குளத்தை சீர் செய்யும் முகநூல் நண்பர்கள்!

சர்வதேச அளவில் அறிந்தவர்கள் புரிந்தவர்கள் என்பதையும் தாண்டி,  முகம் தெரியாமலேயே நட்பு வைத்து, அதனை  நல்லனவற்றுக்குப் பயன்படும் சமூக வலைதளமாக முகநூல் உள்ளது.
குளத்தை சீர் செய்யும் முகநூல் நண்பர்கள்!


சர்வதேச அளவில் அறிந்தவர்கள் புரிந்தவர்கள் என்பதையும் தாண்டி,  முகம் தெரியாமலேயே நட்பு வைத்து, அதனை  நல்லனவற்றுக்குப் பயன்படும் சமூக வலைதளமாக முகநூல் உள்ளது.   விருதுநகர் மாவட்டம் சிவகாசி நண்பர்கள் அமைப்பினர் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஒரு குளத்தைச் சீரமைத்து வருகிறார்கள் என்றால் முகநூலின் பயன்பாட்டைத் தெரிந்து கொள்ளலாம்.  

இது குறித்து சிவகாசி முகநூல் நண்பர்கள் அமைப்புத் தலைவர் வீர அசோக் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:

""சிறிய அளவில் ஏதாவது சேவை செய்யலாம் என சிவகாசி முகநூல் நண்பர்கள் என்ற அமைப்பை கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கினோம். தொடக்கத்தில் பத்து உறுப்பினர்கள் இருந்தார்கள். தற்போது 56 பேர் உள்ளனர். 

இதில் ஆட்டோ ஓட்டுநர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள், சிறு தொழில் செய்பவர்கள் என பல தரப்பினரும் உள்ளனர்.

ஆரம்பத்தில்  பேருந்து நிலையத்தைச் சுத்தம் செய்வது, சாலை ஓரம் குவிந்து கிடக்கும் மண்ணை அகற்றுவது, பயணிகள் நிழல்குடையில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளை அகற்றி சுத்தம் செய்வது, பின்னர் அதற்கு வர்ணம் பூசுவது உள்ளிட்ட பணிகளைச் செய்தோம். இந்தப் பணிகளை அமைப்பில் உள்ளவர்கள் மட்டுமே செய்தனர். அமைப்பில் உள்ளவர்கள் அனைவரும் இதற்கு ஆகும் செலவுகளைப் பகிர்ந்து கொள்வோம். தேர்தல் சமயத்தில் 100 சதம் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினோம்.

தொடர்ந்து ஏதாவது ஒரு நல்ல திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். அது சிவகாசி நகருக்கு பிரயோஜனமாக இருக்க வேண்டும் என ஆலோசனை செய்தோம். தொடந்து சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் உள்ள மணிக்கட்டி ஊருணி என்ற பன்னீர் குளத்தில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற முடிவு செய்து, அதனை அகற்றினோம்.  ஆனால் சிறிது நாள் கழித்து மீண்டும் ஆகாயத்தாமரை வளர்ந்து விட்டது. பின்னர் இந்த குளத்தைச் சீரமைக்க வேண்டும் என முடிவு செய்தோம். இந்தத் குளத்தின் நீளம் 80 மீட்டர். ஆழம் சுமார் 10 மீட்டர். இதை தூர்வாரி சீரமைக்கத் திட்ட மதிப்பீடு போடப்பட்டது. குளத்தை தூர்வாரி, உள்தடுப்பு சுவர், வெளி தடுப்பு சுவர் அமைத்து , கழிவு நீர் மற்றும் மழைநீரை சுத்திகரிப்பு செய்து குளத்தில் தேக்கவும், வெளிப்பகுதியில் மரகன்றுகள் நட்டு, நடைப்பயிற்சி பாதை அமைத்து, மின்விளக்கு அமைக்க திட்டமிடப்பட்டது.

இதற்கு சுமார் ரூ.30 லட்சம் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டது. தொடந்து பல தொழிலதிபர்களைச் சந்தித்து எங்களது திட்டம் குறித்து பேசினோம். பலரும் உற்சாகத்துடன் உங்களுடன் நாங்களும் கைகோர்க்கிறோம் எனக்கூறி பண உதவி செய்து வருகிறார்கள். தொடக்கத்தில் யாரும் யாருக்கும் அறிமுகமில்லை. முகநூல் எங்களை நண்பர்களாக்கியது. தற்போது அனைவரும் இணைந்து ஊர்ப் பெரியவர்களின் ஒத்துழைப்புடன் குளத்தைச் சீரமைத்து வருகிறோம்.

இந்த குளம் சீரமைக்கப்பட்டு தண்ணீர் தேக்கப்பட்டால் சுமார் 3000 வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளின் நிலத்தடி நீர் மட்டம் உயரும் . ஒற்றுமையுடன் செயல்பட்டால் பல சாதனைகளைச் செய்யலாம் என இதன் மூலம் கற்றுக் கொண்டோம். இந்த சேவை செய்த  மனதிருப்தி உண்டாகிறது. இதன் மூலம் சிவகாசிக்கு சிறு உதவி செய்ய முடிந்ததே என மகிழ்ச்சி அடைகிறோம்'' என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com