்கன். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர். அவருக்கு மிகவும் பிடித்த விஷயம் உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணம். 
கேமராவில்  காஷ்மீர்!


சித்தாரா சாரங்கன். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர். அவருக்கு மிகவும் பிடித்த விஷயம் உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணம். 

பயணமும், கேமராவும் உடன் பிறவா சகோதரிகளல்லவா? இவருக்கும் பயணத்தின்போது கேமராவை எடுத்துச் செல்வதும், காணும் காட்சிகளை, மக்களை படமெடுப்பதும் வழக்கமாகிப் போனது. அண்மையில் தனது காஷ்மீர் பயணத்தின்போது எடுத்த புகைப்படங்களைக் கொண்டு சென்னையில் ஒரு புகைப்படக் கண்காட்சியை நடத்தினார். அதில் இடம்பெற்ற புகைப்படங்களின் விற்பனை மூலமாகக் கிடைக்கும் தொகையை, காஷ்மீர் மக்களுக்காகவே பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார் - சித்தாரா சாரங்கனின் பேட்டி:

புகைப்படக் கலையில் ஆர்வம் கொண்டிருக்கும் உங்களைப் பற்றி?

லண்டன் சென்று சட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் பிராக்டீஸ் செய்துகொண்டிருக்கும் வக்கீல் நான். ஆனாலும், சிறு வயது முதலே கலை ஆர்வம் அதிகம். ஓவியங்கள் வரைவேன்; பல இடங்களுக்கும் பயணம் மேற்கொண்டு, புதுப்புது இடங்களைப் பார்ப்பதும், மக்களை சந்திப்பதும் எனக்கு மிகவும் பிடித்த விஷயங்கள். ஆகவே நான் நிறைய உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வேன். கடந்த ஓராண்டுக்கு மேல், கரோனா தொற்று காரணமாக, நான் விரும்பியபடி பயணங்கள் மேற்கொள்வது சாத்தியமில்லாமல் போனது. எனவே, தொற்றின் இரண்டாம் அலை ஓய்ந்து, தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன், எங்கே போகலாம் என்று தீவிரமாக யோசித்தேன். ஒரு வக்கீலாக இந்தியாவின் மற்ற எந்தப் பகுதியையும் விட நான் ஆர்வத்துடன் கவனிப்பது ஜம்மு-காஷ்மீர்தான். அந்த சமயத்தில் இமயத்தில் ஒரு மலையேற்ற சாகச சுற்றுலா பற்றிக் கேள்விப்பட்டு, அதற்குப் பதிவு செய்தேன். 

ஏற்கெனவே கரோனா அச்சுறுத்தல். போதாக்குறைக்கு நான் காஷ்மீருக்குப் போகிறேன் என்றதும் என் பெற்றோர்  ரொம்பவே கவலைப்பட்டு, "நீ காஷ்மீருக்குப் போகத்தான் வேண்டுமா?' என்று கேட்டார்கள். நான் "கவலைப்படாதீர்கள் நான் பத்திரமாகத் திரும்பி வந்துவிடுவேன்' என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டுவிட்டேன். 

எப்படி இருந்தது காஷ்மீர் சாகசப் பயணம்?

மிகவும் நன்றாக இருந்தது. இனிய அனுபவங்கள். பகல்காம், அனந்தநாக், மார்கன் டாப், ஸ்ரீநகர் ஆகிய நான்கு பகுதிகளில் ஆறு நாட்கள் பயணம் செய்தேன். அதில் மலையேற்றமும் அங்கம். 

எங்கள் மலையேற்றக் குழுவில் டெல்லி, புணே உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் இருந்து வந்த எட்டு பேர் இருந்தார்கள். எனக்கு இதுவே முதல் மலையேற்ற அனுபவம். மிக உயரமான பகுதிகளுக்குச் செல்லாமல், பாதுகாப்பான பகுதிகளில் மட்டுமே டிரெக்கிங் செய்தோம். 

காஷ்மீரில் மக்களோடு பேசினீர்களா?

ஓ! நிறைய பேரிடம் பேசினேன். அவர்கள் வாழ்க்கையைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். வருடத்தில் ஆறு மாதங்கள்தான் டூரிஸ்ட் சீசன். அடுத்த ஆறுமாதங்களுக்கு அவர்களின் வாழ்வாதாரம் பெரிய கேள்விக்குறிதான்! 

பல்வேறு விதமான பொருட்களை தயாரித்து, விற்று அதன் மூலமாகக் கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கை நடத்த வேண்டிய சூழ்நிலை. தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவைகள் ஓராண்டுகளாக  இல்லை.

என் காஷ்மீர் பயணத்தைப் பற்றி நினைத்தாலே, உடனே என் மனத்திரையில் தோன்றுவது ஒரு வயதான பாட்டியும், அவருடைய பேத்தியும்தான். எதேச்சையாக ஒரு சாலையில் நான் அவர்களை சந்தித்தேன். அவரது அழகான, அப்பாவியான முதுமை படர்ந்த முகம் சட்டென்று என் கவனத்தைக் கவர்ந்தது, அருகில் சென்று பேசினேன். முன் பின் அறிமுகமில்லாவிட்டாலும், ஏதோ என்னோடு பல நாள் பழகியது போல அவர் வெகு சகஜமாகப் பேசினார். 

அது மட்டுமில்லை. "என் வீட்டுக்கு வா! சுவையான காஷ்மீரி டீ போட்டுக் கொடுக்கிறேன்" என அழைத்தார். அவரது அன்பும், உபசரிப்பும் என்னால் மறக்கவே முடியாது. 

காஷ்மீரில் எடுத்த புகைப்படங்கள் பற்றி?

காஷ்மீரில் என் மனதைக் கவர்ந்த காட்சிகளை எல்லாம் என் கேமராவில் புகைப்படங்களாக எடுத்துத் தள்ளினேன். தால் ஏரி போன்ற சுற்றுலாத் தலங்கள், இயற்கைக் காட்சிகள், வீடுகள், மக்கள் என பல தரப்பட்ட புகைப்படங்களும் அதில் அடங்கும். 

அவற்றில் பல புகைப்படங்கள் மிக அற்புதமாக இருந்தன. அவற்றை மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்தேன். அப்போதுதான், இந்தப் புகைப்படங்களில் மிகச் சிறந்த சிலவற்றைத் தேர்ந்தெடுத்து ஒரு புகைப்படக் கண்காட்சி நடத்தினால் என்ன? என்ற எண்ணம் உருவானது. அதுபற்றி மேலும் யோசித்துக் கொண்டிருந்தபோது, கண்காட்சியில் வைக்கப்படும் புகைப்படங்களை விற்பனை செய்வதன் மூலமாகக் கிடைக்கும் தொகையை, அந்த காஷ்மீர் மக்களுக்கே பயன்படச் செய்தால் என்ன? என்ற எண்ணமும் ஏற்பட்டது. 

காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் தொடர்பு கொண்டேன். அவர்கள் காஷ்மீர் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் வேலை வாய்ப்பினை பெறத்தக்க வகையில் அவர்களின் திறன் மேம்பாட்டுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். அவர்கள் எனக்கு ஒத்துழைப்பு அளிக்க சம்மதித்துள்ளனர். 

மொத்தத்தில் என் காஷ்மீர் பயணத்தினால் இரட்டை லாபம். ஒன்று, எனக்கு அது ஒரு நல்ல அனுபவம். இன்னொன்று, எனது நன்கொடை காஷ்மீரத்து இளைஞர்களின் வேலை வாய்ப்பினைப் பெறுவதற்கு உதவப்போகிறது என்கிற மனத் திருப்தி என மகிழ்ச்சியோடு சொல்கிறார் சித்தாரா சாரங்கன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com