பேல்பூரி (07/08/2022)

பேல்பூரி (07/08/2022)

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சங்கருக்கு ஊதிய உயர்வு வந்தது. சந்தோஷத்துடன் அவர் தனது மனைவி சாந்தியைப் பார்த்து, " கேசரி செய்துவா! பிள்ளைகளையும் ஹாலுக்கு வர சொல்'' என்று சொன்னார். 

கண்டது
கும்பகோணத்தை அடுத்துள்ள
ஓர் ஊரின் பெயர்
சூரிய மூலை
-கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள
ஓர் ஊரின் பெயர்
"தங்கச்சி அம்மாபட்டி''
-எஸ்.மீராதேவி, ராஜபாளையம்.

கன்னியாகுமரி மாவட்டம்
சாமிதோப்பு அருகேயுள்ள
குளத்தின் பெயர்
பிள்ளபெத்த அணை
-அ.இரவீந்திரன், குஞ்சன்விளை

கேட்டது
(ஸ்ரீரங்கம் பேருந்து நிலையத்தில் இருவர் பேசிக் கொண்டது)
"உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே!. ஃபேஸ் புக், வாட்ஸ் ஆப், டிவிட்டரில்
இருக்கீங்களா?'
"இல்ல சார்.. உங்க பக்கத்து வீட்டில்தான் இருக்கேன்!''
-ப.சரவணன், ஸ்ரீரங்கம்.

(திருச்சியில் நிலத் தரகரும், மற்றொருவரும்..)
"நகரத்துல இருக்கற பங்களா மாதிரி வீட்டை வித்துட்டு, கிராமத்துக்குப் போறதா சொல்றீங்களே..? ஏன்?''
""விறகு அடுப்புல சமைக்கலாம்; மரத்தடியில படுத்து தூங்கலாம். கியாஸ்- மின் செலவுகள் இல்லையே...?''
- அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

(சிதம்பரம் ஜவாஹர் தெருவில் உள்ள ஓர் வீட்டின் முன் பள்ளிச்சிறுவனும், இளைஞரும் பேசிக் கொண்டது)
""டேய்.. எங்கடா! உங்கப்பா!!''
""ஹோம் ஓர்க் பண்றாரு...!''
"உன் ஸ்கூல் பாடத்தை அவரு எழுதுறாரா?''
"இல்ல.. காய்கறி நறுக்கிட்டு இருக்கிறாருன்னு சொன்னேன்!''
-அ.ப.ஜெயபால், சிதம்பரம்.

யோசிக்கிறாங்கப்பா!
எத்தனையோ அநீதிகள்,
பழக்கத்தால் நீதிகளாதத் தோன்றுகின்றன.
- மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

மைக்ரோ கதை
தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சங்கருக்கு ஊதிய உயர்வு வந்தது. சந்தோஷத்துடன் அவர் தனது மனைவி சாந்தியைப் பார்த்து, " கேசரி செய்துவா! பிள்ளைகளையும் ஹாலுக்கு வர சொல்'' என்று சொன்னார்.
ஏதோ மகிழ்ச்சியான தகவல் என்று அனைவரும் ஹாலில் கூடினர். கேசரியைச் சாப்பிட்டனர். அப்போது சாந்தி, " என்ன விஷயம் சந்தோஷமா இருக்கீங்க!'' என்றார்.
உடனே சங்கர், "எனக்கு ரூ.3 ஆயிரம் ஊதிய உயர்வு வந்துள்ளது. என்ன செய்வது என முடிவு செய்ய உங்களை அழைத்தேன்'' என்றார்.
"என்னங்க.. மகளின் பெயருக்கு ரூ.3 ஆயிரம் தங்க நகை சீட்டு போட்டால் நல்லது'' என்றார். ஆனால் மகனோ, " எனக்கு புல்லட் வாங்கிக் கொடுத்து, மாதத் தவணைத் தொகையைக் கட்டலாமே?'' என்று சொன்னாள்.
அப்போது வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. கதவை திறந்தபோது, வீட்டின் உரிமையாளர் நின்றிருந்தார். அவர் உள்ளே வந்து, " வீட்டு வரி, நிலவரி .. எல்லாம் அதிகரித்திருப்பதால், இந்த மாதம் வீட்டு வாடகையை ரூ.3 ஆயிரம் உயர்த்தி உள்ளேன்'' என்றார். கேசரி சாப்பிட்ட இனிப்பு யாருக்கும் தெரியவில்லை.
-சௌ. சரவணன், பழைய பேராவூரணி

எஸ்எம்எஸ்
விழிப்பதற்கு உறக்கம்.
வெல்வதற்கு தோல்வி.
எழுதுவதற்கு வீழ்ச்சி.
- வீ.மணிகண்டன், சென்னை.

அப்படீங்களா!
எந்த நகரமாகவோ, ஊராகவோ இருந்தாலும் கூகுள் மேப்பில் வழி கண்டுவிடலாம். இரவு நேர வாகனப் பயணிகளுக்கு பெரும் பயனுள்ளதாக உள்ளது.
மேலும், இன்றைய இணையவழி கால் டாக்ஸி, ஆட்டோ முதல் உணவு விநியோகம் செய்யும் பணி வரையில் இந்த இணையவழிக்காட்டி வரைப்படத்தின் அடிப்படையில்தான் நடைபெற்று வருகிறது.
தற்போது கூகுள் மேப்பில் பல புதிய சேவைகளை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
சாலைகளை மட்டும் அடையாளம் காட்டி வந்த கூகுள் மேப் முதன் முறையாக இந்தியாவில் சாலையில் உள்ள கடைகள், உணவு விடுதிகள் உள்ளிட்டவற்றை வீட்டில் இருந்தே காணும் வகையில் புதிய சேவை தொடங்கி உள்ளது. வீதியில் நாம் நேரடி உலா வருவதைப்போல் கூகுள் ஸ்ட்ரீட் வீவ் யூ இதனை காண்பித்துவிடும்.
தற்போது சென்னை, பெங்களூரு, தில்லி, மும்பை, ஹைதராபாத், புணே, நாசிக், வதோதரா, அஹமத்நகர், அமிருதசரஸ் ஆகிய நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் 50 நகரங்கள் "ஸ்ட்ரீட் வீவ்' சேவையில் இணைக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சேவையைப் பயன்படுத்த, கூகுள் மேப்பில் வலது மேலோரம் உள்ள ஐகானை கிளிக் செய்து, ஸ்ட்ரீட் வீவ் என்பதை தேர்வு செய்தால் போதும், கூகுள் மேப்பில் ஸ்ட்ரீட் வீவ் செய்யப்பட்ட சாலைகள் நீல நிறத்தில் காண்பிக்கும். அந்தச் சாலைகளை கிளிக் செய்து அந்தப் பகுதியை வீட்டில் இருந்தப்படியே பார்த்துவிடலாம்.
இதேபோல், நாம் எங்கு இருக்கிறோம் என்பதை பிறருக்குத் தெரியப்படுத்த பயன்படுத்தப்படும் "லோகேஷன் ஷாரிங்' சேவையுடன் சேர்த்து அந்தப் பகுதிக்கு எப்போது வருகிறோம் எப்போது அங்கிருந்து வெளியேறுகிறோம் என்பதை குறிப்பிட்ட நபர் காணும் வகையில் புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது. நாம் அனுமதி அளிக்கும் நபரால் மட்டும் இதைக் காண முடியும். இதனால் மூன்றாம் நபர் வேவு பார்க்க முடியாது.
இதேபோல், கூகுள் மேப் சாலைகளில் வாகனங்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள வேக அளவைக் காணும் வகையில் புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது பெங்களூரு, சண்டீகர் சாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
-அ.சர்ப்ராஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com