ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கேட்கும் திறன் குறைந்துவிட்டால்?

எனக்கு வயது 71. இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருநாள் நள்ளிரவில் அளவுக்கு அதிகமான வாந்தி ஏற்பட்டது.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கேட்கும் திறன் குறைந்துவிட்டால்?

எனக்கு வயது 71. இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருநாள் நள்ளிரவில் அளவுக்கு அதிகமான வாந்தி ஏற்பட்டது. அது முதல் இடது காதுமுழுவதும் கேட்கவில்லை. வலது காதில் பாதி கேட்கிறது. எனக்கு வாழ்க்கையை இழந்ததுபோல்உள்ளது. காது கேட்கும் திறன் அதிகரிக்க என்ன வழி?

ஆர்.முத்துகிருஷ்ணன்,
தின்னப்பா நகர், கரூர்.

வாயு மற்றும் ஆகாய மகாபூதங்களின் ஆதிக்கத்தால் உருவான வாயு தோஷமானது, செவியின் உள்ளிருந்து செயல்பட்டு அங்குள்ள நுண்ணிய நரம்புகள், எலும்புகள் ஆகியவற்றின் செயலாற்றலைத் தொய்வில்லாமல் தம் கடமையாகிய செவியின் கேட்கும் திறனைப் பாதுகாக்கிறது. அளவுக்கு அதிகமான வாந்தியினால் ஏற்பட்ட நிலம் மற்றும் நீரின் வெளியேற்றத்தால் உண்டான நீர்ச்சத்தின் குறைவு, செவிப்பறையில் நுண்ணிய நரம்புகளில் போஷகாம்சத்தை வறளச் செய்து, வாயுவின் சீற்றத்துக்குக் காரணமாகிவிட்டன. அதனால் மறுபடியும் வாயுவைக் கீழடக்கி, நரம்புகள் மற்றும் எலும்புகளில் போஷகாம்சத்தை செவியினுள் வளரும் அளவுக்கு நிலம், நீர் சார்ந்த உணவு } செயல் } மருந்து என்ற வகையில் நீங்கள் அமைத்துக் கொண்டால்தான் காதின் கேட்கும் திறனானது சீராக வாய்ப்பிருக்கிறது.

இனிப்புச் சுவையில்தான் இவ்விரு மகாபூதங்களின் சேர்க்கையானது அதிக அளவிலுள்ளது. சர்க்கரை உபாதைக்கான மாத்திரைகளை நீங்கள் சாப்பிடுபவராக இருந்தால், காதினுள் நரம்புகளில் புஷ்டியை நீங்கள் இனிப்புச் சுவையின் வாயிலாகப் பெற முடியாது என்பதால், அதற்கு மாற்று வழியாக வெளிப்புறச் சிகிச்சைகளின் வாயிலாகப் பெற முடியுமா என்ற சிந்தனை எழுகிறது.

க்ஷீரபலா எனும் மூலிகைத் தைலத்தை வெதுவெதுப்பாக தலைக்குத் தேய்த்து, சுமார் அரை } முக்கால் மணி நேரம் ஊறிய பிறகு, குளிப்பதையும், மூக்கினுள் க்ஷீரபலா 101 எனும் சொட்டு மருந்தை, காலை உணவுக்குப் பிறகு இரண்டு சொட்டுகள் விட்டுக் கொள்வதையும், இரவு படுக்கும் முன் வாயினுள் அரிமேதஸ் தைலத்தை சுமார் ஐந்து மில்லி லிட்டர் விட்டு வாய் கொப்பளித்துத் துப்புவதையும், காதினுள் வெதுவெதுப்பாக கார்ப்பாசாஸ்த்யாதி தைலத்தை காலையில் உணவுக்கு முன் விட்டுக் கொள்வதையும், காதைச் சுற்றி இதே தைலத்தைத் தடவி, வெந்நீர் ஒத்தடம் கொடுப்பதையும், கண்களில் ஓரிரு சொட்டுகள் இளநீர் குழம்பு எனும் கண் சொட்டு மருந்தை இரவு உணவுக்குப் பிறகு விட்டுக் கொள்வதையும் வழக்கமாக்கிக் கொண்டால், புலன்கள் சார்ந்த பல நரம்பு உபாதைகளையும் போக்கிக் கொள்வதுடன், வாயுவின் சீற்றத்தையும் அடக்க முடியும். இவற்றைச் சார்ந்த நரம்பு மண்டலங்கள் அனைத்தும் பழுதடையாமல் ஊட்டமடைந்து செயல்திறன் குன்றாமல் செயல்பட இது ஒரு சிறந்த வழியாகும்.

இரவில் நெடுநேரம் குளிரூட்டப்பட்ட அறையில் படுப்பது நல்லதல்ல. குளிர்ச்சியினால் விரைத்துப் போகும் நரம்பு மண்டலங்கள் பலவீனம் அடைந்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வாயுவைச் சமநிலைப்படுத்தி, காதினுள் நரம்புகளையும் எலும்புகளையும் வலுப்படுத்தும் இந்து காந்தம் கிருதமி எனும் நெய் மருந்தை காலையிலும் மதியமும் உணவுக்குப் பிறகு சுமார் 15 மி.லி. சாப்பிடுவதை நீங்கள் வழக்கமாக்கிக் கொள்வது நலம்.

காதில் வாயுவைச் சீற்றமடையச் செய்யும் அரிசி, பயறு, மொச்சை, காராமணி, வேர்க்கடலை, பருப்புகள் ஆகியவற்றை உணவில் சேர்ப்பதைத் தவிர்க்கவும். வெதுவெதுப்பான நீரையே பருகவும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com