கணக்கு வாத்தியாரிடம் கற்றுக் கொண்ட பாடம்

இரண்டு தாத்தாக்களில் தொரைத் தாத்தா, ஒரு வித்தியாசமான தாத்தா. மணித் தாத்தா வந்தாலே பேரன் மணியும் பேத்தி பிரியங்காவும் நொடிப் பொழுதில் ஓடி மறைந்துவிடுவார்கள். அவர் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே இருப்பா
கணக்கு வாத்தியாரிடம் கற்றுக் கொண்ட பாடம்


இரண்டு தாத்தாக்களில் தொரைத் தாத்தா, ஒரு வித்தியாசமான தாத்தா. மணித் தாத்தா வந்தாலே பேரன் மணியும் பேத்தி பிரியங்காவும் நொடிப் பொழுதில் ஓடி மறைந்துவிடுவார்கள். அவர் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார். "வகுப்பில் மூன்றாவதாக வந்ததில் வெட்கமில்லையா? கணிதத்தில் ஏன் நூறு மார்க் வாங்கவில்லை? மஹாராஷ்டிர மாநிலத்தின் தலைநகர் மும்பை என்று நான் எத்தனை தடவை சொல்லிக்கொடுத்தேன் - இந்த மரமண்டையில் அது ஏறவில்லையா?' இப்படி அடுக்கடுக்காக கேள்விகளால் துளைத்தெடுப்பார். அவர் தர முற்படும் கேட்பரீஸ் சாக்லேட்டைக் கூட வாங்க மறுத்துவிட்டு ஓடிவிடுவார்கள். இவ்வளவுக்கும் அவர்களுக்கு சாக்லேட் என்றால் உயிர்.

அதனால் தான் சொன்னேன், தொரைத் தாத்தா வித்தியாசமானவர் என்று. அவர் வந்துவிட்டால் மணியும் பிரியங்காவும் மகிழ்ச்சியால் பூமிக்கும் வானத்துக்கும் குதிப்பார்கள். ஏராளமான தாத்தாமாரைப் போல இவரும் தமது அனுபவங்களை அசைபோட்டு, கதை போலச் சுவைபடச் சொல்லுவார். மணித்தாத்தா நீட்டும் சாக்லேட்டைவிட அவர்களுக்கு தொரைத் தாத்தாவின் அனுபவங்கள் சுவையாக இருக்கும்.

"இன்று சனிக்கிழமை ஆச்சே, தொரைத் தாத்தா வந்துவிடுவாரே' என்று, பேரக்குழந்தைகள் காலையிலேயே எழுந்து குளித்துத் தயாராகி விட்டார்கள். இதோ தாத்தா வந்துவிட்டார். ஓடிச் சென்று தாத்தாவைக் கட்டித் தழுவிக்கொண்டு மணி சொன்னான்: ""தாத்தா, வாங்க. உட்காருவோம். சொல்லுங்க. இன்னிக்கு என்ன கதை சொல்லப் போறீங்க?'' என்று.

""கதையா? எனக்குக் கதை சொல்லத் தெரியாதே! நான் உங்களிடம் சொன்னதும் சொல்லப் போவதும் நான் நேரடியாகப் பார்த்த, எனக்கே நேர்ந்த அனுபவங்களைத்தான். எனக்கு ஒரு பெரிய சத்தியத்தை உணர்த்திய ஒரு சம்பவத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன்'' என்று தாத்தா சொன்னார். இதற்கிடையே பேரக் குழந்தைகளின் தாயார் - அதாவது தாத்தாவின் மகள் கீதா, ""டேய் மணி, தாத்தா மொதல்லே டிஃபன் சாப்பிடட்டும். அப்புறம் உங்களுக்குக் கதை எல்லாம் சொல்லட்டும்'' என்று அடித்துச் சொல்லியும், குழந்தைகள் விடுவதாக இல்லை.

""தாத்தா, வாங்க. டைனிங் டேபிள்லே ஒக்காந்து டிஃபன் சாப்பிட்டுண்டே இன்னிக்குக் கதை சொல்லுங்க தாத்தா, ப்ளீஸ்'' என்று அவர்கள் சொன்னதும் ஒரு சமரசம் ஏற்பட்டது. அப்படியே தாத்தாவும் அனுபவக் கதையைச் சொல்லத் தொடங்கினார்:

""அப்போது எனக்கு பத்துப் பதினோரு வயது இருக்கும். நாம சுதந்திரம் வாங்கி நாலு வருஷம். சிறிய, அக்கிரஹார வீடு. நாகர்கோவில் வாசம். வடிவீஸ்வரம் கிராமத்தில் தான் வீடு. அப்பா அம்மா, வெங்குத்தாத்தா - அதாவது அப்பாவின் அப்பா, கமலாப் பாட்டி, என் தங்கை ஆனந்தவல்லி. அவளுக்கு எட்டு வயது இருக்கும். அவளைக் குஞ்சம்மான்னு தான் கூப்பிடுவோம். இன்னொரு தாத்தா - அம்மாவின் அப்பா- சுப்புத் தாத்தா. அவரும் ராஜிப் பாட்டியும் அடிக்கடி வருவார்கள். சுப்புத் தாத்தா வரும்போது எனக்கும் குஞ்சம்மாவுக்கும் ஒரே குஷி தான். எங்களுக்குப் பிடித்த அண்டி மிட்டாய் - அது தான், கடலை மிட்டாய் வாங்கிவருவார். மணிக் கணக்கில் கதை சொல்லுவார். அவர் சொல்லித்தான் கிருஷ்ணர் கதை, ராமர் கதை, எல்லாம் எங்களுக்குத் தெரிந்தது. அதோடு, எங்க வீட்டு ரேடியோ எப்படி வேலை செய்கிறது என்பது பற்றி எல்லாம் சொல்லிக் கொடுப்பார். அப்போது ஒரு பை ரேடியோ தான் இருந்தது. இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு. ரொம்பவும் பெரிசா இருக்கும். இப்போ இருக்கிற மாதிரி டிரான்சிஸ்டர் செட் கிடையாது. வால்வு செட்டுன்னு சொல்லுவா. அதோடு ஏரியலே வீட்டுக்கு மேலே வெச்சிருப்பாங்க. வெங்குத் தாத்தா தினமும் இரவு சரியா 9 மணிக்கு ஆங்கில நியூஸ் கேப்பார். அப்போ யாருமே மூச்சு கூட விடக் கூடாது. சாயந்திரம் 7 மணிக்குஎல்லாம், பக்கத்து வீட்டு, எதிர் வீட்டுக்காரர்கள், ரேடியோ கேட்பதற்காக வந்துவிடுவார்கள். வீடு "ஜே ஜே' ன்னு இருக்கும்.

நான் ஆறாவது படித்துக் கொண்டிருந்தேன். கோலப்பன் சாரின் பள்ளிக்கூடம். அங்கெல்லாம் அப்போது மலையாளம்தான். வீட்டில்தான் தமிழ். ஆதலால் பள்ளிக் கூடத்தை "கோலப்பன் சாரிண்டே பள்ளிக்கூடம்' என்று சொல்வோம். சொற்களைத் திருப்பி, "ம்டகூளிள்படேண்றிசான்ப்பலகோ' என்று விளையாட்டாகச் சொல்லுவோம். அதே போல, திருவனந்தபுரத்தை "ம்ரபுதந்னவருதி' என்று சொல்லி விளையாடுவோம். இது ஏன்னு கேட்டீங்கன்னா, அப்போது தான் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் படத்தில் - "சந்திரலேகா'ன்னு நினைவு - சொற்களை மாத்தி மாத்தி விளையாடுவார். "உறையிலே தக்காரு'ன்னு சொல்லுவார்; தரையிலே உக்காருன்னு சொல்லுவதற்கு. இதிலே இன்னொரு ஸ்வாரஸ்யம் என்னதுன்னா, என். எஸ். கே.யோட சொந்த ஊர் நாகர்கோவில் தான். காந்தித் தாத்தா ஞாபகமா என். எஸ். கே. அங்கே ஒரு ஸ்தூபி கட்டியிருக்கார். காந்தி மேலே அவருக்கு உயிர். சிலை வெச்சா காக்காய் எல்லாம் உட்கார்ந்து எச்சம் போடும் என்று ஒரு ஸ்தூபி - அதுவும் மேலே கூர்மையா இருக்கும். எந்தப் பறவையும் உட்கார முடியாது. அப்படி பண்ணி வெச்சார் என். எஸ். கே. அவரை வெங்குத் தாத்தாவுக்கு நெருக்கமா தெரியும்.

ஹூம், எங்கே நிறுத்தினேன்?

ஆமாம். குஞ்சம்மாவும் என்னுடைய பள்ளிக்கூடத்திலேயே தான் படித்து வந்தாள்.

பள்ளிக் கூடம் நாலு தெரு தாண்டி இருக்கும். நான் பத்து வருஷம் முந்தி அங்கே போனபோது ஊரே மாறிப் போச்சு. பள்ளிக் கூடம் இருந்த இடம் தெரியவில்லை. என்னோட படிச்ச அய்யப்பன் பிள்ளையிடம் விசாரித்தேன். சாலையை அகலப்படுத்தினபோது பல கட்டடங்களை அது விழுங்கிவிட்டது என்று சொன்னார். காலம் போகப் போக, நினைவு தான் மிஞ்சும். இப்போ சமீபத்துலே நடந்தது நினைவிலே நிக்க மாட்டேன் என்கிறது. ஆனா, அறுபது எழுபது ஆண்டுக்கு முன் நடந்தது எல்லாம் நேத்து நடந்தது போல நினைவில் நிழலாடுகிறது. அது தான் விசித்திரம்.

நான் கணக்கிலே கொஞ்சம் வீக். அதாவது அப்போ.''

""அப்போ நீங்க எப்படி தாத்தா, கணிதத்திலே ப்ரொஃபெஸர் ஆனீங்க?'' என்று பேரன் மணி சடாலென்று தொடுத்தான் கேள்விக்கணையை.

""அவசரப்படாதே. சொல்கிறேன்'' என்று தொரைத்தாத்தா தொடர்ந்தார்:

""நான் கணக்கிலே கொஞ்சம் வீக்குன்னு சொன்னேனில்லே! என் வகுப்பிலே ஒரு சம்பவம் நடந்தது. வகுப்பிலே கணக்கு வாத்தியார் திருவேங்கடம் சார். ரொம்ப ஸ்டிரிக்ட். தப்புப் பண்ணினா சிமிட்டாம்பழம் தருவார். அதாவது நறுக்குன்னு காதிலே கிள்ளுவார். ஒரு நாள் நான் வீட்டுப் பாடம் பண்ணாமல் வகுப்புக்குப் போயிட்டேன். ஏன் பண்ணவில்லை என்று அதிர்ந்தார். "தாங்கிடதாம், தித் தாங்கிடதாம், தத்தித் தாங்கிடதாம், தரிகிடதாங்கிடதாம், கிடதகதரிகிட தாங்கிடதாம் - திருவேங்கடத்தாம்' என்றேனா, சுளீர், சுளீர்னு பிரம்பால கையிலே அடிச்சுட்டார்.

அன்னிக்கே தாத்தா எனக்கு டியூஷன் ஏற்பாடு பண்ணிட்டார். மதியம் மூன்று மணிக்கு, பள்ளிக்கூடம் விட்டதும் கணக்கு டியூஷனுக்குச் சென்றுவிடுவேன். சீதாராமன் சார் தான் டியூஷன் மாஸ்டர். குடுமி, பஞ்சகச்சம், முகத்தில் எப்போதும் சிரிப்பு. பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் ஒரு தெரு தாண்டி ஒரு சின்னச் சந்தில் - முடுக்கு - என்பார்கள், ஒரே அறை தான் அவர் வீடு. அந்த அறைக்கு நடுவில் ஒரு கர்ட்டன் தொங்கிக் கொண்டிருக்கும். அது அந்தச் சின்ன அறையை இரண்டு அறை மாதிரி பிரித்திருக்கும். அந்தண்டைப் பக்கம் சீதாராமன் சாரின் மாமி சமையல் செய்துகொண்டிருப்பார். நான் மூன்று மணிக்குச் சற்று நேரம் - ஒரு ஐந்து நிமிடத்துக்குப் பிறகு அங்கு நுழைவேன். "வாடா குழந்தை' என்று அன்போடு சார் என்னை உட்கார வைப்பார். அவரும் நானும் தரையில் தான் அமர்வோம். அந்த அறையில் மேஜை, நாற்காலி எதுவும் கிடையாது. அந்த அளவுக்கு அந்தக் காலத்தில் வாத்தியார்கள் இருந்தார்கள். அன்று வகுப்பில் நடந்த பாடத்தை மறுபடியும் நடத்திவிட்டு, அதற்கு அடுத்த பாடத்தை நடத்துவார். என்னையே கணக்குப் போடச் சொல்லுவார். நான் அநேகமாக தப்புப் பண்ணுவேன். அவர் அதைத் திருத்தி மீண்டும் கணக்கைப் போட்டுக் காட்டுவார். இப்படி மாலை நாலரை மணி, நாலே முக்கால் வரை பாடம் நடக்கும். நான் பின்னர் நேராக வீட்டுக்குத் திரும்பிவிடுவேன்.

இப்படியே பாடம் நடந்து கொண்டிருந்தது. வகுப்பில் திருவேங்கடம் சாருக்கு எதுவுமே புரியவில்லை. நான் ஒவ்வொரு கணக்கையும் நொடிப் பொழுதில் போட்டுவிடுவேன். அவரால் என்னைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

ஒரு நாள் நான் டியூஷனுக்குப் போனதும், வாத்தியார் மாமி, "ஏன்டா குழந்தை, காப்பி சாப்பிடறாயா' என்று கேட்டார். நான் அப்போது காப்பி சாப்பிட்டதே இல்லை. பால் தான் சாப்பிடுவேன். அதை நான் மாமியிடம் சொன்னேன். சரியப்பா, அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிட்டு, அவர் சமையல் "அறை'க்குத் திரும்பிச் சென்றார். பாடம் முடிந்தும் மாமி பாலுடன் வரக் காணோம். சீதாராமன் சார், அந்தத் திரைச் சீலைக்கு அந்தப் பக்கம் போய் பார்த்துவிட்டு, "மாமி எங்கோ வெளியே போயிருக்கான்னு நெனக்கிறேன். நீ சற்று நேரம் இரு' என்றார். இன்னும் ஒரு பத்து நிமிடம் நின்று பார்த்துவிட்டு நான் புறப்பட்டேன். "பரவாயில்லை சார், நான் போய்விட்டு வரேன். மாமியிடம் சொல்லிவிடுங்கள்,' என்று சொல்லிவிட்டு வீட்டை நோக்கி நடக்கலானேன்.

ஒரு தெரு தள்ளி, நான் நடந்து சென்று கொண்டிருந்தபோது, மாமி ஒரு கடையில் நிற்பதைப் பார்த்தேன். அதுவும், ஒரு கையில் ஒரு தங்கச் சங்கிலியை வைத்துக்கொண்டு அழுதபடி நின்று கொண்டிருந்தார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. மாமி ஏன் அழுகிறார்? எனக்கு எதுவும் புரியவில்லை. நான் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கடைக்குள் போனேன். "என்ன மாமி? ஏன் அழுகிறீர்கள்?' என்று கேட்டேன். "இல்லை, குழந்தை. பால்காரருக்கு பதினைந்து ரூபாய் பாக்கி இருக்கிறது. அவர், திடீரென்று இரண்டு நாட்களாக பால் தருவதை நிறுத்திவிட்டார். பக்கத்து ஆத்திலேந்து அரை டம்ளர் பால் இரவல் வாங்கித்தான் மாமாவுக்குக் காப்பி கொடுத்து வருகிறேன். என் குழந்தைக்குப் பால் தர முடியாமல் இந்தச் சங்கிலி என் கழுத்தில் இருந்து என்ன இல்லாமல் இருந்தால் என்ன? அதனால்தான் இந்தச் சங்கிலியைக் கடையில் கொடுத்துக் காசு வாங்கிக்கறேன். பால் காரருக்கு பாக்கியைக் கொடுத்துவிட்டு, பால் வாங்கலாம் என்றுதான் இந்த லேவாதேவிக் கடைக்கு வந்தேன். சித்த இரு. இதோப் போயி பால் வாங்கி வந்துவிடுகிறேன்' என்றார்.

எனக்கு எதுவும் புரியவில்லை. நான் பால் சாப்பிட நிற்கவில்லை. ஓடோடி வீட்டுக்குச் சென்று கமலாப் பாட்டியிடம் நடந்ததைச் சொன்னேன்.

அவர் சொன்னார்: "குழந்தை, இதெல்லாம் உனக்குப் புரியாது. இப்போ சொல்கிறேன். இனிமேல் யார் வீட்டுக்குப் போனாலும் அவர்கள் அன்புடன் தருவதைத் தட்டாமல் சாப்பிடு. உனக்குக் காப்பி கிடைக்காது என்பதற்காக அவர்கள் தரவில்லை. அவர்களது சந்தோஷத்துக்காகத் தருகிறார்கள். அந்த சந்தோஷத்தை நாம் மறுக்கக் கூடாது.'

அன்றிலிருந்து, நான் எந்த வீட்டுக்குச் சென்றாலும் அது வேண்டாம் இது வேண்டாம் என்றெல்லாம் சொல்லாமல், அவர்கள் தருவதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொண்டுவிட்டேன்''

மணியும் பிரியங்காவும் கண்ணைக் கசக்கிக்கொண்டதை தொரைத்தாத்தா கவனிக்கத் தவறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com