ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் சோர்வு, வலிக்கு தான்வந்திரம்!

என் மகளுக்கு ஆண் குழந்தை பிறந்து ஒரு மாதமாகிறது. இரவில் அடிக்கடி பசியால் குழந்தை அழுவதால், தாய்ப்பால் ஊட்டிய பிறகு, என்னிடம் குழந்தையைக் கொடுத்து ஏப்பம் வரும் வரை முதுகில் தட்டச் சொல்கிறாள்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் சோர்வு, வலிக்கு தான்வந்திரம்!


என் மகளுக்கு ஆண் குழந்தை பிறந்து ஒரு மாதமாகிறது. இரவில் அடிக்கடி பசியால் குழந்தை அழுவதால், தாய்ப்பால் ஊட்டிய பிறகு, என்னிடம் குழந்தையைக் கொடுத்து ஏப்பம் வரும் வரை முதுகில் தட்டச் சொல்கிறாள். இதனால் எங்களுக்கு இரவில் தூக்கம் கெடுகிறது. மறுநாள் காலையில் விரைவில் எழுந்துசமைக்க முடியாததால், என் கணவருக்கும் இரண்டாவது மகளுக்கும் சமைக்க முடியாமல் தடுமாறுகிறேன். அவர்கள் வெளியேதான் சாப்பிட வேண்டிய நிலை. உடல் சோர்வும், வலியும் பாடாய்ப்படுத்துகிறது. நான் என்ன செய்வது?

-ஸ்ரீமதி, சென்னை.

இது மிகவும் சங்கடமான விஷயந்தான் என்றாலும், குழந்தையின் மீது கொண்ட அன்பினால் தூக்கத்தைத் தொலைக்க வேண்டிய நிர்ப்பந்தம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. மறுநாள் காலை குழந்தையின் மலம் மற்றும் சிறுநீர்க் கழித்த துணிகளை அலசித் தோய்த்து வெயிலில் காய வைக்க வேண்டிய அவசியமும், மகளுக்குத் தாய்ப்பால் நன்கு சுரப்பதற்காக மதிய உணவைத் தயாரிக்க வேண்டிய கட்டாயமும் இருந்தால், தங்களின் வேதனையானது மேலும் கூடும்.

இதற்கு மாற்றுவழியாக இரவில் எவ்வளவு நேரம் தூக்கம் கெடுகிறதோ, அதில் பாதியை, மறுநாள் காலை உணவு ஏதும் ஏற்காமல், வெறும் வயிற்றில் உறக்கத்திற்காக நீங்கள் பயன்படுத்தினால்தான், ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். கணவரும், இரண்டாவது மகளும் இவ்விஷயத்தில் தங்களுக்குத் துணை நிற்க வேண்டியது அவசியமாகும். 

குழந்தையின் கழுத்தும் தலையும் வலுவாவதற்கு சில மாதங்கள் ஆகும் என்பதால், பொதுவாகவே வீட்டிலுள்ள ஆண்கள் குழந்தையைத் தூக்கக் கூடப் பயப்படுவார்கள். மகளுக்குத் தங்கள் துணை கிடைத்திருப்பது மிகப் பெரிய பாக்கியமாகும். தியாகமே உருவமாக மாறியிருக்கும் தங்களுக்கு, கணவரின் அன்பும் அரவணைப்பும் இக்காலகட்டத்தில் மிகவும் தேவையான ஒன்றாகும். இரண்டாவது மகளின் ஒத்துழைப்புக் கிடைத்தால், அவர் ஓர் இரவு குழந்தையைப் பார்த்துக் கொண்டால், தங்களுக்குக் கிடைக்கும் ஓய்வானது உற்சாகத்தைத் தரும். 

சுகப் பிரசவமாகவே இருந்தாலும் மகளுக்குக் கீழ் தசையில் மருத்துவர்கள் ஏற்படுத்தும் கிழிசலும், அதைத் தைத்துப் புண் ஆறுவதற்காக தரப்படும் S1T2 BA​TH சிகிச்சைமுறையாலும் அவரால் அமர்ந்து குழந்தையை தட்டிக் கொடுத்து தாய்ப்பால் செரிமானத்திற்கான ஏப்பத்தை உண்டாக்க முடியாமல் பல குடும்பங்களில் அவதியுறுவதைக் காண முடிகிறது.

உடல் சோர்வையும், வலியையும் போக்கிக் கொள்ள நீங்களும் மகளும் ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய தான்வந்திரம் எனும் தைலத்தை, வெதுவெதுப்பாக உடலெங்கும் தேய்த்து, அரை - முக்கால் மணி நேரமாவது ஊறிய பிறகு,வெந்நீரில் குளிப்பதை வாரமிரு முறையாவது செய்வது உடல்நலத்திற்கு நல்லது. உங்கள் கஷ்டத்தையெல்லாம், குழந்தையின் முகத்தில் அவ்வப்போது தோன்றும் புன்முறுவல் நிச்சயம் மாற்றி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஆறு மாதங்களுக்குப் பிறகு, உணவையும் ஏற்கத் தயாராகும் குழந்தையின் உடல்நிலையால், நீங்கள் இரவில் இழந்த தூக்கம், மறுபடியும் உங்கள் கண்களைத் தழுவத் தொடங்கும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com