'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 57

ஷாஹி இமாம் சையத் அப்துல்லா புகாரியின் வரவேற்பறையே பிரமிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும்.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 57

ஷாஹி இமாம் சையத் அப்துல்லா புகாரியின் வரவேற்பறையே பிரமிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும். உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் வெளிவந்த திருக்குரானின் பிரதிகள் ஒருபக்க அலமாரியில் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். மெளலானா சையத் ஹமீத் புகாரியைத் தொடர்ந்து, தில்லி ஜாமா மசூதியின் 12-ஆவது ஷாஹி இமாமாக 1973-இல் அவர் பதவியேற்ற பிறகுதான், ஜாமா மசூதியில் அரசியல் நுழைந்தது என்கிற குற்றச்சாட்டு இருந்தாலும்கூட, வட இந்தியாவில் உள்ள சிறுபான்மை இஸ்லாமியர்களின் வழிகாட்டியாக ஒருவர் உயர்ந்தது, அப்துல்லா புகாரிக்குப் பிறகுதான்.

தில்லியில் ஜாமா மசூதி என்பது வரலாற்றுச் சிறப்பும், கட்டடக்கலைச் சிறப்பும் மிகுந்தது. மூன்று குமிழ் கோபுரங்களும், இரண்டு மினார்களும் கொண்ட ஜாமா மசூதி பத்து லட்சம் ரூபாய் செலவில் மொகலாய சக்ரவர்த்தி ஷாஜஹானால் 1656-இல் கட்டி முடிக்கப்பட்டது. 25,000 பேர் தொழுகை நடத்தும் வசதி கொண்ட ஜாமா மசூதியின் முதல் ஷாஹி இமாமான சையத் அப்துல் கஃபூர் ஷா புகாரியின் வம்சாவளியினர்தான் தற்போதைய ஷாஹி இமாம்.

ஜாமா மசூதி என்றால் தொழுகைக்காகக் கூடுமிடம் என்று பொருள். மொகலாய சக்கரவர்த்தியும் அரச வம்சத்தினரும் தொழுகை நடத்தும் இடம் என்பதால் அதன் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. பல அரசியல் நிகழ்வுகளின் களமாகவும் இருந்திருக்கிறது அந்த மசூதி.

1803-இல் ஷாஜஹானாபாத் என்று அழைக்கப்பட்ட பழைய தில்லி, பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. மொகலாய மன்னர்களின் ஆட்சி நிலவினாலும்கூட அதிகாரம் பிரிட்டிஷார் வசம் சென்றுவிட்டது. 1857 வரை எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான பரஸ்பர ஒற்றுமை நிலவியது. 1857 கலவரத்தில் பலபிரிட்டிஷ் சிப்பாய்கள் கொல் லப்பட்டபோது, 

ஆங்கிலேயர்கள் ஆத்திரமடைந்தனர். தில்லியிலுள்ள மசூதிகளில், வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நடத்தப்படும் பிரசங்கங்கள்தான் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிக்குக் காரணம் என்று அவர்கள் கருதினார்கள். தில்லியிலுள்ள பல மசூதிகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. ஏனைய மசூதிகளிலும் தொழுகைக்காக முஸ்லிம்கள் கூடுவது தடை செய்யப்பட்டது. ஜாமா மசூதியையும் பிரிட்டிஷார் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுவிட்டனர். சீக்கிய, ஐரோப்பிய வீரர்கள் தங்குமிடமாக ஜாமா மசூதி மாற்றப்பட்டது.

இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்தாளும் பிரிட்டிஷாரின் சூழ்ச்சிக்கு எதிராக எழுந்த கடுமையான எதிர்ப்பு 1862-இல் மீண்டும் மதவழிபாட்டுத் தலமாக ஜாமா மசூதி தொடர்வதற்கு வழிகோலியது. ஜாமா மசூதி நிர்வாகக் குழு ஏற்படுத்தப்பட்டு, கடுமையான பல நிபந்தனைகளுடன் ஜாமா மசூதி செயல்படுவது பிரிட்டிஷாரால் அனுமதிக்கப்பட்டது. பிரிட்டிஷ் காவல்துறையின் தொடர்ந்த கண்காணிப்புடன்,  மத வழிபாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிற நிபந்தனையைப் பெற்று, அனுமதி வழங்கப்பட்டது.

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து ஜாமா மசூதி மீண்டும் அரசியல் மையப் புள்ளியானது. விடுதலைப் போராட்டத்தின் போதும், சுதந்திரமடைந்தபோது நடந்த வகுப்புக் கலவரத்தின் போதும், அவசரநிலைச் சட்டத்துக்கு எதிரான கொந்தளிப்பின் போதும், பாபர் மசூதி பிரச்னையின்போதும் ஜாமா மசூதிதான் சிறுபான்மை முஸ்லிம்களின் செயல்திட்டங்களை வகுக்கும் தலைமையகமாகத் திகழ்ந்தது என்பதுதான் வரலாறு.

அத்தகைய வரலாற்றுச் சிறப்புடைய தில்லி ஜாமா மசூதியின் தலைமை இமாம் சையத் அப்துல்லா புகாரியை நான் சந்திப்பது முதல் தடவையல்ல. தனியாகவும், முக்கியமான சில அரசியல் பிரமுகர்களுடனும் அவரை சந்திக்கும் வாய்ப்பு பலமுறை எனக்குக் கிட்டியது. ஆறு தடவைகள் அவரைப் பேட்டி எடுத்திருக்கிறேன். கண்டிப்பானவர், இஸ்லாமிய வெறியர் என்றெல்லாம் கருதப்படும் ஷாஹி இமாம் என்னிடம் மிகவும் மென்மையாக நடந்து கொண்டார் என்பது மட்டுமல்ல, பரந்த மனத்துடன் மதம் சார்ந்த விஷயங்களை விவாதித்தார் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

தமிழ்நாடு குறித்தும், தென்னிந்தியா குறித்தும், அங்கு நிலவும் சைவ, வைணவ வழிபாடு குறித்தும், உருது பேசாத முஸ்லிம்கள் குறித்தும் அவர் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தார். தெற்காசிய முஸ்லிம்களின் தாய்மொழி உருது என்பது அவரது அசைக்க முடியாத கருத்தாக இருந்தது. அவரது வருகைக்காகக் காத்திருந்தபோது, 

அவருடனான முந்தைய சந்திப்புகளை நான் அசைபோட்டுக் கொண்டிருந்தேன்.

சலசலப்பையும், படபடப்பையும் தொடர்ந்து ஷாஹி இமாம் வந்து அமர்ந்தார்.

""நான் பேட்டியாக எடுத்துக் கொள்ளவா இல்லை வெறும் கலந்துரையாடலாக வைத்துக் கொள்ளலாமா?''

""பேட்டியாகவே எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனை பத்திரிகைகளில் வெளிவருமோ அவ்வளவு நல்லது. எனக்கு எந்தவித ஒளிவுமறைவும் கிடையாது. பயமும் கிடையாது. இந்தியாவில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் காயப்பட்டிருக்கிறார்கள். ஷாஹி இமாம் அது குறித்துக் கவலைப்படாமல் வேறு யார் கவலைப்பட முடியும்?''

கடுமையான கோபத்தில் இருக்கிறார் என்பதை நான் புரிந்து கொண்டேன். 

""இந்தியாவின் நான்கு முக்கியமான முஸ்லிம் தலைவர்கள் சந்தித்துப் பேசி இருக்கிறீர்கள். ஏதாவது முடிவெடுத்திருக்கிறீர்களா?''

""இனிமேல் முடிவெடுப்பதற்கு என்ன இருக்கிறது? பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு விட்டது. பாபர் மசூதி என்பது எங்களைப் பொருத்தவரை வெறும் அடையாளம்தான். அதை இடித்து நொறுக்குகிறார்கள் என்றால், ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களின் உணர்வுகளையும் சிதைத்திருக்கிறார்கள் என்று  பொருள். அதற்குப் பாதுகாப்பு தரப்படாததைப் போல, 

எங்களுக்கும் இனி இந்தியாவில் பாதுகாப்பில்லை என்று அர்த்தம். நாங்கள் கோபத்தில் இருக்கிறோம் என்பது உண்மையல்ல. நாங்கள் அச்சத்தில் இருக்கிறோம். பிரிட்டிஷ்காரர்களுக்கும் இப்போதைய காங்கிரஸ்காரர்களுக்கும் வேறுபாடு தெரியவில்லை.''

""சுலைமான் சேட்டும் மற்றவர்களும் என்ன கூறுகிறார்கள்?''

""அவர்கள் என்னை வழிகாட்டச் சொல்கிறார்கள். நான் என்ன அரசியல்வாதியா தீர்வு சொல்வதற்கு? இப்படி நடக்கும் என்று நான் ஆரம்பத்திலேயே எச்சரித்தேன். இதை நான் 15 ஆண்டுகளுக்கு முன்பே எதிர்பார்த்தேன். என்னால் பாபர் மசூதியை இடித்த பாஜகவினரைப் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால், அதற்கு வழிகோலிய காங்கிரஸ் கட்சியை மன்னிக்க முடியாது. அதையேதான் அவர்கள் மூவரும் சொல்கிறார்கள்.''

""எதுவும் நடக்காதபோது, பாபர் மசூதி இடிக்கப்படும் என்று எதிர்பார்த்து பிரதமர் நரசிம்ம ராவ் உத்தர பிரதேச அரசைக் கலைக்க முடியுமா? அதற்கு அரசியல் சாசனம் இடமளிக்காதே. பாஜகவினர் சும்மா இருப்பார்களா? நரசிம்ம ராவின் ஆட்சி கவிழ்ந்து விடாதா?''

""ஆட்சி கவிழட்டுமே, அதனால் என்ன? பாபர் மசூதி என்பது மதப் பிரச்னை அல்ல, நிலத்தகராறு. சட்டப் பிரச்னை. நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டிய வழக்கு. சட்ட மீறல் நடைபெறும் என்று கருதி நடவடிக்கை எடுப்பதில் என்ன தவறு? 

கலவரம் நடந்த பிறகா நடவடிக்கை எடுக்க முடியும்? பிறகு எதற்காக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கிறார்கள்?''

""சட்டப்பிரிவு 356-இன் கீழ் கல்யாண் சிங் அரசை பிரதமர் நரசிம்ம ராவ் கலைத்திருக்க வேண்டும் என்கிறீர்கள். அப்படிச் செய்திருந்தால் நாடு தழுவிய அளவில் மதக்கலவரம் ஏற்பட்டிருக்காதா? பிரிவினையின்போது ஏற்பட்டதுபோல ரத்த ஆறு ஓடாதா?''

""அதை எதிர்கொள்ளவும், கையாளவும் துணிவு வேண்டும். முதலில் மனம் வேண்டும். இது இன்று நேற்றுப் பிரச்னையல்ல. இந்திரா காந்தி காலத்திலேயே இதற்கு முடிவு ஏற்பட்டிருக்க வேண்டும். முஸ்லிம்களை அச்சத்தில் வைத்திருப்பதற்கும், அந்த அச்சத்தை பயன்படுத்தி வாக்குகளைப் பெறுவதற்கும் பாபர் மசூதி பிரச்னையைக் காங்கிரஸ் வைத்துக் கொண்டிருந்தது. ஷாபானு விவகாரத்தில் எங்களுக்கு சாதகமாக இருப்பதுபோலக் காட்டிக் கொண்டு, பாபர் மசூதியில் ராமர் வழிபாடு நடத்த ராஜீவ் காந்தி அரசு கதவைத் திறந்து விட்டது. அதன் தொடர்ச்சிதான் இந்த பாபர் மசூதி இடிப்பு.''

""கட்டடம் இடிக்கப்பட்டு விட்டது. அங்கே மசூதி கட்டித் தருவதாகப் பிரதமர் வாக்களித்திருக்கிறார். அடுத்தாற்போல என்ன..?''

""வழக்கம்போல மீண்டும் ஏமாற்றப் போகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்வரை மசூதி கட்ட மாட்டார்கள். பாஜக ஒருநாள் ஆட்சிக்கு வரும். அவர்கள் நீதிமன்றத் தீர்ப்பு பெற்று, அந்த இடத்தில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டுவார்கள். அதை காங்கிரஸ் கட்சியும், முஸ்லிம்களும் வேடிக்கை பார்க்கப் போகிறோம். இதுதான் நடக்கும், பார்த்துக் கொண்டே இருங்கள்.''

ஷாஹி இமாம் அப்துல்லா புகாரியின் எனது பேட்டி பல பிரபல நாளிதழ்களில் வெளியானது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது நினைத்தால் வியப்பாக இருக்கிறது. அவர் சொன்னபடிதான் எல்லாமே நடந்திருக்கின்றன.

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு நிகழ்ந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள், மோதிலால் நேரு மார்க்கிலுள்ள முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவை சந்திக்கச் சென்றிருந்தேன். பெளர்ணமிக்குத் திருப்பதி சென்றிருந்ததால், லட்டுப் பிரசாதத்தைக் கொடுத்தபோது மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டார்.

வரவேற்பறையில் தனிமையில் இருந்த அந்த மூதறிஞருடன் நிறைய நேரம் நான் பேசிக் கொண்டிருந்தேன். சாதாரணமாக எந்தவொரு உரையாடலையும் சில நிமிடங்களில் முடித்துக் கொள்வது அவரது வழக்கம். அன்று எனக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டது.


அயோத்தி பிரச்னை குறித்து நான் அவரிடம் கேட்டேன். பதில் சொல்லவில்லை. புன்னகைத்தார். அயோத்தி குறித்துத் தான் ஒரு புத்தகமே எழுதுவதாகவும் அதில் பல உண்மைகளைத் தெரிவிக்க இருப்பதாகவும் மட்டுமே தெரிவித்தார். 

காஷ்மீர் பற்றி நான் அவரிடம் கேட்டேன். சற்று நிமிர்ந்து உட்கார்ந்தார். 

""காஷ்மீர் பிரச்னையை பண்டிட்ஜி (ஜவாஹர்லால் நேரு) ஐ.நா.விற்கு விடாமல் இருந்திருந்தால் நாம் பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரை இழந்திருக்க மாட்டோம் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?''

""இதில் கருத்துத் தெரிவிப்பதற்கு எதுவும் இல்லை. ஜின்னாவும், நேருவும், ஷேக் அப்துல்லாவும் பேசியிருந்தால்கூடப் பிரச்னை முடிந்திருக்கலாம். அரசியலில், "என்றால், இருந்தால்' ஆகிய வார்த்தைகளுக்கு அர்த்தமில்லை ("தேர் இஸ் நோ மீனிங் ஃபார் இஃப்ஸ் அண்ட் பட்ஸ் இன் பாலிடிக்ஸ்'). இப்படி நடந்திருந்தால், அப்படிச் செய்திருந்தால் என்பதெல்லாம் பேசுவதற்கும், விவாதிப்பதற்கும் நன்றாக இருக்கும். ஆனால், நடந்தது என்ன என்பதுதான் நிஜம்.''

""பண்டிட்ஜி செய்தது சரி என்கிறீர்களா?''

""சரி, தவறு என்பதைக் காலம்தான் தீர்மானிக்க முடியும். பல முடிவுகள் சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் முடியலாம். முடிவு எடுக்கும் முக்கியமான, பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களின் பணி மிகவும் சிரமமானது. விரல் சொடுக்கும் சில விநாடிகளில், முக்கியமான முடிவுகளை அவர்கள் எடுத்தாக வேண்டும். அவர்களுக்கு இருக்கும் அந்த ஒருசில விநாடிகளில், தொலைநோக்குப் பார்வையுடனும், அதேபோல உடனடி விளைவுகளின் பின்னணியைக் கருத்தில் கொண்டும் முடிவெடுத்தாக வேண்டும். தலைமைப் பொறுப்பில் இருக்கும் எந்தவொரு தலைவனும் சிந்திக்காமல் எந்தவொரு முடிவையும் எடுப்பதில்லை. அந்த முடிவு சரியா, தவறா என்பதை காலம்தான் தீர்மானிக்க முடியும்!''

பி.வி. நரசிம்ம ராவ் சொன்ன அந்த பதில் என்னைத் திடுக்கிட வைத்தது. அவர் காஷ்மீர் பிரச்னைக்கு பதிலளித்தாரா அல்லது அயோத்தி பிரச்னைக்கு பதிலளித்தாரா என்று நான் ஒரு விநாடி தடுமாறினேன்.

அவர் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை நான் புரிந்து கொண்டேன் என்று அவர் தெரிந்து கொண்டதை, அவரது முகத்தில் தவழ்ந்த மெல்லிய புன்சிரிப்பு உணர்த்தியது. 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com