ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ஹோட்டல் உணவுக்கு மாற்று!

எளிதாக  வீட்டிலேயே தயாரித்துச் சாப்பிடக் கூடிய  உணவு வகைகளைச் செய்ய  நீங்கள் முன்பே கற்றறிந்திருந்தால்,  இப்பிரச்னைகளைத் தவிர்த்திருக்கலாம்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ஹோட்டல் உணவுக்கு மாற்று!

என் வயது 59. மனைவியின் மரணத்திற்குப் பிறகு ஹோட்டல் உணவுதான் சாப்பிடுகிறேன்.  அதனால் அடிக்கடி நீர்ப்பேதி, பசியின்மை, ருசியின்மை, களைப்பு போன்றவை ஏற்படுகின்றன.  இவை மாறி நான் நலமுடன் வாழ வழி என்ன?

- தாமோதரன்,
சேலம்.

எளிதாக  வீட்டிலேயே தயாரித்துச் சாப்பிடக் கூடிய  உணவு வகைகளைச் செய்ய  நீங்கள் முன்பே கற்றறிந்திருந்தால்,  இப்பிரச்னைகளைத் தவிர்த்திருக்கலாம்.  தெரிந்தாலும் சிலர்  சோம்பல் காரணமாக,  வெறும் காபி போட்டுக் குடிப்பது, பாலை உறையூற்றிக் கடைந்து மோராக்கி,  அவலுடன் சாப்பிடுவது என்ற அளவில் நிறுத்திக் கொள்கிறார்கள்.  நீங்கள் பசும்பால் கிடைக்குமா என்று தேடிப் பார்த்து,  கிடைத்தவுடன் தினமும் அரை லிட்டர் வாங்கிக் காய்ச்சி, உறையூற்றி வைக்கவும். இதைச் செய்வது மிகவும் எளிது. மறுநாள் காலை அதன் மேல் படிந்துள்ள ஆடையை நீக்கிக் கடைந்து, கால் பங்கு தண்ணீர் கலந்து, மறுபடியும் கடையுங்கள். இதை உட்கொள்வது, உங்களுக்கு எக்காலத்திலும் ஏற்றது. எளிதில் ஜீரணமாகும்.  ஹோட்டலில் சாப்பிட்ட கனமான உணவையும் செரிக்கச் செய்யும்.  தனித்தும் பருகலாம். உடல் மற்றும் உள்ளக் களைப்பை நீக்கி உற்சாகம் தரும்.  வயிற்றோட்டம், பசியின்மை, வீக்கம், சோகை, மூலம், ருசியின்மை,  சிறுநீர்த் தடங்கல், மகோதரம், கொழுப்படைப்பு  போன்ற உபாதைகளை நீக்கும்.

ஆனால் ஹோட்டல் உணவுகளுக்குப் பயந்து, இனிப்பான பழங்களைச் சாப்பிட்ட பின், இந்த மோரை நாம் குடிக்கலாம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறாகும். அப்படிச் சாப்பிடுவது நல்லதல்ல.  முக்கியமாக வாழைப் பழமும் மோரும் கூடாத சேர்க்கை. எலுமிச்சம்பழமும் மோரும் இனிய சேர்க்கை. நாரத்தை மோருக்கு நல்ல துணை.  புதிதாக அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள், புண் ஆறும் வரையில் மோரைத் தவிர்ப்பது நல்லது.

உங்கள் மனைவி வாழ்ந்த காலத்தில் உங்களுக்குச் சமைத்து அன்புடன் பரிமாறுவதற்காக அடுக்களையில் பாத்திரம், அடுப்பு போன்றவற்றை நிச்சயம் பயன்படுத்தியிருப்பார்கள்.  உள்ளம் கனத்தாலும், வேறு வழியில்லை என்பதால்,  நீங்கள் சற்று சிரமம் பாராது, அரிசியை  வறுத்து இடித்த மாவை, பாத்திரத்தில் போட்டு, மோர் வீட்டுக் குழப்பிப் பருக, வயிற்று வாயு நீங்கும். எளிதில் ஜீரணமாகும். களைப்பை நீக்கும். வயிற்றில் வாயு உபத்திரவத்தால் கஷ்டப்படுபவருக்கு ஏற்ற சிற்றுண்டி. 

பொரிகடலை விற்கும் கடைகளில்  நெல்லைப் பொரித்து, நெல் பொரியாக வைத்திருப்பார்கள். அதனை நீங்கள் வாங்கி அப்படியே பொரியாகவோ, பொரிக் கஞ்சியாகவோ தயாரித்து, தயிர், மோர்,  காய்ச்சிய பால்,  பழச்சாறு இவற்றில்  ஏதேனும் ஒன்றில் சிறிது நேரம் ஊற வைத்துக் காலையில் சாப்பிட, வாந்தி, நாவறட்சி,  வயிற்றுப்புண், பசியின்மை, ருசியின்மை, விக்கல், மயக்கம், பேதி என்றெல்லாம் அவதிப்படாமல் நலமுடன் வாழலாம்.   காலைச் சிற்றுண்டியை  ஹோட்டலில் சாப்பிடுவதைத் தவிர்த்து,  உங்களுடைய கஷ்டத்தைப் பெருமளவு போக்கிக் கொள்ளலாம். 

ஹோட்டல் உணவுகளால் ஏற்படும் வயிற்று உபாதைகளைப் போக்கக் கூடிய ஜீரக பில்வாதி லேகியம், பிப்பல்யாஸவம்,  தசமூலாரிஷ்டம்,  அக்னிகுமாரம் குளிகை, அஷ்ட சூரணம் போன்ற தரமான ஆயுர்வேத மருந்துகளை மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.  

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com