இலவசமாக உணவு வழங்கும் இளைஞர்கள்!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலின் 16 கால் மண்டபம் அருகில் "காஞ்சி அன்னசத்திரம்' என்ற அமைப்பு கடந்த ஓராண்டாகச் செயல்பட்டு வருகிறது.
இலவசமாக உணவு வழங்கும் இளைஞர்கள்!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலின் 16 கால் மண்டபம் அருகில் "காஞ்சி அன்னசத்திரம்' என்ற அமைப்பு கடந்த ஓராண்டாகச் செயல்பட்டு வருகிறது. பசியில்லாத உலகம் படைக்க வேண்டும் என்பதே இந்த அமைப்பின் உயரிய நோக்கம். காஞ்சிபுரத்தில் வசிக்கும் 4 இளைஞர்கள் இந்த அமைப்பின் பொறுப்பாளர்களாக இருந்து தினசரி 450 முதல் 500ஆதரவற்றவர்களுக்குமூன்று வேளையும்இலவசமாக உணவு வழங்கி வருகிறார்கள்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சம்பாதிக்க வழியில்லாமலும், வழியிருந்தும் சாப்பிட வழியில்லாமலும் வீட்டில் முடங்கி கிடந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களது வயிற்றுப் பசி தீர்க்க தொடங்கியதே இந்த அமைப்பு. ஒரே ஆண்டில் 1.54 லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கியிருக்கிறார்கள் இந்த இளைஞர்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்,சம்பளமே இல்லாமலும் சமூக சேவை ஒன்றே குறிக்கோள் என்ற உயரிய உணர்வுடன் செயல்படும் இந்தநான்கு இளைஞர்களின் உதவியால் பலரும் வயிற்றுப் பசி தீர்ந்து மனதார வாழ்த்தி விட்டுச் செல்கின்றனர்.

காஞ்சிபுரத்தில் வசிக்கும் யோகா மாஸ்டர் தூ.பன்னீர்செல்வம், நெசவுத்தொழிலாளி  தி.மோகன், இயற்கை அங்காடி நடத்தி வரும் ஞா.மோகன், கல்வியாளர் ப.சத்தியசீலன் ஆகிய நால்வரும்தான் இந்த அமைப்புக்கு 4 தூண்களாக இருந்து இந்த அமைப்பை பலரும் பாராட்டும்படி சிறப்பாக நடத்தி வருகிறார்கள். காஞ்சிபுரம் அன்னசத்திரத்தில் இவர்களை நேரில் சந்தித்து 3 வேளையும் எப்படி இலவசமாக உணவு வழங்க முடிகிறது என்று கேட்டோம்.

பொறுப்பாளர்களில் ஒருவரான தூ.பன்னீர்செல்வம் கூறியது:

""கடந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தல் தீவிரமாகிய போது யாரும் பசியால் வாடிவிடக்கூடாது என்பதற்காக இந்த அமைப்பைத் தொடங்கினோம். வேலை இல்லாமல் இருப்பவர்கள், ஆதரவற்றவர்கள், முதியோர்கள், ஆட்டோ டிரைவர்கள், விதவைகள் என பலருக்கும் 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கி வருகிறோம். 

காலையில் பொங்கல், உப்புமா, கிச்சடி இவை மூன்றில் ஏதேனும் ஒன்றுடன் ஒரு இனிப்பும் சேர்த்து கொடுக்கிறோம். மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம், பிரிஞ்சி, காரக்குழம்பு சாதம் இவற்றில் ஏதேனும் இரண்டு தருகிறோம். இரவு நேரத்தில் தெருக்களில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், பிச்சையெடுப்பவர்கள், ஆதவற்றவர்கள், குழந்தைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள் ஆகியோரை அவரவர்களது இருப்பிடங்களுக்கே தேடிச் சென்று தினமும் 3 இட்லி, சாம்பார் மற்றும் ஒரு வாட்டர் பாட்டில் ஆகியனவற்றை பார்சலாக எடுத்துச் சென்று கொடுத்து விட்டு வருகிறோம். இவற்றை மிகச்சரியான நேரத்தில் அவர்களுக்கு கொடுத்து விடுவோம். இரவு நேர உணவை தேடிச்சென்று வழங்குவதற்கென்றே 4 இளைஞர்கள் எதையும் எதிர்பார்க்காமல் எங்களோடு இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

தினசரி குறைந்த பட்சம் மூன்று வேளையும் 570-க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறோம். எந்த நாளில், எந்த நேரத்தில், எத்தனை பேருக்கு உணவு வழங்கியிருக்கிறோம் என்ற பட்டியலையும் முறையாகப் பராமரித்து வருகிறோம்.

எங்களிடம் ஒரு சமையல் மாஸ்டரும், அவருக்கு உதவியாக இருவர் உட்பட 3 பேர் மாதச் சம்பளத்திற்கு பணியாற்றுகின்றனர். 3 பெண்கள், 8 ஆண்கள் உட்பட மொத்தம் 11 பேர் தினசரி அன்னசத்திரத்துக்கு வந்து எதையுமே எதிர்பார்க்காமல் தேவையான உதவிகளைச் செய்து வருகிறோம்'' என்கிறார் பன்னீர் செல்வம். 

 ""எங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.100 முதல் ரூ.5 ஆயிரம் வரை நன்கொடை தருபவர்கள் சுமார் 1000 பேர் வரை இருக்கிறார்கள்.எங்கள் இருப்பிடத்துக்கே வந்து நன்கொடைகளை பெரும்பாலானவர்கள் தந்து விடுகிறார்கள்.

பொருளாகவோ, பணமாகவோ யார் என்ன நன்கொடை கொடுத்தாலும் அவை அனைத்துக்கும் உடனுக்குடன் ரசீது கொடுத்து விடுவோம். திருமண நாள், பிறந்த நாள், நினைவு நாள் ஆகியனவற்றின் போது எங்களைத் தேடி வந்து பொருளோ, பணமோ நன்கொடையாக தருபவர்களும் இருக்கிறார்கள்.

எங்கள் அமைப்பு அரசில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் முதல் 5 - ஆம் தேதிக்குள் நன்கொடைகள் மற்றும் வரவு செலவு விவரப் பட்டியலை உறுப்பினர்களுக்கும், நன்கொடையாளர்களுக்கும் வாட்ஸ் அப், பேஸ்புக் ஆகியனவற்றின் மூலம் அனுப்பி விடுவோம்.

கடந்த ஓராண்டில் மட்டும் 1,54,533 பேருக்கு இலவசமாக உணவு வழங்கியிருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை பசியில்லாத உலகம் படைக்க வேண்டும் என்பதே நோக்கம்''என்கிறார் இந்த அமைப்பின் பொறுப்பாளர்களில் ஒருவரான தி.மோகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com