'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 55

அயோத்தி பாபர் மசூதி கட்டடம் இடிப்பு குறித்துப் பல சந்தேகங்களும் குற்றச்சாட்டுகளும்அப்போதிலிருந்து இப்போதுவரை எழுப்பப்படுகின்றன.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 55


அயோத்தி பாபர் மசூதி கட்டடம் இடிப்பு குறித்துப் பல சந்தேகங்களும் குற்றச்சாட்டுகளும்அப்போதிலிருந்து இப்போதுவரை எழுப்பப்படுகின்றன. அந்த நிகழ்வுடன்  தொடர்புடைய அல்லது அன்றைய காலகட்டத்தில் அரசியலில் முக்கிய பங்கு வகித்த பலருடன் நெருங்கிப் பழகவும், அவர்களது கருத்துகளைத் தெரிந்து கொள்ளவும் எனக்கு வாய்ப்புக் கிடைத்தது.

அயோத்தி சம்பவத்துக்குப் பின்னால் எந்தவித சதித்திட்டமும் இருக்கவில்லையா? பாபர் மசூதியின் குமிழ் கோபுரங்களில் கரசேவகர்களால் எப்படி ஏற முடிந்தது? கட்டடத்தை இடிப்பதற்கான கடப்பாரைகள் அவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தன? எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல் அவையெல்லாம் நடந்தனவா? - இது போன்ற கேள்விகள் எழாமல் இல்லை. அவை எல்லாமே நியாயமானவை.

பாஜகவின் அன்றைய மூத்த தலைவர்கள் இருவருக்கும் பாபர் மசூதி இடிப்பு குறித்து முன்கூட்டியே தெரிந்திருக்கவில்லை; தொடர்பில்லை என்றுதான் கூறினேனே தவிர, இதற்குப் பின்னால் திட்டமிடல் இல்லை என்று நான் கூறவில்லை. பாபர் மசூதி கட்டட இடிப்பை உமாபாரதியும், சாத்வி ரிதம்பராவும் முன்கூட்டியே எதிர்பார்த்ததால்தான், கட்டடம் இடிக்கப்படும்போது அவர்களால் அப்படி உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாட முடிந்தது என்கிற வாதத்தை நானும் மறுக்கவில்லை.

தடுப்புகளைத் தகர்த்து எறிந்தபடி கரசேவகர்கள் பாபர் மசூதி கட்டடத்தை நோக்கிக் கூட்டமாக நகர்ந்தபோது, உத்தர பிரதேச காவல்துறையினர் அவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கினார்கள். கரசேவகர்கள் கட்டடத்தை ஆக்கிரமித்து, குமிழ் கோபுரங்களில் ஏறுவதை அதிகாரிகளும், காவல்துறையினரும் வேடிக்கை பார்த்தனர். கடப்பாரையால் கோபுரங்கள் இடிக்கப்படுவதற்கு ஏதுவாக அவை அங்கே முன்கூட்டியே வைக்கப்பட்டிருந்தனவா என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.

""கரசேவகர்களுக்கு எதிராக எந்தவித தீவிரமான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று காவல் துறையினருக்கு முதல்வர் அலுவலகம் முன்கூட்டியே அறிவுறுத்தி இருந்தது. மத்திய சிறப்புக் கமாண்டோவினர் அங்கே நிறுத்தப்பட்டிருந்தனர். ஆனால் உள்ளூர் நீதித்துறையோ, மாநில அரசோ அவர்களுக்கு அனுமதி வழங்காததால், அவர்கள் கைபிசைந்து நிற்பதைத் தவிர வேறுவழியில்லை.

மதியம் 1.45-க்கு இந்திய திபெத்திய எல்லைப் படையின் தலைமை இயக்குநர், உள்துறை அமைச்சகத்துக்கு ஒரு செய்தி அனுப்பினார். அதில், பாபர் மசூதி கட்டடத்துக்குக் கணிசமான சேதம் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், உத்தர பிரதேச காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். செயல்படுவதற்குத் தங்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்'' - இவையெல்லாம் லிபர்ஹான் கமிஷனால் உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்திருக்கும் அறிக்கையில் காணப்படுகிறது. 

பாஜகவின் மூத்த தலைவர்களான வாஜ்பாயி, அத்வானி இருவருக்கும் தெரிந்திருந்ததோ என்னவோ, ஆனால் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்காலுக்கும், உத்தர பிரதேச முதல்வர் கல்யாண் சிங்குக்கும் பாபர் மசூதி கட்டட தகர்ப்பு குறித்துத் தெரிந்திருந்தது என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன. அதன் பின்னால் திட்டமிடல் இருந்திருக்கக் கூடும் என்பதைத்தான் நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

அயோத்தியில் டிசம்பர் 6-ஆம் தேதி என்ன நிகழ்ந்தது என்பது குறித்துப் பலரும் பலவிதமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். அரசுத் தரப்பு ஆவணங்கள் லிபர்ஹான் கமிஷன் விசாரணையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. அவை எல்லாவற்றையும் விட மிகவும் தெளிவான பதிவு, பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் தனது மரணத்துக்குப் பிறகு வெளியிடச் சொன்ன "அயோத்தி - 6 டிசம்பர் 1992' என்கிற புத்தகப் பதிவுதான். அதைவிட ஆதாரபூர்வப் பதிவு இருந்துவிடவும் முடியாது.

"மதியம் 3.30-க்கும் 4.30-க்கும் இடையே, அயோத்தியையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மதக்கலவரங்கள் ஏற்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சகத்துக்குத் தகவல் வருகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தாமல் நிலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாது என்றும், முதல்வரிடம் அதற்கான உத்தரவு கோரப்பட்டிருக்கிறது என்றும் தகவல் தெரிவிக்கிறார் உத்தர பிரதேச காவல்துறைத் தலைவர். 

ஆனால், முதல்வர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வரவே இல்லை.

நான்கரை மணிக்குள், ஏற்கெனவே ஆங்காங்கே இடிந்து போயிருந்த பாபர் மசூதி கட்டடம் கரசேவகர்களால் அநேகமாகத் தகர்ந்திருந்தது. நடுவில் குவிமண்டபத்துக்குக் கீழே அமைந்திருந்த ராமர் விக்கிரகம் அகற்றப்பட்டு வேறு இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தது. சுமார் 6.45 மணிக்கு, மையப் பகுதியிலிருந்து இடிபாடுகள் அகற்றப்பட்டு முன்பிருந்த இடத்திலேயே மீண்டும் தற்காலிகமாக நிறுவப்பட்டது. லட்சக்கணக்கான கரசேவகர்கள் அந்தப் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தனர். விக்கிரகங்களை நிறுவுவதற்கு இடைக்கால ஏற்பாடு செய்யப்பட்டது.

உத்தர பிரதேச முதல்வர் கல்யாண் சிங் பதவி விலகுவதாக அறிவித்திருந்தார். மாலை சுமார் ஆறு மணிக்கு அயோத்தி நிலைமைகள் குறித்து முடிவெடுப்பதற்காக மத்திய அமைச்சரவை கூடியது. சட்டப்பிரிவு 356-இன் கீழ் உத்தர பிரதேச அரசும், சட்டப்பேரவையும் கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அமைச்சரவைத் தீர்மானத்தை உள்துறை அமைச்சரே எடுத்துச் சென்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றார்.

பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து அயோத்தியில் மட்டுமல்ல, உத்தர பிரதேசத்தின் பல்வேறு நகரங்களிலும், இந்தியாவின் பல மாநிலங்களிலும் மதக் கலவரங்கள் எழுந்தன' - இவையெல்லாம் அன்றைய பிரதமர் நரசிம்ம ராவின் பதிவு.

மதக் கலவரங்கள் என்பதைவிட, அப்போது நடந்ததை முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் என்று வெளிப்படையாகக் கூறுவதுதான் சரி. இந்த இடத்தில் ஒரு கருத்தை வாசகர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான மதரீதியிலான கலவரமோ அல்லது ஹரிஜனங்களுக்கு எதிரான ஜாதிக் கலவரமோ எதுவாக இருந்தாலும், விளைவு ஒன்றுதான். பாதிக்கப்படுவது அவர்களாகத்தான் இருக்கும். பல நிகழ்வுகளில், கலவரத்தைத் தொடங்கியவர்கள் ஓடி ஒளிந்து கொண்டு விடுவார்கள். அப்பாவிகள்தான் அகப்பட்டுக் கொள்வார்கள்; பாதிக்கப்படுவார்கள். அதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

எல்லா இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, ஒருவழியாக நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆறாம் தேதியும், ஏழாம் தேதியும் சுமார் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான கரசேவகர்கள் அயோத்தியில் காணப்பட்டனர்.

ஏழாம் தேதி இரவில்தான் அவர்கள் அனைவரும் இடிக்கப்பட்ட பாபர் மசூதியை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து அகற்றப்பட்டனர். துப்பாக்கிச் சூடோ, தடியடிப் பிரயோகமோ இல்லாமல் அவர்கள் அனைவரும் அகற்றப்பட்டனர் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

தனது புத்தகத்தில் பிரதமர் நரசிம்ம ராவ் என்ன நடந்ததோ, நடந்ததை அப்படியே பதிவு செய்திருக்கிறாரே தவிர, தன்னை நியாயப்படுத்த எந்தவித வாதங்களையும் முன்வைக்கவில்லை. பிரதமரின் அணுகுமுறையும், அவரது நடவடிக்கைகளும் எப்படி இருந்தன என்று தெரிந்துகொள்ள, நாடாளுமன்ற ஆவணங்களையும் நான் தேடிப்பிடித்துப் படித்தேன். 

அயோத்தி சம்பவம் நடக்கும்போது, நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தது. டிசம்பர் 7-ஆம் தேதி பிரதமர் நரசிம்ம ராவ் விரிவான அறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

""பாபர் மசூதி கட்டடத்தை இடித்தது காட்டுமிராண்டித்தனமான செயல். அந்த இடத்தில் மீண்டும் மசூதி கட்டப்படும். பிரச்னைக்குரிய நிலம் குறித்தும், ராமர் கோயில் குறித்தும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று பிரதமர் பி.வி. நரசிம்ம ராவின் அன்றைய நாடாளுமன்ற உரை உறுதி வழங்கியது.

""அரசியல் சாசனத்தின் அடிப்படையிலான கூட்டாட்சித் தத்துவம், எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்க முடியாமல் மத்திய அரசின் கைகளைக் கட்டிப்போட்டது'' என்பதுதான் முன்கூட்டியே கல்யாண் சிங் அரசைக் கலைத்துக் கரசேவையைத் தடுத்து நிறுத்தாததற்கு பிரதமர் நரசிம்ம ராவ் தெரிவிக்கும் விளக்கம். பிரதமர் நரசிம்ம ராவைப் போலவே, உச்சநீதிமன்றமும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது என்பதை யாரும் குறிப்பிடுவதில்லை.

அயோத்தி சம்பவத்தைத் தொடர்ந்து, ஆட்சியில் இருந்த பாஜக மாநில அரசுகள் கலைக்கப்பட்டன என்பது மட்டுமல்ல, முக்கியமாக பாஜக, விஸ்வ ஹிந்து பரிஷத், சிவசேனை, பஜ்ரங் தள் ஆகியவற்றின் தலைவர்கள் கைதும் செய்யப்பட்டனர். 1,119 பேர் மதக்கலவரத்தில் உயிரிழந்திருந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். அதன் பின்னணியில்தான் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நாடாளுமன்றத்தில் இன்னொரு சுவாரஸ்யமான திருப்பம்  ஏற்பட்டது. அயோத்தி பிரச்னை, பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேரடி விவாதம் நடைபெறவில்லை. நரசிம்ம ராவ் அரசின் மீது பாஜக கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் அடிப்படையில்தான் அவை விவாதிக்கப்பட்டன என்பதுதான் விசித்திரம். பாஜகவினர் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது என்கிற அடிப்படையில்தான், பாஜக அந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருந்தது.

பாபர் மசூதி இடிப்பின்போது திட்டக் கமிஷனின் துணைத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி மும்பையில் இருந்தார். டிசம்பர் 15-ஆம் தேதியன்று நான் தில்லி சென்றபோது, அவர் டிசம்பர் 6-ஆம் தேதி இரவே தில்லி திரும்பி விட்டதாகச் சொன்னார்கள். காங்கிரஸ் தலைமையகம், வெஸ்டர்ன் கோர்ட் என்று அவரை நான் பார்த்தேனே தவிர, அவரை நெருங்கவோ, அவரிடம் பேசவோ இயலவில்லை. யாராவது அவருடன் இருந்தார்கள். அல்லது அவர் மிகவும் சீரியசாக இருந்தார்.

பாஜகவின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வேறு வர இருப்பதால், அவர் அடிக்கடி பிரதமருடன் தொடர்பில் இருந்ததும், சந்திக்க முடியாததற்குக் காரணம். பிரதமர் அலுவலகத்தில் உள்ளவர்களும் சரி, அவருக்கு நெருக்கமானவர்களும் சரி, யாரையும் சந்திப்பதையோ ஏன் பேசுவதையோகூடத் தவிர்த்தனர்.

மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் விவாதத்துக்கு வந்தது. விவாதத்தைப் பார்க்க தினந்தோறும் பார்வையாளர் வரிசையில் அமர்ந்து கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டேன். உறுப்பினர்கள் கூட அவ்வளவு ஆர்வமாக இருந்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

வெஸ்டர்ன் கோர்ட்டில் எம்.பி-யாக இருந்த கே.வி. தங்கபாலுவை சந்திக்கப் போனபோது, பிரணாப்தாவின் அறை திறந்திருந்ததைப் பார்த்தேன். வெளியில் கார் நின்று கொண்டிருந்தது. போகலாமா, கூடாதா என்கிற தயக்கம் எனக்குள். 
திரைச்சீலையை விலக்கிப் பார்த்தேன். வரவேற்பறையில் பைப்பைப் புகைத்தபடி, எதையோ படித்துக் கொண்டிருந்தார். நிமிர்ந்து பார்த்தார். எதுவும் பேசவில்லை. உள்ளே வரும்படி சைகை மட்டும் காட்டினார். 

""உங்களைச் சந்தித்துப் பல மாதங்களாகிவிட்டன. தினமும் நாடாளுமன்ற விவாதத்தின்போது நான் உங்களைத்தான் நினைத்துக் கொள்கிறேன்.''

""நான்தான் உறுப்பினரே கிடையாதே. பிறகு ஏன் என்னை நீ நினைத்துக் கொள்ள வேண்டும்?''

""அதற்காக அல்ல. முன்பு ராஜீவ் காந்தி அமைச்சரவையில் நீங்கள் இருந்திருந்தால், அவர் தேவையில்லாமல் போபர்ஸ் பிரச்னையில் சிக்கியிருக்கமாட்டார். இப்போதும் நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நீங்கள் இருந்திருந்தால், ஒருவேளை அயோத்தி பிரச்னையை சரியாகக் கையாண்டு மசூதி இடிப்பைத் தவிர்த்திருக்கக் கூடும் என்று நினைத்தேன்.''

அவர் பதிலேதும் சொல்லவில்லை. சற்று நேர மெளனத்துக்குப் பிறகு என்னை நிமிர்ந்து பார்த்தார்.

""நான் பிரதமரை சந்தித்தேன். என்னை அறியாமல் அவரிடம் கோபத்தில் பேசிவிட்டேன். "பின்விளைவுகளை எடுத்துச் சொல்ல, சரியான ஆலோசனை சொல்ல அமைச்சரவையில் யாருமில்லையா? இதனால் ஏற்பட இருக்கும் சர்வதேசத் தாக்கம் குறித்து நீங்கள் யோசிக்கவில்லையா?என்றெல்லாம் கேட்டு விட்டேன்.''

""அதற்குப் பிரதமர் என்ன சொன்னார்?'' - ஆர்வத்துடன் நான் கேட்டேன்.

அமைதியாகப் புன்னகைத்தார் பிரணாப்தா. என்னால் எனது ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com