பங்கஜத்தின் சங்கீத சாம்ராஜ்ஜியம் !

அருணுடன் தேன்நிலவுக்குச் சென்று திரும்பி வந்த பின் புகுந்த வீட்டு அடுக்களைக்குள் பங்கஜம் அன்றுதான் நுழைந்தாள்.நுழைந்த அன்றே அவளுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.
பங்கஜத்தின் சங்கீத சாம்ராஜ்ஜியம் !


அருணுடன் தேன்நிலவுக்குச் சென்று திரும்பி வந்த பின் புகுந்த வீட்டு அடுக்களைக்குள் பங்கஜம் அன்றுதான் நுழைந்தாள்.நுழைந்த அன்றே அவளுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. அவள் தனக்குப் பிடித்த லதா மங்கேஷ்கரின் ஹிந்திப் பாட்டு ஒன்றை முனங்கிக் கொண்டே சமையலில் ஈடுபட்டபோது அவள் மாமியார் கசப்புடன், "" சமைக்கிறச்சே என்ன பாட்டு?'' என்று முணுமுணுத்தது அவள் காதில் விழுந்துவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன்னால் "சோரிசோரி' எனும் ஹிந்தி திரைப்படத்தில் லதா பாடிய பாட்டு. அதன் ராகம் கர்நாடக இசையின் மோகன ராகத்தை ஒத்திருந்தது.மோகனம் அவளுக்குமிகவும் பிடித்த ராகம். ஹிந்திப் பாடலின் சொற்கள் அவளுக்குத் தெரியாததால் அவற்றின் இடத்தில் ""லலலா...லலலா'' என்று போட்டு அவள் சன்னமாய்ப் பாடிக்கொண்டிருந்தாள்.
அவள் அம்மாவும் பாடுவாள். தன் அம்மாவும் பாடுவாள் என்று அவள் அம்மா அவளிடம் சொன்னதுண்டு.
""அப்படியானால் நீ ஏன் அம்மா முறைப்படி கற்றுக்கொண்டு ஒரு பாடகியாகவில்லை?'' என்னும் அவளது கேள்விக்கு,
"" என்னடி செய்யறது? உங்க தாத்தாவுக்கு நான் பெரிய பாடகியாகணும்னு ஆசை. உங்க பாட்டி அதுக்கு ஒத்துக்கலை. பொண்ணுகளுக்குக் காலாகாலத்தில கல்யாணம் பண்ணி அனுப்புறதுதான் சரின்னுட்டா.பாட்டு, கூத்துன்னெல்லாம் பண்ணிண்டிருந்தா குடும்ப வாழ்க்கையில அது பிரச்னைகளை உண்டாக்கும்னு அடிச்சுச் சொல்லித் தடுக்கப்பாத்தா. ஆனால் எங்கப்பா...உங்க தாத்தா...கேக்கலை. ஒரு பாட்டு வாத்தியாரை அமர்த்தி நான் கத்துக்க ஏற்பாடு பண்ணிட்டா... கச்சேரிகள்னெல்லாம் பண்ணாட்டாலும்
சங்கீதம் ரொம்பப் பெரிய விஷயம். மனம் சோர்வடையற நேரங்கள்ல அதைப் போல ஆறுதல் அளிக்கிறது வேற எதுவுமே கிடையாது''
தன் அம்மாவுடனான இந்த உரையாடலை நினைத்துப் பார்த்துக்கொண்ட பங்கஜம் உடனேயே தன் குரலின் சுருதியைத் தணித்துக்கொண்டாள். அவள் மாமியார் அடுக்களையிலேயே ஒரு மினி ரேடியாவை வைத்து அதில் "மன்சாஹே கீத்' ஹிந்திப் பாடல்களைக் கேட்டுக்கொண்டே சமைப்பது வழக்கம். அதற்கு முன் தினம் அவள் மாமியார் இவள் இப்போது பாடிய ""சோரி சோரி'' ஹிந்தி பூபாலி "கர்நாடக மோகன' ராகப் பாடலைத் தலையாட்டியும் விரல் சொடுக்கியும் ரசித்ததை பார்த்ததால்தான் மாமியாரை "மயக்கும்' வேலையில் இப்போது பங்கஜம் ஈடுபட்டாள். தேன் நிலவு கழித்து அவள் திரும்பிய பின் இன்று மூன்றாம் நாள். முதல் இரண்டு நாள்களிலும் அவள் மாமியார் அவளை அடுக்களையில் வேலை செய்ய அனுமதிக்கவில்லை. தானே சமையலைக் கவனித்துக் கொண்டாள். அப்போதுதான் காலை
களில் கர்நாடக இசை, சினிமாப்பாடல்கள் ஆகியவற்றையும், மாலைகளில் ஹிந்தி திரைப்படப் பாடல்களையும் அவள் கேட்டு ரசித்ததைப் பங்கஜம் தெரிந்து கொள்ள வாய்த்தது.
அதனால் தன் மாமியார், ""பங்கஜம்! சமைக்கிறப்போ பாடாதே. அப்புறம் ரெண்டு தரம் உப்பை அள்ளிப் போட்டுடுவே! சமைக்கிறப்போ கவனமாயிருக்கணும். புரிஞ்சுதா?'' என்று கண்டித்த போது பங்கஜம் சற்றே புண்பட்டுப் போனாள். அதுதான் தன் மாமியாரின் முதல் கடுஞ்சொல் என்பதால் அவளுக்குச் சுருக்கென்றது. பிறந்த வீட்டில் காலையிலும் மாலையிலும் மட்டுமல்லாது, சமயம் வாய்த்த போதெல்லாம் பாடிக்கொண்டிருந்தது போல் புகுந்த வீட்டில் செய்ய முடியாது என்பதை அவள் புரிந்துகொண்டு புழுங்கினாள். குரலின் இனிமை கெடாதிருக்க வேண்டுமென்பதன் பொருட்டு, சாதகம் செய்வதற்காக அவள் அப்பா அவளை அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுப்பிவிட்டுவிடுவார்.
தேன்நிலவுக் காலத்தில் தன்னால் வாய்விட்டுப் பாட முடியாமல் போனதே அவளை உறுத்திக்கொண்டிருந்தது. இரண்டு, மூன்று நாள்களுக்குப் பாடாதிருந்தாலே அது குரலின் சரளமின்மையில் தெரிந்துவிடும் என்று அவள் அப்பா அடிக்கடி அவளைப் பயமுறுத்தியதுண்டு. தேன்நிலவின் போது அவர்கள் ஓட்டல் அறையில் தங்கியிருந்த நேரங்களில் அருண் கூட அவளைப் பாடச் சொல்லாதது அவளை ஏமாற்றத்துக்குஉள்ளாக்கியிருந்தது. அவள் அப்பா அருணிடம் அவள் செய்த சில கச்சேரிகள் பற்றிய பாராட்டு விமரிசனம் தமிழ், ஆங்கில இதழ்களில் வந்துள்ளது பற்றிப் பெருமைப்பட்டுக்கொண்ட போது, அருண் ஒன்றும் சொல்லாமல் சிரித்தபடி தலையைத் தலையை ஆட்டிக் கொண்டிருந்தான்.
அவர்களுடையது காதல் திருமணம். மைய அரசு அலுவலகம் ஒன்றில் பணிபுரிந்துகொண்டிருந்த காலத்தில் இருவருள்ளும் காதல் மலர்ந்தது, ஜாதி வேறுபாடு போன்ற சிக்கல்கள் இல்லாததாலும், ஜாதகங்கள் கூடப் பொருந்திவிட்டதாலும் இருதரப்பினரின் சம்மதத்துடன் அவர்களின் திருமணம் நிறைவேறியது.
வேலையில் சேர்ந்த புதிதில் ஒரு முறை அநாதை இல்லம் ஒன்றின் உதவிநிதிக் கச்சேரிக்காக அவள் தன் அலுவலகத்தினரிடம் டிக்கெட் விற்ற போதுதான் கச்சேரி செய்யப்போகிறவள் அவள்தான் எனும் செய்தி வெளியானது. அதுகாறும் தான் ஒரு பாடகி என்பதை அவள் எவரிடமும் சொல்லிக் கொண்டதில்லை. தானும் ஒரு டிக்கெட் வாங்கிக்கொண்ட அருண் கச்சேரிக்கு வந்து கடைசி வரையில் இருந்து ரசித்தான். அவர்களிடையே காதல் மலர்வதற்கு முந்திய நிகழ்ச்சியாகும் அது. அதன் பிறகு அவன் அவளின் எல்லாக் கச்சேரிகளிலும் ஆஜராவதை வழக்கமாய்க் கொண்டான்.
அவளைப் பெண் பார்க்க வந்த போது அவள் மாமியார் அவளைப் பாடச் சொல்லிக் கேட்டுவிட்டு, ""உனக்கு நல்ல குரலும் ஞானமும் இருக்கும்மா!'' என்று புகழ்ந்ததோடு, மேலும் ஒரு பாட்டைப் பாடச் சொன்னபோது, உள்ளுர்க் கச்சேரிகளுக்குத் தன் புகுந்த வீட்டில் மறுப்பு இருக்காது என்று அவள் நம்பிக்கை கொண்டாள்.
அன்று அவள் பூஜை அறையில் விளக்கேற்றிவிட்டு அங்கேயே அமர்ந்து சுருதிப் பெட்டியை இயக்கியவாறு பாடத் தொடங்கிய போது, கூடத்தில் உட்கார்ந்து தொலைக்காட்சித் தொடர் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்த அவள் மாமியார் தன் பருமனான உடம்பைத் தூக்கிக்கொண்டு அங்கு வந்து பூஜை அறையின் கதவைப் படாரென்று சாத்திவிட்டுப் போனபோது பங்கஜத்துக்குத் தூக்கிவாரித்தான் போட்டது.ஆனால், பாட்டைப் பாதியில் நிறுத்தாமல் அவள் தொடர்ந்து பாடலானாள். அடுத்து அவள் இன்னொரு பாட்டைத் தொடங்கி அனுபல்லவியில் இருந்த போது அவள் மாமியார்
மீண்டும் கதவைத் தள்ளித் திறந்து தோன்றி, ""இத பாரு, பங்கஜம்! பூஜை ரூமுக்கு ஜன்னல் கிடையாது. மூடின கதவுக்குப் பின்னால உக்காந்துண்டு பாட வேற பண்ணினா மூச்சடைக்கும்.மூர்ச்சை போட்டுடும். அதனால இந்தப் பாட்டோட நிறுத்திக்கோ. கச்சேரி பண்ண ஆரம்பிச்சுடாதே! என்ன?'' என்று திருவாய் மலர்ந்தாள்.
மாமியாரின் கடுமையான குரலைக் கேட்ட பங்கஜம் திகைத்துப் போனாள். எனினும் பாட்டை நிறுத்திவிட்டு, ""அப்ப நான் கதவைத் திறந்து வெச்சுக்
கறேனே?'' என்றாள் புன்சிரிப்புடன்.
""நான் டிவி. பாத்துண்டிருக்கேனோல்லியோ? உன் பாட்டு அதுக்கு இடைஞ்சலாயிருக்கும். டயலாக் சரியாக் காதுல விழாது.''
""எனக்குப் புரியறதும்மா. நான் வேலைக்குப் போறதால, காலங்கார்த்தாலயோ, இல்லேன்னா ஆஃபீஸ்லேர்ந்து வந்ததுக்கு அப்புறமோதான் பாட முடியும்.
நீங்களே இதுக்கு ஒரு வழி சொல்லுங்களேம்மா,''
""அதான் ஜி.எம்முக்குப் பிஏவா இருந்துண்டு நிறைய சம்பாதிக்கிறியே? கச்சேரி வேற பண்ணிச் சம்பாதிக்கணுமா?''
""அம்மா! நான் பணத்துக்காக அப்பப்போ உள்ளுர்க் கல்யாணக் கச்சேரிகள்ல பாட்றதில்லே. சங்கீதம் எனக்கு வெறும் பொழுதுபோக்கு இல்லேம்மா. அது என்னோட உயிர் மூச்சு. பாடற திறமைங்கிறது கடவுளுடைய வரப்
பிரசாதம்கிறது உங்களுக்கே தெரியும். கடவுள் கொடுத்த திறமையை அலட்சியப்படுத்துறது கடவுளையே அவமதிக்கிற மாதிரின்னு ஒரு பொன்மொழியே இருக்குன்னு எங்கப்பா சொல்லுவார்.''
""பொன்மொழியோ, பித்தளை மொழியோ! அதெல்லாம் எனக்குத் தெரியாது. தயவு பண்ணி நான் டிவி. பாக்கிறச்சே பாடாதே. தெரிஞ்சுதா?''
பங்கஜத்துக்குள் தாங்கமாட்டாத சினம் பொங்கியது. சில கணங்களுக்கு வாயடைத்துப் போனாலும், அவள் விடுவதாக இல்லை.
""அப்படின்னா, நான் காலம்பற நாலே முக்கால் அஞ்சு மணிக்குப் பாடலாமா? எங்கப்பா அஞ்சுமணிக்கெல்லாம் என்னைப் பூஜை ரூம்ல உக்கந்துண்டு பாடச் சொல்லுவார். அஞ்சுலேர்ந்து ஏழு வரைக்கும் பாடுவேன். இங்கே வந்ததுக்கு அப்புறம் அது முடியாததால என் குரல் முன்ன மாதிரி இல்லே. அது எனக்கே தெரியறது. உச்ச ஸ்தாயியை முன்ன மாதிரி என்னால எட்ட முடியல்லேம்மா.''
""நாலேமுக்காலுக்கும் அஞ்சுக்கும் நீ உச்சஸ்தாயில கத்தினா எங்க தூக்கம் கெட்டுப் போகாதா? அக்கம் பக்கத்துல இருக்கிறவாள்ளாம் வேற சண்டைக்கு வரணுமா?''
இவ்வாறு அறிவித்தபின் மேற்கொண்டு பேச்சுக்கே இடமில்லை என்பது போல் அவள் மாமியார் கதவை அடித்துச் சாத்திவிட்டுப் போனாள்.
அதுகாறும் பங்கஜம் கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீர் இப்போது திமிறிக்கொண்டு வழியலாயிற்று.டிரான்சிஸ்டரில் மன் சாஹே கீத் கேட்கும் என் மாமியார் என் பாட்டைச் சகித்துக்கொள்ளத் தயாராக இல்லை! என்னைப் பெண் பார்க்க வந்த போது என் பாட்டுக்கு விரல் சொடுக்கியும் தான் உட்கார்ந்திருந்த நாற்காலி கையில் தாளம் போட்டும் அதை ரசித்ததாய்க் காட்டிக் கொண்ட இவர், இப்போது ஏன் வாயை மூடிக்கொள்ளச் சொல்லுகிறார்?வீட்டு வேலை செய்யும் போது வாய்க்குள் பாட்டை முனங்குவதைக் கூட இவர் அனுமதிப்பதில்லை. இதை நான் அருணின் கவனத்துக்கு எடுத்துச் சென்றாக வேண்டும். தன் அம்மாவிடம் இது பற்றி அருண் என் சார்பில் பேசட்டும்...
சுருதிப்பெட்டியை மூடிவிட்டு அவள் ஒரு துயரப் பெருமூச்சுடன் எழுந்து நடந்தாள். அவள் தன் படுக்கை அறைக்குள் நுழைய இருந்தபோது, அவள் மாமியார், "" நீயும் டிவி. சீரியல் பாக்கலாமே! நன்னாப் பொழுது போகுமில்லியா?'' என்றாள்.
நடந்து கொண்டே, "" இல்லேம்மா. டிவி. சீரியல் பாக்குறதில எனக்கு ஆர்வம் இல்லே.'' என்றாள்."அபத்தமான' எனும் முன்சொல்லை விழுங்கிக்கொண்டாள்.
ச ட்டென்று அவளுள் ஓர் எண்ணம் ஒளிர்ந்தது.
"நான் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன்!
எங்கள் படுக்கை அறைக் கதவைச் சாத்திக்கொண்டு நான் பாடலாமே!அப்போது இவருக்குத் தொந்தரவாயிருக்காதே! ஜன்னல்களைத் திறந்து வைத்துக்கொண்டால் எனக்கும் வெளிக்காற்று வரும். காற்றில்லாததால் நான் மூர்ச்சையாகி விடுவேனோ என்னும் பயமும் இவருக்கு வேண்டாம்!'
அவள் குளியலறைக்குப் போய் முகம் கழுவிப் பொட்டு இட்டுக்கொண்டு புத்துணர்ச்சியுடன் திரும்பி நடந்து பூஜையறையிலிருந்து தனது சுருதிப்பெட்டியை எடுத்துக்கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்த போது தலையை இரண்டு கைகளிலும் தாங்கிக்கொண்டு கண்களை மூடியவாறு அருண் படுக்கையில் உட்கார்ந்து கொண்டிருந்ததை அவள் பார்த்தாள். அவள் நுழைந்த ஓசையில் அவன் கண் திறந்தான்
""பங்கஜம்! எனக்குப் பயங்கரத் தலைவலி.
கொதிக்கக் கொதிக்க ஒரு கப் காப்பி போட்டு எடுத்துண்டு வாயேன். நல்ல வேளை. இன்னிக்கு நீ லீவ்ல இருக்கே. இல்லேன்னா டிவி. சீரியல் பார்த்துண்டு இருக்கிற அம்மாவை நான் தொல்லை பண்ண வேண்டியிருந்திருக்கும்!''
அவளுடைய அலுவலர் அன்று விடுப்பில் இருந்ததால் அவளும் விடுப்பு எடுத்திருந்தாள். சுருதிப்பெட்டியை அங்கிருந்த மேஜை மீது வைத்துவிட்டு அவள் அருணின் நெற்றியில் தொட்டுப் பார்த்தாள். காய்ச்சல் இல்லை. இயல்பான உடல் சூடுதான்.
""நல்ல வேளை. காய்ச்சல் இல்லே!'' என்று சொல்லிவிட்டு அவள் அடுக்களைக்கு விரைந்தாள்.
சில நிமிடங்களில் திரும்பிய அவள், காப்பித்
தம்ளரை அவனிடம் கொடுத்துவிட்டு, ""ஏன் இப்படி திடீர்னு தலைவலி? உங்களுக்கு இது மாதிரி அடிக்கடி வருமா?'' என்று விசாரித்தாள்.
""இல்லே. இதுதான் முதல் தடவை.,'' என்ற அவன் காப்பியைக் குடித்துவிட்டு, மறுமலர்ச்சியுடன்
புன்னகை புரிந்தான்.
"" தேங்க்ஸ் பங்கஜம். ரெஸ்ட் எடுத்துக்கணும் போல இருக்கு.பாத் ரூமுக்குப் போய்ட்டு வந்து, நான் கொஞ்சம் படுத்துக்கறேன்...'' என்று அருண் எழுந்து
சென்றான்.
காப்பித் தம்ளரை எடுத்துக் கொண்டு போய் அடுக்களைத் தொட்டிமுற்றத்தில் போட்டுவிட்டு உடனே திரும்பிய பங்கஜம், சுருதிப்பெட்டியுடன் தரையில் சம்மணமிட்டு அமர்ந்துகொண்டாள்.
அவள் தன் குரலைச் செருமிச் சரிசெய்துகொண்டிருந்த போது திரும்பிவந்த அருண், "" என்ன இது! தலை வலிக்கிறதால நான்ரெஸ்ட் எடுத்துக்கப் போறேன்னு சொன்னதுக்கு அப்புறமும் இங்க உக்காந்துண்டு பாடப்போறியா?'' என்று கண்களை விரித்துக்கொண்டு
வினவினான்.
"" பாட்டுக் கேட்டா தலைவலலியோ வேற எந்த வலியோ உடனே பறந்து போயிடும், அருண்! எங்கப்பாவுக்குத் தலைவலி வர்றப்பல்லாம் என்னைப் பாடச் சொல்லிக் கேப்பார்...''
""வேடிக்கைதான்! எந்தச் சத்தமும் தலைவலியை அதிகமாத்தான் ஆக்கும்!''
"" என்னது! சத்தமா! சங்கீதம் உங்களுக்குச் சத்தமாத் தெரியறதா? நீங்க சொல்றதுதான் வேடிக்கையாயிருக்கு. எங்க அப்பா அப்படிச் சொன்னதே கிடையாது. உடம்பு சரியில்லாதப்பல்லாம் என்னைப் பாடன்னா சொல்லுவார்?''
""அது உங்கப்பாவோட அபிப்பிராயம். நான் வேற மாதிரி. ரெஸ்ட் மட்டுமில்லே. நான் கொஞ்சம் தூங்கியும் ஆகணும்...''
சுருதிப்பெட்டியை மூடிவிட்டு மெதுவாய் அதைச் சுவரோரம் நகர்த்திய பின் எழுந்த அவள் இரவுச் சாப்பாட்டுக்குத் தொட்டுக்கொள்ள என்ன கறியோ கூட்டோ பண்ண வேண்டும் என்று மாமியாரிடம் கேட்ககூடத்துக்குப் போனாள்.
அன்றிரவு அவள் அருணிடம் தன் பிரச்னை பற்றிப் பேச முற்பட்டாள்.
""இப்ப உங்களுக்குத் தலைவலி இல்லாததால ஒரு முக்கியமான விஷயம் பத்தி நான் உங்க கிட்ட பேசணும்.''
"" சொல்லு.''
""நமக்குக் கல்யாணம் ஆனதுலேர்ந்து நான் ஆற அமர உக்காந்து பாடறதே இல்லே. கவனிச்சிருப்பேள்தானே?''
"" ஆமா? நீ இப்ப சொன்னதுக்கு அப்புறந்தான் எனக்கே அது தெரியறது... ஆனா, ஏன் பாடறதில்லே?''
"" ஏன்னா, என்னைப் பாடச் சொல்லி நீங்க கேக்கறதே இல்லே.''
""ஐயேம் சாரி. நான் கேட்டிருக்கணும்தான். ஆனா ஏனோ எனக்குத் தோணவே இல்லே, பங்கஜம்... அது சரி, உன்னைப் பாடுன்னு யாராவது சொன்னாத்தான் நீ பாடணுமா? நீ பாட்டுக்குப் பாட வேண்டியதுதானே? சாப்பிடு, குளி, தண்ணி குடின்னெல்லாம் யாராவது சொல்லித்தான் நீ அதையெல்லாம் பண்றியா என்ன? அது
உன்னோட ரொடீன்...''
""என்னோட அந்த வழக்கத்தை நான் நிறுத்தியாகணுமா, அருண்?''இவ்வாறு அவள் அவனைக் கேட்டபோது அவள் கண்கள் கலங்கின.ஆனால் அறையின் மங்கிய வெளிச்சத்தில் அருண் அதைக் கவனிக்கவில்லை.
""யாரு நிறுத்தச் சொல்றா? எனக்கும் சரி, எங்கம்மாவுக்கும் சரி, பாட்டுப் பிடிக்கும்னு உனக்கே தெரியும். அதனால உனக்கு எப்பல்லாம் பாடணும்னு தோண்றதோ அப்பல்லாம் நீ பாட்டுக்குப் பாட வேண்டியதுதானே?''
""ஆனா இந்த வீட்டில என்னால வாயே திறக்க முடியாது போல இருக்கு!'' என்று பதிலிறுத்த
பங்கஜம் அன்று மாலை நிகழ்ந்ததை அவனுக்கு விவரித்தாள்.
""பங்கஜம்! டி.வி. பாக்கறது ஒண்ணுதான்
அம்மாவுக்குப் பொழுதுபோக்கு. ஆஃபீஸ்லேர்ந்து வந்ததும் நீ பாடணும்கிறதுக்காக டி.வி. பாக்குறதை நிறுத்துன்னு அம்மாகிட்ட என்னால சொல்ல
முடியாது. ..''
""அருண்! தயவு பண்ணிப் புரிஞ்சுக்குங்கோ.
சங்கீதம்கிறது பாடகர்களுக்கு மூச்சு விட்றது மாதிரி! அதை எப்படி என்னால நிறுத்த முடியும்?''
""எங்கம்மா என்ன பாடவே கூடாதுன்னு
உங்கிட்ட சொன்னாளா?''
""அப்படி பட்னு சொல்லல்லேதான்.ஆனா அவா சொன்னதுக் கெல்லாம் அதுதானே அர்த்தம்?
நான் சொன்னது எல்லாத்தையும் கேட்டுட்டும், நீங்க இது மாதிரிப் பேசுறது எனக்கு ஆச்சரியமாயிருக்கு. பாடாதேன்னு மூஞ்சியில அடிக்கிற மாதிரி சொல்லாட்டாலும், நான் பாடிண்டிருந்தப்போ பூஜை ரூம் கதவைப் படார்னு சாத்திட்டுப்போனா அதுக்கு வேற என்ன அர்த்தம்? கதவை மூடிண்டு பாடினா மூர்ச்சை போட்டுடும்னு வேற பயமுறுத்தினா உங்கம்மா. சமையல் பண்றப்பவும் நான் ஹம் பண்ணக்கூடாதாம். ஒரு தரத்துக்கு ரெண்டு தரம் ரசத்துலயும் சாம்பார்லயும் உப்பை அள்ளிப் போட்டுடுவேனாம்! ஆனா உங்கம்மா சமைக்கிற நாள்கள்லே அடுக்களையிலே ட்ரான்சிஸ்டரை வெச்சுண்டு விரலைச் சொடுக்கிண்டு பாட்டுக் கேக்கறா! ஆனா நான் அதைச் சொல்லிக்காட்டல்லே.''
""பாட்டுக் கேக்குறதுக்கும் பாட்டுப் பாடறதுக்கும் வித்தியாசம் இருக்கு.''
""úஸா? உங்கம்மாவைத்தான் நீங்க சப்போர்ட் பண்றேள்!.''
""ஆமா.ஆனா நியாயமாத்தான் சப்போர்ட் பண்றேன். ஏன்னா ட்ரான்சிஸ்டர்லேர்ந்து வர்ற பாட்டால கான்சென்ட்ரேஷன் கலையாது. ஆனா ஒருத்தர் தானே பாடும் போது அப்படி இல்லே..''
பங்கஜத்தின் கண்களிலிருந்து கண்ணீர் சிந்தலாயிற்று. அதைக் கவனிக்காத அருண்அவளைத் தான் பெரிதும் புண்படுத்திவிட்டதையறியாமல், கொட்டாவி விட்டபடி திரும்பிப் படுத்தான். அவளால் பதில் சொல்ல முடியவில்லை என்பதாய் அவளது மவுனத்தை அவன் எடுத்துக்கொண்டான்.
ஆனால், பங்கஜம் விடுவதாக இல்லை. அவன் தோளைத் தொட்டு, ""அப்படின்னா, நான் நம்ம பெட்ரூம்ல சாதகம் பண்ணட்டுமா? கதவைச் சாத்தினாலும் ஜன்னல்களைத் திறந்து வெச்சுக்கலாமில்லே? உங்கம்மா பயப்பட்ற மாதிரி எனக்கு மூர்ச்சை போட்டுடாதுதானே?''
அருண் திரும்பி அவளைப் பார்த்தான்: ""என்ன, வெளையாட்றியா?''
""சேச்சே. நான் சீரியஸாத்தான் கேக்கறேன். ஆஃபீஸ்லேர்ந்து வந்ததும் நம்ம பெட்ரூம்ல பாடறேன்... அதுக்கு உங்கம்மா ஆட்சேபிக்க மாட்டாதானே?''
அருண் அதிருப்தியுடன் அவளை நோக்கினான்.
""உன்னோட பாட்டு ஜன்னல்கள் வழியா வெளியேறி அக்கம்பக்கத்து வீட்டுக்காராளைத் தொந்தரவு பண்ணுமில்ல?''
""ஏன் தொந்தரவு பண்ணணும்? எல்லா வீடுகள்ளேயும் சாயந்தரம் ஆச்சுன்னா டி.வி. அலறிண்டுதானே இருக்கு?மத்த வீடுகள்லேர்ந்து வர்ற டி.வி. சத்தத்துக்கு ஆட்சேபிக்காத அக்கம்பக்கத்துக்காரா என் பாட்டுக்கு மட்டும் ஏன் ஆட்சேபிக்கணுமாம்?''
""இத பாரு, பங்கஜம். ஆஃபீஸ்லேர்ந்து திரும்பினதும் எனக்கும் டயர்டா இருக்கும். அப்ப நீ இங்க உக்காந்துண்டு பாடுவேன்னு அடம் பிடிக்காதே.''
""அதே ஆஃபீஸ்லேர்ந்துதானே நானும் திரும்பி வறேன்? நானும் தான் டயர்டா இருப்பேன்...''
""கரெக்ட்! அப்ப நீ ஏன் ரெண்டு மணி நேரம் போல் பாடி இன்னும் டயர்டா ஆகணுமாம்?''
" "பாடறதுன்றது களைப்படைய வைக்கிற விஷயம் இல்லே, அருண். அது மனசை அமைதிப்படுத்தற ரிலேக்சேஷன்!''
""உனக்கு வேணா அது ரிலேக்சேஷன். எனக்கு அப்படி இல்லே.''
""அருண்! நீங்க என்னை டீஸ் பண்றேளா? பாடறது ரிலேக்சேஷன் இல்லேன்னா சொல்றேள்?''
""நான் ஒண்ணும் உன்னை டீஸ் பண்ணல்லே. நீ இது மாதிரி பாடி அக்கம்பக்கத்துக்காரா கவனத்தை அட்ராக்ட் பண்ணக்கூடாது.''
"" என்னது! அட்ராக்ட் பண்றதா! என்ன பேசறேள் நீங்க? நான் என்ன நம்ம வீட்டுக்கு வெளியில லான்ல நின்னுண்டு டான்ஸா ஆடப்போறேன்? ""
"" எதுவாயிருந்தாலும் அது மத்தவா கவனத்தை இழுக்கும், இல்லேன்னா அதைச் சிதற அடிக்கும். ரெண்டில எதுவாயிருந்தாலும் ஒரு குடும்பப் பொண்ணுக்கு அது அழகில்லே. தவிர அக்கம்பக்கத்துக்காரா எல்லாருமே படிச்சவா. அதனால பாடறது தொந்தரவுன்னு நேரடியா வந்து சொல்ல மாட்டா.நாமா புரிஞ்சுக்கணும். ஒருக்கா அப்படி மூஞ்சியில அடிச்ச மாதிரி சொல்லாட்டாலும் அவாள்ளாம் அவா வீட்டு ஜன்னல்களைச் சாத்திக்கும்படி இருக்கும். அப்போ, அம்மா சொல்ற மூர்ச்சை அவாளுக்கு வரும்!''இப்படிச் சொல்லிவிட்டு அருண் தன் நகைச்சுவையைத் தானே ரசித்துப் பெரிதாய்ச் சிரித்தான், அவள் பேசாதிருந்தாள்.

அவன் தொடர்ந்தான்: ""இத பாரு, பங்கஜம்...

ஆபீஸ்லேர்ந்து வந்ததும் வராததுமா உக்காந்துண்டு நிறையப் பாட்றது ஸ்ட்ரெய்ன் இல்லேன்னு நீ சொன்னாலும் அது ஸ்ட்ரெய்ன்தான்! இனிமேற்பட்டு கல்யாணக் கச்சேரிக்கெல்லாம் ஒத்துக்காதே. நம்ம கிட்ட இல்லாத பணமா!''
""சரி. பணத்துக்காக நான் அதைச் செய்யறதில்லைன்னாலும், இனிமே கச்சேரி பண்ணல்லே. அதனால கிடைக்கிற பேரும் புகழும் எனக்கு வேண்டாம்.ஆனா, வீட்டில கூட நான் சாதகம் பண்ணக் கூடாதுங்கிறது என்ன நியாயம்? பாடப் பாட ராகம், மூட மூட ரோகம்னு சொல்லுவா. சாதகத்தை நிறுத்தினா என் குரல் துருப்பிடிச்சுப் போயிடும்.''
""குரலைத் துருப்பிடிக்காம வெச்சுக்கணும்கிறதுக்கு நீ என்ன ப்ரொஃபெஷனல் சிங்கரா? சங்கீதத்தைத் தொழிலாக் கொண்டவளாயிருந்தா நீ சொல்றது நியாயம்.''
"" நீங்க ஒரு... ஒரு... என்ன சொல்றதுன்னு தெரியல்லே. சரியான வார்த்தை ஆப்ட மாட்டேங்கிறது...நீங்க என்னை விரும்பிக் கல்யாணம் பண்ணிண்டேள். அப்படின்னா அது என்னோட சங்கீதத்துக்காக இல்லைன்னு இப்ப புரியறது.''
""நான் எப்பவாவது உன் சங்கீதத்துக்காகன்னு சொன்னேனா?''
""ஆக, என் அழகுக்காகவும்தான் என்னை லவ் பண்ணினேள்.''
""அழகுக்காகவும்ன்னு சொல்லாதே. அழகுக்காக மட்டும்தான்!''
""ஆனா, என்னை லவ் பண்றதாச் சொல்றதுக்கு முந்தியே என்னோட சில கச்சேரிகளுக்கெல்லாம் தவறாம வந்திருக்கேள்.''
""நான் உன்னை லவ் பண்றேன்கிறதை வேற எப்படி நான் உனக்குப் புரிய வைக்கிறதாம்?இத பாரு, பங்கஜம். எனக்கும் பாட்டுப் பிடிக்கும். நான் நிரட்சரகுட்சி இல்லே.நீ என்னத்துக்கோசரம் தேவையில்லாம உன்னை ஸ்ட்ரெய்ன் பண்ணிக்கணும்னுதான் கேக்கறேன்.''
""அருண்! அது ஸ்ட்ரெய்ன் இல்லே, ப்ளெஷர்னு நான் எடுத்துச் சொல்லியாச்சு. நீங்க ஒரு பாடகனா இல்லாததால உங்களுக்கு அதோட அருமை புரியல்லேன்னு தோண்றது.''
""பாடத் தெரியறது ஒண்ணுதான் டேலென்ட்டா என்ன? நான் காலேஜ்ல ஃபர்ஸ்ட் வந்தவனாக்கும்!''
""நான் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்ததைச் சொல்லிக்காமிக்க வைக்கிறேள்... சரி. இதுக்கும் மேல நாம வாக்குவாதம் பண்றது வீண்னு தோண்றது. இத்தோட நிறுத்திக்குவோம்.''
""உன்னால பதில் சொல்ல முடியல்லே. அதான் நிறுத்திக்குவோம்கறே!.''
""அப்படியே இருக்கட்டும்.''
""படிச்ச பொண்ணுங்களுக்கே வாயாடித்தனம் ஜாஸ்தி.''
""படிச்ச ஆம்பளைகள் மட்டும் வாயாடுறதில்லையாக்கும்! பதிலடி குடுத்தா வாயடின்னுடுவேள்! என்னை நீங்கதான் இப்படியெல்லாம் எதிர்த்துப் பேச வைக்கிறேள். பேச வெச்சுட்டு எங்க படிப்பைக் குத்தம் சொல்லுவேள்.''
""இத பாரு, பங்கஜம். இது மாதிரி கூடக் கூடப் பேசறது எனக்குப் பிடிக்கல்லே...''
""பிடிக்கிறதும் பிடிக்காததும் ஒன்வே ட்ராஃபிக் இல்லே. நீங்க பேசறது எனக்குக் கூடத்தான் பிடிக்கல்லே. லைக்ஸ் அன்ட் டிஸ்லைக்ஸ் எனக்கும் இருக்கலாம்தானே?''
""அப்ப? யூ டிஸ்லைக் மி!''
""நீங்களும்தான் சொன்னேள்...எனக்குப் பிடிக்கல்லேன்னு! அப்ப, நானும் இதே கேள்வியைக் கேக்கலாம்தானே?''
""நீ வக்கீலுக்குப் படிச்சிருக்கணும். எனக்குத் தூக்கம் கண்ணைச் சுத்தறது. நம்ம வாக்குவாதத்தை நாளைக்குத் தொடரலாமா?''
பங்கஜம் பதில் சொல்லவில்லை. அன்றுஇரவு முழுவதும் அவள் கண்ணைக் கொட்டவில்லை. ஒரு பாடகியின்உணர்ச்சிகளை அருணால் புரிந்து
கொள்ள முடியவில்லை எனபது மட்டும் அவளுக்குக் கண்கூடாய்ப் புரிந்துபோயிற்று. தப்பான மனிதனுக்குத் தான் வாழ்க்கைப்பட்டு விட்டது அவளுக்கு விளங்கிற்று. அதைச் சொன்னால் தானும் தப்பான பெண்ணை மணந்துகொண்டு விட்டதாய் அவன் திருப்பிச் சாடுவான். ஒரு வகையில் அது உண்மைதானே என்று அவளுக்குத் தோன்றியது.
கணவன் பாடகனாக இருந்தால், அவன் வீட்டில் பாடக் கூடாது என்று மனைவியால் சொல்ல முடியுமா?அல்லது சொன்னால்தான் அவன் கேட்பானா எனும் கேள்வி அவளுள் கிளர்ந்த போது அவள் கசப்புடன் சிரித்துக் கொண்டாள். இவ்வாறு பலவிதமாக இரவு முழுவதும் யோசித்துக்கொண்டிருந்த அவள் நான்கு மணிக்கு எழுந்து கழிவறைக்குப் போனாள். அது குளியலறையும் கூட. இரண்டுக்குமிடையே கதவு இருந்தது. அங்கே திடீரென்று அவளுக்கு ஞானோதயம் ஏற்பட்டது. அவள் வெற்றிப் பெருமிதத்துடன் விரல்சொடுக்கிப் புன்சிரிப்புக் கொண்டாள். அப்போதே பல் துலக்கிவிட்டு அவள் தங்கள் அறைக்குப் போய் சுருதிப் பெட்டியை எடுத்துக்கொண்டு திரும்பினாள். பின்னர் குளியலறையின் கதவைச் சாத்திக் கொண்டாள்.
அங்கிருந்த மேடையின் மீது சுருதிப்பெட்டியை வைத்துக்கொண்டு எதிரே இருந்த உயர்ந்த முக்காலியில் அமர்ந்து எல்லையற்ற மன அமைதியுடன் அதை இயக்கினாள். மேலும் ஒரு பொதுவான கழிப்பறையும் கூடத்தில் இருந்ததால் யாரும் அவளைக் குற்றம் சொல்ல முடியாது.
""இங்கே உட்கார்ந்துகொண்டு நான் பாடுவதை யாராலும் தடுக்க முடியாது!'' என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள். அடுத்து, காற்று வெளியேற்றப் புழை மீது அவள் பார்வை பதிந்தது.வென்ட்டிலேட்டர் வழியாக வெளியே அவ்வளவாய்ச் சத்தம் போகாது. அது சீலிங்கைத் தொட்டபடிஇருப்பதாலும், பக்கத்து வீடுகளுக்கும் இந்த வீட்டுக்கும் இடையே பன்னிரண்டு அடி இடைவெளி இருப்பதாலும் வெறும் முனகலாய்க் கேட்குமோ, என்னவோ! அப்படியே கேட்டாலும், நாலரை மணிக்கு யார் விழித்துக்கொண்டிருக்கப் போகிறார்கள்? இந்த யோசனை முன்பே தோன்றி யிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏதோ இப்போதாவது தோன்றியதே! இன்றிலிருந்து பாத்ரூமே எனது பாட்டு ரூம்! ... இவ்வாறு மேலும் நினைத்துச் சமாதானமுற்ற பங்கஜம் அந்த அதிகாலை நேரத்துக்கு ஏற்ற பூபாள ராகத்தின் ஆலாபனையை உற்சாகத்துடன் தொடங்கினாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com