பூக்கொல்லை

பூக்கொல்லை

ரெட்டிப்பாளையம் தஞ்சாவூர் நகரத்தைச் சேர்ந்ததுதான். எல்லாத் தரப்பு மக்களும், வாழும் ஊர். முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் காமாட்சி தெருவில் எங்கள் வீடு இருந்தது. ரெண்டு அக்கா, ஒரு தம்பி, அம்மா, எங்க குடும


ரெட்டிப்பாளையம் தஞ்சாவூர் நகரத்தைச் சேர்ந்ததுதான். எல்லாத் தரப்பு மக்களும், வாழும் ஊர். முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் காமாட்சி தெருவில் எங்கள் வீடு இருந்தது. ரெண்டு அக்கா, ஒரு தம்பி, அம்மா, எங்க குடும்பம்.
எங்களுக்குச் சொந்தமான பூந்தோட்டம் ரெண்டு ஏக்கர் நிலம் இருந்தது. எனக்கு வயசு பதினைந்து இருக்கும். ஒரு நாள் பள்ளிக்கூடம், ஒரு நாள் பள்ளிக்கூடத்துக்கு மட்டம், இப்படி ஆட்டம் காட்டிகிட்டு இருந்த என்னை, "" நீ படிச்சு கிழிச்சது போதும். பூந்தோட்டத்திலே எங்களோட வேலையைப் பாரு'' என அப்பா சொன்னதும் ஏக சந்தோசம்.
படிப்பு அப்போ வேப்பங்காயாய் இருந்தது. பூந்தோட்ட வேலையிலே முழுக்க
புகுந்திட்டேன்.
அப்போ என்னோட படிச்சவங்க படிப்பிலேயே வேப்பம் பழமாய் இப்ப வாழ்ந்திட்டு இருக்காங்க. வேப்பங்காய் கசக்கும், பழம் இனிக்கும் அப்படி அமஞ்சுபோச்சு வாழ்க்கை அவங்களுக்கு. தினமும், சம்பங்கி, மல்லி, ரோஜா, காக்கரட்டான் இப்படி பூக்கள் சீசனுக்கு தக்கபடி பூக்கும். ரெட்டிபாளையம், ரயில் பாதை தாண்டி பூந்தோட்டத்திலே இருந்து தினமும் பூக்காரத் தெரு சுப்ரமணியர் கோயில் பக்கத்திலே இருக்கும் பூச்சந்தைக்கு சைக்கிளில் கொண்டு செல்வேன்.
அக்காவோடு நாலு பேர் பூப்பறிக்க தோட்டத்திலே வேலை செய்வாங்க. எல்லாம் சம்பள ஆள்தான்; தோட்டத்திலே பூப்பறிக்க ஒருவாரம் வித்த பணத்திலே ஆட்களுக்கு வார சம்பளம் போட்டது போக எங்க குடும்ப செலவு, மாட்டுக்கு தீவனம் என்று மிச்சம் இல்லாட்டியும் கடன் வாங்காம குடும்பம் ஓடிக் கொண்டிருந்தது.
என்னை ஒருநாள் அப்பா கூப்பிட்டு, ""கருப்பையா... அக்கா ரெண்டு பேருக்கும் கல்யாணம் கூடிவருது, அதனாலே நம்ம பூந்தோட்டத்தை வித்திடலாம் என்று இருக்கிறேன்'' என்றார்.
""வித்திட்டு என்னப்பா பண்ணுறது?'' என்றேன்.
""கொஞ்சம் மிச்சப்படுத்தி, ஏதாவது கடை கண்ணி வைச்சு பிழைக்கவேண்டியது தான்'' என்றார் அப்பா.
எனக்கு ஒன்றுமே புரியலே. கண்ணக் குத்தி குருடாக்கி ஒருவனை காட்டில் விட்ட மாதிரி ஆச்சு.
சிறு, குறு விவசாயிங்க தன் உடமைகளையோ, நிலத்தையோ விற்காமல் பெண்களுக்குத் திருமணமும் செஞ்சதில்லை. என்ன செய்யிறது என்று நினைத்து அப்பாவுக்கு சம்மதம் தெரிவித்து பூ மூட்டையை எடுத்துக்கொண்டு பூச் சந்தைக்கு புறப்பட்டேன்.
சைக்கிளை ஓட்டிக் கொண்டு வழி நெடுகிலும், கிணறு ஏற்றம் இழுக்கும் மாடு, தென்னை மரம், மல்லிகை, ரோஜா, சம்பங்கி மற்றும் காக்கரட்டான் பூ, கிணத்தடியில் நின்ற பலா, மா, மரங்கள் எல்லாம் என்னோடு பேசிக்கொண்டே வந்தன.
பூச்சந்தை உள்ள போயி, மொத்த வியாபாரி, செங்கமல சேர்வையிடம் பூ மூட்டையை - ரோஜா, மல்லிகை மூட்டைகளை- இறக்கி வைச்சேன்.
""என்ன கருப்பையா முகமெல்லாம் வாடி கெடக்குது'' என்றார் செங்கமல சேர்வை.
""ஒன்றுமில்லை அப்பா'' என்றேன்.
நான் "அப்பா' என்றுதான் அவரை அழைப்பேன்.
""என்ன... உன் அப்பா சின்னதம்பி எதுவும் சொன்னானா?'' என்றார்.
""ஒன்றுமில்லா அப்பா'' என்றேன். அவருக்குப் பக்கத்திலே கெடந்த நாற்காலியில் உட்கார்ந்தேன்.
அவர் பூ மூட்டை கொண்டு வர்றவங்ககிட்டே பேசிக் கொண்டு அதற்கான விலையைச் சீட்டு எழுதி கொடுத்துக் கொண்டிருந்தார். சுத்துபட்டு கிராமத்திலேருந்து வரும் பூக்கொல்லைக்காரங்களும் ஏதோ ஒரு வகையில் செங்கமல சேர்வைகிட்ட முன்பணம் வாங்கி இருப்பாங்க.
தினமும் அவங்க கணக்கிலே வரவு வைத்து, மீதிப் பணத்தை அவங்க கணக்கு கொடுக்க சீட்டை ஒன்று தருவார். அந்த பணம் மறுநாள்தான் கிடைக்கும்.
முதல் நாள் பணத்தை தான் மறுநாள் கொடுப்பார்.
ஆக அவரிடம் ஒரு நாள் பூ மூட்டை பணம் நிக்கும். அவர் கொடுத்த முன் பணம் நம்ம கிட்ட நிக்கும்.
தஞ்சாவூர் பூக்காரத் தெரு, பூச்சந்தை பிரபலம். சின்ன மினி டவுன்களுக்கும் பூ
போகும். எல்லாம் காலை ஏழு மணி முதல் பதினோரு மணிக்குள் முடிஞ்சிடும்.
ஏன்னா.. பூங்கிறது இரக்கமுள்ள மனசு மாதிரி உடனே வாடிப் போகும். அதனாலே அந்த வியாபாரம் பதினோரு மணிக்கெல்லாம் முடிஞ்சு போயிடும்.
""என்ன கருப்பையா, என்ன யோசனை?'' என்றார் செங்கமலசேர்வை.
""ஒன்றுமில்லை அப்பா'' என்றேன்.
""சின்னத்தம்பி அதான் உன் அப்பா, தன் பூக்கொல்லையை விற்கணும் என்று சொன்னார். அக்கா ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் கல்யாணம் கூடுது. என்னிடம் கல்யாண செலவுக்கு ஒன்றும் மிச்சம் மீதி இல்லை. அப்படி சொல்கிறார்''
நான் ஒன்றும் சொல்லாமல் "ம்' போட்டு உக்காந்திருந்தேன்.
அவரே தொடர்ந்தார்:
""என்னிடம் வாங்கிய முன்பணமே 50 ஐம்பதாயிரம் பாக்கி இருக்கு... என்ன செய்றது என்று எனக்குப் புரியலே'' என்றார் செங்கமல சேர்வை.
""சரிங்க அப்பா... சொல்லுங்க'' என்றேன்.
""என்ன இருக்கிற தோட்டம் ரெண்டு ஏக்கர் கட்டுகிணறு, எல்லாம் சேத்து நமக்கு தெரிஞ்சவரு, ஒருத்தர் இருக்கார், அவர் கிட்டே பேசி என் கடன் போக மீதம் இரண்டு லட்சம் வாங்கி தாரேன் என்று சின்னதம்பி கிட்டே சொல்லி அனுப்பினேன்'' என்றார்.
""சரிங்க அப்பா'' என்றேன். எல்லாம் இவருதான் வாங்குவார் இன்னொருத்தர் பேர் சொல்லுவாரு.
விவசாயி கிட்ட வியாபாரி எல்லாம் அப்படித்தான் இருக்காங்க. என்ன செய்ய?
நடுத்தர, சிறு விவசாயிகள் வாழ்வு எப்போதும் தோத்துக் கொண்டேதான் இருக்கு என்று நினைச்சுக்கிட்டு வீடு நோக்கி என் சைக்கிளோடு பேசிக்கொண்டு, பத்தாம் வகுப்பு வரை படிச்சிருந்தாலும், விவசாயத்தையும் விவசாயி வாழ்வையும் பார்த்து, பார்த்து, மனசு வேதனைப்
படுது.
என்ன செய்றது?அக்கா ரெண்டு பேரும், என்னப்போலவே படிப்பை பாதியிலே விட்டாலும் பூக்கொல்லை பராமரிக்கிறது... பூப்பறிச்சு சேர்க்கிறது, எல்லாம் அத்துபடி. அதுக்காகவே, ரெண்டு பேருக்கும் மாப்பிள்ளை அமைஞ்சிருக்கு... எல்லாம் பக்கத்து ஊருதான், பூந்தோட்டம், விவசாயம் என்று.
குடும்பம் எப்படி இருந்தாலும் பின்னால அத செய்யலே, இத செய்யலே என்று பேசிப் புடுவாங்க. சரி அக்காக்களை கரைசேத்திட நான், தம்பி பழனி ரெண்டு பேரும் அப்பா, அம்மாவைப் பார்த்துக்க வேண்டியதுதான்.
உழைக்க உடம்பு இருக்கு. நெஞ்சில் நம்பிக்கையிருக்கு. எல்லாம் நல்லதே நடக்கட்டும் என்ற எண்ணங்களை ஓடவிட்டு, ஈஸ்வரிநகர், ஐ.ஓ.பி, பேங்க் தாண்டி ரெட்டிபாளையம் ரோடு, திரும்பி சைக்கிளை மிதித்துக்கொண்டு சென்று கொண்டிருந்தேன்,
ரெட்டிபாளையம் ரோடு, இருபக்கமும் எல்லாம் பூக்கொல்லைதான். இப்போ கொஞ்சம் கொஞ்சமாக வீட்டு மனைகளாக மாறிக்கொண்டிருந்தது. உமா நகர் தாண்டிதான் எங்க தோட்டம்.
சின்ன, சின்ன விவசாயிகள் எல்லாம் மனை பிரிக்கிறவங்க பணத்தாசை காட்டினாலும், இவங்க ஓடா உழைச்சாலும் ஒன்றுமில்லை என்பதாலே, விக்கிறாங்க. என்ன செய்ய? பட்டுக்கோட்டையார் பாட்டுதான் எனக்கு நினைவுக்கு வந்தது.
காடு வெளஞ்சா என்ன மச்சான் நமக்கு- கையும் காலும் தானே மிச்சம் - இப்படித்தான் போகுது வாழ்க்கை.
ரெட்டிபாளையம் ரயில் பாலத்திலே சைக்கிள் ஏறி மிதித்து எறக்கத்திலே இருக்கும் முனீஸ்வரனை கும்பிட இறங்கி சைக்கிளை ஸ்டாண்டு போட்டு நிறுத்தினேன்.
பூக்காசிலே அவருக்கு உண்டியல் போட்டு, கும்பிட்டு மீண்டும் சைக்கிளை எடுத்து மிதித்து கொண்டு, ஒரு கார் மட்டும் போகக் கூடிய அளவு உள்ள, புது ஆத்துப் பாலத்திலே சைக்கிளை ஒட்டிக் கொண்டு போகும்போது, அந்த ஒடுக்க பாலத்திலே ஓரமாக நின்று ஆற்றைப் பார்த்துக் கொண்டு நின்றேன். ஐப்பசி மாதம் நிறைய தண்ணீர் அழகாகத்தான் போகுது. எல்லாம் மனிதனால் கொண்டு வரப்பட்டதுதான் புது ஆறு.
அப்பா சொல்வாரு, ""வாழ்க்கை மேல் நம்பிக்கை வை, நாம எதையும் கொண்டு வரல, எதையும் எடுத்தும் போக முடியாது ... நல்ல பழக்கங்களுக்கு அடிமையாகு, தீய பழக்கங்களுக்கு அடிமையாகாதே... அது உன்னையும், உன் நம்பிக்கையையும், இழக்க செஞ்சிடும்'' என்பார்.
அப்பா, சொத்து எதுவும் சேர்த்து வைக்கலே. ஆனா நிறைய அனுபவங்களைதம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொண்டே இருப்பார்!
இப்படி நினைத்துக் கொண்டு இருக்கையிலே, பின்னாலே ஒரு காருக்காரன் ஹாரன் சத்தம். சுதாரித்துச் சைக்கிளை மிதித்துக் கொண்டு காமாட்சி தெரு வீட்டு வாசலில் கொண்டு போய் நிறுத்தினேன்.
அப்பா, அம்மா, அக்கா ரெண்டு பேரும், தம்பி உள்பட வீட்டுக்கு முன்னால, அருந்த கொட்டகையிலே, வட்டமாக உக்காந்து பேசிக் கொண்டிருந்தார்கள்,
காமாட்சி தெருவில் எல்லோரும் பூக்கொல்லை வைத்திருப்பவர்கள்தான்.
""பூ மூட்டை எடை போட்டு கொடுத்திட்டியா கருப்பையா'' என்றார் அப்பா.
""ஆமாப்பா... கொடுத்துட்டேன்''
""இந்தாங்க அப்பா, பணம்'' என்று நேற்றைய பணம், நானூறு ரூபாயும் இன்றைய சீட்டையும் அப்பாவிடம் கொடுத்துவிட்டு, திரும்பினேன்!
""நில்லு கருப்பையா... செங்கமலத்து அண்ணன் ஏதும் சொன்னாரா?'' என்றார்.
""நீங்க காலையிலே சொன்னதைதான் சொன்னார்'' என்றேன்.
""நீ என்ன சொன்னாய்?''
""ஒன்றும் சொல்லவில்லை'' என்றேன்.
"" அக்கா, அம்மா, தம்பி, எல்லோர் கிட்டையும் இப்பதான் சொன்னேன்''
அதற்குள் இடைமறித்த அக்கா தமிழ்செல்வியும், செண்பகமும் ""பூக்கொல்லை வித்துதான் எங்களுக்கு கல்யாணம்னா... அப்படி தேவையில்லை... நீங்க சும்மா இருங்கப்பா''
அம்மா குறுக்கிட்டு, ""எல்லாம் சரிதான்ப்பா... வயசு பொண்ணுங்களை எத்தனை நாளைக்கு வீட்டோட வைச்சு இருக்க?''ன்னாங்க.
""என்ன... அவரு சொல்லுற ஆளுக்கு பத்திரம் பண்ணினாலும், நாம் மீண்டும் ஒரு குத்தகைக்கு எத்தனை வருசத்துக்கு வேணும்னாலும் வச்சுக்கலாம்'' - அப்பா.
நான் ஒன்னும் சொல்லாம பெரியக்கா, தமிழ்செல்வி பக்கத்திலே உக்காந்திட்டேன். அக்கா என்னை கண்கலங்கியபடி பார்த்துகிட்டு இருந்திச்சு! நானும் மெளனமா உக்காந்து இருந்தேன்.
""ஏன்டா தம்பி... நாங்க கல்யாணம் கட்டிக்கிறத்துக்காக இருக்கிற ஒரு பூக்கொல்லையும் வித்திட்டா. அப்பா, அம்மா, தம்பியை வச்சுக்கிட்டு என்னடா செய்வ?''
என் கையையும், முகத்தையும் புடிச்சுக்கிட்டு, அழுதிடுச்சு.
""இல்லக்கா. அதான், அப்பா சொல்லிட்டாங்கல்ல, குத்தகை எடுத்துக்கலாம். நீங்க ரெண்டுபேரும், இருக்கீங்க அக்கா, எங்க ரெண்டு பேருக்கும் எந்த குறையும் வராது'' என்றேன் தம்பியையும் சேர்த்து.
சின்னக்கா செண்பகமும் இரண்டு வயசு முன்பின் உள்ளவர்கள். இரண்டுபேருக்கும் இருபத்தி அஞ்சு வயசு தாண்டிடுச்சு.
சின்னக்காவும் பெரியக்காவும் ஒரு சேர நிலத்தை வித்து கல்யாணம் பண்ணிக்கிறது என்பதை ஏத்துக்கவே இல்லை.
அப்பா, அம்மா, நானும் பேசி, பேசி சம்மதிக்க வைச்சுட்டோம்.
சொன்ன மாதிரி, செங்கமல சேர்வை நிலத்தை எழுதிக் கொண்டுதான் பணத்தைக் கொடுத்தார். திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.
அங்கேயும் தோட்டம், தொறவு, மாடு கண்ணு எல்லாத்தையும் ரெண்டு அக்காவும், மாமாவும், பார்த்துக்கிறாங்க.
கல்யாணமான புதுசிலே அடிக்கடி வந்து போவாங்க. அவ்வாறு வந்து போறது எனக்கு தெம்பா இருக்கும். ஆனா காலம் போயிட்டே
இருந்தது.
அக்கா ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடிந்து நாலு வருடம் தாண்டியாச்சு.
"அம்மா, அம்மா' என்று கூப்பிட்டுக் கொண்டே பூக்கொல்லை பக்கம் போனேன்.
பூக்கொல்லையில் இருக்கும் சின்ன கொட்டகை. அதில் கிடக்கும் கயித்து கட்டிலிலே அம்மா படுத்து இருந்தாங்க.
மீண்டும் அம்மா என்று கூப்பிட்டுக் கொண்டே கயிற்று கட்டில் பக்கம் போனேன்.
அம்மா படுத்திருக்கும் போதே அழுது தேம்புவது, உடம்பு அசைவில் கண்டு, ""என்னம்மா'' என்று தோளைப் பிடித்து அசைத்தேன்.
""ஒன்றுமில்லைப்பா. உன் அக்கா ரெண்டு பேரையும் நெனச்சேன். அதாம்பா'' இன்னாங்க படுத்தவாறே.
""சரிம்மா, இப்ப என்னம்மா அதுக்கு, மாசம் ஒரு தடவையாவது இரண்டு பேருல ஒருத்தி மாத்தி மாத்தி வருவா இப்ப ரெண்டு மாசமா வரவே இல்லை''
""பொண்ணுங்க வாழ்க்கை ரெண்டு வீடுப்பா. ஒன்று அப்பா வீடு, இன்னொன்று புருஷன் வீடு. ஒரு இடத்திலே நாத்து விட்டு இன்னொரு ஊருலே கொண்டே நடவு நட்டு கதிர் அறுக்கிற மாதிரிடா தம்பி'' என்றார் அம்மா.
இப்ப மாதிரி செல்போன் எல்லாம் இல்லே அப்போ.
எல்லா உறவுகளையும், மனசையும் ஏன் உடல் பொருளையும் இரண்டு எடத்துக்கு வாழ்வா வாழ்வது பெண்கள் மட்டுந்தான் என்பார் என் நண்பர் அழகேசன்.
அழகேசன் டாக்டருக்குப் படிக்கிறார். என்னோட படிச்சவர், நல்ல நண்பர்.
அவரைப் பார்க்கையில் எல்லாம் நாமும் நல்லா படிச்சிருக்கலாங்கிற எண்ணம் சொல்லும். என்ன செய்ய, புத்தகம் பையிலே, புத்தியோ காட்டிலே என்றாகி போனது.
அம்மாவை உசுப்பி எழுந்து உட்கார வைத்துவிட்டு, ""என்னம்மா இப்படி ஏதாவது நினைச்சுக்கிட்டே இருக்கீங்க?''
என்றேன்.
""சரிப்பா... அப்பாவை தோட்டத்துப் பக்கம் காணோம் காலையிலிருந்து'' - அம்மா
""பூக்கடையில் தகவல் அனுப்பினாங்களாம் வரச்சொல்லி சேர்வையை பார்க்க போயி இருக்காங்க'' என்றேன்.
""சரிப்பா... சாப்டியா?'' என்றாள் அம்மா.
""சாப்பிட்டாச்சு. தம்பியும் சாப்பிட்டு பள்ளிகூடம் போயிட்டாம்மா'' என்றேன்.
அப்போ சைக்கிளை அப்பா கொட்டகை பக்கம் கொண்டு வந்து நிறுத்தினார்.
மேலே ஒரு கை வச்ச பனியன் இடுப்புல ஒரு வேட்டி, தோளில் நாலு முழ துண்டு, காலில் ஒரு தேய்ந்து போன செருப்பு இப்படித்தான் அப்பா.
சைக்கிள் ஓட்டி வந்ததுலே உடம்பெல்லாம் வேர்த்து, பனியன் நனைந்து போயிருந்தது.
""உஸ்... அப்பாடா... கொஞ்சம் தண்ணி கொடுப்பா'' என்றார்
அம்மா எழுந்து மண் பானையில் இருந்து தண்ணீரை ஒரு டம்ளர் எடுத்து அப்பாவுக்கு கொடுத்தாங்க. வாங்கி குடிச்சார்.
எழுந்து பூந்தோட்ட வாய்க்கால் நடந்து வடக்கு வேலி ஓரமா இருந்த வேப்ப மர நிழலில் போய் நின்று கொண்டு தெற்கு கடைசியில் கொட்டகையில் அம்மாவுடன் உட்கார்ந்திருந்த என்னைக் கூப்பிட்டார்.
""என்ன கருப்பையா நம்மளை, குத்தகையிலிருந்து காலி பண்ண சொல்றாறு செங்கமலத்து அண்ணே... பக்கம் வரை வீட்டு மனைகளாக வந்திட்டதாலே மனையா பிரிச்சு வித்திடலாம் என்று இருக்கேன். நீ காலி பண்ணிக்க என்கிறார். என்ன செய்றது ஒன்னும் புரியலே'' என்றார் அப்பா
""என்னப்பா புரியிரத்துக்கு இருக்கு. காலி பண்ண வேண்டியதுதான். அவரு இடம்'' என்றேன்,
அம்மா உடனே எழுந்தே வந்திட்டாங்க.
""என்ன லெட்சுமி குத்தகை காலி பண்ண சொல்லுராறு, செங்கமல சேர்வை. நாம குடுக்க வேண்டிய பணம் ஐம்பதாயிரம் இருக்கு. அதையும் கொடுக்க வேண்டாம். மேலே ஐம்பதாயிரம் தர்றேன்ங்கிறாரு'' என்றார்.
""என்ன செய்ய? விட்டுட வேண்டியதுதான்''
""நிலம் எழுதிக் கொடுத்து அஞ்சு வருடம் ஓடிப்போச்சு. குத்தகை வருடம் ஐம்பதாயிரம் பேசிதான் பூந்தோட்டம் தொடர்ந்தோம்'' என்றார் அம்மா.
""நாம் குத்தகை எழுதி வாங்கல. ஒன்னும் பண்ணலே. எல்லாம் வாய் நாணயம்தான்'' - அப்பா
""அப்பா, அம்மா ரெண்டு பேருக்கும் சொல்றேன். நான் ஒன்றும் குழந்தை இல்லம்மா... தம்பி உங்க ரெண்டு பேரையும் நான் கூலி வேலை செஞ்சே காப்பாத்துவேம்மா'' என்றேன்.
""எத்தனை காலத்துக்குப்பா விவசாய கூலி செஞ்சு சாப்பிட முடியும்?'' - அம்மா
""அம்மா நம்ம நாட்டிலே நூத்துக்கு நாற்பது பேர் விவசாய கூலி வேலை செஞ்சுதான புளைக்கிறாங்க. ஆனா என்னா எல்லாம் மிசின் வர்றதாலே விவசாய கூலி எல்லாம் வேறு வேலை பார்க்க பெரு நகரங்களை நோக்கி நகர்ந்து போறாங்கண்ணு நம்ம அழகேசன் சொல்வாரும்மா. நாமளும் நம்ம இருக்கிற தஞ்சாவூரிலே ஏதாவது வேலை தேடிக்க வேண்டியதுதான''
என்றேன். மேலும் தொடர்ந்தேன்.
""அம்மா அப்பா அடிக்கடி சொல்லுவாரு நாம எதுவும் கொண்டு இந்த பூமியிலே வரலை நாம எதையும் எடுத்து கொண்டும் போக முடியாது என்பார். இருக்கிறவங்க கொடுக்கவும் இல்லாதவங்க வாழவும் காலம் வந்துதான்
ஆகணும் அம்மா'' என்றேன்.
அம்மா, அப்பாவை அழைத்துக் கொண்டு பூக்கொல்லை கேட்டை பூட்டிவிட்டு மீண்டும், அந்த அழகான பூக்கள் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தன. நான் அழுது புறப்பட்டேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com