சற்று முன்...

அன்றைய தினம் எப்படிப்பட்ட சம்பவங்களுடன் முடியப் போகிறது என்று அறியாதவனாய்  "கந்தசாமி' இட்லி குண்டானின் மூடியைத் திறந்தான்.. குப்பென்று நீராவி, ஜிவ்வென்று கிளம்பி அவன் முகத்தில் சூடான நீர்
சற்று முன்...

அன்றைய தினம் எப்படிப்பட்ட சம்பவங்களுடன் முடியப் போகிறது என்று அறியாதவனாய்  "கந்தசாமி' இட்லி குண்டானின் மூடியைத் திறந்தான்.. குப்பென்று நீராவி, ஜிவ்வென்று கிளம்பி அவன் முகத்தில் சூடான நீர் திவலைகளைத் தெளித்தன. புளிப்பும் உப்பும் கலந்த ஈஸ்ட் மணம் கடை எங்கும் பரவ, செடியிலிருந்து புது ரோஜாவைப் பறிப்பது போலத் துணிகளிலிருந்து இட்லிகளைப் பிரித்து அலுங்காமல் எடுத்து ஹாட் பாக்ஸில்  வைத்தான்.

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நகரத்தின் மேம்பாலத்திற்குக் கீழ் இறங்கி, சரிந்து வளைந்து செல்லும் ரோட்டையொட்டி இருக்கும் வெறும் எட்டுக்கு பத்து கொண்ட அந்த இடத்தை ஹோட்டல் என்றெல்லாம் பெயரிட்டு அழைக்க முடியாது.. வாடிக்கையாளருக்கு "கன்சாமி கடை' அவ்வளவே. 

மொத்தம் நாலே பேர் அமர்ந்து  சாப்பிடுவதற்கான மேசையில் பிரித்துக் கிடக்கும் அன்றைய செய்தித்தாள்கள், சட்னி, சாம்பார் வாளிகளே பெரும்பாலும் அடைத்துக் கொண்டிருக்கும். ஆகையால் பெரும்பாலோர், தட்டில் வாங்கிக்கொண்டு வெளியே நின்று கொண்டே சாப்பிடுவது வழக்கம். ஆயினும் பார்சல் அள்ளும்.. அவனுடைய மனைவி வள்ளி'யின் கைப்பக்குவம் அப்படி.

"என்ன கந்தா, இட்லி ரெடியா..?" என நுழைந்த பெரியவரிடம், 

"சட்னி, சாம்பார் இன்னும் வரலைண்ணே.., பொண்டாட்டிக்கு உடம்பு சொகமில்லை, அதான் லேட்டு. இப்ப "சம்முவன்' எடுத்துட்டு வந்துடுவான்"

அந்த பழைய சுவரில்  பொருத்தப்பட்ட டிவியில் தாடியுடன் ஒரு மஹான் அருள் நேரம் வழங்கிக் கொண்டிருக்க, பெரியவர் ரிமோட்டை எடுத்து சானலை மாற்ற, அது "ஐலா..ஐலா.." என்று ஜிலு ஜிலுத்தது. பெரியவர் இட்லிகளைத் தற்காலிகமாக மறந்தார்.

மனைவி வள்ளி விடியற்காலையிலேயே எழுந்து, இட்லி தோசைக்கான மாவு மட்டும் மற்றும் சட்னி சாம்பார் எல்லாம் தயாரித்துக் கொடுத்துவிடுவாள். இட்லி,தோசை வகையறா சூடாகக் கடையில் போட்டுக் கொள்வான் கந்தசாமி. ஓரத்தில் ஒற்றை அடுப்பு ஒன்றில் பால் காயவைத்து டீ, காபி போடுவான். இரண்டு மணிவாக்கில் பக்கோடா, மாலை 5 மணிக்கு ஒரு மாஸ்டர் வந்து புரோட்டா போட்டு அடுக்கிக் கொடுத்துவிட்டு போய்விடுவார். 

எப்போதும் போக்குவரத்து இருப்பதால், வியாபாரத்துக்குப் பஞ்சமில்லை. கந்தசாமி ஏதும் மீதி என்று வீட்டுக்கு எடுத்துச் செல்லாமல், உதவின்னு  கேட்பவர்கள் எவர் வந்தாலும் காசு எதிர்பார்க்காமல் பார்சல் கட்டிக் கொடுத்து விடுவது வழக்கம். 

சில நாள்களாக வள்ளிக்கு உடம்பு படுத்துகிறது. அடிக்கடி மயக்கமா, அசதியா இருக்கு என்கிறாள் ; உதவிக்காக  அக்கா பையனை மதுராந்தகத்திலிருந்து வரவழைத்திருந்தான். "சம்முவன்' என்னும் சண்முகத்திற்கு 12 வயசு, ஸ்கூல் திறந்து மீண்டும் கோடை விடுமுறை.

பக்கத்துக் கடை அண்ணாச்சியின் குரல் கேட்டது. "ஏலே கந்தா எப்ப டீ தண்ணி கிடைக்கும்..?" 

"இதோ வர்றேன் அண்ணாச்சி"

உள்ளே நுழைந்த சண்முகம், ""கொடுங்க மாமா, நான் போய் கொடுத்தாரேன்'" (பையன் படு சுறுசுறுப்பு)

திடீர் சலசலப்பு கேட்க நிமிர்ந்தான் கந்தசாமி.. 

பார்த்தால் அழுக்கு மூட்டையும், பல நாள் தாடியும் கொண்ட ஒருவனை மூன்று, நான்கு சிறுவர்கள், "கற்களை  வீசி' துரத்தி வர.. பதட்டமாக அவன் கந்தசாமி கடையை நோக்கி ஓடி வந்தான்.

""ஏய் அடிக்காதீங்கடா.. பாவம்டா.. அவன் என்ன செஞ்சான் உங்களை..?''

""அவன்தான் மொதல்ல எங்களை கல்லால அடிச்சான்.'' கந்தசாமி கடையை விட்டு இறங்கித் துரத்திவந்த பையன்களை விரட்டினான்.

ஒரு குவளையில் தண்ணீர் எடுத்து ஊற்ற, இரு கைகளும் குவித்து வீழும் தண்ணீரைக் காணாது கண்டது போலக் குடித் தான், அவன்.

""யார் இது கந்தா? உன் கஸ்டமரா..'' என்றார், கடைக்குள் இருந்த பெரியவர் நக்கலாக.

""தெரியாது அண்ணே.. யார் பெத்த பிள்ளையோ? - பைத்தியம், இப்படி அடிவாங்கித் திரியிது.. பேச்சு வரமாட்டேங்கிது.. எல்லாம் சைகைதான். இப்ப ரெண்டு மாசமாதான் இந்த ஏரியால பார்க்கறேன். பாலத்துக்கடில படுத்துக் கெடக்கும், பசி தாகம் சொல்லத் தெரியாது. அப்பப்போ ஊளையிடற மாதிரி ஒரு சவுண்ட் கொடுக்கும் அவ்வளவுதான். காசு கேட்டா, சில்லு கொடுக்கும். சம்முவன் அதுக்கு "சில்லாண்டி'ன்னு பேரு வச்சிருக்கான். என்கிட்டேகூட அடங்காது. ஆனா சம்முவன் சொன்னா கேட்டுக்கும்.
சில்லாண்டி கிழிந்த, அழுக்கடைந்த உடைகள், இந்த அனல் பறக்கும் வெய்யிலிலும் ஒரு போர்வை, கலைந்த செம்பட்டை தலைமுடி, பிளேடு கண்டிராத குறைந்த கருப்பும், அதிக வெள்ளையும் கலந்த தாடி, "சித்தர்' போல கூர்மையான பார்வை. தோளில் ஒரு துணிப்பை அதில் ஒரு கிழிந்த அலுமினிய குவளை. ஒரு நாடோடிக்குண்டான அத்தனை சாமுத்ரிகா லட்சணங்களும் கொண்ட உருவம்.
ஒருநாள், ரோட்டிற்கு அந்த பக்கம் இருந்த பழ மண்டிக்கு டிபன் பார்சல் கொடுப்பதற்காக கந்தசாமி, மேம்பாலம் அடியில் கடந்தபோது, திடீரென அந்த உருவத்தைப் பார்த்ததும் ஒருகணம் திகைப்பில் நடுங்கியே விட்டான்.  
ஒரு பழைய  அட்டையை விரித்துக் குப்புற படுத்திருந்தவன், கந்தசாமியைப் பார்த்ததும், தடக்கென்று எழுந்து உட்கார்ந்து தனது அலுமினிய தட்டை எடுத்து நீட்டினான்.
""காசு வச்சிருக்கியா?'"
""ம்ம்..'' என்னும் பொருள்பட தலையாட்டியபடி.. தன் கிழிந்த தலையணைக்குக் கீழ் கைவிட்டு எடுத்து நீட்டினான். கையில் சின்ன சின்ன கல் சில்லுகள்.
பாவமாக இருந்தது கந்தசாமிக்கு, ஒரு பார்சலை கையில் கொடுத்துவிட்டு நகர்ந்தான்.
மறுநாள் காலை கடை திறந்த சிறிது நேரத்துக்கெல்லாம் பார்த்தால் , கடை வாசலில் அதே கிழிந்த அலுமினியத் தட்டோடு நின்றிருந்தான்.
அதிலிருந்து கடை வாசலில் தென்பட்டால், கந்தசாமி ஏதாவது உணவோ.. டீயோ கொடுப்பது வழக்கம்.
""கந்தசாமி, அரை சுகர்ல ஒரு காபி போடு..'' என்ற குரல் கேட்டுத் திரும்பினான். 
டாக்டர் ஐயா, அரை டவுசருடன்  நின்று கொண்டிருந்தார். பக்கத்து கிரெvண்டில் நடை பயிற்சி செய்வார். காலையில் இவன் கடையில் காபி குடித்துவிட்டு போவார். 
""என்ன கந்தா, உன் பொண்டாட்டியை  "பப்ளிக் ஹெல்த் சென்டர்க்கு அழைச்சிட்டுவான்னு சொன்னேனே''
""இல்ல ஐயா.. கொஞ்சம் வேலை'"
""எல்லா வேலையைவிட மனைவியை கவனிக்கறதுதான் முக்கியம். தள்ளிப் போடாதே, ஏதும் பெரிய பிரச்னை ஆயிடப் போவுது'' என்று காபியை பருகிய டாக்டர், சில்லாண்டியைப் பார்த்து, ""இது யாரு..?'"
""தெரியல ஐயா.. பைத்தியம் போல ஒன்னுக்கொன்னு தொடர்பில்லாம ஏதாவது பினாத்தறான், புரிஞ்சுக்க முடியல, எப்பப் பாரு பரபரப்பாவே திரியறான். வானத்தைப் பாத்து அப்பப்ப கூவுவான். குளிக்கமாட்டான், ரோட்டுல போறவங்களைப் பார்த்து காரணமில்லாம திட்டுவான், சில்லு கல் வீசுவான், திடீருன்னு எதுக்கு சிரிக்கறான்னு தெரியாம சிரிப்பான்'".
""இது ஸ்கிசோஃப்ரினியா. கடுமையான மனநோய்.. வாழ்க்கையில பெரிசா ஏதேனும் இழந்திருக்கலாம். உயிர் இருக்குங்கிறதைத் தவிர அவங்க நடவடிக்கை எதுவும் அவங்களுக்கு சொந்தமில்லை. பாவம்  அத விடு இன்னிக்கு 3:30 மணிவரை ஹெல்த் சென்டர்ல இருப்பேன். வைஃப்பை அழைச்சுட்டு வந்துடு.''
""சரிங்கய்யா வந்துடறேன்..'"
கேட்டுக்கொண்டிருந்த மற்றொருவர், ""இவனைப் பார்க்கப் பாவமா இருக்கு கந்தா'' என்று  "பன்' ஒன்றை கிளாஸ் பாட்டிலிலிருந்து எடுத்து சில்லாண்டியிடம் நீட்டினார்.
அதை அவன் கிழித்து  "'ஊ..'' என்று குரல் ஒலிக்க நாலா பக்கமும் வீசினான். 
கந்தசாமி வள்ளியிடம் செல்போன் மூலம், ""இன்னிக்கு சாப்பாடு கடையை மூடிட்டு சுருக்கா வந்துடறேன். 3 மணிக்கு தயாரா இரு ஹெல்த் சென்டர் போயி டாக்டர் ஐயாவைப் பாத்திடலாம்''
விறுவிறுப்பாக பார்ஸல்களை கட்டிக்கொடுத்து, வந்த வாடிக்கையாளர்களை அனுப்பிய வண்ணம் இருந்தான். 
இரண்டு முறை வந்து சில்லாண்டி எட்டிப் பார்த்துவிட்டுப் போனான். பாவம் பசிக்குது போல.. எதுவும் தானா கேட்காது.. பாலத்துக்கடில போய் சுருண்டு படுத்துக்கும் என நினைத்து கொஞ்சம் மீந்து போன தக்காளி சாதத்தை பார்சல் ஆக கட்டி, சண்முகத்தை விட்டு சில்லாண்டியிடம் கொடுத்து வர அனுப்பினான்.
மதியம் மணி 2.45 என கடிகாரம் காட்டியபோது, கடையில் இன்னும் 5 பேர் இருந்தார்கள். அன்றைய பேப்பரில் அவர்களுக்கு நிறைய அரசியல் இருந்தது. போய் சொல்லலாமா? இன்னும் 15 நிமிஷத்தில் கடையைப் பூட்டி கிளம்பினால்தான்  ஆஸ்பத்திரி போக வசதியாக இருக்கும்.  என எண்ணிக்கொண்டிருக்கும் போதே சண்முகம்  பரபரப்பாக அலறி அடித்துக் கொண்டு ஓடி வருவது தெரிந்தது.
""மாமா கடையை மூடுங்க.. கடையை மூடுங்க..'" 
""என்னடா சம்மு.. ஏன் இப்படி ஓடியார''
சண்முகம் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, ""கடையை அடைங்க மாமா.. பாலத்துக்கடியில ஒரே கலவரமா இருக்கு, துப்பாக்கில சுடறாங்க'' 
""கந்தசாமி கடையிலிருந்து எட்டிப் பார்க்க.. அவன் கண்ட காட்சி அச்சத்தை உண்டாக்கியது.  எங்கிருந்து வந்தது எனத் தெரியாமல் போலீஸ் தலைகள் சூழ.. திடீரென அந்த இடமே ஒரு போர்க்கள சூழல். தோட்டாக்கள் வெடிக்கும் சத்தம்.பிஸியான சாலையில் வாகன ஓட்டிகள் இங்கும் அங்கும் அலைபாய, மேம்பாலத்திலிருந்து இறங்கும் வாகனங்களின் சடன் பிரேக் சத்தங்கள் ஒலிக்க.. பக்கத்துக் கடை அண்ணாச்சி, ""கந்தா உள்ளே போ'' என கத்தியபடி தன் கடையின் நெளி கதவைப் பட படவென மூடும் சத்தம் கேட்டது.
கந்தசாமியும் சடக் என தன் கடையின்  ஷட்டரை இழுத்து மூடி விட்டான். போலீஸ் வாகனங்களின் இடைவிடாத சைரன் ஒலியும், பாலத்துக்கடியில் சிக்கிய வாகனங்களின் ஹாரன் சப்தமும், சிலர் அலறும் சப்தமும் கேட்டது.  ஒரு குண்டு வெடிக்கும் சப்தமும் கேட்க, 
""ஐயோ'' எனவும்.. ""ஓடு'" எனவும் குரல்கள்.. தொடர்ந்து பூட்ஸ் கால்களின் சரக் சரக் சப்தங்கள். வித்தியாச ஒலி கலவைகள் கிலியை அதிகப்படுத்தின.
கடைக்குள் இருந்தவர் யாரோ, ""எல்லோரும் தரையில் அப்படியே படுங்க. அப்பதான் தோட்டா கடை ஷட்டரை கிழிச்சுட்டு வந்தா கூட தப்பிக்கலாம்'' 
என்றார். உயிர் பயத்தில் கேள்வி கேட்காமல் எல்லோரும் தரையில் படுத்தார்கள். இன்னும் நடுங்கிக் கொண்டிருந்த சம்முவை அணைத்தபடி கந்தசாமியும் தரையில் படுத்தான். 
யாருடைய மொபைல் போனோ ஒலிக்க,  ""எல்லாத்தையும் சைலன்ட்- இல் போடுங்கப்பா'' என்றார் ஒருவர். மெதுவான குரலில். புகை நாற்றமும், கந்தக நெடியும் கடைக்குள் வந்தது.
வெளியில் என்ன நடக்கிறது எனத் தெரியாத நிலை. 
ஒவ்வொரு நிமிடமும் திகிலாக கடக்க, ஒருவர் மெதுவான குரலில் ""கந்தா அந்த டிவி யை வால்யூம் வைக்காமல் போடு'"  என்றார்.
இருட்டறைக்குள் டிவியின் திடீர் பிரகாசம் கூட சற்று பயத்தை அதிகப்படுத்தியது.
சற்று முன்.. 
""பிரேக்கிங் நியூஸ்'' - டிவி திரைக்கடியில், சிவப்பு நிற பின்னணியில் வெள்ளை எழுத்துக்களின் ஓட்டத்தில் அவசரம் தெரிந்தது. 
சென்னையில் பரபரப்பு.. போக்குவரத்து நிறைந்த பகுதியில் பதட்டம் ; துப்பாக்கிச் சூடு.. இறந்தவர் போதை மருந்து கடத்தல் கும்பலின் முக்கிய நபராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.  
டிவி நிருபர்கள் கூட்டத்தை போலீஸ் பின்னுக்குத் தள்ளுவதும். சிலர் அடிபட்டுக் கிடப்பதும்.. ஒரு ஸ்கூட்டர் எரிந்து கொண்டிருப்பதும் எனச் சுற்றிப் புகை மண்டலமாய் தெளிவில்லாத காட்சிகள். கேமரா நாலாபுறமும் சுழல, அதில் கந்தசாமியின் கடை ஷட்டர் மூடப்பட்ட நிலையில் காட்சி அளித்தது. ஒரு ஆம்புலன்ஸ் பாலத்துக்கடியிலிருந்து பெருத்த சைரன் ஒலியுடன் விலகுவதும் தெரிந்தது. யாரோ வெளியில் ஷட்டரை தட தடவெனத் தட்ட, டிவி உடன் அணைக்கப்பட்டது.
வெளி சப்தங்கள் சிறிது சிறிதாய் அடங்க , பிறகு ஒரு நீண்ட மெvனம். நேரம் கடந்து கொண்டிருந்தது. கந்தசாமி மொபைலை எடுத்துப் பார்த்தான். பத்துக்கும் மேற்பட்ட தவறவிடப்பட்ட அழைப்புகள் வள்ளியிடமிருந்து.. 
ஒருவர் மெதுவாகத் தலைதூக்கி ""வெளில போகலாமா..?'" எனக் கேட்க.. மற்றவர்கள் அவரை அடக்கினார்கள். எல்லோரும் கடையை விட்டு வெளியேறியபோது இருள் கவ்வி இருந்தது.
""என்ன கந்தா லேட்டு.., இரண்டு  நாளா கடையை பூட்டிட்டப் போல..''  என்றார் பக்கத்துக்குக் கடை அண்ணாச்சி
""அன்னிக்கு ராவு வீட்டுக்கு போனவன்தான் அண்ணாச்சி, வெளில எங்கனயும் போகல, சம்முவனுக்கு ஜுரம் படுத்த படுக்கையா இருக்கான். வள்ளி ரொம்பப் பயந்து போயிடிச்சு.. ஏதும் பாக்கல, செய்யல"'
""உன்னை தேடிக்கிட்டு போலீஸ் வந்தாங்கப்பா.. நேத்திக்கு'' .  ஒவ்வொருவராகக் கடைக்குள் நுழைய, அன்று வந்தவர்கள் மீண்டும் அந்த பதட்ட சம்பவத்தை நினைவு கூர்ந்தார்கள்.
நேரம் நகர, கந்தன் பழையபடி பார்சல் கட்டுவதில் மும்முரமாக இருக்கும் சமயம், ஒரு போலீஸ் ஜீப் சரக்.. என்று வந்து நின்றது.
ஓட்டி வந்த சார்ஜென்ட் தொப்பியைச் சரி செய்தவாறே இறங்கி வந்து ""ஐயா கூப்பிடறாரு வா..'" என்றான்.
பக்கத்திலிருந்த முதியவர், ரகசிய குரலில்.. ""பாத்து கந்தா, சாக்கிரதையா பேசு'" 
கந்தசாமி அவசரமாக இரண்டு டீ போட்டு எடுத்துக்கொண்டு, "வணக்கம் ஐயா நேத்தைக்கு உடம்பு'' என இழுத்தான்.
கூலிங் க்ளாஸ் அணிந்த, விறைப்பான போலீஸ் ஆபீசர், ஒரு சிப் உறிஞ்சியபடி கண்ணாடியை இறக்கியவாறே பார்க்க, கந்தசாமி தலை குனிந்தபடி அடுத்த கேள்வியை எதிர்பார்த்து நிற்பது தெரிந்தது.
டீயை குடித்துவிட்டு, இரண்டு 500 ரூபாய் நோட்டுக்களை நீட்டினார் அவர்.
""சில்லறை இல்லீங்கய்யா'"
""வேண்டாம்.. என் கடனைத்தான் இப்ப திருப்பி கட்டறேன்''" 
""புரியலைங்கய்யா"' - தயக்கமாக நிமிர்ந்து பார்க்க, 
""நான்தான்  சில்லாண்டி'' தெரியலையா?
கந்தசாமி விக்கித்து நின்றான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com