''பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 58

இப்போது சென்னையில் ஷேர் ஆட்டோ இருப்பதைப்போல, 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தில்லியில் "ஃபட்..ஃபடி' என்கிற ஆறேழு பேர் பயணிக்கும் மோட்டார் சைக்கிள் ஆட்டோ இயங்கிவந்தன.
''பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 58

இப்போது சென்னையில் ஷேர் ஆட்டோ இருப்பதைப்போல, 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தில்லியில் "ஃபட்..ஃபடி' என்கிற ஆறேழு பேர் பயணிக்கும் மோட்டார் சைக்கிள் ஆட்டோ இயங்கிவந்தன. மோட்டார் சைக்கிளுடன் இணைக்கப்பட்டிருக்கும் அந்த ஆட்டோ, பட்..பட்.. என்கிற ஓசையுடன் செல்வதால் அதற்கு "ஃபட்..ஃபடி' என்று பெயரிட்டிருந்தனர்.

ஷாஹி இமாம் சையத் அப்துல்லா புகாரியை சந்தித்துவிட்டு, ஃபட்ஃபடியில் ஏறி ஜாமா மசூதியிலிருந்து கன்னாட் பிளேசிலுள்ள எனது "நியூஸ்கிரைப்' அலுவலகத்துக்கு வந்து விட்டேன். ஷாஹி இமாமின் பேட்டியை எழுதி தட்டச்சுக்குக் கொடுத்துவிட்டுக் கிளம்ப இருந்த நேரத்தில் தொலைபேசி ஒலித்தது.

மூன்று நாள்களுக்கு முன்னால், தினேஷ் சிங்கை சந்திக்க நேரம் கேட்டிருந்தேன். அவரது வீட்டிலிருந்து அழைப்பதாகச் சொன்னார்கள். உடனடியாகவோ, அடுத்த நாளோ எப்போது வேண்டுமானாலும் சந்திக்க வரலாம் என்று அவரது உதவியாளர் தெரிவித்தார்.

உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கரைச் சேர்ந்த தினேஷ் சிங் அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அமைச்சராக இருக்கவில்லை. எனக்கு ஏற்கெனவே நன்றாக பரிச்சயமானவர் என்பதால், மணி ஏழு கடந்து விட்டது என்றாலும் பரவாயில்லை என்று உடனேயே சந்தித்துவிடுவது என்று கிளம்பிவிட்டேன்.

இந்திய அரசியலில் தினேஷ் சிங்கின் பங்கு அதிகம் வெளியில் தெரியாது. நேரு குடும்பத்தின் செல்வாக்குத் தொகுதிகள் என்று கருதப்படும் அமேதி, ரேபரேலி தொகுதிகளை ஒட்டியிருக்கும் தொகுதி பிரதாப்கர். இந்தத் தொகுதியிலிருந்து தினேஷ் சிங் ஏழு முறையும், அவரது மகள் ராஜ்குமாரி ரத்னா சிங் மூன்று முறையும் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். ராம்பூர் ராஜகுடும்பத்தைச் சேர்ந்த தினேஷ் சிங்கின் செல்வாக்கு அவரது மறைவுக்குப் பிறகும் தொடர்கிறது.

ராஜீவ் காந்திக்கு எல்லாம் முன்பாக, டெஹ்ராடூனிலுள்ள டூன் ஸ்கூலில் படித்தவர் தினேஷ் சிங். 1957-இல் நடந்த இரண்டாவது பொதுத்தேர்தலில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தினேஷ் சிங், தொடர்ந்து ஐந்து முறையும், 1984 முதல் 1991 வரை மீண்டும் இரண்டு முறைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு இடையிலான காலகட்டங்களில் மாநிலங்களவை உறுப்பினராக நாடாளுமன்றத்தில் தொடர்ந்தார். அதாவது 1957-இல் தொடங்கிய இந்திய நாடாளுமன்றத்துடனான இவரது தொடர்பு 1995-ஆம் ஆண்டு அவர் மறைவு வரை தொடர்ந்தது.

அது மட்டுமல்ல, 1962-இல் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தபோது, பிரதமர் ஜவாஹர்லால் நேருவால், வெளியுறவுத் துறையில் தனக்குக் கீழே பணிபுரிவதற்கான இணையமைச்சராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜவாஹர்லால் நேருவில் தொடங்கி, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ் என்று அவரது வாழ்நாளில் பிரதமர்களாக இருந்த அத்தனை காங்கிரஸ் தலைவர்களுடனும் பணியாற்றிய பெருமையும் தினேஷ் சிங்குக்கு உண்டு.

ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்கிற மமதை சற்றும் இல்லாமல், அதிகப் பிரபலம் இல்லாத என்னையும் ஒரு பத்திரிகையாளனாக மதித்து அவர் நடத்தும் விதம் பல சந்தர்ப்பங்களில் எனக்கே கூட தர்மசங்கடமாக இருந்திருக்கிறது.

மேக்ஸ் முல்லர் மார்க்கிலுள்ள இந்தியா இன்டர்நேஷனல் சென்டருக்கு அவர் செல்லும்போது, "நீங்களும் வாருங்கள்' என்று அழைத்துச் செல்வதும், அங்கு வந்திருக்கும் பிரமுகர்களிடம், "சென்னையிலிருந்து வந்திருக்கும் எனது பத்திரிகையாளர் நண்பர்' என்று அறிமுகப்படுத்துவதும், அமைச்சராகவும், தனிப்பட்ட நிலையிலும் தென்னிந்தியாவுக்கு வரும்போதெல்லாம் முன்கூட்டியே எனக்குத் தெரிவிப்பது என்றும் தனது அன்பால் என்னை அவர் திக்குமுக்காட வைத்த தருணங்கள் ஏராளம்.

ஜெயலலிதாவுக்கும் ராஜீவ் காந்திக்கும் இடையேயான அரசியல் தகவல் பரிமாற்றங்கள் பல தினேஷ் சிங்கின் மூலம் நடத்தப்பட்டன. அதற்கு நானும் உதவியாக இருந்திருக்கிறேன். தினேஷ் சிங்கின் பின்னணியும், வரலாறும் தெரியாததால் ஜெயலலிதா அவருக்குப் போதிய மரியாதை தரவில்லை என்கிற ஆதங்கம் எனக்கு உண்டு. அவரிடம் அதைப் புரிய வைக்க முடியவில்லை. தினேஷ் சிங்கும் அதைப் பொருட்படுத்தவில்லை. ராஜகுடும்பத்துக்கே உரித்தான பெருந்தன்மை அவருக்கு இருந்தது.

பிரணாப்தா, ஐ.கே. குஜ்ரால், சந்திரசேகர் அளவுக்கு இல்லாவிட்டாலும், தில்லியின் மூத்த அரசியல் தலைவர்களில் நான் நெருக்கமாகவே பழகியவர்களில் தினேஷ் சிங்கும் முக்கியமானவர். அதேபோல, தில்லி காங்கிரஸ் அரசியலிலும் அவர் மிக முக்கியமானவர். தினேஷ் சிங் உள்ளே நுழைகிறார் என்றால் பிரணாப்தாவே எழுந்து நின்று அவருக்கு மரியாதை தருவார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

தினேஷ் சிங் அவரது 1, தியாகராஜா மார்க் பங்களாவில் உள்ள அலுவலக அறையில் இருந்தார். அயோத்தி பாபர் மசூதி இடிப்பு தொடர்பாகக் கேட்கத்தான் வந்திருக்கிறேன் என்று அவர் நிச்சயமாக எதிர்பார்த்திருக்கக் கூடும். அவரது மேஜைக்கு முன்னர் இருந்த நாற்காலியில் அமர்ந்தேன்.

ஜாமா மசூதிக்குப் போனது, ஷாஹி இமாமைப் பேட்டி கண்டது உள்ளிட்ட எல்லா செய்திகளையும் நான் தெரிவித்தேன். அவர் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததை நான் கவனிக்கத் தவறவில்லை.

""இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக முஸ்லிம் நாடுகளும், மேலை நாடுகளும் கருதுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?''

""நிச்சயமாக இந்தியாவுக்கு எதிரான விமர்சனங்கள் சர்வதேச அளவில் எழத்தான் செய்யும். அதே நேரத்தில், நரசிம்ம ராவின் ஆட்சி கவிழ்ந்துவிடக் கூடாது என்று மேலைநாடுகள் கவனமாகவும் இருக்கும். இப்போதைய அரசு அறிவித்திருக்கும் பொருளாதார சீர்திருத்தங்களும், தாராளமயக் கொள்கையும் தடம்புரண்டுவிடக் கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருப்பார்கள்.''

கடிகாரம் எட்டு அடித்ததும் அவர் சற்று பரபரப்பானார். நான் கேட்பதற்கு முன்னர் அவரே பேசினார்:

""உங்களுக்கு மிகவும் வேண்டிய ஒருவர் இரவு உணவுக்கு வர இருக்கிறார்...''

யார் என்று நான் கேட்பதற்குள் வாசலில் கார் சத்தம் கேட்டது. அவரைத் தொடர்ந்து நானும் அறையிலிருந்து வெளியே வந்தேன். காரிலிருந்து பிரணாப் முகர்ஜி இறங்கிக் கொண்டிருந்தார். என்னை அவர் எதிர்பார்க்கவில்லை என்பது அவரது சிரிப்பிலிருந்தும், பார்வையிலிருந்தும் தெரிந்தது.

அவர்கள் இருவரும் உள்ளே போகும்போது நான் வெளியே நின்று விட்டேன். பிரணாப்தா திரும்பிப் பார்த்து, "உள்ளே வா' என்று அழைத்தார். சென்றேன். அவர்கள் வரவேற்பறையில் உட்கார்ந்தார்கள். நான் ஓர் ஓரமாக நின்று கொண்டிருந்தேன். நான் சற்றும் எதிர்பாராத விதத்தில், பிரணாப் முகர்ஜி என்னைக் காட்டியபடி தினேஷ் சிங்கிடம் சொன்னார்.

""இவர் எனது நம்பிக்கைக்குரியவர்'' (ஹி இஸ் மை டிரஸ்டட் மேன்)

""தெரியும், உங்கள் வீட்டிலும் அலுவலகத்திலும் பார்த்திருக்கிறேன். ஜீரோ ஹவருக்காக என்னிடம் கருத்துகள் கேட்டு எழுதியிருக்கிறார். அவர் ஜெயலலிதாவுக்கும் தெரிந்தவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? கூட்டணி குறித்து நான் ஜெயலலிதாவிடம் பேச அவர் உதவி இருக்கிறார்.''

பிரணாப்தா எதுவும் சொல்லவில்லை. மெளனம் கலந்த புன்சிரிப்பை உதிர்ந்தார்.

அதற்கு மேலும் அவர்களுக்குத் தொந்தரவாக இருக்க விரும்பாமல் நான் விடைபெற எத்தனித்தபோது, தினேஷ் சிங் சொன்னதைக் கேட்டு நான் திகைத்தேன்.

""நேரமாகிவிட்டது. இங்கேயே இரவு உணவு சாப்பிட்டுவிட்டுப் போங்களேன்'' என்று சொன்னவர் சாதாரணமானவர் அல்ல. ராம்பூர் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவர்; முன்னாள் அமைச்சர்; நீண்டநாள் நாடாளுமன்ற உறுப்பினர். அவரது உபசரிப்பு உணர்வும், பரந்த மனதும் வாழ்நாளில் நான் வேறெங்கும் காணாத உயர்ந்த பண்புகள்.

பணிவுடன் நன்றி கூறி அங்கிருந்து நான் கிளம்பிவிட்டேன். அன்று இரவு முழுவதையும் அவர்கள் என்னதான் பேசி, விவாதித்திருப்பார்கள் என்கிற நினைவிலேயே கழித்தேன் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

1993 - பிறக்க இருந்தது. பொங்கல் பண்டிகை வேறு நெருங்கி இருந்தது. அதனால் நான் சென்னை திரும்பி விட்டேன். சென்னை திரும்பி விட்டேனே தவிர, எனது மனசெல்லாம் தில்லியைச் சுற்றிச் சுற்றி வந்தது. நான் ரயிலில் வரும்போது என்னுடன் பயணித்த மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் இரா. அன்பரசு உள்பட பல காங்கிரஸ்காரர்களே கூட, ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்றுதான் எதிர்பார்த்தார்கள்.

என்னுடன் அதே ரயிலில் வந்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், நண்பருமான வலம்புரி ஜான் சொன்னது இப்போதும் அப்படியே நினைவிருக்கிறது.

""பாபர் மசூதி இடிப்பு, தனியார்மயக் கொள்கை என்று நரசிம்ம ராவ் மீது எனக்கு அளவு கடந்த ஆத்திரம் இல்லாமல் இல்லை. ஆனால், அவரது அரசு கவிழ்ந்துவிடக் கூடாது. அது பாஜகவுக்கு சாதகமாகிவிடும் என்பது மட்டுமல்ல; நேரு குடும்பத்தினர் அல்லாத, தென்னிந்தியர் ஒருவரின் ஆட்சி தொடர வேண்டும் என்பதும் ஒரு காரணம்'' என்றார் வலம்புரி ஜான்.

அதுதான் நடந்தது. தேர்தல் வந்தால் பாஜக ஆட்சியைக் கைப்பற்றிவிடும் என்கிற அச்சம் காரணமாக ஜனதா தளம், மாநிலக் கட்சிகள், இடதுசாரிகள் அனைவருமே நரசிம்ம ராவ் அரசை ஆதரித்தாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது. அதை நரசிம்ம ராவும் சரியாகவே பயன்படுத்திக் கொண்டார்.

முன்னாள் கர்நாடக முதல்வர் பங்காரப்பா சென்னை வந்திருப்பதாகவும் என்னை விசாரித்ததாகவும் கன்னடப் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்தார். அவரை சந்திக்க தாஜ் கோரமண்டல் ஹோட்டலுக்குச் சென்றேன். பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னால்தான் அவர் முதல்வர் பதவியிலிருந்து அகற்றப்பட்டிருந்தார். நரசிம்ம ராவ் மீது கடுமையான கோபத்தில் இருந்தார் பங்காரப்பா.

கருணாகரன், பிரணாப் முகர்ஜி இருவருடனுமான எனது தொடர்பு அவருக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் என்னை சந்திக்க அவர் அழைத்திருக்கிறார் என்பதை நான் ஊகித்துக் கொண்டேன்.

""காவிரிப் பிரச்னையைக் காரணம் காட்டி எனக்கு எதிராக சில எம்.எல்.ஏ.க்களைத் தூண்டிவிட்டு என்னை முதல்வர் பதவியிலிருந்து அகற்றிவிட்டார் பிரதமர் நரசிம்ம ராவ். கட்சியில் பிளவை ஏற்படுத்த நான் விரும்பவில்லை. மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்க இருக்கிறார் பிரதமர். என்னை மத்திய அமைச்சராக்கும்படி அவரிடம் சொல்ல வேண்டும்.''

""எனக்கு பிரதமருடன் நேரடித் தொடர்பு கிடையாது. அது மட்டுமல்ல, இதுபோன்ற முக்கியமான பிரச்னைகளில் எல்லாம் தலையிடும் அளவுக்கு நான் முக்கியமானவனும் அல்ல. என்னிடம் ஏன் இதைச் சொல்கிறீர்கள்?''

""கேரள முதல்வராக இருக்கும் கருணாகரன்தான் இப்போது நரசிம்ம ராவுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறார். அவரை உங்களுக்கு நன்றாகத் தெரியும். நான் மத்திய அமைச்சராக விரும்புகிறேன் என்கிற தகவலை பிரதமரின் காதில் சேர்க்கச் சொல்லுங்கள், போதும்.''

அவரிடம் மறுத்துச் சொல்ல முடியவில்லை. அப்படி மறுத்துச் சொன்னால் கேட்பவரும் அல்ல அவர். நான் அவருக்கு ஒரு யோசனை சொன்னேன்.

""சந்திராசுவாமியும், பிரபல ஜோதிடர் என்.கே. சர்மாவும் பிரதமருக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவர்கள் மூலம் தொடர்பு கொண்டால், ஒருவேளை உங்கள் கோரிக்கை பலிக்கலாம்.''

""நான் ஒரு அரசியல்வாதி. ஜோதிடர்களை எல்லாம் பார்த்து சிபாரிசு செய்யக் கேட்க மாட்டேன். எனக்காக நான் சொல்வதுபோல, இந்த செய்தியை உங்கள் நண்பர்களிடம் தெரிவியுங்கள், போதும்.''

பங்காரப்பா சொன்னது போலவே, தில்லியில் பரபரப்பான அரசியல் நகர்வுகள் தொடங்கிவிட்டன. எனது பத்திரிகை நண்பர்கள் பலர் அழைத்து தில்லி வரும்படி சொன்னார்கள்.

ஜனவரி 16-ஆம் தேதி நான் தில்லியை அடைந்தேன். அடுத்த நாளே அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்தது. எம்.எல். ஃபோத்தேதார் உள்ளிட்ட சிலர் அகற்றப்பட்டனர். வெளியுறவுத் துறை அமைச்சராக தினேஷ் சிங், வர்த்தகத் துறை அமைச்சராக பிரணாப் முகர்ஜி, பிரதமர் அலுவலக இணையமைச்சராக புவனேஷ் சதுர்வேதி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர். தமிழகத்திலிருந்து, கே.வி. தங்கபாலு மத்திய சமூகநலத்துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.

என்ன காரணத்தாலோ வி.என். காட்கில் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை...

அதைத் தெரிந்துகொள்ள ஷாஜஹான் ரோடிலுள்ள காட்கிலின் வீட்டுக்குச்
சென்றேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com