மூணாவது உயிர்!

அந்த வாட்ஸ்அப் செய்தியை வாசிக்க வாசிக்க ஜனார்த்தன் மனம் பதைத்தார்!
மூணாவது உயிர்!

அந்த வாட்ஸ்அப் செய்தியை வாசிக்க வாசிக்க ஜனார்த்தன் மனம் பதைத்தார்! வழக்கமாகச் செய்வதுபோல முழுக்க வாசித்தோமோ இல்லையோ, அடுத்தவருக்கு அவசரமாக அனுப்பி வைக்கிற பொத்தாம் பொதுவான தகவல் இல்லை அது! மாறாக, சுற்றி வளைத்து... அவரின் ஒரே மகள் சம்பந்தப்பட்ட பதிவு. முகம் மட்டுமல்ல, மொத்த உடலுமே வியர்க்கத் தொடங்கிற்று! 

அவரது அவஸ்தை அறியாத மாலதி, சமையலறையில் புலம்பி கொண்டிருந்தாள்.

""தீபாவளிக்கு வர்ற மகளுக்கு வீட்டுப் பலகாரம்தான் தரணும்னு உத்தரவு போடற மனுஷன் கொஞ்சத்துக்கு கொஞ்சம் உதவலாமே! நானும் ஆபிஸ் போற ஜாதிதானே?''
பலமுறை குரல் கொடுத்தும் பதில் வராததால் கூடம் வந்தே ஆத்திரப்பட்டாள். 
""இப்படியா சின்ன பசங்களாட்டம், வாட்ஸ்அப்... ட்விட்டர்னு போன்லேயே இருப்பீங்க?''
""சும்மா கத்தாதே.. இதைப் படிச்சுட்டு நானே டென்ஷனா இருக்கேன். ஒரு மேட்ரிமோனியல் கம்பனிக்காரன் போட்டிருக்கிற தகவல்... இப்பல்லாம் பொண்ணுங்க முப்பது வயசானா கூட லேசுல கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேங்கிறாங்களாம்.  என்னென்ன காரணங்கள் சொல்லி வரன்களை தட்டிக்கழிக்கிறாங்கன்னு பெரிய லிஸ்டே போட்டிருக்கான். நீயே பாரு''
கணவர் காட்டிய ஆறு இஞ்ச் திரையை அவசரமாக மேய்ந்த மாலதியும் பதறினாள்.
""ஐயய்யோ இதுல சொல்லியிருக்கிறாப்லதானே நம்ம சுஜித்ராவும் நடந்துக்குறா. அப்படின்னா, கல்யாணம்கிறது நம்ம பொண்ணுக்கும் அத்தனை சீக்கிரம் அமைஞ்சிராதா?''
""எனக்குமே அந்த கவலை வந்துடுச்சு. இந்த ஜெனரேஷன் பொண்ணுங்க அத்தனை பேருமே நம்ம சுஜி மாதிரிதான் எல்லாத்தையும் அலட்சியமா டீல் 
பண்றது இப்பதானே தெரியுது''
""நானெல்லாம் அப்பா அம்மாக்கு எப்படி பயந்து நடந்தேன். இப்பல்லாம் அப்படியா? ஹும்... பெத்தவங்க நாமல்ல பிள்ளைகளுக்கு பயப்படறோம்?''
""இப்ப பொலம்பி என்ன பிரயோஜனம்? நீ கொஞ்சமாவது எனக்கு பணிஞ்சு நடந்திருந்தா, அவளுக்கும் அந்த உணர்வு வந்திருக்கும். வேலைக்குப் போகாதேன்னு புருஷன் நான் சொன்ன பிறகும் பிடிவாதமா நீ என்கூட மல்லுக்கட்டுனாக்கா... உன் பொண்ணுக்கு மட்டும் மத்தவங்களை மதிக்கிற பழக்கம் வந்துடுமா?''
""நான் அப்படி ஆனதுக்கும் நீங்கதான் காரணம்.  நம்ம பொண்ணு இப்படி ஆனதுக்கும் நீங்கதான் காரணம்''
""என்னடி லாஜிக் இல்லாம உளர்றே?''
""எல்லாம் கரெக்டான லாஜிக்தான். நான் உங்களுக்கு அடங்கிப் போகலைன்னு ஒருபக்கம் வசைபாடிட்டே.. மறுபக்கம் மகளுக்கு அளவுக்கு மீறி சுதந்திரம் தந்து கொம்பு சீவி விட்டது மறந்து போச்சா?''
""நாளைக்கு இன்னொரு வீட்டுக்குப் போற பொண்ணு... நம்ம வீட்டுலயாவது அவ மனசு போல வாழட்டும்னுதான்''
""இன்னொரு வீட்டுக்குப் போற பொண்ணா? இன்னுமா உங்களுக்கு அந்த பகல் கனவு? எனக்கு நம்பிக்கை இல்லை''
""சனியனே.. அபசகுனமா ஏதாவது சொல்லி வைக்காதே''
""இந்த படபடப்புலாம் முன்னே எங்கே போச்சுதாம்? என்ஜினியரிங் முடிச்சதுமே வரன் தேட சொன்னப்போ.. அப்பாவும் பொண்ணுமா "தாம்தூம்'னு  குதிச்சீங்க... சரி வேலையில சேர்ந்த பிறகாவது என் பேச்சுக்கு காது குடுத்தீங்களான்னா... இல்லியே? ஆன் ûஸட் 
ப்ராஜக்ட்னு ஃப்ளைட் புடிச்சு போய்ட்டா. வந்ததுக்கப்பறமோ வேலை கிடைச்ச பெங்களூர்லயே ஃப்ளாட் வாங்கணும்னு அடம் புடிச்சா. அங்கே கல்யாண்நகர் ஃப்ளாட்ல பால் காய்ச்சிறப்போ என்ன சொன்னா?  ஒரு வொர்ல்ட் டூர் போய்ட்டு வந்ததும் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு''
""உடனே பதில்சொன்னேனே... கல்யாணமாகி புருஷன்கூட ஹனிமூன் டூரே போகலாம்னு..
""நம்பிட்டு மூலையிலே போய் உட்காருங்க. போன மாசம் பூஜை லீவுக்கு வந்துட்டு போறப்போ என்ன சொன்னா தெரியுமா? கல்யாணம்கிற ஒண்ணு வாழ்க்கையிலே  முக்கியம்னு தோணலை. இனிமேலும் மேட்ரிமோனியல் வரன்களை ஃபார்வேர்ட் பண்ண வேணாம்னு அப்பாகிட்டே சொல்லிடும்மான்னு''
மாலதி சொல்லும்போதே அதிர்ச்சியில் முகம் கறுத்தார் ஜனா.
""இத்தனை நாளா இதை நீ சொல்லவே இல்லியே?''
""சொன்னா நீங்க அவ கிட்டேயும் சண்டை பிடிப்பீங்களேனுதான் சொல்லலை''
""நாசமாப் போச்சு. ஏற்கெனவே இந்த வாட்ஸ்அப் 
தகவலைப் படிச்சு மூச்சு முட்டி நிக்கிறேன். இப்ப நீ  
சொல்றபடி நிஜமாவே சுஜிக்கு கல்யாணம் நடக்கலேன்னா அப்புறம் அவ எதிர்காலத்தை மட்டுமில்லே, நம்ம எதிர்காலத்தையும் என்னால நினைச்சுப் பார்க்க முடியலை. குதிரை முன்னால கட்டிவிட்ட முள்ளங்கியாட்டம் மனுஷனோட வாழ்வுங்கறது, உத்யோக லட்சணம்... தாம்பத்ய இன்பம்... மக்கள் பேறு... 
பொருளாதார வெற்றி... மருமக்கள் வரவு... அப்புறம் 
மக்களோட பிள்ளைச் செல்வம்ன்னு ஒவ்வொண்ணா அனுபவிச்சு முடிச்சு.. கடைசியிலே பரமாத்மா 
தேடல்னு நிறைவடையுது. இடையிலே ஒரு கண்ணி கழண்டு சங்கிலி துண்டானாலும் எதை நோக்கி நகர்றதுன்னு தெரியாம, வெறுமையும் நிராசையும் மனுஷனை சூழ்ந்துக்குது. அப்படி ஒரு கதிகேடுக்கு நாம இடம் கொடுக்க கூடாது. அவ மனசை மாத்தியே ஆகணும்''
- முன்னெப்போதும் இல்லாத பளீர் உறுதி தொனித்தது!
""நீங்களும் நானும் பேசி அவ மனசு மாறும்னு தோணலை. வேற யாரையாவது வச்சுத்தான்''- என மாலதி இழுக்கையில்..
""ஆமாமா... முப்பத்தி மூணு வயசுங்கறது அவளுக்கு ரொம்பத்தான் தைர்யம் தந்துட்டுது. அதனால நம்மால முடியாது. இதுக்கு பிரகாஷ்தான் சரி'' என்றார் நம்பிக்கையுடன்.
""கரெக்ட் உங்க குரூப்லே அவரோட பேச்சு சாதுர்யம் யாருக்குமே வராது'' 
பிரகாஷ் வந்ததுமே கணவனும் மனைவியும் பரபரப்பானார்கள். 
""வாடா...  காலையிலேயே கூப்பிட்டா இப்பதான் நேரம் கிடைச்சுதாக்கும்?''
""என் பையன் மாதிரிதானேடா உன் பொண்ணும்! ஹாலிடேஸ்ல பத்துமணிக்கு முன்னால எழுந்திருப்பாளா? நானும் என் வேலைகளை எல்லாம் முடிச்சுட்டுதானே வரணும்''
""அண்ணே... நீங்க வந்திருக்கிற டைம்தான் சரி. அடுத்தவங்க பிரச்னை... ஃபீலிங்க்ûஸப் புரிஞ்சுக்கிற மனசு இவருக்குக் கிடையவே கிடையாது''
""இவ பெரிய மதர் தெரெஸா... அப்படியே மத்தவங்களுக்காக வாழ்ந்து தள்ளுறா''
""ஆமாமா. இவர் பில்கேட்ஸா சம்பாதிச்சு கொட்றதைத்தான், நான் ஊருக்கெல்லாம் வாரி இறைக்கிறேனாக்கும்'' 
""எல்லாம் தானும் சம்பாதிக்கிற திமிரு''
""டேய் அடங்குடா.. எதுக்கெடுத்தாலும் பொண்டாட்டியை மட்டம் தட்டிட்டு? நீங்க ரெண்டு
பேரும் இப்படி இருக்கறதாலத்தான் சுஜித்ராவுக்கு கல்யாணம்னாலே அலர்ஜியா போச்சோ என்னமோ?''
நண்பர் சொன்னதை ஆமோதிக்கிற ரீதியில் மவுனம் காட்டினார்கள்.
""சரி என்னதான்ம்மா சொல்றா உன் பொண்ணு?''
""இன்னும் எதுவும் கேட்டுக்கலைண்ணா. வந்தவ காபி குடிச்சுட்டு மாடிக்கு தூங்கப் போய்ட்டா. டிபன் சாப்பிட வர்றப்ப கேட்கலாம்னு நானும் பூரி பண்ணி வச்சுட்டு பத்துமணி வரை காத்திருந்ததுதான் மிச்சம். அவ இப்பதான் குளிக்க போயிருக்கா''
""ம்...'' 
""டேய் பிரகாஷ். இத்தனை நாளும் நாங்க அனுப்பின வரன் போட்டோக்களை, லுக்கு நல்லா இல்லை... உசரம் போதாது.. ஸ்மார்ட்னெஸ் பத்தாது... 
அப்படி இப்படின்னுதானே தட்டிக்கழிச்சா. ஆனா போன தடவை வந்துட்டு போறப்போ சுத்தமாவே மேரேஜ்லே இண்ட்ரஸ்ட் இல்லைன்னு இவகிட்டே ஓபனாவே சொல்லிட்டாளாம். அது மட்டும் உண்மைன்னா.. நான் தாங்கவே மாட்டேன்''
""என்னடா இது புதுக்கரடி? சமீபத்துலதான் ஒரு விஷயம் வாட்ஸ்அப்ல பார்த்தேன். இன்னைய தேதியிலே பசங்க மைண்ட்ல அதுவும் பொம்பளை பசங்க மனசுல கல்யாணத்தை புறக்கணிச்சு வாழணும்கிற எண்ணம் அதிகமாகிட்டே வருதாம்''
""ஆமாண்ணா நாங்களும் அதை படிச்சுட்டுத்தான், அரண்டு போய் உங்களை கூப்பிட்டோம். அதுல எழுதி இருக்கிறாப்பிலேயே  இவளும்  அது நொட்டை இது நொள்ளைன்னு சொல்லிச் சொல்லி... கடைசியிலே மொத்தமா இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுட்டா. நீங்க சொன்ன மாதிரி நானும் இவரும் போடுற சண்டையினாலதான் அவளுக்கு கல்யாண வெறுப்புங்கிறதை ஏத்துக்க முடியாது. என்னதான் சண்டை போட்டாலும், என் மாமியார்ட்ட கூட இவர் என்னை விட்டுக் கொடுத்தது இல்லை! ஆரம்பத்துல மாமியார்த்தனத்தை காட்டுன அத்தை, இவர் எனக்கு சப்போர்ட் பண்றதைப் பார்த்து பார்த்துத் தானே தன் குணத்தை மாத்திக்கிட்டாங்க. அதுமட்டுமா? நான் வேலைக்குப் போறதுல கொஞ்சம் கூட விருப்பம் இல்லாத இந்த மனுஷர்தான்... முப்பது வருஷமா என்னை ஆபிஸ்ல ட்ராப் பண்ணிட்டுருக்கார். தான் ஆம்பளைங்கிற ஈகோனால அப்பப்போ வாய் வார்த்தையா குத்தி குதறினாலும், எத்தனையோ நாள் என் மேலே இரக்கப்பட்டு என் கால் பிடிச்சு விட்டு... சுடுதண்ணீர் ஒத்தடம் குடுத்த கதையெல்லாம் அவளுக்குத் தெரியுமா? இதுவரை யாருக்குமே சொல்லாத இதையெல்லாம் நான் ஏன் உங்க கிட்டே சொல்றேன்னா.. இவர் போடற சண்டையினாலதான் சுஜிக்கு கல்யாணத்துல வெறுப்புன்னு நீங்களும் நம்பினா... அது இவர் மனசை ரொம்பவும் நோகடிக்கும்ண்ணா''
""ச்சீ...ச்சீ... என்னம்மா பேசுறே? எனக்கு உங்க 
ரெண்டுபேர் பத்தி தெரியாதா?  இங்கே காச்சு 
மூச்சுன்னு கத்துற இவன், எங்க வீட்டுக்கு வந்தா உன்னை பூமிக்கும் ஆகாசத்துக்குமா  எப்படி தூக்கி வச்சு புகழ்ந்து பேசுவான் தெரியுமா? வேலைக்குப் போய் எவ்வளவு களைப்பா வந்தாலும் ஒருநாள்கூட நீ வீட்டு விஷயங்களை அலட்சியப்படுத்தின துல்லேன்னு 
அப்படி பாராட்டுவான். அதிலேயும் உன் சிக்கனத்தையும் சேமிப்புக் குணத்தையும் சொல்ல ஆரம்பிச்சான்னா...சான்úஸ இல்லை'' 
""நிஜமாவா சொல்றீங்க?''
""ஸ்கூல்ல ஆரம்பிச்ச நட்பும்மா. இவனோட ஒவ்வோர் அசைவும் எனக்கு அத்துப்படி.  காசு பணத்துல பிடிப்பு இல்லாததுனால இவன் கையிலே பணமே தங்காது. அந்த ஒரு குறையினால, கட்டின பொண்டாட்டி உன்னை வீட்டுலயே ராணி மாதிரி 
உட்காரவச்சு பார்க்க முடியலேனுதான் இவனுக்கு ஒரு தாழ்வுமனப்பான்மை! அதை மறைக்கத்தான் உன்கிட்டே எப்பவும் மல்லுக்கு நிக்கிறான். மத்தப்
படி உன்னை பெருசா நேசிக்கிறது மட்டுமல்ல, ரொம்ப உயர்வா மதிக்கவே செய்யறான்ம்மா''
சட்டென பூத்த கண்ணீரை தூசி நீக்குகிற பாவனையோடு துடைத்தவாறே... ""அடடே பேசிட்டிருந்ததுலே உங்களுக்கு காபியே தரலை.. இதோ'' என உள் நோக்கி நடக்கையில்.. கையில் டிபன் தட்டுடன் ஹாலுக்குள் பிரவேசித்தாள் சுஜித்ரா. 
""ஹாய் அங்கிள் எப்டி இருக்கீங்க? ஆன்டி வரலை? பூரி எடுத்துட்டு வரட்டுமா?''
""டிபன்லாம் எப்பவோ ஆயிடுச்சு.  வா... வா... உட்கார்ந்து சாப்பிடு''
உட்கார்வதற்கு தோதான இடம் மகள் தேடும் தருணத்தில்... ஒரு கண்ணசைவில் கணவரை ஹாலிலிருந்து வெளியேற்றிவிட்டு,தானும் சமையலறை நோக்கி நடந்தாள் மாலதி. 
""அங்கிள், ப்ரவீண் எப்டி இருக்கான்? சிங்கிளா? இல்லே யு.எஸ்ல ஆள் புடிச்சுட்டானா?''
""அவன் யாரைப் புடிச்சாலும் கவலை இல்லை. அவன் சந்தோஷமே என் சந்தோஷம்! அதுசரி நீ என்னமோ கல்யாணமே வேணாம்னு ஒரு குண்டை போட்டிருக்கியாமே.  அன்னை தெரசா...  
அப்துல் கலாம் தியாகம்.. லட்சியம்லாம் உனக்கு... ப்ரவீணுக்கெல்லாம் மேட்ச் ஆகாதும்மா''
""என்ன அங்கிள்... இப்படி மூக்கை 
உடைக்கிறீங்க?''
""பின்னே என்னம்மா? நீங்க ரெண்டு பேருமே படு சோம்பேறிங்க.. லைஃப்ல பெரிய லட்சியமெல்லாம் கிடையாது. டாக்டர் டீச்சர்னு பொதுநல சேவைகள்லயும் இல்லை. நிறைய சம்பாதிக்கணும் அதைவிட நிறைய செலவழிக்கணும்கிற மைண்ட் செட். இதுல எதுக்கு கல்யாணமே பண்ணிக்காத தியாகம்... வெங்காயம்லாம்?''
""அப்படியா சொல்றீங்க? ம்.. நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் அங்கிள்''
""அப்படின்னா கல்யாணத்துக்கு சம்மதிக்கிறியா? அப்பாகிட்டே உடனே மாப்பிள்ளை பார்க்கச் சொல்லட்டுமா?'' 
""ம்... சொல்லுங்க. ஆனா ஃபைனலா மாப்பிள்ளையை நான்தான் செலக்ட் பண்ணுவேன். ஓகேவா?''
""டபுள் ஓகே''
பிரகாஷை வழியனுப்பி விட்டு திரும்பிய மாலதி, அப்படியே சுஜித்ராவைக் கட்டிக்கொண்டு கணவரைப் பார்த்து வாய்கொள்ளாமல் சிரித்தாள்.
""அங்கிள் அப்படி என்னடா பேசி உன்னை கன்வின்ஸ் பண்ணிட்டார்?''
கேள்விக்குப் பதில் சொல்லாமல் தட்டில் மிச்சமிருந்த மசாலாவை விரலால் வழித்து வாய்க்குள் விட்டு உறிஞ்சியவாறே அப்பா அம்மாவைப் பார்த்து கண் சிமிட்டினாள்.
""அங்கிள் பேசுனதை கேட்டா கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்? நிச்சயமா இல்லம்மா''
""அப்புறம்?''
""நீங்க ரெண்டுபேரும் அங்கிள்ட்ட பேசிட்டிருந்தப்பவே நான் டைனிங் ஹால் வந்துட்டேன். நீ அப்பா பத்தி அங்கிள்ட சொன்னதையும்... அம்மா பத்தின அப்பாவோட அபிப்பிராயத்தை அங்கிள் உன்கிட்டே சொன்னதையும் முழுசா கேட்டுட்டேன். கல்யாணம்னா என்னன்னு அதுதான் எனக்கு புரிய வச்சுது. எங்க ஐ.டி உலகத்துல நாங்க ஒருத்தொருக்கொருத்தர் சந்திக்கிறப்போல்லாம் அன்பா கட்டிப்புடிச்சு ஆசையா கன்னம் உரசி ரொம்பவும் சீன் போட்டுத்தான் உறவாடுவோம்.  ஆனா உள்ளுக்குள்ளே ஜஸ்ட் போட்டி மட்டுமல்ல, வெறுப்பும் பொறாமையுமே விஷமா மண்டிக் கிடக்கும். ஆனா நீங்களோ... ஒருத்தருக்கு ஒருத்தர் வெறுத்துக்கிறாப்பிலே வெளியே உரசிக்கிட்டாலும், உள்ளுக்குள்ளே இந்த அளவு விட்டுக்கொடுக்காத நேசங்களை வளர்க்குறீங்கன்னா... சம்திங் மஸ்ட் பி தெயர்.. இன் திஸ் மேரேஜ்னு தோணிச்சு. அதை நானும் அனுபவிக்கணும்னு நினைச்சேன். அதான் ஓகேன்னு சொல்லிட்டேன்''
நம்பவே முடியாத பிரமிப்பும் பரவசமுமாக ஜனாவும் மாலதியும் முகம் மலர்ந்தனர்.
""ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்டா செல்லம்''
""வெயிட்... வெயிட்... அவசரப்படாதீங்க. நான் சொல்லப்போற ரெண்டு கண்டிஷன்களை ஏத்துக்கிட்டாத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்''
அப்பா அம்மா பரஸ்பரம் கேள்விக்குறிகளை பரிமாறுகையில் தொடர்ந்து சொன்னாள்.
""நீங்க எத்தனை வரன்கள் வேணும்னாலும் காட்டுங்க. ஆனா மாப்பிள்ளையை முழுக்க முழுக்க நான் தான் முடிவு பண்ணுவேன். அதுல எந்த ப்ரஷரும் இருக்கக் கூடாது''
""நீ கல்யாணத்துக்கு சம்மதிச்சதே போதும்டா. எல்லாமே உன் விருப்பபடியே நடக்கட்டும். அடுத்த 
கண்டிஷன்?''
""அப்படி பார்த்து பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகு.. ஒருவேளை அவனுக்கும் எனக்கும் செட்டாகலைன்னா.. நோ காம்ப்ரமைஸ்.. நிச்சயமா டைவர்ஸ்தான். அப்போ வந்து.. அட்ஜஸ்ட் பண்ணிக்கச் சொல்லி நச்சரிப்போ.. நாலுபேர் தப்பா பேசு
வாங்கனு புலம்பலோ கூடவே கூடாது'' 
""என்னடா சொ...ல்...றே?''
அப்பா அம்மா அதிர்ந்து போய் திணறி நிற்பதை சுஜித்ரா கண்டு கொள்ளவே இல்லை.
""அதுக்காக கல்யாணம் முடிஞ்ச மறுமாசமே டைவர்ஸ் கேட்குற அவசரக்காரி இல்லை.  கல்யாணத்தை காப்பாத்திக்கறதுக்காக  நிச்சயம் டைம் குடுத்து பார்ப்பேன்.. அப்படி முயற்சி பண்ணியும் வொர்க் அவுட் ஆகலைன்னா அதுக்கப்பறம் நேரா டைவர்ஸ்தான். நல்லா கேட்டுக்குங்க, நான் இதை கேஷ்வலா சொல்லலை. ரொம்ப சீரியஸா சொல்றேன். இனி முடிவு உங்க கையிலே''
மலங்க மலங்க விழிக்கும் மனைவியை, பார்வையாலேயே அமைதிப்படுத்திவிட்டு மகள் பக்கம் திரும்பினார்.
""சரிம்மா உன் ரெண்டு கண்டிஷன்களுக்கும் நாங்க சம்மதிக்கிறோம். அதே மாதிரி எங்களுக்கும் கண்டிஷன் இருக்கு. ரெண்டு இல்லை. ஜஸ்ட் ஒண்ணே ஒண்ணுதான்''
""ம்... சொல்லுங்கப்பா''
""உனக்கும் அவருக்குமான டைவர்ஸ் விவகாரத்துல மூணாவதா ஒரு உயிர் பாதிக்கப்படவே கூடாது''
""வாட் டு யூ மீன்''
""ஆமாம்மா. நீ ஆயுசுக்கும் கல்யாணமே பண்ணாம இருந்தா கூட அந்த வருத்தம் எங்களுக்கு கொஞ்சநாள்தான். ஆனா துரதிருஷ்டவசமா குழந்தை உருவான பிறகு விவாகரத்து ஆச்சுனா அந்த துக்கம் எங்களை ஆயுசுக்கும் துரத்தும்! அதனால இந்த நூற்றாண்டோட இன்னொரு கேன்சர் மாதிரியான இந்த டைவர்ஸ் உன் வாழ்க்கையிலேயும் குறுக்கிட்டா.. அந்த சமயத்துல உனக்கு உள்ளேயும் சரி.. வெளியேயும் சரி குழந்தைங்கிற உயிர் இருக்கவே கூடாது. புரியுதா?''
""அ..ப்..பா''
""ஆமாடி... அப்பா சொல்றது நூத்துக்கு நூறு சரி. ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து வாழத்தெரியாம டைவர்ஸ் பண்ணிக்கறது உங்க உரிமையா இருக்கலாம். ஆனா அதனோட மோசமான விளைவுகளை அனுபவிக்கறதுக்காக ஒரு பிள்ளையைப் பிரசவிக்க உனக்கு எந்த உரிமையும் இல்லை''
""அம்மா நீயுமா இப்படி பேசுறே?''
""நாங்க தான்டி இப்படி பேச முடியும்! உன் பாஷையிலே சொல்லணும்னா எங்க ரெண்டு பேருக்கும் கூட ஆரம்பத்துல செட்டாகலைடி. ஆனா இந்தக் காலம் மாதிரி அன்னைக்கு டைவர்ஸ்க்கான தைர்யம் ஆம்பளை இவருக்கே இருக்கல. என் மாமனார் காலத்துக்குப் பிறகு இவருக்கும் தைர்யம் வரத்தான் செஞ்சுது. ஆனா அதுக்குள்ளே நீ பிறந்துட்டதால உன்னைப் பிரிய இவருக்கு மனசே வரலை.  டைவர்ஸ் பண்ணுனா குழந்தையை எனக்கு விட்டு குடுப்பியா?ன்னு என்கிட்டே கேட்டும் பார்த்தார். அப்படி ஒருவேளை உன்னை எங்கிட்டேர்ந்து பிரிச்சிடுவாரோ?ன்னு நான் பயப்படவும் செய்தேன். அதனாலத்தான்... எனக்கு வேலை இல்லைங்கறது அவருக்கு சாதகமா போய்டக்கூடாதேன்னுதான்  அவர் சொல்லை மீறி வேலைக்குப் போனேன்''
""மை காட்''
""அம்மா சொல்றது உண்மைதான்ம்மா. எல்லா காலத்திலேயும் இருபது ப்ளஸ் வயசுங்கறது எதையும் செய்ற துணிச்சல் தர்ற வயசும்மா. அதையும் மீறி எங்க கல்யாணம் காப்பாத்தப்பட்டதுனா அதுக்கு முழுக்க முழுக்க நீதாம்மா காரணம். அந்த அளவு, உன் வரவு, எங்க தனிப்பட்ட வேற்றுமை, வெறுப்புகளை 
மறக்கடிச்சு, உன் ஒவ்வொரு அசைவிலேயும் அனந்தகோடி ஆனந்தம் தந்தது. அதுதான் எங்க பிரிவைத் தடுத்து கல்யாணத்தை காப்பாத்திச்சுது. ஆனா இன்னைய மெட்டிரியலிஸ்டிக் உலகம் மென்மைகளை எல்லாம் ஒண்ணொண்ணா இழந்துட்டு வர்றதுனால... இப்பல்லாம் குழந்தையால கூட கல்யாணங்களைக் காப்பாத்த முடியறதில்லேம்மா...
அதனாலத்தான் அப்பா இப்படி ஒரு கண்டிஷன் போடுறார். உன் நன்மைக்காக மட்டுமல்ல, இன்னும் முகம் தெரியாத அந்த புதிய உயிரோட நன்மைக்காகவுமே நாங்க இதை சொல்றோம். உங்க கல்யாணம் நிலைக்குமா? நிலைக்காதா?ன்னு நீங்களே கண்டுபிடிக்க எப்படியும் ஒண்ணு ரெண்டு வருஷம் ஆகும்ல... அதுவரை குழந்தை பெத்துக்கவே பெத்துக்காதீங்க. அந்த காலக்கட்டத்துக்குப் பிறகு குழந்தைங்கிற மூணாவது உயிர் உருவாயிட்டா அதுக்கப்புறம் என்னைக்குமே டைவர்ûஸ நினைச்சுப் பார்க்காதீங்க. சொல்லப் போனா... அதுக்கு அவசியமும் இருக்காது. ஏன்னா.. ஒரு குழந்தை இணைஞ்ச குடும்பத்துல.. இயற்கை தந்த உணர்வுகளோட இயல்பா வாழ்ந்தாலே போதும்... இல்லறம்கிற பந்தம் படு ஸ்ட்ராங்கா உறுதிப்பட்டுரும்''
""ஆமா... எங்க கல்யாணம் போல'' - அம்மா சிரித்தபோது சுஜித்ரா விக்கித்து நின்றாள்.
""என்னப்பா திடீர்னு இப்படி?''
""அம்மாடி உன் டயலாக்கையே ரிபீட் பண்றேன். நாங்க எங்க கண்டிஷனை கேஷ்வலா சொல்லலை. ரொம்ப சீரியஸா சொல்றோம். இனி முடிவு உன் கையிலே''

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com