'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 56

பிரதமர் நரசிம்ம ராவ் என்ன விளக்கம் கொடுத்திருப்பார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் நின்று கொண்டிருந்த என்னை நிமிர்ந்து பார்த்தார் பிரணாப் முகர்ஜி. நான் அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 56


பிரதமர் நரசிம்ம ராவ் என்ன விளக்கம் கொடுத்திருப்பார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் நின்று கொண்டிருந்த என்னை நிமிர்ந்து பார்த்தார் பிரணாப் முகர்ஜி. நான் அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். புன்சிரிப்பு மாறவில்லை. உதட்டைப் பிதுக்கினார்.

""அவர் எதுவுமே சொல்லவில்லை. எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை. ஆனால், அவர் வருத்தத்திலும், கவலையிலும் ஆழ்ந்திருந்தார் என்பதை நான் தெரிந்து கொண்டேன். அதற்கு மேல் அவரை நான் துன்புறுத்த விரும்பவில்லை'' என்று சொன்னார் பிரணாப் முகர்ஜி.

பாஜக கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் முடிவில் நரசிம்ம ராவ் அரசு கவிழும் என்றுதான் எல்லாருமே எதிர்பார்த்தனர். அரசு கவிழ்ந்து தேர்தல் வந்தால், பாபர் மசூதி இடிப்பு பின்னணியில் பாஜக கணிசமான வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் பரவலாகக் கருதப்பட்டது.

ஆனால், அத்தனை எதிர்பார்ப்புகளும் பொய்த்தன. அதற்கு மிக முக்கியமான காரணம், பிரதமர் நரசிம்ம ராவோ, காங்கிரúஸா அல்ல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித். நரசிம்ம ராவ் ஆட்சி கவிழ்ந்தால் ஏற்பட இருக்கும் அரசியல் மாற்றங்களை அவரால் உணர முடிந்தது என்பதும், ஏனைய எதிர்க்கட்சிகளை நரசிம்ம ராவுக்கு ஆதரவாக அவரால் ஒருங்கிணைக்க முடிந்தது என்பதும்தான் உண்மை.

ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தைக் குறிப்பிடாமல் சுதந்திர இந்திய வரலாற்றை எழுதிவிட முடியாது. காமராஜருக்குப் பிறகு தலைநகர் தில்லி சந்தித்த "கிங் மேக்கர்' சுர்ஜித்துதான். விடுதலைப் போராட்டத்தின் மூலம் அரசியலுக்கு வந்தவர் என்றாலும், மாவீரன் பகத்சிங்கின் சீடராக அவரது "நவஜவான் பாரத் சபா' மூலம்தான் சுர்ஜித் முழுநேரப் போராளியானார்.

16 வயது மாணவராக இருக்கும்போது, ஹோஷியாபூர் மாவட்ட நீதிமன்றத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றியதற்கு சுர்ஜித் கைது செய்யப்பட்டார். சிறார் சிறையில் அடைக்கப்பட்ட சுர்ஜித், வெளியில் வந்தது முதல் கம்யூனிஸ இயக்கத்தின் மூத்த தலைவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, புரட்சிகரமான செயல்பாடுகளில் ஈடுபட்டார். காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என்று இடதுசாரி சிந்தனாவாதியாகத் தொடர்ந்த சுர்ஜித், இரண்டாம் உலகப் போரின்போது தலைமறைவானார்.

1940-இல் கைது செய்யப்பட்டு லாகூர் செங்கோட்டையில் தனிமைச் சிறையில் மூன்று மாதங்கள் அடைக்கப்பட்டார். 1944 வரை சிறையில் கழித்த சுர்ஜித், விடுதலைக்குப் பிறகும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். 1964-இல் மார்க்சிஸ்ட் கட்சி உருவானபோது அதன் முக்கியமான ஒன்பது பொலிட்பீரோ உறுப்பினர்களில் சுர்ஜித்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளின் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி, பஞ்சாப் மாநிலத்தில் கம்யூனிஸ இயக்கத்தை வளர்த்தவர்களில் சுர்ஜித் முக்கியமானவர். இந்தியா விடுதலை பெற்றபோது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பஞ்சாப் மாநிலப் பொதுச் செயலாளராக இருந்தவர் சுர்ஜித்.

1992 ஜனவரி மாதம் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் பதவியிலிருந்து ஓய்வு பெற்றபோது, பொதுச் செயலாளராக சுர்ஜித் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய அரசியலில் சுர்ஜித்தின் வரவைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கட்சியின் அணுகுமுறையிலும் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. காங்கிரஸையும், பாஜகவையும் சம எதிரிகளாகக் கருதிய ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடின் அணுகுமுறையிலிருந்து விலகி, பாஜகவை முதல் எதிரியாக மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்தது ஹர்கிஷன் சிங் சுர்ஜித் பொதுச் செயலாளரானதற்குப் பிறகுதான்.

அந்த மாற்றம் பிரதமர் நரசிம்ம ராவுக்கு சாதகமானது. நரசிம்ம ராவின் பொருளாதாரக் கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்த இடதுசாரிகளும், சோஷலிஸ்டுகளும், காங்கிரஸூக்கு எதிரான மாநிலக் கட்சிகளும் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தின் அணுகுமுறையால், வேறுவழியில்லாமல் காங்கிரஸை ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டனர். நரசிம்ம ராவ் அரசு கவிழ்ந்தால், அது தேர்தலுக்கு வழிகோலும் என்பதும், பாஜக மேலும் வலுப்பெறும் என்பதும், நரசிம்ம ராவுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஹர்கிஷன் சிங் சுர்ஜித்துக்கும், பின்னாளில் பிரதமரான இந்தர்குமார் குஜ்ராலுக்கும் நெருக்கமான நட்புறவு நிலவியது. சுர்ஜித்தைப் போலவே, பாஜகவைத் தடுத்து நிறுத்த, பாஜக அல்லாத கட்சிகள் நரசிம்ம ராவ் அரசை ஆதரிக்க வேண்டும் என்று கருதியவர் குஜ்ரால். குஜ்ரால் மட்டுமல்ல, வி.பி. சிங்கும் அதே கருத்தைக் கொண்டிருந்தார் என்று குஜ்ரால் என்னிடம் ஒருமுறை தெரிவித்திருக்கிறார்.

எதிர்பார்த்தது போலவே, பாஜக அல்லாத எல்லாக் கட்சிகளும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. சில கட்சிகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தன. பிரதமர் நரசிம்ம ராவின் தலை தப்பியது. வாக்களிப்பு முடிந்து, நரசிம்ம ராவ் அரசுக்கான ஆபத்து அகன்ற அன்று இரவில் நான் ஷாஜஹான் சாலையில் உள்ள வி.என். காட்கில் வீட்டில் இருந்தேன்.

இரவு சுமார் 10.30-க்கு மேல்தான் வி.என். காட்கில் பிரதமரின் இல்லத்திலிருந்து திரும்பி வந்தார். என்னை அவர் எதிர்பார்க்கவில்லை என்பது அவரது பார்வையிலேயே தெரிந்தது. நான் வணக்கம் சொல்லும்போதே அவர் பேசத் தொடங்கிவிட்டார்.

""நான் எதுவும் சொல்வதாக இல்லை. இப்போது சொல்வதற்கு என்ன இருக்கிறது?''

""நீங்கள் எதுவும் சொல்ல வேண்டும் என்பதற்காக நான் வரவில்லை. உங்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கத்தான் காத்துக் கொண்டிருந்தேன்...''

""ஏன் பொய் சொல்கிறாய்? உனக்கு என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?''

""நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தது பற்றி பிரதமர் ஏதாவது சொன்னாரா?''

""அவர் ஏதாவது சொல்வார் என்று நீ நினைக்கிறாயா? அப்படிச் சொல்லும் வழக்கம் அவருக்குக் கிடையாது. ஆனால் நான் ஒன்று சொல்கிறேன். அதைக் குறித்து வைத்துக் கொள். இனி அடுத்த தேர்தல் வரை, பிரதமர் நரசிம்ம ராவின் ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் கிடையாது. பாபர் மசூதி இடிப்பு, ஆட்சியைப் பலப்படுத்திவிட்டது.''

நான் திகைத்தேன். பாபர் மசூதி கட்டடம் இடிக்கப்பட்டதால், காங்கிரஸின் செல்வாக்கு சரிந்திருக்கிறது என்று எல்லாரும் சொல்லும்போது, வி.என். காட்கில் "ஆட்சிக்கு இனி ஆபத்தில்லை' என்று அடித்துச் சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

""எதை வைத்து அப்படிச் சொல்கிறீர்கள்?''

""காங்கிரஸ் கட்சியிலேயே பிளவு ஏற்பட்டாலும் கூட, நரசிம்ம ராவ் ஆட்சி கவிழாமல் எதிர்க்கட்சிகள் பார்த்துக் கொள்ளும். இந்த ஆட்சி கவிழ்ந்தால் பாஜக ஆட்சிக்கு வந்துவிடும் என்கிற அவர்களது அச்சம், எங்கள் ஆட்சியைக் காப்பாற்றும். பாஜக ஒருபுறம், ஏனைய கட்சிகள் ஒருபுறம் என்று பிளவுபட்டுக் கிடக்கும் வரை நரசிம்ம ராவ் ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் இருக்காது.''

""அவர்கள் ஏதாவது ஒரு பிரச்னையில் இணையமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? போபர்ஸ் பிரச்னையில் இணையவில்லையா? அதுபோல ஏன் இணையக் கூடாது?''

""அன்றைய சூழல் வேறு. இப்போதைய சூழல் வேறு. நான் சொன்னேன் என்று செய்தி போட்டுவிடாதே. ஆனால் அதுதான் நடக்கப் போகிறது...''

வி.என். காட்கில் அன்று சொன்னதுதான் 1996 தேர்தல் வரை நடந்தது. அர்ஜுன் சிங், என்.டி. திவாரி உள்ளிட்டோர் இரண்டாண்டுகளுக்குப் பிறகு கட்சியிலிருந்து விலகியபோதும் கூட, நரசிம்ம ராவ் ஆட்சி கவிழவில்லை என்றபோது, நான் வி.என். காட்கிலின் அரசியல் ஆருடத்தை நினைத்து வியந்தேன்.

பாபர் மசூதி இடிப்பு, மக்களவை நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி ஆகிய நிகழ்வுகளுக்குப் பிறகு நான் சந்தித்த இரண்டு முக்கியமான முஸ்லிம் தலைவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் (பின்னாளில் இந்தியன் நேஷனல் லீக்) தலைவரான இப்ராஹிம் சுலைமான் சேட்டும், தில்லி ஜும்மா மசூதியின் தலைமை இமாம் அப்துல்லா புகாரியும். மூன்றாவதாக இன்னொருவரையும் நான் அடிக்கடிசந்தித்துப் பேட்டிகள் எடுத்து வந்தேன். அவர்தான் சையத் ஷஹாபுதீன்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இப்ராஹிம் சுலைமான் சேட், 1967 முதல் 1991 வரை, தொடர்ந்து ஏழு முறை கேரளாவிலுள்ள கோழிக்கோடு, மஞ்சேரி, பொன்னானி மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து, காங்கிரஸூக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த முஸ்லிம் தலைவர்களில் சுலைமான் சேட் குறிப்பிடத்தக்கவர். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவராக இருந்த சேட், காங்கிரஸ் சார்ந்த கேரள முஸ்லிம் லீகின் அணுகுமுறையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இந்திய நேஷனல் லீக் என்கிற கட்சியைத் தொடங்கினார்.

ஜும்மா மசூதியின் தலைமை இமாம் அப்துல்லா புகாரி, வட இந்தியாவின் ஆளுமை மிக்க முஸ்லிம் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். 1977-இல் அன்றைய இந்திரா காந்தி அரசு வட இந்தியாவில் படுதோல்வி அடைந்ததற்கு ஷாஹி இமாம் அப்துல்லா புகாரியும் முக்கிய காரணம். பிரதமராகப் பதவியேற்ற மொரார்ஜி தேசாய், தில்லி ஜும்மா மசூதியின் 12-ஆவது ஷாஹி இமாமான சையத் அப்துல்லா புகாரியைக் குடியரசுத் துணைத் தலைவராக வேண்டுகோள் விடுத்தார் என்றால், அவரது செல்வாக்கு எத்தகையது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

சையத் ஷஹாபுதீன், அதி தீவிரமான இஸ்லாமிய அரசியல்வாதிகளில் ஒருவர். இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியாக இருந்து பதவியிலிருந்து விலகி, 1977-இல் ஜனதா கட்சியில் இணைந்தவர். சுலைமான் சேட், சையத் அப்துல்லா புகாரிபோல, சையத் ஷஹாபுதீனும் தீவிர காங்கிரஸ் எதிர்ப்பாளர். 1985-லும், 1991-லும் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் சையத் ஷஹாபுதீன். அவர் நடத்திவந்த "முஸ்லிம் இந்தியா' என்கிற பத்திரிகை கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

ஜும்மா மசூதியின் ஷாஹி இமாம் சையத் அப்துல்லா புகாரியை சந்திக்க நான் சென்றபோது, அங்கே ஒரு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அவரைச் சந்திக்க சில முக்கியஸ்தர்கள் வந்திருப்பதாகவும், அந்தக் கூட்டம் முடியும்வரை, நான் காத்திருக்கும்படியும் சொன்னார்கள். எனக்கு ஏற்கெனவே நேரம் ஒதுக்கப்பட்டிருந்ததால், இது திடீரென்று நடக்கும் ஏதாவது மதரீதியிலான கூட்டம் என்று கருதி நான் காந்திருந்தேன்.

கூட்டம் முடிந்து, இப்ராஹிம் சுலைமான் சேட், சையத் ஷஹாபுதீனுடன், மக்களவை உறுப்பினரான சுல்தான் சலாவுதீன் ஓவைசியும் வெளியே வந்தார். இப்போது அகில இந்திய முஸ்லிம் மஜ்லீஸ் கட்சித் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஓவைசியின் தந்தைதான் சுல்தான் சலாவுதீன் ஓவைசி. 1984 முதல் 1999 வரை தொடர்ந்து ஹைதராபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் சலாவுதீன் ஓவைசி. 2004 முதல் அவரது மகன் அசாதுதீன் ஓவைசி அந்தத் தொகுதி உறுப்பினராக இருக்கிறார்.

நான்கு மிக முக்கியமான முஸ்லிம் தலைவர்களும் ஜும்மா மசூதியில் கூடி என்ன பேசினார்கள்? எதற்காக அவர்கள் இப்படியொரு திடீர் சந்திப்பை நிகழ்த்தி இருக்கிறார்கள்? பாபர் மசூதி இடிப்பு, மக்களவை நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி ஆகிய நிகழ்வுகளின் பின்னணியில் நடந்த இந்த சந்திப்பு, மிகப் பெரிய அரசியல் மாற்றத்துக்கான முன்னோடியாக இருக்கக்கூடும் என்று எனக்குத் தோன்றியது.

எனக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்கள் என்றாலும், அவர்கள் மூவருமே என்னை அங்கே எதிர்பார்க்கவில்லை. சையத் ஷஹாபுதீனும், சலாவுதீன் ஓவைசியும் பார்த்தும் பார்க்காததுபோல நகர்ந்தனர். ஆனால், இப்ராஹிம் சுலைமான் சேட் சிரித்தபடி கையசைத்தார். அதற்குள் நான் அழைக்கப்படுவதாகத் தெரிவித்தார் ஷாஹி இமாமின் உதவியாளர்.

ஜும்மா மசூதியின் தலைவரான ஷாஹி இமாம் சையத் அப்துல்லா புகாரியை சந்திக்க நான் அழைத்துச் செல்லப்பட்டேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com