48 மணி நேரம்... 5000 மரக்கன்றுகள்!

மரம் நடுவதைப் பற்றிய விழிப்புணர்வு இப்போது அதிகரித்து உள்ளது. மரம் இல்லாவிட்டால் மழை இல்லை என்பதை மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
48 மணி நேரம்... 5000 மரக்கன்றுகள்!


மரம் நடுவதைப் பற்றிய விழிப்புணர்வு இப்போது அதிகரித்து உள்ளது. மரம் இல்லாவிட்டால் மழை இல்லை என்பதை மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

விருதுநகர் மாவட்டம் கல்லமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் 48 மணி
நேரத்தில் 5000 மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு "இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ்' கிடைத்திருக்கிறது. பா. அருண், ஸ்ரீகாந்த் ஆகிய இருவரே அந்த சகோதரர்கள்.

அருண் பொறியியல் படித்து முடித்து சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஸ்ரீகாந்த் இந்த ஆண்டு பொறியியல் படிப்பை முடித்துள்ளார். சாதனை குறித்து அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:

""மரக் கன்றுகள் நட்டு வளர்ப்பது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என நாங்கள் நினைத்தோம். இதையடுத்து விருதுநகர் மாவட்டம் முழுவதும் சைக்கிளில் சென்று மரக்கன்றுகள் நட்டு மரம் வளர்ப்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்தோம்.
2021 ஜனவரி மாதம் 21- ஆம் தேதி எங்கள் ஊரில் இருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கி 26- ஆம் தேதி மாவட்ட தலைநகரான விருதுநகரில் முடித்தோம். இந்த காலகட்டத்தில் அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், கண்மாய்க்கரைகள், கிராமங்களில் உள்ள வீடுகள் ஆகியவற்றின் முன்பு 5000 மரக்கன்றுகளை நட்டோம். மரக்கன்றுகள் நடப்பட்ட இடங்களில் வாழ்பவர்களிடம் தண்ணீர் ஊற்றி அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம்.
இந்த மரக்கன்றுகளை நடவும், எங்கள் சைக்கிள் பயணத்திற்கும் சிவகாசி தொழிலதிபர்கள் ஏ.பி.செல்வராஜன், அபிரூபன், க.செல்வக்குமார் ஆகியோர் பெரிதும் உதவினார்கள். தோட்டக்கலைத்துறையினர் சிறிதளவு மரக்கன்றுகளை கொடுத்து உதவினார்கள். மரக்கன்றுகளை நடுவதற்காக நாங்கள் சென்ற ஊர்களில் எல்லாம் மக்கள் எங்களை வரவேற்று, உற்சாகப்படுத்தினார்கள்.

குழி தோண்டுவது, இயற்கை உரமிடுவது, தண்ணீர் ஊற்றுவது என பல உதவிகளையும் செய்தார்கள். ராஜபாளையம் பாரதி நகர் பகுதியில் மட்டும் 600 மரக்கன்றுகளை நட்டோம். 190 கி.மீ.தூர சைக்கிள் பயணத்தின் போது 48 மணி நேரத்தில் 5000 மரக்கன்றுகள் நட்டோம்.

இந்த சாதனையை புகைப்படம் உள்ளிட்ட ஆதாரங்களுடன், தில்லியில் உள்ள"இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' என்ற அமைப்பிற்கு அனுப்பினோம். அவர்கள் ஆகஸ்ட் மாதம் சைக்கிளில் சென்று 48 மணி நேரத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்ததாகச் சான்றிதழை அனுப்பி வைத்தனர்.

இதற்கு முன்பு நாங்கள் இருவரும் 2019 - ஆம் ஆண்டு, நெகிழி பை ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து மும்பை வரை 2000 கி.மீ. செய்திருக்கிறோம்'' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com